|
|
நாச்சியார் கோயில் இருக்கும் ஊர் நாச்சியார்கோயில். சூரியனார் கோயில் இருக்கும் ஊரும் சூரியனார்கோயில். சங்கரன் கோயில், பழனி இப்படி அந்தந்த ஊரில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பெயரைக்கொண்டே ஊரின் பெயரும் அமைவதைத்தான் பார்த்திருக்கின்றோம். மாறாக ஊரின் பெயரால் இறைவன் பெயர் பெறும் தலம் ஒன்றுண்டு. அதுதான் திருவண்ணாமலை. அண்ணாமலை என்னும் மலையருகே இருக்கும் பெருமான் அண்ணாமலையார் என்று அழைக்கப்படும் அதிசயத்தை இந்த ஊரில் பார்க்கிறோம். இந்த அண்ணாமலை என்னும் ஊருக்குத் தனிச் சிறப்பு ஒன்றுண்டு.
உலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த மலை அண்ணாமலை என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள -நம்மை வியக்க வைக்கும்- உண்மை. இந்திய விஞ்ஞானக் குழுக்கூட்டத்தில் 1949-ல் டாக்டர் பீர்பால் சஹானி என்ற விஞ்ஞானி இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். நில நடுக்கங்களால் மற்றப் பகுதிகள் பாதிக்கப் படுவதுபோல் தட்சிணப் பீடபூமி பாதிக்கப் படுவதில்லை என்பதற்கும் அண்ணாமலை யின் பழமையே காரணம் என்று கூறப்படுகின்றது. நம்முடைய புராணங்களும் இம்மலையை உலகின் மத்திய பாகமாகக் குறிப்பிடுகின்றது.
அப்பு (நீர்), தேயு (நெருப்பு), வாயு (காற்று), மண் (நிலம்), விண் (ஆகாயம்) ஆகிய வற்றுக்கான பஞ்சபூதத் தலங்கள் முறையே திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி, காஞ்சீபுரம், சிதம்பரம் ஆகியவையாகும். இதில் தேயுத்தலமான திருவண்ணாமலை படைப்புக் காலத்தில் நெருப்பு மண்டலமாக இருந்து பின்னர் குளிர்ந்து கெட்டிப்பட்டு மலையாகியதாகப் புவியியல் விளக்குகிறது.
புராணம் சொல்வது
அருணாசல புராணம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ள செய்தி பலரும் அறிந்த ஒன்று. தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரமனும் திருமாலும் போட்டியிட நாரதர் குறுக்கிட்டு 'பிறவா யாக்கைப் பெரியோன் சிவபெருமானே பெரியவர்' என்று கலகத்தைப் பெரிதுபடுத்தவே சிவபெருமான் அழல் உருவாகி நின்று தமது அடியையும் முடியையும் முதலில் காண்பவரே பெரியவர் என்று அவர்களைப் போட்டிக்கு அழைத்தார். அன்னப்பறவை உருவில் பிரமன் சிவ பெருமானின் முடியைத் தேடி மேலேமேலே பறந்து சென்று அழலில் சிறகுகள் எரிந்து போய்க் கீழே விழுந்தார். வராக உருவில் (பன்றி) அடியைத் தேடி பூமியைக் கீறிக் கொண்டு சென்ற திருமாலும் தம் தோல்வியை ஒப்புக் கொண்டார். தங்களது ஆணவத்தால் அழலுருவில் நின்ற சிவபெருமானைக் காண இயலாத இவர்களுக்குப் பெருமான் லிங்க உருவில் காட்சி அளித்தார். இவ்வாறு காட்சி அளித்த தலமே திருவண்ணாமலை.
சோதிப்பிழம்பின் அனலைத் தாங்க முடியாத தேவர்கள் வேண்டிக்கொண்டதற் கிணங்க மலையாக இறுகிவிட்ட அந்தத் தோற்றமே திருவண்ணாமலை. இதைத்தான் மாணிக்கவாசகரும் 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி' என்று திருவெம்பாவையில் குறிப்பிட்டுள்ளார். திருமூலர் இயற்றிய 'திருமந்திரம்' அடி முடி தேடிய படலம் என்ற தலைப்பில் 9 பாடல்களில் இது பற்றிக் குறிப்பிடுகின்றது. இந்தப் புராணக்கதையைப் பின் பற்றி மேற்கு கோபுரத்தின் தெற்கில் 'தூல சூட்சும லிங்கம்' வீற்றிருக்கும் சன்னதி ஒன்றுள்ளது. இந்த லிங்கத்தின் மேலே அன்ன வடிவமும் கீழே வராக வடிவமும் செதுக்கப்பட்டுள்ளன. நடுவில் ரிஷப வாகனத்தில் உமையுடன் சிவபெருமான் காட்சி அளிக்கின்றார். விஞ்ஞான அடிப்படையில் பார்க்கும்போது அண்ணாமலை முன்பு அனல் பிழம்பாய் அடி முடி தெரியாமல் இருந்து பின்னர் காலத்தால் குளிர்ந்து மலையாய் இறுகி விட்டதாக அறிகிறோம். இவ்வாறு தட்சிணப் பீடபூமியின் பழமையை அறிய முடிகிறது.
