Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பயணம்
ஜமைக்காவில் ஒரு சொர்க்கம்
- அலமேலு மணி|பிப்ரவரி 2015|
Share:
உடலைத் தென்றல் தழுவுகிறது. நீலக்கடல் குதித்துக் குதித்து வந்து கரையைத் தழுவுகிறது. மணல்தரை முழுவதும் சின்னஞ்சிறு மலர்களின் கூட்டம். அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. சோழி குலுங்குவதுபோலக் கலகலவென்று சிரித்தபடி, கையில் தூண்டிலைத் தூக்கமுடியாமல் தூக்கியபடி கடற்கரையோரம் நிற்கிறார்கள். எதிரே ஒரு மின்விசைப்படகு வர ஒவ்வொருவராகப் படகில் ஏறுகிறார்கள். கரையிலிருந்து ஒருபெண், குழந்தைகளை ஏற்றிவிட, படகினுள்ளே ஒருவர் தூக்கி எடுத்துப் படகில் விடுகிறார்.

கண்ணாடித்தரை கொண்ட அந்தப் படகில் அமர்ந்து, குழந்தைகள் தூண்டிலைத் தண்ணீரில் போட்டு "வா மீனே! வா வா!" என்று கும்மாளமிடுகிறார்கள். ஐந்து வயது ரியா, "டாடி டாடி, என் தூண்டிலில் மீன் டாடி!" என்று சந்தோஷமாகக் கூவ தந்தை அருண் தூண்டிலை மேலே இழுக்கிறார். அம்மா! ஓரடி நீளமுள்ள அழகான மீன். எல்லாக் குழந்தைகளும் ரியாவைச் சுற்றி என்னமோ தானே பிடித்ததுபோல் கைகொட்டி ஆரவாரிக்கின்றன. அன்று வேறொருவருக்கும் மீன் பிடிபடவில்லை. ரியாதான் ராணி.

Click Here Enlargeஇது ஜமைக்காவின் Franklin Resort. மூன்று குழந்தைகளுடன் பல இடங்களுக்கும் விடுமுறைக்குச் செல்லும் என் மகன் மகேஷ், ஒருமுறை ஜமைக்காவில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளத் தாதி, நானி வசதியுடன் இந்த ரிசார்ட் இருப்பதைக் கேள்விப்பட்டு அங்கே சென்றான். நானிகளின் அன்பான அரவணைப்பில் குழந்தைகள் உல்லாசமாக இருந்ததைக் கண்டதும் மூன்றுமுறை அங்கேயே சென்றான். அங்கே வரும் பலரும் அப்படித் திரும்பத்திரும்ப வருபவர்கள்தாம். இம்முறை தன் அண்ணன் அருண் குடும்பத்தையும், தாத்தா பாட்டியையும் (வேறு யார், நாங்கள்தான்!) அழைத்துச் சென்றான்.

சிறு குழந்தைகள் உள்ள பெற்றோர்களின் சொர்க்கம் அது. போய் இறங்கின உடனேயே தாதி உங்கள் அறைக்கு வந்துவிடுவார். உணவு கொடுப்பதிலிருந்து நீச்சல்குளத்துக்கு அழைத்துச் செல்வது, தண்ணீர் சறுக்குக்குக் கொண்டுசெல்வது, விளையாட்டுகளுக்குத் தயார்செய்வது போன்ற எல்லாப் பொறுப்புகளையும் தானே எடுத்துக்கொண்டு விடுவார். முன்னூறு பேர் தங்குவதற்கான அறைகளுள்ள ரிசார்ட் அது. ஒவ்வோர் அறைக்கும் ஒரு நானி. தேவையானால் இன்னொரு நானி குறைந்த கட்டணத்தில் கிடைப்பார்.

குழந்தைகளுக்கான சிறுவர் கிளப் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை திறந்திருக்கும். மணிகளால் மாலை செய்தல், சட்டைக்கு வண்ணம் தோய்த்தல், கடற்கரை மணலில் கிளிஞ்சல் பொறுக்கி அவற்றை இனங்கண்டறிதல், உல்லாசப்படகில் கடலைச் சுற்றிவருதல், மீன்பிடித்தல், நீச்சல் குளம் என்று தாதியே எல்லாவற்றுக்கும் அழைத்துச் சென்றுவிடுகிறார். பெற்றோர் வேண்டுமானாலும் அவர்களுடன் சேர்ந்துகொள்ளலாம்.
படியிறங்கினால் கடற்கரை. சிறு இடத்தில் வேலிபோட்டு அதனுள்ளே குழந்தைகள் நீச்சலடிக்கப் பாதுகாப்பான வசதி. பெரியவர்கள் நீந்துமிடம் வேறு. மூன்றுவிதமான உணவகங்கள். மாமிசம் சாப்பிடாதவர்களுக்கு சாம்பார் போன்ற பருப்புப்போட்ட ஒன்று, வெண்டைக்காய் கறி, புலவு, தேங்காய் சாதம், சப்பாத்தி, சில வடஇந்திய உணவுகள் செய்துதந்தார்கள். பெரிய வாதாமரத்தின் கீழேயுள்ள உணவகத்தில் இத்தாலிய உணவு கிடைக்கிறது.

