|
முயல்... முயல்... |
|
- அரவிந்த்|ஜனவரி 2015| |
|
|
|
|
|
பஞ்சம் காரணமாக ஒரு காட்டைவிட்டு மற்றொரு காட்டுக்குk கூட்டமாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தன சில முயல்கள். அவற்றில் இரண்டு மட்டும் வழிதவறி ஒரு திறந்தவெளிப் பாழுங்கிணற்றில் விழுந்துவிட்டன. இதைப் பார்த்து மற்ற முயல்கள் எல்லாம் கத்தின. விழுந்த முயல்கள் எம்பி எம்பி மேலே வர முயற்சித்தன. முடியவில்லை.
மேலே இருந்த ஒரு மூத்த முயல், அவற்றைப் பார்த்து, "நீங்கள் இப்படி எம்பி எம்பிக் குதிப்பதால் எந்தப் பயனுமில்லை. இதன் மேலே ஏறி வருவது என்பது முடியவே முடியாது. ஆகவே வருவதை எதிர் கொள்ளுங்கள்" என்று சொன்னது. பிற முயல்களும் அதை ஆமோதித்து "வர வேண்டாம்; வர வேண்டாம். உங்களுக்கு இன்னமும் அடிபடும். ஆபத்து" என்று கூக்குரலிட்டன. மேலே இருந்து அந்த முயல்களின் செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.
விடாமல் மேலே ஏறிவர முயற்சி செய்த ஒரு முயல், மூத்த முயலின் வார்த்தையையும் பிற முயல்களின் கூக்குரலையும் கேட்டது. மனம் சோர்ந்தது. சற்று நேரத்தில் அப்படியே மயங்கிச் சுருண்டு படுத்துவிட்டது. மற்றொரு முயலோ, விடாமல் முயற்சி செய்தது.
சற்று நேரத்தில் கிணற்றுக்குள் முளைத்திருந்த ஒரு சிறு மரத்தின் வேரை எம்பிப் பிடித்த அது, மெள்ள மெள்ள மேலே நகர்ந்து கிணற்றின் மையப் பகுதிக்கு வந்தது. அங்கிருந்து கிணற்றில் இறங்குவதற்காக இருந்த சிறு படிகளுக்குத் தாவிய அது, கவனமாக ஒவ்வொரு படியாகத் தாண்டி மேலே வந்தது.
தன்னை வியப்புடன் பார்த்த பிற முயல்களிடம், "என்னை ஊக்குவித்த உங்களுக்கு மிக்க நன்றி. கீழே விழுந்த அதிர்ச்சியில் எனக்கு காது கேட்காமல் போய்விட்டது. மேலே பார்த்தபோது நீங்கள் கையை, காலை ஆட்டுவதும் ஏதோ சொல்வதும் புரிந்தது. என்னை உற்சாகப்படுத்தத்தான் அவ்வாறு செய்கிறீர்கள் என்று தோன்றியது. அந்த ஊக்கத்தில் முயற்சி செய்து மேலே வந்துவிட்டேன். உங்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றி" என்றது. |
|
"நாம் பேசும் சொற்கள் ஒருவரைக் கொல்லவும் செய்யும்; வெல்லவும் வைக்கும்" என்பதை உணர்ந்துகொண்ட பிற முயல்கள் பதில் பேச முடியாமல் மௌனமாகின.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|