|
|
அன்பு வாசகர்களுக்கு,
தென்றல் பெரும்பாலான அமெரிக்கத் தமிழ் வாசகர்களைத் தேடி அடைந்து அவர்கள் உள்ளங்களைத் தீண்டியிருக்கிறது என்று அறியும் போது, தென்றல் குழுவினர் அடைந்துள்ள மகிழ்வுக்கு அளவே இல்லை எனலாம். ஆச்சரியம் என்னவென்றால், அமெரிக்காவின் பல மாகாணங்களிலிருந்தும், வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு, இவ்வெளியீட்டை வெகுவாகப் பாராட்டியிருக்கும் ஆர்வம்தான். இவ்வாசகர்களில் பலரும், முதல் இதழை விட, இரண்டாவது இதழ், இனிய பழகு தமிழில் உள்ளதாகவும், படிப்பதற்கு எளிமையாக இருப்பதாகவும் பாராட்டியுள்ளனர்.
நான் சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தபடி, இது உங்களுக்கான இதழ்! நிச்சயம் உங்களை ஆர்வத்துடன் படிக்கவைக்கும் வகையிலே, எளிமைப்படுத்த முயன்றிருக்கிறோம், முயற்சியைத் தொடரவும் செய்வோம்!
இம்மாத இதழில், அமெரிக்காவில், அண்மையில் குடிபுகுந்து, அன்றாடச் சமயலுக்குத் 'ததிங்கிணதோம்' போட்டுக் கொண்டிருக்கும், தனிக்கட்டை இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும், பயன்படும் வகையிலே, 'கைப் பக்குவம்' பகுதியை சிறப்புப்பகுதியாக அளித்துள்ளோம். இராசி-பலன்கள், இல்லாமல், ஒரு பத்திரிக்கையா என்று, உங்களில் பலர் முணுமுணுப்பது எங்கள் காதுகளில் விழாமல் இல்லை..! 2001-ம் வருடத்துக்கான, இராசி-பலன்களை, ஒட்டுமொத்தமாக தொகுத்துத் தந்துள்ளோம். அவ்வப்போது, நடைபெறும், கிரகப் பெயர்ச்சிகளை ஒட்டி, அவற்றுக்கு, உண்டான விசேஷ பலன்களையும் தருவோம்..! |
|
தவிரவும், அமெரிக்க தேர்தல் அமர்க்களமெல்லாம், முடிந்து, அடுத்த அதிபரை தேர்ந்தெடுத்தாகி விட்டாலும், (இவ்விதழ் உங்கள் கைக்கு வருவதற்கு, முன் பதவியேற்பும் முடிந்திருக்கும்!) கதிரவன் எழில் மன்னனின், முதல் இதழில் வெளிவந்த கட்டுரைக் கற்பனை, இவ்விதழிலும் தொடர்கிறது. அமெரிக்கக் குடியரசு, அரசியல் முதிர்ச்சிபெற்ற குடியரசு என்பது மீண்டும் ஒருமுறை, உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
சீனத்தலைவர் லீ-பெங்கின் சமீபத்திய இந்தியச் சுற்றுப்பயணமும், அதனால் இரு நாடுகளிடையே மலர்ந்திருக்கும் நல்லெண்ணமும், நம்பிக்கையும், இந்தியா தன்னுடைய பனிப்போர்வையை விலக்கிக் கொண்டு, மற்ற வல்லரசுகளோடு, சமமாக அரசியல் முதிர்ச்சிபெற்று, உலகளாவிய அங்கீகாரத்தோடு உயர்ந்திருப்பதை அடையாளம் காட்டுகின்றன. இதற்காக, நம் பிரதமரையும், அவரது அமைச்சரவையின், வெளியுறவு கொள்கைகளையும், பாராட்டியே ஆகவேண்டும்.
சென்ற இதழில் அறிவித்திருந்தபடி, கேள்வி-பதில் பகுதியினைத் தொடங்கியுள்ளோம், தமிழன்பர் ஒருவர் கேட்டிருக்கும், ஒரே கேள்விக்கு உண்டான பதிலுடன்..! ஒரு கேள்விக்காக, ஒரு பகுதியா என்று வியக்கலாம்..! அக்கேள்வியைப் படிக்கும்வரை, அதைத் தள்ளிப் போடுங்கள்..! உங்கள் கேள்விகளை, கருத்துகளைக் கட்டாயம் தொடர்ந்து, அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போமா..?
அஷோக் சுப்பிரமணியம், கலி·போர்னியா, பிப்ரவரி, 2001. |
|
|
|
|
|
|
|
|