|
தேர்தலும், வேலை வாய்ப்பு பிரச்சினையும் |
|
- அசோகன் பி.|ஏப்ரல் 2004| |
|
|
|
தேர்தல் நேரம் வந்ததும், அமெரிக்காவில் 'வேலை வாய்ப்பு' மற்றும் 'இந்தியாவிற்குச் சென்று கொண்டிருக்கும் உயர்நிலை வேலைகள்' ஆகியவை பிரச்சினை ஆகியுள்ளன. தாராள மயமாக்கல் பிற நாடுகளுக்கு மட்டுமே என்று தாக்கும் அளவுக்கு அமெரிக்க அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்துள்ளனர். வேடிக்கையாக இருக்கிறது.
சமநிலையான மற்றும் தீர்க்கமான குரல்களுக்கும் பஞ்சமில்லை. அவர்கள் அனைவரும் அழுத்தமாகச் சொல்வது "Outsourcing is an issue only because employment growth is slow. But it is not the cause". உதாரணமாக "Keeping outsourcing in perspective", "Job losses and trade" மற்றும் "The Outsourcing Bogeyman" என்ற கட்டுரைகள்.
இவற்றைப் படித்த பிறகு தோன்றிய ஒரு எண்ணம்: இணையம் போன்ற வசதிகள் இல்லாவிட்டால் இதுபோன்ற மாற்றுக் கருத்துக்களைப் பிரசுரிக்க சுலபமான வழி உண்டா?
இந்த 'ஆராய்ச்சிக்கு' ஆரம்பக் காரணம் வேறு: நான் தொழில்முறையில் மென்பொருள் துறையில் பயிற்சி அளிப்பவன். பொறியியல் பட்டப் படிப்பு மற்றும் MCA படித்து முடித்தவர்களுக்குப் பயிற்சி அளிக்கும்போது எழுந்த சில விவாதங்களின் தொடர்பாக ஆரம்பித்த இணையத் தேடல் - மேலும் பல இடங்களுக்குச் சென்றது; இணையத்தின் தனித் தன்மையே அதுதானே! அந்தத் தேடலின்போது கிடைத்தவற்றில் ஒன்று: இந்த ஆண்டுக்கான அமெரிக்க இளம் அறிவியல் சாதனையாளர்களும் அவர்களது ஆரய்ச்சி பற்றிய விபரங்களும். |
|
இந்தியாவிலும் தேர்தல் வந்து விட்டதால் அரசியல்வாதிகளின் 'முத்துக்கள்' பொழிய ஆரம்பித்து விட்டன. கிரிக்கெட் வெற்றி பொருளாதார முன்னேற்றத்தைவிடப் பெரிய பிரசார உத்தியாகி விட்டது! திரண்டிருக்கும் அணிகளைப் பார்க்கும்போது 'அய்யோ, இந்த இரண்டு பேரில் யாரோ ஒருவருக்கு ஓட்டுப் போடவேண்டுமே' என்று ஆயாசமாக இருக்கிறது. ஆனாலும் ஓட்டுப் போடவேண்டும் - 'தீம்தரிகிட' இதழில் ஞாநி 49-O பிரிவுபற்றி நினைவூட்டி அதன்படி தான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்யும்படி சொல்கிறார். எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதோர் அதை நிச்சயம் செய்ய வேண்டும் - இரண்டு காரணங்களுக்காக: கள்ள ஓட்டைத் தவிர்க்க - அதைவிட முக்கியமாக: ஒரு 20% பேர் இவ்வாறு செய்தால் அரசியல் நிலை மாற வாய்ப்பு உள்ளது.
பலகாலமாகப் பின்னணியில் (மற்றவர்களின் எண்ணத்தில்) இருந்த மத்தியகிழக்குப் பிரதேசப் பிரச்சினை மீண்டும் வெடிக்கும் அபாயம் தோன்றியிருக்கிறது. வன்முறை எப்போதுமே தீர்வாக இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. இஸ்ரேலியர்களும், பாலஸ்தீன மற்றும் அரபு நாடுகளும் இந்த வன்முறைப் பிசாசை என்று விரட்ட முடியுமோ தெரியவில்லை.
வாசகர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
மீண்டும் சந்திப்போம், பி. அசோகன் ஏப்ரல் 2004 |
|
|
|
|
|
|
|