|
|
|
|
பின்புலம்: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவுகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவமனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். மூவரும் துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
இதுவரை: ஷாலினி தம்பி கிரண் வீட்டிற்கு அம்மா அனுப்பிய உணவைக் கொடுக்க வந்தாள். அங்கே கிரண் ஒரு முப்பரிமாண ப்ரிண்ட்டரில் தயாரித்த போர்ஷா கார் மாடலின் நுணுக்கமான அம்சங்களைப் பார்க்கிறாள். அது ப்ரிண்ட்டரில் தயாரானது என்று அவள் நம்ப மறுக்கவே, கிரண் புதிதாகப் பதித்துக் காட்டி வியப்பளிக்கிறான். ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வரவே இருவரும் சூர்யாவோடு அங்கே விரைந்தனர். அங்கு அவர்களை அகஸ்டா க்ளார்க் தன் ஆராய்ச்சிக்கூடத்தைச் சுற்றிக்காட்டினாள். குட்டன்பயோர்கின் தொழில்நுட்பத்தை விளக்கும்படி சூர்யா கேட்டுக்கொள்ளவே, அகஸ்டா உயிரியல் முப்பரிமாணப் பதிப்பால் மனிதர்களின் உள்ளுறுப்புகளின் பற்றாக்குறையைத் தீர்க்க இயலும் என்பதை விளக்குகிறாள். திசுப்பதிப்புக்கு முன்னோடியாக, பொதுவாக உயிரியல் சார்பற்ற பொருட்களைப் பதிக்கும் நுட்பங்களை விவரிக்க ஆரம்பித்தாள். பிறகு...
*****
முப்பரிமாணப் பதிப்பு முறையில் பொருட்களைத் தயாரிப்பதால், பெரும் எண்ணிக்கையிலன்றி, ஓரிருவருக்காகக்கூட மிக எளிதாக உற்பத்தி செய்யும் வெகுஜனத் தனித்துவம் (mass customization) பற்றித் தான் கூறுமுன்பே சூர்யா விளக்கியதும் பிரமிப்புடன் அவரைப் பாராட்டிய அகஸ்டா மேற்கொண்டு தன் உத்வேகத்துடன் விவரிக்க ஆரம்பித்தாள்.
"இதில் விசேஷம் என்னவென்றால், சமீபத்தில், இம்முப்பரிமாணப் பதிப்பு, பூமியிலிருந்து விண்வெளிக்குத் தகவல்துளிகள் அனுப்பி..."
கிரண் வாய்பிளந்தான், "வாவ்! விண்வெளியியலோட முப்பரிமாணப் பதிப்பு! எனக்கு மிக ஆர்வமான ரெண்டு துறைகள் இணைஞ்சுடுச்சா! சூப்பர்!"
ஷாலினி சிரித்தாள். "கிரண் உனக்கு அதைவிட ஆர்வமான துறை இளம்பெண்களைப் பாத்து ஜொள்ளுவிடறது. அதுக்கும் முப்பரிமாணப் பதிப்புக்கும் சம்பந்தம் என்னன்னு..."
அதைக் கற்பனை செய்துபார்த்த அகஸ்டா, சற்றே நாணத்துடன் கலகலத்தாள். வெட்கமடைந்த கிரண் வெகுண்டான்! "ஹே ஷாலு, உனக்கு மிக ஆர்வமான துறை டீனேஜ் காதல் கதைப்புத்தகங்கள். அதை வேணா பதிச்சு... சே, சே, அதான் அதெல்லாம் அமேஸான்ல மின்புத்தகங்களா வாங்கிடறயே, பதிக்கத் தேவையில்லை" என்று நக்கலடித்தான்.
