|
|
|
|
அன்புள்ள சிநேகிதியே
எங்களுடையது கலப்புத் திருமணம். முப்பது வருடம் முன்பு. எதிர்ப்பு இருக்காமல் என்ன செய்யும்? ஒரே ஒரு தைரியம், இரண்டு பேரும் வேலைக்குச் செல்பவர்கள். நான் நர்ஸ்; அவர் எஞ்சினியர். சொந்தபந்தங்கள் சப்போர்ட் செய்யாவிட்டால் வெளிநாட்டில் வேலைக்குச் செல்லலாம் என்று ஒரு முடிவு. அதேபோலத்தான் நடந்தது. ஆஸ்திரேலியாவுக்குக் குடிபுகுந்தோம். அங்கே எங்கள் இருவருக்குள் ஒரு ஒப்பந்தம். சண்டை என்று எங்களுக்குள் வந்தால் ஒட்டிக்கொள்ளக் குடும்பமில்லை. அதனால் எந்தெந்த வகையில் பிரச்சனைகள் வரும் என்று ஆராய்ந்து சில முடிவுகள் எடுத்தோம். முக்கியமானது தெய்வ வழிபாடு. ஒன்று, எந்த சர்ச்சுக்கோ, கோயிலுக்கோ போகாமல் இருப்பது. இல்லை இரண்டு பேரும் சேர்ந்து இரண்டு இடங்களுக்கும் போவது. முதலில் இரண்டு இடங்களுக்கும் இருவரும் சேர்ந்து போக முயற்சித்தோம். ஆனால் தொழில் நிர்ப்பந்தங்கள் காரணமாகச் சரிப்பட்டு வரவில்லை. அதனால் அவரவர் இஷ்டத்திற்கு விட்டுவிட்டோம். எங்களுக்கு ஒரே பெண். எந்த மதத்திலும் கட்டாயப்படுத்தி வளர்க்கவில்லை. பெயரில் மட்டும் இந்தியப் பெயர். நடுவில் என் அம்மா பெயர். கடைசியில் அவள் அப்பா பெயர் - நல்ல பிராமணப் பெயர். வாழ்க்கை சுமுகமாக இருந்தது 20 வருடம். அப்புறம் வரக்கூடாத நோயில் அவரைத் தொலைத்தேன்.
என் பெண் அமெரிக்காவில் படிக்க ஆசைப்பட்டு அங்கே போய்விட்டாள். அங்கேயே வேலை பார்த்துத் தங்கிவிட்டாள். நான்தான் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருப்பேன். போன வருடம் அவளுக்கேற்ற கணவனையும் பார்த்துக் கொண்டுவிட்டாள். அந்தப் பையனின் பெற்றோர் அங்கேயே பல வருடங்களாக இருந்தாலும் கன்சர்வேடிவ் ஆகத்தான் இருக்கிறார்கள். நாற்பது வருட அமெரிக்க வாழ்க்கையிலும் அந்த மாமி புடவையைக் கட்டிக் கொண்டு ஒவ்வொரு பண்டிகையையும் விடாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். என் கணவர் இருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். என் பெண் காதலிக்கும் பையனின் அண்ணன்கள் இருவரும் அமெரிக்கப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்திருக்கிறார்கள். அதனால் அவன் அப்பா, அம்மா இந்தப் பையனாவது உருப்படியாக தங்கள் ஜாதிப் பெண்ணைப் பார்த்திருக்கிறானே என்று திருப்தியில் சந்தோஷப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் அவர்கள் முறைப்படித் திருமணம் செய்யக் கேட்டிருக்கிறார்கள். என் பெண்ணிற்கு Its all fun. அவள் எல்லாவற்றிற்கும் சரி என்று சொல்லிவிட்டாள். ஆனால் அவளுக்கும் எனக்கும் எப்படி என்ன செய்வது என்று ஒன்றும் தெரியாது. அவளுக்கு அந்தப் பையனை ரொம்பப் பிடித்திருக்கிறது. எனக்கும் அவன் மிக நல்லவனாகப் பட்டான். நான்தான் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கிறேனே, என் பெண்ணாவது ஒரு நல்ல குடும்பத்தோடு இணையட்டுமே என்று நானும் சரி என்று ஒப்புக்கொண்டு விட்டேன்.
