Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
April 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம்
சிறுகதை
எழுத்தாளர்
தேனி சீருடையான்
- அரவிந்த்|ஏப்ரல் 2015|
Share: 
Click Here Enlargeவாழ்க்கை அனுபவங்களும் தரிசனங்களுமே ஒருவரை எழுத்தாளராக ஆக்குகின்றன என்பதற்குச் சிறந்த உதாரணம் தேனி சீருடையான். இவரது இயற்பெயர் கருப்பையா. வறுமையான குடும்பத்தில் பிறந்த இவருக்கு துவக்கப் பள்ளியில் படிக்கும்போது பார்வைக்குறைபாடு ஏற்பட்டது. மருத்துவம் பார்த்தும் பலனில்லாமல் பார்வை பறிபோனது, கல்வியும் தடைப்பட்டது. அடுத்து இவரது சகோதரிக்கும் பார்வைக்குறைவு ஏற்படவே குடும்பம் நிலைகுலைந்தது. உறவினர் ஒருவர்மூலம் பூந்தமல்லியில் இருக்கும் பார்வையற்றோர் பள்ளிபற்றி அறிந்து அதில் சேர்க்கப்பட்டார். அதுநாள்வரை வெளிச்சத்தில் பழகி வந்தவருக்கு இருட்டு பிடிபடவில்லை. தன்னலமற்ற ஆசிரியர்களின் கனிவான கவனிப்பின்மூலம் படிப்படியாக பிரெய்ல் மொழியைக் கற்றுத்தேர்ந்தார். எழுத, படிக்க ஆரம்பித்தார். பள்ளிக்கு வரும் வெளிநாட்டு இதழ்களைப் படித்து தனது அறிவுத் திறனை வளர்த்துக் கொண்டார். பள்ளியில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்றார். ஆங்கிலத்தில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்தும், பொருளாதாரம் இல்லாத காரணத்தால் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை.

குடும்பத்துக்கு உதவுவதற்காக இவர் உழைக்க விரும்ப, பார்வையற்றவர் என்பதால் சமூகம் உதாசீனப்படுத்தியது. தவித்த கருப்பையாவுக்கு கண் அறுவை சிகிச்சை செய்தால் பார்வை திரும்ப வாய்ப்பு இருக்கிறது என்பது தெரியவர, ஒரு கண்மருத்துவ முகாமில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். முழுமையாகப் பார்வை திரும்பாவிட்டாலும் ஓரளவு குணம் கிடைத்தது. வேலைவாய்ப்புப் பதிவு அலுவலகம் சென்றபோது "பார்வையற்றோர் பள்ளி அளித்த பள்ளிச் சான்றிதழை இங்கு பதிய முடியாது; சென்னையிலிருக்கும் பார்வையற்றோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சென்று பதியுங்கள்" என்று திருப்பி அனுப்பினர். சென்னையிலோ, "உங்களுக்குத்தான் தற்போது பார்வை உள்ளதே அதனால் பதிவு செய்யமாட்டோம்" என்றனர், பார்வையற்றோர் ஒதுக்கீட்டில் படித்த இவருக்குத் தற்போது பார்வை தெரியும் என்பதால் பதிவு செய்யச் சட்டம் மறுக்கிறது. சோகத்துடன் ஊர் திரும்பினார் கருப்பையா.