ஷாலினியின் முகம் வெட்கத்தால் சிவக்க, அவள் எதோ பதிலடியாகச் சொல்வதற்குள் சூர்யா, "ரெண்டு பேரும் திரும்பவும் ஆரம்பிச்சுட்டீங்களா. அடடா, நர்ஸரிப் பசங்களே தேவலாம் போலிருக்கே! அகஸ்டா, மேலே சொல்லுங்க ப்ளீஸ்" என்றார்
சிரிப்பை அடக்கிக்கொண்ட அகஸ்டா, "பூமியிலிருந்த அனுப்பப்பட்ட தகவல்களை வச்சு ஒரு சாதனத்தை, பல்நாட்டு விண்வெளிக் கூடத்திலேயே பதிப்பிட்டு உடனே பயன்படுத்தி ஒரு முக்கிய வேலையை முடிச்சாங்க. அது முடியாட்டா பூமியிலிருந்து சாதனம் அனுப்பவேண்டி, அந்த வேலை பல மாதங்கள் தாமதமாகியிருக்கும். முப்பரிமாணப் பதிப்பால டகால்னு சில நிமிஷங்களில் சாதனம் கிடைச்சுடுச்சு."
ஷாலினி மீண்டும் கேட்டாள், "அது புரியுது, அதுக்கும் குட்டன்பயோர்குக்கும் என்ன சம்பந்தம்னு தான் புரியலை. அது என்னன்னு கொஞ்சம் விளக்கறீங்களா?" |
|
சூர்யாவே இடைமறித்தார், "ஷாலினி, பொருத்தம் உன் மருத்துவத் துறையிலேயே இருக்கே. அகஸ்டா சொல்லவரது எனக்குப் புரிஞ்சுடுச்சு. விண்வெளி நிலையத்துக்கு தகவல்மட்டும் அனுப்பி, அங்கயே பதிச்சதுனால வேலை தாமதமாகாம நடந்துடுச்சு இல்லயா? அதே மாதிரி, குட்டன்பயோர்கின் முயற்சி வெற்றியடஞ்சுட்டா, உடல் பாகங்களுக்காக பல வருஷம் காத்திருக்க வேண்டியதில்லை. சிலபேர் அது கிடைக்காம உயிரிழக்க வேண்டியதில்லை. எந்த மாதிரியான பொருத்தமான திசு வேணுங்கற தகவலை வச்சு அதுக்குப் பொருத்தமான உடல் பாகங்களை உடனே பதிச்சு தேவையானவங்களுக்குப் பொருத்தி குணமாக்கிடலாம்னு சொல்ல வராங்கன்னு நினைக்கிறேன். என்ன அகஸ்டா?"
அகஸ்டா ஆரவாரித்தாள், "அட்டகாசம் சூர்யா, பிரமாதம். நான்கூட இவ்வளவு சரியா விளக்கியிருப்பேனான்னு தெரியலை! கனகச்சிதமா சொல்லிட்டீங்க. சம்பந்தமில்லாமலிருக்கறா மாதிரியான ரெண்டு விஷயங்களின் அடிப்படைப் பொருத்தத்தை உடனே புரிஞ்சிக்கறீங்களே, பிரமாதம்! உங்க பழைய துறைக்கு சம்பந்தமில்லாத வெவ்வேறு துறைகளில நீங்க எப்படி துப்பறிஞ்சு மிக நுணுக்கமான விஷயங்களை எப்படிக் கண்டுபிடிச்சிருப்பீங்கன்னு இப்ப புரியுது. குட்டன்பயோர்கின் பிரச்சனையை நீங்க கண்டுபிடிச்சு, தீர்த்து வைப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை பலமாகுது."
சூர்யா மறுதலித்தார், "ரொம்பப் புகழாதீங்க அகஸ்டா. அதுக்கெல்லாம் நான் தகுதியானவனில்லை. அப்புறம் ஏமாற்றமடைய நேரிடலாம். உங்க துறையின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் உங்க பிரச்சனையைப் பத்தியும் நான் தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு. இப்ப பல ஆராய்ச்சிக் கூடங்களில் உயிரியல் முப்பரிமாணப் பதிப்பு எந்த அளவுக்கு முன்னேறியிருக்குன்னு முதல்ல சொல்லுங்க. அப்புறம் குட்டன்பயோர்கின் தொழில்நுட்பம் அதைவிட எப்படிச் சிறந்ததுன்னு விளக்குங்க. அதுக்கப்புறம் உங்க பிரச்சனை என்னன்னு சொல்லுங்க. அப்புறம் விசாரிச்சு ஆலோசனை செய்யலாம்."