குறைந்த செலவில் சில இடங்களுக்கும் போகலாம். பிரபல பாடகர் பாப் மார்லியின் மியூசியம் செல்லலாம். அழகான அருவியில் குற்றாலம்போலக் குளிக்கலாம். ஒருநாள் டால்ஃபின்களுடன் விளையாடக் கிளம்பினோம். சிறு குழந்தைகளும், தாத்தா பாட்டிகளும் சில அம்மாக்களும் முழங்கால் ஆழத்தில் கடலில் நின்றுகொண்டிருக்க டால்ஃபின் ஒவ்வொருவரிடமும் வந்து முகத்தில் முத்தமிட்டு, தன்னைத் தடவவிட்டு, பாட்டுப்பாடி, பத்தடி பாய்ந்து வீசியெறிந்த வளையத்தைத் தேடிக் கொண்டுவந்து சாகசங்கள் செய்தது. ஒருவயதுக் குழந்தைமுதல், எழுபதுவயதுத் தாத்தாவரை ஜாலியாக அனுபவித்தார்கள். எட்டுவயதுப் பேத்தி சிம்ரன் அப்பா அருணோடு, அவளைப்போலப் பத்துபங்கு பெரியதான டால்ஃபினுடன் நீச்சலடித்ததைப் பார்த்து மனம் பயத்தில் துடித்தபோதும் பெருமையும் ஏற்பட்டது மறுக்கமுடியாத உண்மை.

Click Here Enlargeஒருநாள் என் பேரன் ஷெய்லன் "பாட்டி இதப்பாரு" என்று ஒரு பக்கெட்டை நீட்டினான். பார்த்தால் வெள்ளைக்கால் நண்டுகள்! பயந்துவிட்டேன். "அம்மா, பாட்டி பாரு பயப்படறா? ஐந்து வயசுப் பையன் நான் தைரியமா இருக்கேன்" என்று சொல்லிச் சிரித்தான். சுற்றியிருந்த குழந்தைகள் சேர்ந்துகொண்டு "ஸ்கேரி காட், ஸ்கேரி காட்" என்று என்னைச்சுற்றிக் கைகொட்டி நடனமாடினர். பிறகு என்னையும் கடற்கரைக்கு அழைத்துப்போய் மணலில் சிறுகுழி செய்ய, நண்டுகள் மேலே வந்தன. அவற்றை மணலுடன் அள்ளி பக்கெட்டில் போட்டுக்கொண்டு வந்தான். இப்படிப் பிடிப்பதும் பிறகு மணலில் விடுவதும் என்று குழந்தைகள் பொழுதுபோக்கின.

அந்த ரிசார்ட்டில் பெரியவர்களுக்கும் நிறையக் கேளிக்கைகள் உள்ளன. கடலில் ஸ்னோர்கெலிங், ஸ்கூபா டைவிங் போகலாம். சிலர் ஐம்பது மைல் தொலைவு கடலுக்குள் சென்று, மூழ்கிய ஒரு கப்பலையும், இரண்டு விமானங்களையும் பார்த்துவந்தார்கள். இரவில் ஒரு பாடகர் வந்து பாட, நிலவொளியில் கடலலை மேடையில் வந்து மோத, பலர் நடனமாடுவர். தினமும் ஆடையலங்காரப் போட்டி, பாட்டுப்போட்டி, ‘உன் கணவனைத் தெரியுமா?’ போட்டி என்று பல கலாட்டா நிகழ்ச்சிகள். குழந்தைகளும் பெரியவர்களும் சந்தோஷமாக இருக்கப் போய்வாருங்களேன் ஜமைக்காவின் ஃப்ராங்க்லின் ரிசார்ட்டிற்கு.

அலமேலு மணி,
கனடா
Share: 




© Copyright 2020 Tamilonline