மற்றுமொரு திருவிளையாடலும் இத் தலத்தில் நிகழ்ந்திருக்கின்றது. உமையம்மை விளையாட்டாகச் சிவபெருமான் கண் களைப் பொத்திவிட இதன் விளைவாக உலகமே இருண்டு விடுகிறது. இதற்குப் பரிகாரமாக பார்வதி காஞ்சியில் தவம் இருந்து மீண்டும் சிவபெருமானை அடைந்த வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று. இத்துடன் சக்தியின்றி சிவனில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திரு வண்ணாமலையில் பார்வதிதேவி தவம் இயற்றிச் சிவனது அங்கத்தில் பாதியைத் தன்னுடையதாக்கிக் கொண்டதனால் சிவபெருமான் 'மாதொரு பாகன்', 'அர்த்த நாரீஸ்வரன்' என்று அழைக்கப்படக் காரணமாயினள்.
கோயில் அமைப்பு
25 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்து பரந்த மலைப்பரப்பின் அடித்தளத்தில் உண்ணா முலை அம்மை சமேத அண்ணாமலையார் இங்கு கோயில் கொண்டுள்ளார். 9 கோபுரங்களும் 56 திருச்சுற்றுக்களும் கொண்டிருப்பது ஒன்றே தமிழகக் கோயில்கள் வரிசையில் இது ஒரு மிகப் பெரிய கோயிலாக இடம் பெறுவதற்கான பொருத்தத்தை அறியலாம்.
கிழக்கில் உள்ளது பிரதான வாயில். இக்கோபுரத்திற்கு தனிப்பெருமை ஒன்றுண்டு. சோழமன்னன் முதலாம் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுரத்தின் உயரம் 215 அடி. இராஜ ராஜனுக்கும் அவனுக்குப் பின்னால் வந்த சோழப் பேரரசர்களுக்கும் அவர்கள் எழுப்பிய கோயில்களின் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளின் கலைத்திறனால் கிடைத்த பேரும் புகழும் பார்த்து, பிற் காலத்தில் தமிழகத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தானும் அது போன்ற பெருமையை அடைய விரும்பினார். எனவே புதிய கோபுரங்கள், கல்யாண மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபம் என்று வேறு வகையில் புதுமையான கலைப் படைப்புக்களை உருவாக்கினார். அதன் விளைவாகத் திருவண்ணாமலை இராஜ கோபுரத்தைத் தஞ்சைக் கோயிலை விட ஓர் அடி அதிகமாக 216 அடி உயரமாக்கினார்.
கிழக்குக் கோபுரத்தின் ஆயிரங்கால் மண்டபத்தை யாரும் மறந்து விட முடியாது. வீட்டைத் துறந்து வெளியேறிய உலகப் புகழ் ரமண மஹரிஷி இக் கோபுரத்தின் மத்தியில் அமைந்த பாதாள லிங்கத்தின் சன்னதியைத் தான் புகலிடமாகக் கொண்டு அன்ன ஆகாரமின்றி நாள் கணக்கில் நிட்டையில் இருந்தார். வெளியுலக உணர்வின்றி இருந்த இவரைச் சில அன்பர்கள் வெளிக் கொணர்ந்து, புழு பூச்சிகள் குதறியதால் இரத்தம் கசிந்திருந்த இவரது புண்களுக்குச் சிகிச்சை அளித்தனர். இதன்பின் நீண்ட காலம் பூட்டியே வைக்கப்பட்டிருந்த இந்தச் சன்னதி பிற்காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜகோபாலாச்சாரியார் முயற்சியால் செப்பனிடப்பட்டு சன்னிதி திறக்கப்பட்டது.
