|
இரண்டு பெரிய இழப்புகள்! |
|
- அசோகன் பி.|செப்டம்பர் 2001| |
|
|
|
தமிழ்நாட்டில் இப்போது பழக்கப்பட்டு விட்ட அடிதடி, அமளி அரசியலுக்கு நடுவே இரண்டு பெரிய இழப்புக்கள்.
ஒன்று; நடிப்புலகிலிருந்து செவாலியே சிவாஜியின் மரணம். அந்த ஒப்பில்லாக் கலைஞனுக்கு ஈடு இணை ஏது? கமல் சொன்னதைப் போல, சிவாஜிக்கு முன், சிவாஜிக்கு பின் என்று இரண்டு சகாப்தங்கள் உருவாகி என்றும் அவன் புகழ் வாழும். நடிகர் திலகத்தின் படங்களைத் திறனாய்வு செய்ய இது தருணமில்லை; அதற்கான தகுதியும் என்கில்லை. இருந்தாலும்: இயக்கம், கதை போன்ற துறைகளில் பல்லாவரம் குன்றுகளின் கையில் சிக்கியதால் நடிப்பில் இமயமெனத் திகழ்ந்த அக்கலைஞன், தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்த இயலாமல் போயிற்று என்பது எனது கருத்து.
இந்தத் துயரத்தையாவது, நம்மால் ஒன்றும் செய்வதிற்கில்லை என்று தேற்றி கொள்ள வழியுண்டு. ஆனால் ஏர்வாடியில் நடந்த கொடுமையை எப்படி சொல்வது? நமது இருண்ட மனப் பாங்குகளையும், மூடநம்பிக்கைகளையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்று வெட்கித் தலை குனியத்தான் வேண்டும். மன நோயாளிகளை வைத்துப் பணம் பண்ணும் மூடநம்பிக்கைகளால் அவர்களை இன்னும் துன்புறுத்துவதும், நாம் என்றைக்கு மனித உயிரின் மதிப்பை உணரப் போகிறோமோ என்கிற கேள்வியை எழுப்புகின்றன.
இதிலும் தன்னார்வ அமைப்புகளும், ஆர்வலர்களும் பல வருடங்களாகப் பொதுமக்களின் மனதில் இப்பிரச்சனையின் தீவிரத்தைப் பற்றிய பிரக்ஞையை உருவாக்க பெருமுயற்சி எடுத்து வருகின்றனர். இந்த மாபெரும் துயர நிகழ்வுக்குப் பின்னாவது ஆட்சியாளர்களின் அசிரத்தைப் போக்குகளில் மாற்றம் ஏற்படும் என்று நம்புவோம்! ஆனால் பொதுமக்களின் மனத்திலும் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்படாவிட்டால், இனியும் இது போன்ற கொடுமைகள் தொடரும் என்பதே உண்மை. |
|
தமிழிணைய மாநாட்டுச் செய்திகள் இன்னும் கிடைக்கவில்லை. ஒரு கோணத்தில் நல்லதற்குத்தான் என்றே தோன்றுகிறது. ஏனெனில், இரண்டு மாதங்களாகத் திட்டமிட்ட, அலர்மேலு ரிஷி அவர்களின் சூரியனார் கோயில் பற்றிய கட்டுரையும், IIT பழைய மாணவர்களது முயற்சிகள் பற்றிய கட்டுரையும் இடமில்லாததால், அடுத்த இதழுக்குத் தள்ளப்பட்டு விட்டன, பக்கங்களை அதிகரிக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது. பார்க்கலாம்!
சென்ற மாதம் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிப்பதைப் பற்றி எழுதியதற்கொப்ப, அலாஸ்காவிலிருந்து ஒருவர் தென்றலுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது தற்செயலானது தான் என்றாலும் மிகவும் மகிழ்வூட்டியது. இவர் டெட்ராய்டில் நடந்த தமிழர் மாநாடு மூலம் தென்றலைப் பார்க்க நேர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார். தன்னார்வ அமைப்புகள் வளர்க!
மீண்டும் சந்திக்கும் வரை, பி. அசோகன் செப்டம்பர் 2001 |
|
|
|
|
|
|
|