அவர்கள் 'Justice of Piece' மாலை மாற்றிக் கொண்டால்கூட எனக்கு உடன்பாடுதான். என் பெண்ணின் விருப்பம்தான் எனக்கு முக்கியம். அதனால் எப்படியாவது அதை நிறைவேற்றிவிட ஆசைப்படுகிறேன். அடுத்த வருட இறுதியில் திருமணம் என்று முடிவாகியிருக்கிறது. அதற்கு முன் சம்பந்தம் பேச அவர்கள் ஜனவரி மாதம் நாள் குறித்து, வரமுடியுமா என்று கேட்டார்கள். என் பெண் மிகவும் excited ஆக இருக்கிறாள். நான் இப்போது திரும்பிப் போய் இன்னும் மூன்றுமாதம் கழித்து ஒரு வாரம் மறுபடியும் லீவில் வருவதாக ப்ளான்.
ஆனால் அந்தப் பையனின் பெற்றோரிடம் எப்படிப் பேச வேண்டும், என்னென்ன பேச வேண்டும், எதை எதைப் பேசக்கூடாது என்று எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. ஏதேனும் ஐடியா கொடுக்கமுடியுமா? அவர்கள் ஆசாரமான குடும்பம் என்று சொல்லியிருக்கிறேன். நான் எவ்வளவு வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறேன். என் பெண்ணின் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்.
சில மாதங்களுக்கு முன்னால் தென்றலில் என் நிலைமையிலிருந்த ஒரு தாய்க்கு இதுபோன்ற சமயத்தில் ஏற்பட்ட சங்கடம், எனக்கு ஏற்படக்கூடாது என்று ஜாக்கிரதையாக இருக்கிறேன். முக்கியமானது நான் வேறு மதத்தைச் சேர்ந்தவள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தலாமா, வேண்டாமா? இதனால் என் பெண் ஆசைப்பட்ட வாழ்க்கை எங்கே அமையாமல் போய்விடுமோ என்று மனதில் தோன்றுகிறது. பயம் வேறு.
இப்படிக்கு ................... |
|
அன்புள்ள சிநேகிதியே
உங்கள் Adjustment Capacity உங்களுக்கு உதவி புரியும். இரண்டு தரப்பு மீட்டிங்கில் பிரச்சனை இருக்காது என்று கண்டிப்பாக நினைக்கிறேன். உங்கள் திருமணம் பற்றித் தெரிவித்தால் economic with truth என்று சிலர் இருப்பார்கள். அதாவது உண்மையைத் தெரிவிப்பதில் சிலசமயம் strategy-யும் timing-ம் இருக்கும். இரண்டு குடும்பங்களுமே இருவேறு தேசத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள். அவர்கள் வழியில் பழைய சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பவர்களாக இருந்தாலும் உங்கள் வழிக் கலாசார மாறுதல்களைப் புரிந்துகொள்ளாமல் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். மேலும் அவர்கள் குடும்பத்திலேயே இனவேறுபாட்டில் திருமணங்கள் நடந்துள்ளதால் உங்கள் விஷயம் அவ்வளவு அதிர்ச்சியைக் கொடுக்காது. அப்படியே இருந்தாலும் உங்கள் பணிவான நடத்தை நேர் செய்துவிடும். என்ன பேசவேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள், இங்கே ட்யூட்டரிங் எடுபடாது. மனிதர்கள், சந்தர்ப்பங்கள், நடத்தைகள், நேரம் என எல்லாவற்றையும் பொருத்தது அது. இரண்டு கலாசாரச் சூழலையும் எழுதியிருக்கிறீர்கள். அவர்களிடமே அட்வைஸ் கேட்டு விடுங்கள். If you involve them, they will be very helpful and cooperative.
வாழ்த்துக்கள், டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|