தெற்குக் கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்று பெயர். ஊர் மக்களிடமிருந்து நன்கொடை வசூலித்து வடக்குக் கோபுரத்தைக் கட்டி முடித்த அம்மணியம்மாள் பெயராலேயே அக்கோபுரம் அழைக்கப்படுகின்றது.
நந்தி மண்டபம்
சிவகங்கைக் குளத்தின் வடக்கே நந்தி மண்டபம் ஒன்று இருக்கிறது. சிறந்த சிவபக்தரான போசலமன்னர் பரம்பரை யைச் சேர்ந்த வல்லாள மகாராசனால் 6 அடி நீளமுள்ள நந்தி சிலை செதுக்கப்பட்டு இந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. நந்தி சிலை வைக்கப்பட்டுள்ளதாலேயே இது நந்தி மண்டபம் என்று அழைக்கப்பட்டது. தில்லைப் பெருமானிடம் கொண்டிருந்த நந்தனாரின் சிவபக்திக்கு இணையானது இம்மன்னனது சிவபக்தி என்று கூறலாம். இந்த மண்டபத்தின் தூண்களில் இம் மன்னன் மற்றும் ராணியின் உருவங்களும் போசல வம்சத்துக் கொடியான மிருகமும் பறவையும் இணைந்த 'கண்டபேரண்டம்' என்ற விலங்கின் உருவம் எழுதிய கொடியும் செதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் வம்சத்தின் தலைநகரான துவாரசமுத்திரத்தை விட்டு, தன் வாழ்நாளின் கடைசி 15 ஆண்டுகளை இம்மன்னன் திருவண்ணாமலையிலேயே கழித்தான். அத்துடன் தன் தலைநகரமாகத் திருவண்ணாமலையைக் கொண்டு அதன் பெயரையும் அருண சமுத்திரம் என்று மாற்றினான் என்பதற்கான கல்வெட்டுக் குறிப்பு இங்கு காணப்படுகின்றது. இன்று திருவண்ணாமலை செல்லும் இரயில் பாதையில் இம்மன்னனது அரண்மனை இடிபாடுகளுடன் காணப்படுகின்றது. இதில் வேடிக்கையான செய்தி ஒன்று கூறப் படுகிறது. மன்னன் இறந்து போன நாளில் மாசி மாதத்தில் அவன் இறப்பு பற்றிய செய்தி இறைவன் முன் படிக்கப்பட்டு கோயில் மூர்த்திகள் பள்ளிகொண்டாபட்டு என்ற ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இம் மன்னனுக்குத் திதி கொடுக்கப்படுகிறது. ஆண்டவனே திதி கொடுப்பதாக இவர்கள் கூறி இன்றும் இவ்விழா ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.
வல்லாள கோபுரம்
மேற்கூறிய வல்லாள மன்னனால் மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்ட கோபுரம் இது. இங்கு 2 1/2 அடி உயரத்தில் வயது முதிர்ந்த தோற்றத்தில் இம்மன்னனது உருவம் சிலையாக வடிக்கப் பட்டுள்ளது. இக் கோயிலில் காணப்படும் சாசனங்களைக் கொண்டு தமிழகத்தின் 8-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரையிலான சோழப் பேரரசர்களின் பங்கும் பின்னால் 13 முதல் 16-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் போசல மன்னர்கள், நாயக்க மன்னர்கள், விசயநகரப் பேரரசர்கள்-குறிப்பாக கிருஷ்ணதேவராயர்-ஆகியோரின் காலங்களில் கோபுரங்கள், திருச்சுற்றுக்கள், மண்டபங்கள், சித்திர வேலைப்பாடுகள், ஓவியங்கள் என்று மிகப்பெரிய அளவில் இக்கோயில் வளர்ச்சி அடைந்திருப்பது தெரிகிறது. அத்தோடு 400 ஆண்டுகாலத் தமிழக வரலாறும் இச்சாசனங்களைக் கொண்டு அறியலாம்.
