லஷ்மன் ஸ்ருதி அமெரிக்க நிகழ்ச்சிகள் மகாத்மா காந்தி - பொன்மொழிகள் வேர்களை நோக்கி: பிரியங்கா ஆச்சார்யா
|
|
அக்ஷயா டிரஸ்ட்: தருமம் மறுபடியும் வெல்லும் |
|
- லதா கலகா|அக்டோபர் 2014| |
|
|
|
|
|
2014 ஜூன் 5ம் தேதியன்று மெஹர் நிஷா என்ற மனநலம் குன்றிய அக்ஷயாவாசி, மதுரை அக்ஷயா வளாகத்தில் இருந்து தப்பி, பக்கத்திலிருக்கும் கிராமத்துக்குள் ஓடியிருக்கிறார். கும்பல் சூழ்ந்ததும் தன்னை யாரோ பலாத்காரம் செய்ததாகவும், தன் விருப்பத்துக்கு மாறாகத் தன்னை அக்ஷயா இல்லத்தில் வைத்திருந்ததாகவும் மட்டுமல்லாமல் வேறுபல புனைந்துரைகளையும் கூறியிருக்கிறார். உடனடியாக அரசியல் சார்ந்த சிலர் கலவரத்தைத் தூண்டிவிட்டனர். நிஷாவை மீட்பதற்காகப் பின்னால் வந்த அக்ஷயா அலுவலர்களை அவர்கள் தாக்கினர். ஒரு பெண் அலுவலரை மானபங்கப் படுத்தினர். அக்ஷயா தாக்கப்பட்ட செய்தி எந்தப் பத்திரிக்கையிலும் வெளிவரவில்லை.
3 மாதங்களுக்கும் மேலாக அக்ஷயா அறக்கட்டளை மீது விசாரணை நடந்து வருவது நீங்கள் அறிந்ததே. அக்ஷயாவும், நிறுவனர் நாராயணன் கிருஷ்ணன் மற்றும் தன்னார்வத் தொண்டர்களும் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆயினும் அக்ஷயா அமைதி காத்தது. ஒரு பக்கம் கோர்ட்டுக்கும், மறுபக்கம் அக்ஷயாவை ஆதரிப்பவர்களுக்கும் பொதுமக்களுக்கும் உண்மையைப் புரியவைக்கத் தேவையானவற்றைத் தொடர்ந்து செய்தது.
சம்பவம் நடந்த மறுநாள் கலெக்டர் அலுவலகத்திலிருந்து விசாரணைக்காக அக்ஷயா இல்லம் வந்த குழுவினர், சோதனை மற்றும் விசாரணைக்குப் பின், அக்ஷயா செய்வது அற்புதமான சேவை என்றும், அதில் எந்தவிதத் தவறுகளும் நடக்கவில்லை, நடப்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதற்குப் பின்னரும் அரசியல் சார்ந்த அமைப்புக்கள் வழக்கைத் தொடரவே, அக்ஷயாவின் நல்ல ஆக்கசக்தியை, இந்தப் பழிகளைத் துடைப்பதன் பொருட்டுச் செலவிட வேண்டியதாயிற்று.
நீதி மன்றத்தின் வழக்காணையர் (Advocate Commissioner), மனநல மருத்துவர், அரசாங்க மருத்துவர்கள் ஆகியோர் அக்ஷயா இல்லத்துக்குச் சென்று அங்கிருந்த 535 மனநலம் குன்றியவர்களைப் பரிசோதனை செய்தனர். ஒவ்வொருக்கும் 2 நிமிடத்துக்கும் குறைவான பரிசோதனையில் 222 பேருக்கு மனநலம் சரியாக இருப்பதாகவும், அவர்களைக் குடும்பங்களோடு சேர்த்துவிடலாம் என்றும் முடிவுக்கு வந்தனர். இந்த 222 பேரும் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்ட தற்காப்பற்ற பெண்கள். அவர்களில் பலருக்குக் குடும்பம் இல்லை, அல்லது, குடும்பத்தினர் ஏற்க விரும்பவில்லை.