குட்டன்பயோர்கின் பிரச்சனையைப்பற்றி யோசித்ததும் அகஸ்டாவின் மனமும் முகமும் இருண்டன. இருந்தாலும் உற்சாகத்துடன் அகஸ்டா விவரிக்கலானாள். "நாம இதுவரைக்கும் உயிரியல் சம்பந்தமற்ற ப்ளாஸ்டிக், உலோகம் போன்ற மூலப்பொருட்களை வைத்துமட்டும் முப்பரிமாணப் பதிப்பு எப்படி செய்யறாங்கன்னு பேசினோம். ஆனா உயிரியல் முப்பரிமாணம் அவ்வளவு எளிதில்லை. திசுக்கள் வேணுமான படிவத்தில் பதிக்கப்பட்டு, வேலை செய்யணும். அதோட மூலநுட்பங்கள் என்னன்னு முதல்ல சொல்றேன்."
ஒரு நொடி மூச்செடுத்துக் கொண்டு, மற்ற மூவரும் உன்னிப்பாகக் கேட்டுக்கொள்வதைக் கவனித்த அகஸ்டா தொடர்ந்தாள். "ஷாலினி உயிரியல் பதிப்புக்கு அத்தியாவசிய அடிப்படைத் தேவை என்னன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கும்..."
ஷாலின் ஆர்வத்தோடு தலையாட்டி, "நிச்சயமா, அதிலென்ன சந்தேகம். திசுச் செல்கள்தானே அடிப்படைத் தேவை?"
அகஸ்டா ஆமோதித்தாள், "எக்ஸாக்ட்லி! உயிரினங்களின் அத்தனை உறுப்புக்களுக்கும் அடிப்படையானவை வெவ்வேறு தரப்பட்ட உயிரணுக்கள். சாதாரண முப்பரிமாணப் பதிப்பில் ப்ளாஸ்டிக் துளிகள், உலோகத் துளிகளை படிப்படியாகப் பதிப்பதுபோல் உயிரியல் முப்பரிமாணப் பதிப்பில் வெவ்வேறு உயிரணுக்கள் படிப்படியாகப் பதிக்கப்படுகின்றன."
"ஆனால் அகஸ்டா, ப்ளாஸ்டிக்கும், உலோகமும் உயிரற்றவை. அவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம், வெகு தொலைவிலிருந்து அனுப்பி, எத்தனை நாள் கழித்தும் பயன்படுத்தலாம். உயிரணுக்கள் அப்படியில்லயே. எப்படி உற்பத்தி செய்யமுடியும், எப்படி அருகிலேயே தேவையாகும்போது உடனே கிடைக்கும்படி இருக்கும்?" சூர்யா கேட்டார்.
"மிக நல்ல கேள்வி சூர்யா. ரொம்பச் சரி. உயிரணுக்களைப் பதிக்க ப்ளாஸ்டிக் பதிப்பு வழிமுறையை அப்படியே பயன்படுத்த முடியாதுதான். ஆனால், சில அம்சங்கள் இரண்டுக்கும் பொதுதான். நான் சொன்னபடி இரண்டிலும் சில முனைகளை வைத்து பதிக்கும் மூலப்பொருட்களைத் துளித்துளியாக வெளியிட்டு பதிக்கும் வழிமுறை உள்ளது. ஆனால் மூலப்பொருள் எவ்வாறு உற்பத்தியாகிறது, பதிப்புக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதில் பெரும் வித்தியாசங்கள் உள்ளன," விளக்கினாள் அகஸ்டா.
ஷாலினி ஆர்வத்துடன், "உம்... கேட்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. என்ன வித்தியாசம்னு விளக்குங்க" என்றாள்.
