|
|
|
|
இதுவரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்பதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் அல்ல. இந்தத் கட்டுரை வரிசையில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம். இதுவரை இக்கட்டுரையில் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு குழு எவ்வளவு முக்கியம், மாற்றங்களை எவ்வாறு மேற்கொள்ளலாம், விற்பதா-வளர்ப்பதா, ஆராய்வதா-ஆரம்பிப்பதா, விமர்சகர்களின் முக்கியத்துவம் என்பவற்றைப்பற்றிப் பார்த்தோம். சென்ற பகுதியில் வருமான/லாப திட்டம், விற்பனை வழிமுறைகள் போன்ற பல யுக்திகளைப் பார்த்துள்ளோம். இப்பகுதியில் இன்னோர் ஆரம்பநிலை யுக்தியைக் கற்க வாருங்கள்!
*****
கேள்வி: கடந்த பல ஆண்டுகளாக மென்பொருள் துறை பல மாற்றங்களை அடைந்துள்ளது. இப்போது உருவாக்கப் படுகின்ற மென்பொருள் சேவைகளுக்கும், விற்பொருட்களுக்கும், அவற்றின் பயனர் எதிர்பார்ப்புக்கள் என்ன? புது மென்பொருள் உருவாக்குகையில் நான் எந்தெந்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது?
கதிரவனின் பதில்: ஆஹா, எனக்கு நல்ல உற்சாகமளிக்கும் யோசிக்க வைக்கும் கேள்வி. கேட்டதற்கு நன்றி! பயனர் எதிர்பார்ப்புக்கள், மென்பொருளின் வகையைப் பொறுத்து வேறுபடும்.
நுகர்வோர் மென்பொருள் சில வருடங்களுக்கு முன் மைக்ரோஸாஃப்ட் விண்டோஸ் மேடையைச் சார்ந்திருந்தது. ஆனால், தற்போதோ, கைக்கணினிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதால் ஆப்பிள், அண்ட்ராய்ட் மேடைகளைச் சார்ந்து வருகின்றது.
பெரு நிறுவன மென்பொருட்கள் முன்பு பெரும்பாலும், சேவைக்கணினிகளில் நிறுவப்பட்டு விண்டோஸ் கணினிகளிலிருந்து நிறுவனக் கிளைகளிலிருந்து பயன்படுத்தப்பட்டன. ஆனால் இப்போதோ சேவை மென்பொருட்களாக, எளிதில் பயன்படுத்தக் கூடியவையாக, கைக்கணினிகளிலிருந்தே, பயனர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கிருந்தே பயன்படுத்துகிறார்கள்.
மின்வலைச் சேவைகள் வர ஆரம்பித்தே இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன! (அம்மாடியோவ்!) இவையும் வர, வர கைக்கணினிகளின் மேல்தான் மிக அதிக கவனம் வைக்கின்றன. (யாஹூ நிறுவனம் தான் மீண்டும் தழைக்க, கைக்கணினிகளின் மேல்தான் நம்பிக்கை வைத்துள்ளது). மேலும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. எல்லா மின்வலை சேவைகளிலும் இத்தகைய சமூக அம்சங்கள் பெரிதும் எதிர்பார்க்கப் படுகின்றன. மேலும் சேவைகளின் பயனர் இடைமுகங்களும் (user interfaces), மற்றும் பயன் அம்சங்களும் வெகு துரிதமாகப் புதுப்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
கட்டமைப்பு மென்பொருட்கள் (infrastructure software), வலைமேகத்திலிருந்து (cloud) அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி வருகின்றது. குறைந்த பட்சம் வலைமேகத்திலிருந்து மேலாண்மை நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அது மட்டுமல்ல தகவல் துளிகளைப் பெருமளவு சேகரித்து (big data) அதன்மூலம் புது அம்சங்களையும் அளிக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எனக்கு மற்றவகை மென்பொருட்களை விடக் கட்டமைப்பு மென்பொருட்களிடம் தான் பரிச்சயம் அதிகம். அதனால், மற்ற வகையறா மென்பொருட்களைப் பற்றிச் சற்று மேலாகக் குறிப்பிட்டுவிட்டு, கட்டமைப்பைப் பற்றி இன்னும் சற்று அதிகமாக விவரிக்க உள்ளேன். (மற்ற வகை மென்பொருள் விசிறிகளிடம் முன்கூட்டியே மன்னிப்புக் கோருகிறேன்!) |
|
முதலாவதாக, கைக்கணினிகளில் பயன்படுத்தப் படும் நவீன நுகர்வோர் மென்பொருட்களுக்கான எதிர்பார்ப்புக்களில் முக்கியமான சில அம்சங்களைக் குறிப்பிடுவோம்:
முதலில் கூற வேண்டியது இடம்பொருந்திய சேவைகள் அல்லது தகவல்கள் (location based services or information). எல்லா இடங்களுக்கும் கூடவே எடுத்துச் செல்வதால், கைக்கணினிகளுக்கே மிக உரித்தான அம்சம் இது. இதில் இருவகைகள் உள்ளன. ஒன்று, அருகிலிருக்கும் கடைகள், உணவகங்கள் அல்லது சேவையகங்களுக்கான ஊக்கத் தூண்டுதல்களை அளித்து வணிகம் பெருக்கல். இன்னொன்று, அருகிலிருக்கும் நண்பர்கள் அல்லது சுவாரஸ்யமான இடங்களைப் பற்றிக் குறிப்பிடுவது. அதிலும், கைக்கணினியின் காமிரா வழியாகப் பார்த்தால் இன்னும் அதிகமான தகவல் தருவது. இதற்கு உண்மை மேலாக்கம் (reality augmentation) என்று பெயர். இதுபோன்ற பல இடம் பொருந்திய அம்சங்களை நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர். (இப்படிப் பட்ட அம்சங்களை நிறுவன மென்பொருட்களிலும் அளிக்கக்கூடும்).