கிளிக்கோபுரம்
ஆறு நிலைகளைக் கொண்டு அற்புதமாக உயர்ந்து காணப்படும் இந்த கோபுரத்திற்குத் தனிச் சிறப்புண்டு. அருணகிரியாருக்கு முருகன் காட்சி அளித்த இடம் இது. இக் கோபுரத்தை அடுத்து ஒரு பெரிய மண்டபம் காணப்படுகின்றது. ஆண்டு தோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்தின் போது மலைமீது ஏற்றப்படும் கார்த்திகை தீப தரிசனத்தைக் காணச்செய்யக் கோயிலின் உற்சவமூர்த்திகளை இம்மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்கிறார்கள். அருணாசலேச்வரர் அர்த்தநாரீசுவரராகக் காட்சி அளிப்பதும் இங்குதான். |
|
கம்பத்து இளையனார் சன்னதி
சம்பந்தாண்டான் என்ற சக்தி வழிபாடு செய்யும் ஒரு பக்தன் பிரபுடதேவராயன் என்ற மன்னனுக்கு மிகவும் வேண்டப் பட்டவன். அவன் அருணகிரியாரை அழைத்து, "மன்னன் காண்பதற்கு முருகனை வரவழைத்துக் காட்ட முடியுமா?" என்று சூளுரைக்க, அருணகிரியாரும் முருகனிடம் வேண்ட முருகன் அவருக்காக அங்கிருக்கும் ஒரு கம்பத்திலிருந்து வெளித்தோன்றி அவர்களுக்குக் காட்சி அளித்தது இவ் விடத்தில்தான் என்று கூறப்படுகிறது. சம்பந்தாண்டான் மற்றும் பிரபுடதேவராயன் தரிசித்த முருகன் உருவம் இம்மண்டபத்து வடகிழக்குத்தூணில் சிறிய அளவில் செதுக்கப்பட்டுள்ளது. சிவகங்கைக் குளத்துக்கு அருகில் இம்மண்டபம் உள்ளது.
கருவறை
கோயிலின் மூலவரான அண்ணாமலையார் லிங்கத் திருமேனியில் இங்கு காட்சி தருகிறார். பொதுவாகக் கோயில்களில் விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்யும் போது அஷ்டபந்தனம் செய்வது வழக்கம். ஆனால் இக்கோயிலில் தங்கத்தைக் கொண்டு சொர்ணபந்தனம் செய்யப் பட்டுள்ளது.
விழாக்கள்
எல்லாக் கோயில்களிலும் பொதுவாக நடைபெறும் அத்தனை விழாக்களும் இங்கும் நடைபெறுகின்றன என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று 13 நாட்கள் நடைபெறும் கார்த்திகைப் பெரு விழா. சோதிவழிபாடு, தீபவழிபாடு என்ற பெயர்களில் சங்க காலந்தொட்டே இருந்து வந்திருக்கும் இவ்வழிபாடு பற்றிய குறிப்பு தமிழ் இலக்கியங்களில் பரவலாகக் காணலாம். 'தீப மங்கள ஜோதி நமோநம' என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.
அனல் பிழம்பாயிருந்து தோன்றிய திருவண்ணாமலை தேயுத் தலம் என்பதால் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. நகரத்தார் முயற்சியால் 19-ம் நூற்றாண்டில் இக்கோயிலுக்கு இலட்சக் கணக்கான ரூபாய் பொருட்செலவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நம்முடைய காலத்தில் வாழ்ந்து இத் தலத்துக்குப் பெருமை சேர்த்த இருவரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர்கள் ரமண மஹரிஷியும் சேஷாத்ரி சுவாமிகளும் ஆவர். முன்னவர் ஞானி, பின்னவர் சித்தர். மிகவும் சுவை நிரம்பிய அவர்களின் வாழ்க்கை வரலாறுகளைத் தனியாக விரித்துச் சொல்வதுதான் பொருத்தம்.
மஹாபாரத காலத்திலேயே திருவண்ணா மலை பற்றிய குறிப்பு இலக்கியத்தில் காணப்படுவது இம்மலையின் தொன்மைக் குச் சான்று பகர்கின்றது. வில்லிபுத்தூரார் பாரதத்தில் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை செல்லும்போது
பெற்றாள் சகத் தண்டங்கள் அனைத்தும் அவைபெற்றும் முற்றாமுகிழ் முலையாளொடு முக்கண்ணர் விரும்பும் பற்றாமென மிக்கோரிகழ் பற்றொன்றினும் உண்மை கற்றார்தொழும் அருணாசலம் அன்போடுகை தொழுதான்
என்று காணப்படும் பாடலில் அர்ச்சுனன் திருவண்ணாமலை அருணாசலேசுவரரைத் தொழுதான் என்ற செய்தியின் மூலம் இக்கோயிலின் தொன்மை விளங்குகின்றது. நினைத்தாலே முக்தி தரும் தலம் என்னும் பெருமை உடையது திருவண்ணாமலை.
முனைவர் அலர்மேலு ரிஷி |
|
|
|
|
|
|
|