அரசு, வழக்காணையர் அறிக்கையின் பேரில், அவர்களை நீதிமன்றம் தன் செலவிலேயே குடும்பங்களோடு சேர்த்து வைக்குமாறு ஆணையிட்டது. நீதிமன்றத்தின் பாதுகாவலர்கள் சிலரை மட்டுமே அவர்கள் குடும்பங்களோடு சேர்த்தனர். மற்றவகள் மதுரைத் தெருக்களில் சிறிதளவு பணத்துடன் விடப்பட்டனர். எந்தத் தெருக்களிலிருந்து மீட்டு, சுத்தப்படுத்தி, ஆடை அணியச் செய்து, அடைக்கலம் கொடுத்து, அக்ஷயா பராமரித்ததோ, அதே தெருக்களில் மீண்டும் அவர்கள்! கடந்த 3 மாதங்களில் 87 பேர் மதுரை தெருக்களில் இறந்திருக்கிறார்கள். |
|
இதில், இரண்டு முக்கிய நிகழ்வுகள் தெம்பைக் கொடுத்தன. நியாயமற்ற புகார்கள் எழுந்த சில நாட்களுக்குள்ளாகவே மூத்த வழக்கறிஞரும், நீதிமன்ற வட்டாரங்களில் மிகவும் மதிக்கப்படும் சட்ட நிபுணருமான திரு. G.R. சுவாமிநாதன் அக்ஷயா தரப்பில் வாதாட ஒப்புக்கொண்டார். இன்னொரு முக்கிய நிகழ்வு, புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். வழக்கை மறுபடியும் பரிசீலித்த புதிய நீதிபதிகள் வழக்காணையர் (Advocate Commissioner) கொடுத்த அறிக்கையில் உண்மைக்கு முரணான தகவல்கள் இருப்பதைக் கண்டனர். அக்ஷயா சமர்ப்பித்த புகைப்படங்களைப் பார்த்தபின், அங்கே எவரையும் சித்திரவதை செய்வதாக சித்தரித்திருப்பது பொருத்தமல்ல என்று தெளிந்தனர்.
அக்ஷயாவை வீழ்த்தச் செயல்பட்டோர் நிறுத்துவதாக இல்லை. கிருஷ்ணன் மற்றும் தொண்டர்கள் மீது சரமாரியாகப் புகார்களை அள்ளி வீசினர். ஆவணப் பரிசோதனை மட்டுமின்றி, போதை மருந்து பரிசோதனை, மோப்ப நாய் உதவியுடன் தேடல் போன்றவை நடைபெற்றன. அவர்களின் சொந்த வாழ்க்கையையும் அலசினர். தன்னார்வத் தொண்டர்களும், அக்ஷயா மருத்துவர்களும், வழிநடத்திச் செல்லும் கிருஷ்ணனும் ஊக்கம் குன்றாமல் பணியைத் தொடர்ந்ததே ஒரு ஆச்சரியம்தான். வழக்கு விசாரணையின் போது பிரபல ஊடகங்கள் அக்ஷயாமீது குற்றம் இருப்பதாக முடிவுகட்டி, அக்ஷயாவின் தரப்பைக் கேட்காமலே எதிராகச் செய்திகளை வெளியிட்டது விந்தைதான்.
நீதிபதி தமது அறிக்கையில், தெளிவாக, அக்ஷயாவின்மேல் சுமத்தப்பட்ட பழிகளுக்கு எந்த ஆதாரமுமில்லை என்று தெளிவாக அறிவித்தார். அவர் அக்ஷயாவின் பணிகளையும் கிருஷ்ணனையும் பாராட்டி, உன்னதமான சமுதாயப்பணி மேலும் தொடர வேண்டும் என்று கூறி வாழ்த்தினார். அவதூறு பேசிய ஊடகங்கள், வழக்கின் தீர்ப்பு வந்தபிறகு பெரிதாகச் செய்தி வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை. கடைசியாக வந்த தகவலின்படி, அக்ஷயாவிலிருந்து வெளியேற்றி மதுரை தெருக்களில் கொண்டுபோய் விட்ட 140 பேரையும் திரும்ப அக்ஷயாவுக்கே கொண்டு சேர்க்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்" என்று இதைத்தான் பாரதி கூறினான். வாருங்கள், அற்ப அரசியலுக்கு அப்பாற்பட்டு, நமது நற்பணியைத் தொடருவோம்.
(கட்டுரையாளர் அக்ஷயாவின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளர். தொடர்புக்கு: Akshaya USA, 17359, East Caley Place, Aurora, CO 80016.) Email: akshaya.usa@gmail.com Facebook: facebook.com/akshayausa
லதா கலகா, கொலராடோ |
|
|
More
லஷ்மன் ஸ்ருதி அமெரிக்க நிகழ்ச்சிகள் மகாத்மா காந்தி - பொன்மொழிகள் வேர்களை நோக்கி: பிரியங்கா ஆச்சார்யா
|
|
|
|
|
|
|