அகஸ்டா தொடர்ந்தாள், "ப்ளாஸ்டிக், உலோகம் போன்ற மூலப்பொருட்களைத் தொழிற்சாலையில் ஒட்டுமொத்தமாக ஒரேதரத்தில் பெருமளவில் தயாரிக்கலாம். ஆனால் திசுமூலப் பொருட்களான உயிரணுக்களைப், பதிப்பாகும் ஒவ்வொரு திசுவுக்கும் ஏற்பத் தனிப்பட்ட முறையில் பொருத்தமான அணுக்களைத் தனித்துத்தான் தயாரித்து பதிக்க வேண்டும். அதுவும், பொருத்தப்பட வேண்டியவரின் உடலுக்கேற்ப, அவரோட உயிரணு வகையிலேயே இருந்தாதான் முடியும். இல்லேன்னா திசுக்கள் நிராகரிக்கப்படும்."
கிரண், "அம்மாடியோவ்! ஒவ்வொரு திசு பதிப்புக்கும் வேற வேற ஸெல்களை உருவாக்கணுமா? அதுவும் அவரவருக்குப் பொருந்தற மாதிரி? கேட்டாலே எனக்கு தலை கிர்ருனு சுத்துதே, இதை எப்படி நடைமுறையில செஞ்சு சமாளிக்கறீங்க?" என்று அதிசயித்தான்.
அகஸ்டா தொடர்ந்தாள். "அந்த மாதிரி தனிப்பட்டுப் பொருந்தும்படி மூல உயிரணுக்கள் தயார் செய்யணுங்கறதுனால அதுல முதல்படி ஸெல்களை எப்படி வளர்க்கறதுங்கதுதான். வெறும் பொதுவான ஆராய்ச்சிக்காக மட்டும், தனிமனிதருக்குப் பயன்படறதுன்னா, எந்த ஸ்டெம் உயிரணுக்களை வேணா பீட்ரி தட்டில் வைத்து..."
கிரண் குறுக்கிட்டான். "ஸ்டெம் உயிரணுக்களா? அப்படின்னா?"
இப்போது ஷாலினி விளக்கினாள். "கிரண், ஸ்டெம் ஸெல்ங்கற ஒரேவகையான உயிரணு ஓரளவு வளர்ந்த பிறகு வெவ்வேற வகையான உயிரணுவாக ஆகிறது. கருவுல முதல்ல உருவாகற உயிரணுக்கள் ஸ்டெம் வகையாத்தான் இருக்கும். ஆனா கரு வளர வளர, கண், காது, மூக்கு, இருதயம், மூளை, வயிறு போன்ற பலவகை அங்கங்களின் உயிரணுக்களாக மாறி வளர்கின்றன. பலவகையான அங்கங்களைப் பதிக்க, இவர்களும் அதைப் பயன்படுத்துகிறார்கள் போலிருக்கு…"
அகஸ்டா கை தட்டினாள். "எக்ஸாக்ட்லி! ஷாலினி உனக்குப் புரிஞ்சிருக்கும்னு தெரியும். ஸ்டெம் அணுக்களைப் பயன்படுத்த அதேதான் காரணம். எந்த விதமான திசு பதிக்கணுங்கறதைப் பொருத்து, ஸ்டெம் ஸெல்களை வெவ்வேறு விதமாத் தூண்ட வேண்டியிருக்கு. அதுவும் பொது ஆராய்ச்சியில்லாம, ஒரு தனிமனிதர் உடலில திசு பொருத்தணும்னா, அவர்கிட்டேந்து கிடைக்கற உயிரணுக்களைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கு" எனக் கூறிவிட்டு அகஸ்டா உயிரியல் முப்பரிமாணப் பதிப்பு நுட்பங்களைப் பற்றி மேற்கொண்டு விவரித்தது, நம் துப்பறியும் மூவருக்கும் மிக சுவாரஸ்யமாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருந்தது.
குட்டன்பயோர்கின் சிறப்பு நுட்பங்கள், அதில் எழுந்த பிரச்சனை என்ன, சூர்யா என்ன செய்தார் என்பவற்றை வரும் நாட்களில் பார்க்கலாம்....
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|
|