அடுத்து, நாம் செயற்கை அறிவைக் (artificial intelligence) குறிப்பிட்டாக வேண்டும்! சில வருடங்களுக்கு முன்பு இந்தத் துறை நடைமுறை வாழ்வுக்கு உதவாது என்று ஒதுக்கி விட்டார்கள்! ஆனால், இப்போதோ, செயற்கை அறிவு நம் அன்றாட வாழ்வில் ஆழ்ந்து ஊறிவிடுமாறு முன்னேறி வருகிறது. இதில் முதல் அம்சமாக ஆப்பிளின் ஸிரி (Siri) போன்ற அதிபுத்திசாலியான, "அறிவுள்ள தனியார் உதவியாளிகள்" (personal smart assistants) வளர்ந்து வருகின்றன. அதனால், கைக்கணினிகளின் மென்பொருள் அறிவு கி.மு, கி.பி. போல, சி.மு. சி.பி. என்று கூட கூறலாம் - அதாவது ஸிரி-க்கு முன், ஸிரி-க்குப் பின்! முன்பு பயனர் பேச்சறிவு மென்பொருட்களுக்கு மிக மோசமாக இருந்தது. ஆனால் இப்போதோ சர்வ சகஜமாகிவிட்டது! அமேஸான் கூடத் தன் ஃபையர் டிவி பெட்டியில் பேச்சாலேயே தேடும் அம்சம் அளித்துள்ளது. அதனால், பேச்சறிவற்ற கைக்கணினி மென்பொருள் என்பது வருங்காலத்தில் அபூர்வமாகிவிடும் என்றுதான் தோன்றுகிறது. பேச்சறிவு மட்டுமில்லாமல், உங்கள் மின்னஞ்சல், நாளேடு (calendar), மற்றும் தொடர்புகள் இவற்றைக் கோர்த்தெடுத்து நீங்கள் எப்போது என்ன செய்ய வேண்டும் என பரிந்துரை தரவும் ஆரம்பித்துள்ளன! நுகர்வோர் மென்பொருள் உருவாக்க முனைந்தால் இத்தகைய பேச்சறிவு மற்றும் பரிந்துரைகள் போன்ற புத்திசாலித்தனத்தை உங்கள் மென்பொருளில் அமைக்க முனையுங்கள். விளையாட்டு மென்பொருட்களானாலும் (games) இவை வருங்காலத்தில் நிச்சயம் அவசியம் என நான் கருதுகிறேன்!
இப்போது மிகவேகமாக வளர்ந்து வரும் துறை "அணிதகு கணினிகள்" (wearable computers). கூகிள் கண்ணாடியும் இந்த வகையில் சேர்ந்ததுதான். அது தவிர ஃபிட்பிட் (Fitbit), பெப்பிள் கடிகாரம் (pebble watch) போன்றவையும் இவ்வகையில் சேர்ந்தவை. இவற்றுக்கான பயன் மென்பொருட்களுக்கான எதிர்பார்ப்புகள் என்ன என்பதையும் ஆராயலாம்.
இப்பகுதியில் இதுவரை நுகர்வோர் மென்பொருட்களின் எதிர்பார்ப்புக்களைப் பார்த்தோம். மற்றவகை மென்பொருட்களைப் பற்றி அடுத்த பகுதியில் விவரிப்போம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|