|
|
|
|
நாட்டுப்புறப் பாடல்களிலும், நாட்டுப்புறக் கதைப் பாடல்களிலும் தேடினால் நம் நாட்டு விளிம்புநிலை மக்கள் வீரதீரத்துடன் எப்படி எல்லாம் நம் நாட்டின் விடுதலைக்காக உழைத்தார்கள் என்ற செய்திகளை நாம் அறிந்துகொள்ள முடியும்.
பூலித்தேவன் கும்மிப் பாடல், "ஒண்டிவீரன் என்ற பூலித்தேவனின் தளபதி. தனி ஆளாகச் சென்று வெள்ளையர்களுக்கு எதிராக வீரதீரச் செயல்களைப் புரிந்து, கடைசியில் தானே தன் கையை வெட்டிக் கொண்டு செத்தான்" என்ற வரலாற்றைச் சொல்கிறது.
பூலித்தேவன் மேல் படை எடுப்பதற்காக, கும்பினியர்கள் தென்மலை என்ற இடத்தில் முகாமிட்டிருந்தார்கள். கும்பினியர், பூலித்தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும்போது அவர்கள் மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு அவற்றில் வெடிமருந்தும் நிரப்பி வைத்திருந்தார்கள். பரங்கியர்களின் நவீன யுத்த ஆயுதமான பீரங்கிகளை எதிர்கொள்வதுதான் அன்றைக்கு வெள்ளையர்களை எதிர்த்து யுத்தம் செய்யும் பாளையக்காரர்களுக்கு பெரும்சவாலாக இருந்தது. எனவே, வெள்ளையர்கள் தமிழ் வீரமறவர்களை அழித்து ஒழிக்கப் பயன்படுத்தும் பீரங்கியையே, பரங்கிப் படைகளுக்கு எதிராகத் திருப்பிவிட வேண்டும் என்று நினைத்தான் பூலித்தேவன். அப்பணியைச் செய்வதற்குச் சரியான ஆள் ஒண்டிவீரன்தான் என்று முடிவுசெய்து, பரங்கியரின் முகாமிற்கு ஒண்டிவீரனை அனுப்பி வைத்தான் பூலித்தேவன்.
இரவு வேளையில் மை இருட்டில் தென்மலையில் உள்ள பரங்கியரின் முகாமிற்குச் சென்றான் ஒண்டிவீரன்.
கும்பினிப் படைவீரர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு முகாம் ஓரமாய் உள்ள மலைச்சரிவில் ஒண்டிவீரன் பதுங்கிக் கிடந்தான். தான் பதுங்கி இருப்பதைப் பரங்கிப் படையினர் பார்த்து விடக்கூடாது என்பதற்காக, தன்மேல், இலைதழைகளையும், செத்தல் செருவில்களையும் தானே அள்ளிப் போட்டுக்கொண்டு படுத்துக்கிடந்தான்.
அப்போது அங்கு வந்த கும்பினிப்படை வீரன் ஒருவன், குதிரை ஒன்றைக் கட்டுவதற்காக இரும்பாலான ஆப்பு ஒன்றைத் தரையில் அறைந்தான். பரங்கிவீரன் இருட்டில் ஆப்பை வைத்துச் சம்மட்டியால் அறைந்த இடம் ஒண்டிவீரனின் புறங்கையாக இருந்தது. பரங்கி வீரன் அடித்த ஆப்பு ஒண்டிவீரனின் கையைத் துளைத்துக் கொண்டு, இரத்தக் கசிவுடன், பூமிக்குள் பாய்ந்தது.
ஒரு ஊசி குத்தினாலே தன்னை அறியாமல், நாம் சத்தம் போட்டுவிடுகிறோம். ஆனால், ஏசுநாதரை உயிரோடு வைத்துச் சிலுவையில் அறைந்ததைப் போல், வெள்ளைப் பரங்கி வீரன், ஒண்டிவீரனின் கைமேல் ஆப்பை வைத்து அறைந்தான். இப்போது, லேசாகச் சத்தம் கொடுத்தாலும், பீரங்கிப்படை வீரன் தன்னைக் கண்டுபிடித்துவிடுவான். கண்டுபிடித்தால் கொன்றுவிடுவான் என்பது நிச்சயம், ஆனால் மன்னர் பூலித்தேவன் தன்னிடம் ஒப்படைத்த வேலையைச் செய்ய முடியாமல் சாகவேண்டிய நிலைவரும் என்று எண்ணிய ஒண்டிவீரன் பல்லைக் கடித்துக்கொண்டு, ஆப்பு தன் கையைத் துளைக்கும்போது ஏற்பட்ட வலியைப் பொறுத்துக்கொண்டான்.
ஆப்பை ஒண்டிவீரனின் கையோடு சேர்த்து தரையில் அறைந்த வெள்ளையன் அந்த ஆப்பில் ஒரு குதிரையைப் பிடித்துக் கயிற்றால் கட்டிவிட்டுத் தன் முகாமிற்குச் சென்றுவிட்டான். |
|
இப்போது ஆப்பில் இருந்து தன் கையை விடுவிக்க வேண்டும், என்ன செய்ய? மறுகையில் ஆப்பை அசைத்துப் பிடுங்கலாம் என்றால் ஆப்பு பூமியில் ஆழமாகப் புதைந்து உள்ளது. ஆப்பை அசைத்தால், புண்ணான அவனது இடது கை மேலும் வலிக்கும். எனவே வலது கையால், தன் இடுப்பில் சொறுகி இருந்த வாளை உருவி தன் இடதுகையை முட்டுக்குக் கீழே, தானே ஓங்கி வெட்டுகிறான் ஒண்டிவீரன். (தன் கையைத் தானே ஒரே வெட்டில் வெட்டித் துண்டாக்கினால் எப்படி வலித்திருக்கும் என்பதை இந்த இடத்தில் வாசகர்கள் எண்ணிப் பார்த்துக் கொள்ளவும்.)
இப்போதும் வலியால் சத்தம் கொடுத்தால், பரங்கிப் படை வீரர்கள், அவனைப் பிடித்துக்கொள்வார்கள். மன்னர் கொடுத்த வேலையைச் செய்து முடிக்க முடியாது போகலாம். எனவே, தானே தன் கையை வெட்டிய வலியையும் தாங்கிக் கொண்டு ஒண்டிவீரன், உதிரம் ஒழுகும் கையோடு, மெல்ல, மெல்ல, ஊர்ந்து பரங்கிப் படையினர் பீரங்கியை வைத்திருக்கும் இடத்திற்குப் பதுங்கிச் சென்று, அப்பீரங்கியின் வாயை கும்பினியரின் படைகள் தங்கி இருக்கும். திசையை நோக்கிச் சரியாகத் திருப்பி வைத்து, அப்பீரங்கியை வெடிக்கச் செய்துவிட்டு, கும்பினியனின் குதிரை ஒன்றில் ஏறி, அங்கிருந்து தப்பித்து வருகிறான்.
அப்படி வரும் ஒண்டிவீரன் -
"என் அங்கக்கை போனால் என்ன எனக்குத் தங்கக்கை தருவான் பூலிமன்னன்"
- என்று பாடிக் கொண்டே வந்ததாக பூலித்தேவன் கும்மிப்பாடல் குறிப்பிடுகிறது.
தான் செய்த தவறுக்காக, தன் கையையே வெட்டிக் கொண்டு, தன் சொந்தக் கைக்குப் பதில் பொன்னாலாகிய கையைப் பொருத்திக் கொண்டு வாழ்ந்த பொற்கைப் பாண்டியனை நாம் வரலாற்றின் ஏடுகளில் வாசித்திருக்கிறோம். இங்கே, நாட்டுக்காக, தேச விடுதலைக்காக, "தன் மன்னன் கொடுத்த பணியை, உயிரைக் கொடுத்தேனும் கனகச்சிதமாய்ச் செய்து முடிக்க வேண்டும்" என்று செயல்பட்டு தன் இடது கையைத் தானே துண்டித்துக்கொண்ட ஒரு மாவீரனை நாட்டார் பாடல்களில் நாம் தரிசிக்கின்றோம்.
பொற்கைப்பாண்டியன், மன்னன். அவனுக்கு உடனே வைத்திய உதவி கிடைத்திருக்கும். பொன்னால் கை செய்து பொருத்திக் கொள்ளவும் முடிந்திருக்கும். ஆனால், அருந்ததியர் வகுப்பைச் சார்ந்த இந்தச் சுதந்திரப் போராட்ட வீரன், தனக்கும் 'தங்கக்கை' கிடைக்கும் என்ற கனவுடன், இருளில் குதிரையில் வந்தவனுக்கு, அளவுக்கு அதிகமான உதிரப் போக்கு ஏற்பட்டு மரணம்தான் பரிசாகக் கிடைத்தது. இந்தச் சுதந்திரப் போராட்ட வீரனைத்தான் முதல் 'தற்கொலைப்படை வீரன்' என்று சொல்லலாம். வரலாற்றின் ஏடுகள் பதிவுசெய்ய மறந்த அல்லது மறுத்த ஒண்டிவீரனைப் போன்ற பலவீரர்களின் வீரதீரச் செயல்களை நாட்டுப்புற வாய்மொழி மரபுகள்தான் பதிவுசெய்துள்ளன.
கழனியூரன் |
|
|
|
|
|
|
|