தொடர்ந்து உழைத்துப் பிழைக்க முடிவு செய்த அவர் தேனி பேருந்து நிலையத்தில் பொரிகடலை வியாபாரம் துவங்கினார். காலை முதல் இரவுவரை கடும் உழைப்பு நல்ல பலனைத் தந்தது. பின்னர் தள்ளுவண்டியில் பழங்களை விற்க ஆரம்பித்தவர், சில ஆண்டுகளிலேயே பழக்கடை ஒன்றை ஆரம்பித்தார். குடும்பம் வறுமையிலிருந்து மீண்டது. பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்ய மற்றொரு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். முழுமையாகப் பார்வை திரும்பியது. தேடித்தேடி நூல்களைப் படித்தார். "புதிய நம்பிக்கை" பத்திரிகை ஆசிரியர் பொன். விஜயன் இவரை எழுதத் தூண்டினார். எப்போதும் அழுக்கு உடைகளுடன் திரியும் துயரம் மிக்க ஏழை மனிதன் என்பதை அடையாளப்படுத்தும் வண்ணம் ‘சீருடையான்’ என்ற புனைபெயரில் எழுதத் துவங்கினார். ஏற்கனவே வாழ்க்கையில் பெற்றிருந்த ரணங்களும், வலிகளும் எழுத்துக்களாய் முகிழ்த்தன. செம்மலரில் முதல் சிறுகதை வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து பல சிற்றிதழ்களில் எழுதினார்.
Click Here Enlarge"கடை", "விழுது", "பயணம்", "ஒரே வாசல்" போன்ற படைப்புகள் இவர் யார் என்று திரும்பிப் பார்க்க வைத்தன. எழுத்தாளர் அல்லி உதயன் இவரது சிறுகதைகளைத் தொகுத்து "ஆகவே" என்ற தலைப்பில் நூலாக்கி வெளியிட்டதுடன் தமிழகம் முழுதும் இவரை அறியும்படிச் செய்தார். தொடர்ந்து சிறுகதை, நாவல், கட்டுரை என்று படைப்புலகில் பயணித்தார். ஒரு தள்ளுவண்டி பழ வியாபாரியை முன்னிறுத்தி நகரும் ‘கடை’ இவரது முதல் நாவலாகும். தனது வாழ்க்கை அனுபவங்களைக் கற்பனை கலந்து நாவலாக்கியிருந்தார். அந்நாவல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டது. இவருடைய "விடியும் வெளிச்சம்" சிறுகதை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்ட பெருமையுடையது. தொடர்ந்து முன்னணி இதழ்களில் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு நூலாகின. "ஒரே வாசல்", "விழுது", "பயணம்" போன்றவை முக்கியமான சிறுகதைத் தொகுப்புகளாகும். குறிப்பிடத்தகுந்த மற்றொரு நாவல் "நிறங்களின் உலகம்." மனோகர் தேவதாஸின் ஓவியங்களுடன் வெளியாகியிருக்கும் இந்நாவல் தேனி சீருடையானின் சுயசரிதம் என்று சொல்லலாம். பிறக்கும்போது கண்பார்வையுடன் பிறந்து இடையில் சில ஆண்டுகள் பார்வையற்றவராக வாழ்ந்து மீண்டும் அறுவை சிகிச்சையால் பார்வைபெற்ற சீருடையானின் அனுபவங்களும் அவர் எதிர்கொண்ட அவலங்களுமே நாவலாக உருமாறியுள்ளன. இந்நூலைப் பற்றி ஜெயமோகன், "உண்மையின் உதிரவாசனையால் முக்கியமான ஒரு தமிழ்நூலாக உள்ளது இது" என்று மதிப்பிடுகிறார். இவர் எழுதிய "சிறகுகள் முறியவில்லை" நாவலும் முக்கியமானதாகும். "சிறுகதைகள் - பாதையும் பயணமும்" என்ற கட்டுரைத் தொகுப்பும் குறிப்பிடத்தகுந்தது. இந்நூல் சிறுகதைகள் பற்றிய ஆய்வு நூலாகும். "மான் மேயும் காடு" என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

சீருடையானின் கதைகள் எளிமையானவை. இவரது கதைமாந்தர்கள் விளிம்புநிலை மக்கள். எளிமையானவர்கள். சமூகம், குடும்பம், வாழ்க்கை முரண்கள், உறவுச் சிக்கல் போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டவை இவரது படைப்புகள். விளிம்புநிலை மாந்தரின் வாழ்வை மிகைப்படுத்தாமல் படைப்புகளில் முன்வைப்பவர் இவர். தன் எழுத்துபற்றி, "என்னோட எழுத்தும், வாழ்க்கையும் வேறில்லை. நான் நடக்க முயற்சி பண்ணி விழுந்தெழுந்த தெரு, பசி போக்க வழியில்லாம பறிச்சுத் தின்ன சனம்புக்கீரை, எங்க எல்லாரையும் கிணத்துல தள்ளிட்டு, அம்மா தற்கொலை செஞ்சுக்க முயற்சி பண்ணின கிணறு... இதைத்தவிர நான் எழுதுவதற்கு வேறெதுவும் இல்லை" என்கிறார், ஒரு நேர்காணலில். இவரது படைப்புகளை ஆய்ந்து கரிச்சிராம் பாரதி என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இலக்கிய வீதி, இளைஞர் முழக்கம் ஆகியவற்றின் பரிசுகள் பெற்றிருக்கும் சீருடையான், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியவற்றின் நாவல் விருதுகளைப் பெற்றிருக்கிறார். குடும்பத்துடன் தேனியில் வசிக்கும் இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்; தேனி மாவட்டச் செயலாளர். தமிழ் படைப்புலகம் என்னும் ஆலமரத்துக்குச் சீருடையான் போன்ற யதார்த்தப் படைப்பாளிகள் வேர்களாகவும் விழுதுகளாகவும் உள்ளனர்.

அரவிந்த்
Share: