Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
ஒன்பதாம் நம்பர் கட்டில்
- கம்பதாசன்|ஜூலை 2014|
Share:
இருள் வீங்கிக் கொண்டிருந்தது. ரோந்து சென்ற போலீஸ்காரனின் பார்வை அவன்மீது பட்டுத் தெறித்தது. அவன் புளிய மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். அந்த இடம் தெரு மட்டத்துக்கு மேடாக இருந்தது. வீதி விளக்கின் ஒளி அவனை மோதிற்று. அவனுடைய நிழல் பைசாசம்போல் தரையில் தெரிந்தது.

காலத்தின் நாவில் பன்னிரண்டு
தேன் சொட்டுக்கள் வீழ்ந்தன போல எங்கோ ஒன்று, இரண்டு என்று பன்னிரண்டு முறை மணியடித்து ஓய்ந்தது. மின்மினிகள் பறப்பதைத் தவிர வேறு ஆள் நடமாட்டம் இல்லை. உலகமே தூக்கத்தில் சொக்கிக்கிடந்த வேளை. நட்சத்திரங்களும் மெள்ள மெள்ளக் கண்ணைச் சிமிட்டின. அவன் இமை கொட்டக் காணோம். எதிரே தோன்றிய பெரிய மாடியின் ஜன்னலில் அவன் விழிகள் மொய்த்தன.

மறுபடியும் மணி ஒன்றடித்தது. எஞ்சிய காலத்துக்கு ‘கொசுறு’ கொடுத்ததுபோல்.

விசையாக வந்த பாதங்கள் நின்றன. புருவங்கள் மேலேறி நெளியுண்டன. விழிக்கோணத்தில் சிந்தனை தேங்கிற்று.

"யாரது அங்கே!" என்று கேட்டுக் கொண்டே நெருங்கினான் ரோந்து சென்றவன்.

"என்னய்யா... வாலை மேடு."

"வாலை மேடா நீ?"

"ஆமாம்."

"உன் பெயர் என்ன?"

"நாடி முத்து."

"போயனா நீ?"

"இல்லை."

"இங்கென்ன திருடப் பார்க்கிறாய்?"

"அட ராமா... நான் திருடன் இல்லை. என் மகளை ஆஸ்பத்திரியில் விட்டிருக்கிறேன்."

"அவள் ஆஸ்பத்திரியில் இருந்தால் நீ இங்கே என்ன செய்கிறாய்? ஏண்டா என்ன நினைத்துக் கொண்டாய்? ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி ஏய்த்து விடலாமென்று பார்க்கிறாய் திருட்டுப் பயலே."

இல்லை.. இல்லை.. ஆணையாய்ச் சொல்லுகிறேன். நீங்கள் வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள். அதோ தெரிகிறதே! அங்கேதான் போட்டு வைத்திருக்கிறது. 9ம் நம்பர் கட்டில். பேர் பொன்னியம்மாள்" என்று மேலும் ஏதோ சொல்ல வந்தான் துடிப்புடன்.


"சரி சரி... நிறுத்து. உனக்கு வீடு வாசல் இல்லையா? அங்கே போய் படுத்துக்கொண்டு காலமே எழுந்து வருகிறது தானே!"

"இந்த ஊரில் யாரையும் தெரியாதே. ஆஸ்பத்திரியிலேயே படுத்துக் கொள்ளலாமா என்று கேட்டுப் பார்த்தேன். பெண் பிள்ளைகள் இருக்கும் இடம் என்பதால் ‘கூடாது’ என்று சொல்லி விட்டார்கள். ஒரே பெண். தலைப்பிரசவம்."

"உம்... நானும் உன்னை ரோந்துக்கு வந்த நேரம் முதல் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னையும் மீறி என்னதான் திருடிக்கொண்டு போகிறாய் என்று பார்த்து விடுகிறேன்" என்று உறுமிக்கொண்டே போனான் ரோந்து வந்தவன். நாடிமுத்துவின் கண்கள் அவன் மறையும் வரையில் விறைத்து நின்றன. எந்த நினைவு அவன் கண்களைக் குத்தியதோ தெரியவில்லை. ‘பொலபொல’வென்று கண்ணீர்த் துளிகள் உதிர்ந்தன.

"திருட்டுப் பயலே.... திருட்டுப் பயலே...." என்று அவன் வாய் முணுமுணுத்தது. இமைகளை மூடிக் கண்ணீரை வடிகட்டினான். புதைந்த காட்சியை சிந்தனை தோண்டப் பறந்தது.

அந்தி மயங்கும் வேளை. களத்து மேடு. நெற்குவியல் சிறுசிறு தங்கக் குன்றுகள் போலக் காட்சியளிக்கின்றன

அவன் நெற்றியில் சுருக்கங்கள் நெளிந்தன. புயங்கள் குவிந்து குவிந்து விரிந்தன. பெரிய மரக்காலால் நெல்லை அளந்து கொட்டுகிறான். பொன்னம்மா - அவன் மகள் - சாக்கில் அதை ஏந்தி மூட்டை கட்டுகிறாள் பரபரப்புடன். யௌவனம் எட்டிப் பார்க்கும் அங்க அமைப்புகள். காற்றின் முத்தத்திற்கு நாணிய கரிக்குழலின் கீற்றொன்று அவள் நெற்றியில் இடந்தேடித் தள்ளாடுகிறது. வீரப்பன் - அவள் புருஷன் - மூட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்கிறான், அவளைக் கடைக்கண்ணால் பார்த்தபடி.

மறுநாள் பொங்கல் பண்டிகை. உயிரும் உணவும் கொடுத்த சூரியனை உதயத்திலே வணங்க வேண்டும். நன்றியின் காணிக்கையைச் செலுத்த வேண்டும் என்ற கருத்து அவன் மனதில் நிரம்பி இருந்தது. கூனிய முதுகும் சற்று நிமிர்ந்தது. சோர்ந்த எண்ணங்களும் துள்ளிக் குதித்தன.

"இந்த வருஷம் நல்ல விளைச்சல். கடன் தொல்லைகளும் தீர்ந்துவிடும். பட்டணத்துக்கு நாளைக்கே நெல்லைக் கொண்டுபோக வேண்டும். விலைகூடக் கொஞ்சம் ஏற்றமாகவே விற்கலாம். நூற்றுக்குப் பத்து வட்டிவீதம் அல்லவா கடன் வாங்கியிருக்கிறேன். நூற்றுக்குப் பத்தா? ஆம், என்ன செய்கிறது! கட்டித்தானே ஆக வேண்டும்? வட்டி மட்டும் இதுவரையில் பதின்மூன்று தடவையல்லவா கட்டியிருக்கிறேன்! உம்..."

"நாட்டிலே சண்டையும் சாடியுமாக இருக்குது. கறிவேப்பிலை காசுக்கு ஒரு கொத்தாகப் போய்விட்டது. கண்டிப்பாக நெல் ஏற்றமாக விற்கும். 136 கலத்துக்குக் குறைந்த பட்சம் 400 ரூபாயாவது கிடைக்கும். கடனோ 500க்கு மேல் ஏறிவிட்டதே! என்ன செய்கிறது? ஏதாவது பார்த்து 100க்கு 50ஆவது இந்த வருஷம் கட்டிவிட வேண்டும். பொன்னம்மாளுக்கு சீமந்தம் நடத்த வேண்டும்" அபிலாஷைகள் தீ நாக்குப் போல மேலோங்கி மேலோங்கிக் கொழுந்து விட்டன.
"அடே நாடிமுத்து. நான் வந்து எத்தனை நேரமாய்க் காத்துக் கொண்டிருக்கிறேன். ஏண்டாப்பா கண் தெரியவில்லையா?"

அவன் எண்ணங்கள் கலைந்தன, வேட்டுச் சப்தம் கேட்டு ஓடும் காக்கைகள் போல.

"இல்லை... மிராசுதாரைய்யா... நான் உங்களைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதிலே அப்படி உங்களைக் கவனிக்காமல் இருப்பேனா? அறுபது வயசாகியும் கண்...."

"கண் நன்றாய்த்தான் தெரியும்.
அது கிடக்கட்டும். பணத்துக்கு என்ன சொல்கிறாய்?"

"நான் என்ன சொல்கிறது. உங்கள் பணத்தை இல்லையென்று சொல்ல முடியுமா? இந்த வருஷம் காலத்தில் இரண்டு தூற்றல் போட்டதிலே பாடுபட்டது வீண்போகவில்லை. நெல் விற்று வந்ததும் முன்னூற்றைம்பது ரூபாயாவது தந்து விடுகிறேன். பிறகு மிச்சத்தையும் கட்டி விடுகிறேன்."

"நீ நன்றாய்க் கொடுத்து நாசமாய்ப் போனாய்! இந்த ஒன்றரை வருஷமாய் நீயும் கொடுத்துவிட்டாய். நானும் எத்தனை தடவைதான் போனால் போகிறதென்று இருக்க முடியும்? எங்கள் வீட்டில் பணமாகக் காய்த்துத் தொங்குகிறதா? உன்னிடம் கொடுத்துவிட்டு இருக்க, அதெல்லாம் முடியாது. இந்த வருஷமே அணா பைசாவுடன் கணக்கைத் தீர்த்துவிட வேண்டும். பாக்கியே கூடாது. வருகிற வருஷம், கடன் நிவாரண மசோதா வரும். ஏய்த்து விடலாம் என்று பார்க்கிறாயா? இந்த பாச்சாவெல்லாம் நம்மிடம் பலிக்காது. என்ன சொல்கிறாய் பணத்துக்கு?"

"என்னிடம் இப்போது செப்பாலடித்த காசும் இல்லையே! பட்டணம் போய் நெல் விற்றுத்தானே...."

"நீ பட்டணம் போகிறது எப்போது, நெல் விற்கிறது எப்போது, என் பணம் வந்து சேருவது எப்போது? அதுவரையில் நான் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டுமோ? இப்படியெல்லாம் நீ சொல்கிற கெடுவுக்கு அலைய என்னால் முடியாது. கண்டிப்பாய்ச் சொல்லுகிறேன் முடியவே முடியாது"

"முடியாவிட்டால் என்ன செய்வது?"

"நெல் மூட்டைகளெல்லாம் நான் எடுத்துக் கொண்டு போகிறது."

"எல்லா மூட்டைகளையுமா?"

"பின்னே.. ரெண்டு மூட்டை என்று நினைத்தாயா? வெள்ளி ரூபாயாக அல்லவா கொடுத்தேன். இந்த நெல்லெல்லாம் என்ன இருபது கலம் இருக்குமா?"

"இருபது கலமா... ராமா! நன்றாய்ப் பாருங்கள்.. இப்போதுதான் அளந்து கட்டினேன்... 136 கலம்"

"என்னடா என் கண் குருடா? இருபது அல்லது இருபத்தைந்து கலத்திற்குள்ளேதான் இருக்கும். அதை அப்புறம் பேசிக் கொள்ளலாம். வண்டியை ஓட்டச் சொல்லு. எங்கே உன் மருமகன்? அடேய் வீரப்பா! பொழுதுபோகும் முன்னே ஓட்டுடா வண்டியை!" என்று சொல்லிக் கொண்டே முன் நடந்தார் மிராசுதார்.

"ஐயா சாமி.. நான் சொல்வதைக் கேளுங்கள். ஏழை வயிற்றிலே அடித்து எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு போனால் நான் என்ன செய்வது? உங்கள் கடனை நான் இல்லையென்று சொல்லவில்லை. 100 கலம் எடுத்துக் கொள்ளுங்கள். 36 கலமாவது கொடுங்கள். என் பெண், மருமகன், நான் மூன்று ஜீவன்கள் பிழைக்கணும். ஊரைச் சுற்றிச் சில்லறைக் கடன் வேறே இருக்கிறது. நிலக் கிஸ்தி வேறே கட்டணும். உங்கள் பணத்தில் வாங்கிய மாடுகூடச் செத்துப் போய்விட்டதே! புது மாடு வாங்கின பணம் வேறு கொடுக்கணும்."

"மாடு செத்துப் போய்விட்டால் என்ன? பணம் வாங்கின நீ கூடவா செத்துட்டே....?" என்று விசையாக நடந்தார் மிராசுதார். வீரப்பனும் மிராசுதாரரை எவ்வளவோ கெஞ்சினான். பொன்னியும் எவ்வளவோ வேண்டினாள். பயன் கிடைக்கவில்லை. நாடிமுத்து லங்கை வேந்தன்போல் கலங்கினான். கடன்பட்டவன் அல்லவா?

அஸ்தமன சூரியன் மேல்வானத்தைக் கீறி ரத்தக்களறி ஆக்கிக் கொண்டிருந்தான்.

மிராசுதாரர் வீட்டுப் பையன் வண்டியை ஓட்டிக்கொண்டு போனான்.

நிலம் - மாடு - நிழல் கொடுத்த குடிசை - நம்பிக்கை எல்லாம் ஒவ்வொன்றாகப் போய்விட்டன.

முகம் கறுவடைந்தது. முதுமையின் முத்திரைகள் அவன் உடலில் பதியலாயின.

பயிர் கொழித்துப் புகைத்துக் கருத்துச் சுருங்கிற்று. ஏக்கம் அவன் தலையை நடுங்கச் செய்து கொண்டிருந்தது. வீரப்பன் பாடுபட்டான். கூலியில்லை. உழவுக்கு மதிப்பில்லை. வானம் சதி செய்தது. வாரத்திற்குப் பயிரிட்டான். விளைச்சல் கம்மி. கிஸ்திக்கே கையைக் கடித்தது.

அவன் தாடையில் குழிகள் விழுந்தன. இன்பம் தொட முடியாத ஆழம்போல்.

பொன்னி புதுமணப்பெண். அதிலும் இப்போது பருவ மங்கை வஸந்த காலம் வந்திருந்தது. அவள் வாழ்க்கையில் இருதயக் குயில் கூவிற்று. அதைக் கேட்பவர் யார்?

வீரப்பனோ பிழைக்கும் வழி என்ன என்று மரத்தை, வானத்தை, மலையை, மண்ணைக் கேட்டுக் கொண்டிருந்தான். பதில் கிடைக்கவில்லை.

அங்குமிங்கும் ஓடினான். கடைசியில், "மாமா... உங்க பெண்ணை ஒரு வருஷ காலம் பார்த்துக் கொள்ளுங்கள். நான் அக்கரைச் சீமைக்குப் போய் ஏதாவது சம்பாதித்து வருகிறேன்.." என்று பதிலைக் கூடக் கேட்காமல் புறப்பட்டான்.

பொன்னி வீறிட்டு அழுதாள். மன்றாடித் தடுத்தாள். கர்ப்பம் என்றும் சூசகமாகச் சொன்னாள். வீரப்பன் கேட்டால்தானே!

பட்டினி வந்ததும் பாசம் பறந்ததோ என்று மனதைத் தேற்றிக் கொண்டான் நாடிமுத்து.

மகளைக் காப்பாற்றுவற்காகப் பட்டினியைச் சரணாகதி அடைந்தான்.

பாலைவனத்தின் நடுவே ஒன்றிரண்டு கோரைப்புல் போல் வீரப்பன் 4, 5 ரூபாய் அனுப்புவான். ஒருவாறு அவர்கள் வாழ்க்கை நடந்தது.

காற்று அவன் நிலையைக் கண்டு ‘கோ’ என்று அலறி ஓடிற்று. சந்திரன் தேய்ந்து வருவதைப் பார்த்துச் சூரியன் கொதித்தது. ஆனால் நமன் மட்டும் அவன் மீது கருணைகொண்டு விட்டு வைத்திருந்தான்.

வீரப்பன் பணம் அனுப்புவது நின்றுவிட்டது.

பொன்னி பத்து மாத கர்ப்பிணியானாள். பிரசவம் பார்க்க வேண்டுமே. ஒரே பெண். முதல் பிரசவம். கிராமத்தாரின் உதவியோ இல்லை. சர்க்கரை இருந்தால் தானே எறும்புகள் சரம்சரமாக வரும்.

அவன் எண்ணம் சுழன்றது.

சரி, நகரத்திலுள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாம் என்ற திடம் பிறந்தது.

பொன்னியும் சம்மதித்தாள். வேறு கதி?

கிராமத்திலிருந்து நடத்திக் கூட்டி வந்தான். மெள்ள மெள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தான் பெரும்பாடு பட்டு.

தன்னுடைய பெண்ணை அந்த நிலையில் பிரிய மனமில்லை. கூட இருந்து உதவி செய்ய வேண்டுமென்று கேட்டான்.

நர்சுகள் அனுமதித்தால் தானே!

"எல்லாம் பார்த்துக் கொள்ளுவோம். பெண் பிள்ளை வார்டில் ஆண் பிள்ளைக்கு என்ன வேலை? போ!" என்று நெட்டித் தள்ளினார்கள்.

அவளை ஆஸ்பத்திரியின் மாடிக்குக் கொண்டு போனார்கள். 3ம் நம்பர் வார்டில், 9ம் நம்பர் கட்டிலில் கிடத்தினார்கள்.

அவள் இட்ட தனிமையின் கூக்குரல் அவன் செவியைக் கிழித்தது. அவள் கண்களில் நீர் பெருக்கெடுக்க அழுதாள்.

"அழாதே அம்மா. தெய்வம் காப்பாற்றும். உனக்கொன்றும் வராது" என்று தேற்றினான்.

அவள், "அப்பா அப்பா... இங்கே என்னைத் தனியாய் விட்டு விட்டுப் போகாதே பயமாய் இருக்கிறது. போகாதே அப்பா" என்று அழுதாள்.

நாடிமுத்துவின் நெஞ்சம் குழைந்தது. புத்திரபாசம் இருதயத்தை உலுக்கியது. அவள் விருப்பத்தை அவன் உள்ளம் ஒப்புக் கொண்டது. ஆனால் உலகம் ஒப்பவில்லை.

வசைக் காற்று அவனை ஆஸ்பத்திரிக்கு வெளியே கொண்டு வந்து தள்ளியது.

"போ போ நாளைக் காலையில் வந்து பார். உன் மகள் நல்ல பிள்ளையாகப் பெற்றிருப்பாள். உம் உம் போ போ இங்கே நிற்காதே" என்று நர்ஸ் கடைசி முறையாக ஆசிர்வதித்து அனுப்பினாள்.

சாப்பாட்டின் நினைவே அவனுக்கு இல்லை. ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்தான். பொன்னி அடைபட்டிருக்கும் மாடியைப் பார்த்துக் கொண்டே நின்றான் தெருவில்.

யாராவது நோயாளிகள் அலறுவது கேட்கும். அவன் நெஞ்சம் பதறும். பொன்னி படும் வேதனை அவன் கண்முன் நிற்கும். மனம் துடிக்கும். கொதிக்கும். பதறும். தலை சுற்றும். உடல் நெளியும்.

சற்று நேரம் செல்லும். எங்கோ குழந்தை ‘குவா குவா’ என்று கத்துவது கேட்கும்.

அவன் மனதில் சந்தோஷம் துள்ளும். முகச் சுருக்கங்கள் விரிவடையும்; எண்ணங்கள் குமுறும். உயிர் படபடக்கும்; கண்களில் ஒளி பரவும்.

பொழுது எப்போது விடியும்? பொழுது எப்போது விடியும்? இந்தக் கேள்வியே அவன் மனம் முழுவதும் எதிரொலித்தது.

மதில் வழியாக ஏறிக் குதித்து உள்ளே போய்ப் பார்க்கலாமா? "அவள் குழந்தையாகத்தான் இருக்கும். ஆண் குழந்தை... ஆம்" இவ்வாறு அவன் மூச்சுக்கள் ஒவ்வொன்றும் பேசும்.

கணக்கில் அடங்காத கனவுகள்.. கற்பனை ஜாலங்கள் மின்னும் அவன் அறிவில்...

இப்படியாக வீதியிலே மரத்தோடு மரமாக நிழலோடு நிழலாக இருட்டின் மௌனத்தோடு நின்று கொண்டிருந்தான்.

இரவும் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது. ஆயிற்று... பொழுது விடியும் தருணம். ரோந்துச் சேவகன் மறையும் வரையில் பார்த்துப் பார்த்து அலுத்த கண்கள் ஆஸ்பத்திரி மாடியின் மீது படிந்தன.

ஐயோ, அங்கே என்ன நாடிமுத்துவின் தேகம் இப்படிப் படபடக்கிறதே! ஏன்?

9ம் நம்பர் கட்டிலில் இருந்து ஒரு பெண்ணை டோலியில் கிடத்தி எடுத்து வருகிறார்கள். சிறு டோலியில் குழந்தையை வேறு கொண்டு வருகிறார்கள்.

அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. சிந்தனை மூலை, முடுக்குகளெல்லாம் வேலை செய்தது.

"நம் பெண்தான். பிரசவித்திருப்பாள். அவள் குழந்தைதான் அது. எங்கே கொண்டு போகிறார்கள்? கூடவே நாலைந்து நர்ஸுகளும் போகிறார்கள். டாக்டர் கூடப் போகிறார். அவர்கள் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. மௌனமாகத் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு போகிறார்களே? பிரசவ வேதனை.. எம கண்டம்... ஆம்... ஐயோ... அவள் இறந்து போய்விட்டாள்... குழந்தை கூட.... ஐயோ, என் மகள், என் அருமை மகள் இறந்து விட்டாளே..." அவன் சிந்தனை ஸ்தம்பித்தது.

"ஐயோ மகளே. அருமைக் கண்மணீ..." என்று வீறிட்டான். வெறிகொண்டவன் போல் உள்ளே ஓடினான்.

அவனைப் பார்த்ததும் எதிரே குழந்தையையும், தாயையும் தூக்கி வந்தவர்கள் அந்த டோலியை அவனிடம் ஒப்புவித்து விட்டனர்.

நாடிமுத்து பொன்னியின் மேல் வீழ்ந்தான். புலம்பினான். கதறினான். அழுதான். அரற்றினான். ஏனென்று யாரும் கேட்பார்தாம் இல்லை.

"ஐயோ.. கண்ணே.. என் அருமை மகளே.. என்னைக் கதறவிட்டு எங்கே பறந்து விட்டாய்? தாயில்லாத உன்னை அவ்வளவு அருமையாக வளர்த்தேனே! நீ சாப்பாடில்லாமல் வருந்தக் கூடாது என்பதற்காக நான் எத்தனையோ நாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேனே! உன் மேனி வாடாமல் பூ மாதிரி வளர்த்தேனே! இப்படி வேதனைப்பட்டு ஒரே நாளில் உன்னைத் தொலைக்கவா இந்தப் பாழும் பட்டினத்திற்கு வந்தேன். என் கண்ணே.. உனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அது தவழும். விளையாடும். நடக்கும். மழலை மொழிகளினால் மகிழ்விக்கும். ’தாத்தா’ என்று கூப்பிடும். தள்ளாத காலத்திலே சம்பாதித்துப் போடும் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டினேனே. எல்லாம் இப்படியா மண்ணோடு மண்ணாகப் போக வேண்டும்" அழுது அரற்றினான் நாடிமுத்து.

வெளியே ஒரு கார் வந்து நின்றது. ஹாரன் அடிக்கும் சப்தம் கேட்டு, கேட் சேவகன் ஓடி வந்தான்.

கேட்டைத் திறந்து விட்டுக் கொண்டே, "ஹாரன் அடிக்க வேண்டாம். யாரைப் பார்க்க வேண்டும்?" என்றான்.

காரிலிருந்தவன் தலையை நீட்டி, "இந்தப் பெண்ணை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ண வந்தேன்" என்றான்.

கேட் சேவகன், "அப்படியா? 3ம் நம்பர் வார்டிலே 9ம் நம்பர் கட்டில்கூட இப்போதுதான் காலியாயிற்று" என்றான்.

காரிலிருந்தவன், "9ம் நம்பர் கட்டிலா?" என்று கேட்டான்.

அழுது கொண்டிருந்த நாடிமுத்து "9ம் நம்பர் கட்டில்" என்ற சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

கம்பதாசன்
Share: 




© Copyright 2020 Tamilonline