Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-9)
- கதிரவன் எழில்மன்னன்|மே 2014|
Share:
இதுவரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்பதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் அல்ல. இந்தத் கட்டுரை வரிசையில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம். இதுவரை இக்கட்டுரையில் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு குழு எவ்வளவு முக்கியம், மாற்றங்களை எவ்வாறு மேற்கொள்ளலாம், விற்பதா-வளர்ப்பதா, ஆராய்வதா-ஆரம்பிப்பதா, விமர்சகர்களின் முக்கியத்துவம் என்பவற்றைப்பற்றிப் பார்த்தோம். சென்ற பகுதியில் வருமான/லாப திட்டம், விற்பனை வழிமுறைகள் போன்ற பல யுக்திகளைப் பற்றிப் பார்த்துள்ளோம். இப்பகுதியில் இன்னோர் ஆரம்பநிலை யுக்தியை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்!

*****


கேள்வி: நான் ஒரு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்துள்ளேன். அதை ஒரு குறிப்பிட்ட மென்பொருள் மேடைக்குத் (software platform) தக்கதானதாக மட்டும் உருவாக்குவது சரியா, அல்லது பல மேடைகளில் பயனாகுமாறு படைப்பது நல்லதா? இவை இரண்டில் எந்த வழிமுறையில் நான் சென்றால், என் மென்பொருளுக்கு பெரிய பலன் கிடைக்கும்? பல மேடைகளின் பயனர்களுக்குக் கிட்டுமாறு செய்தால் அதிகமான பயனர்கள் கிடைப்பார்கள். ஆனால் பல மேடைகளுக்கும் சரியாகும்படி செய்ய வேண்டுமானால், என் மென்பொருளின் பலன்களைக் குறைக்க வேண்டி வரலாம். எது சரி என்று நான் குழம்புகிறேன். உங்கள் பரிந்துரை என்ன?

கதிரவனின் பதில்: ஆஹா! சென்ற பல வாரங்களாக விற்பனை வழிமுறைகளைப் பற்றி சலிக்கும்வரை அலசியபிறகு, வணிக யுத்திமுறை (business strategy) பற்றிய மிக சுவையான, மிக முக்கியமான கேள்வி இது. மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் ஆதிக்கத்தினால் இந்தக் கேள்விக்கே இடமில்லாமல் இருந்தது. ஆனால் சமீபகாலமாக ஆப்பிள் நிறுவனத்தின் IOS, மற்றும் கூகிள் நிறுவனத்தின் அண்ட்ராய்ட் போன்ற மென்பொருள் மேடைகள் இப்போது சூட்டிகைச் செல்பேசிகளிலும் (smart phones), பலகைக் கணினிகளிலும் (tablet/slate computers) ஆதிக்கம் பெற்றதனால், தற்காலத்துக்குத் தக்க கேள்வியாகிவிட்டது!

இந்தக் கேள்விக்குப் பலமாதிரியான விடைகள் பொருந்தக்கூடும். ஆனால் எனக்குத் தெரிந்தவரை என் கருத்தைச் சொல்கிறேன். மென்பொருள் வல்லுனர்கள் வேறு சிலரிடமும் கலந்தாலோசிப்பது நல்லது.

இந்த இரண்டு அணுகுமுறைகளையும் ஓரளவு கலப்பதே சரி என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் ஓரிரு மென்பொருள் மேடைகளுடன் மட்டுமே ஆழ்ந்த ஒருங்கிணைப்பெய்த இயலும். மற்ற மேடைகளில் ஓரளவு இயங்க மட்டுமே கூடும்.

"மூன்று மட்டுமே" என்றொரு கோட்பாடு உள்ளது. பல துறைகளில், ஒரு மிகப்பலம் வாய்ந்த தீர்வுப் பொருள் (dominant solution) இருக்கும். ஆனால் வணிகச்சந்தை ஒரே ஒருவர் மட்டுமே முற்றுரிமை (monopoly) செலுத்த அனுமதிப்பதில்லை. அதனால், பொதுவாக, சற்று பலம் குறைந்த, ஆனாலும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் தீர்வுப் பொருளும் இருக்கும். கணினிகள், உந்துவண்டிகள், விமானங்கள் போன்ற பல துறைகளிலும் இது நிலவுகிறது. மேலும் "மூன்று" கோட்பாட்டின்படி இன்னொரு மூன்றாம் தீர்வுப் பொருள் விசேஷமான தேவைகளுக்குச் சரிப்பட்டு சுமாரான பலம் உள்ளதாக இருக்கும்.
ஆனால் ஸ்மார்ட் செல்பேசிகள் அல்லது பலகைக் கணினிகளில் இது ஓரளவுக்கு வித்தியாசமாக உள்ளது. அதாவது, இத்துறைகளில் இரண்டு வெவ்வேறு அம்சங்களில் பலம் வாய்ந்த மென்பொருள் மேடைகள் உருவாகியுள்ளன. ஒன்று ஆப்பிள் நிறுவனத்தின் IOS மேடை. இன்னொன்று கூகிள் நிறுவனத்தின் அண்ட்ராய்ட் மேடை. ஆப்பிளின் IOS ஒரே நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் பல மில்லியன் பயனர்கள், அதுவும் நிறைய செலவழிக்கும் பயனர்களுடன் பலம் பெற்றுள்ளது. அண்ட்ராய்ட் மேடையோ, பலப்பல நிறுவனங்கள் (அமேஸான் உட்பட) பயன்படுத்துவதால் இன்னும் அதிகப் பயனர்களைப் பெற்று வலுப்பெற்றுள்ளது.

ஒருங்கிணைந்த ஒரு சூழலின் அரவணைப்பில் தங்கள் பயன்பாட்டு மென்பொருட்களை (apps) விற்று ரொக்கமாக்கலை (monetization) மிக எளிதாக்குவதும், பயனர்களுக்கு மிக உகந்ததாக இருப்பதும், ஆப்பிளின் உன்னதமான கருவிகளும் (devices) IOS மேடையின் ஆதிக்கத்தின் மூல காரணங்களாகும். அண்ட்ராய்ட் மேடையின் மிக முக்கியமான பலம் அது கூகிளின் முழு உதவியுள்ள திறந்த மென்பொருள் என்பது (open source software). அதனால் ஸாம்ஸங், அமேஸான் போன்ற பெரும் நிறுவனங்கள், மற்றும் பலப்பல சிறு நிறுவனங்களும் இதைப் பயன்படுத்தவே அது மிகப் பிரபலமாகி பலம் பெற்றுவிட்டது. ஆனால், இப்படித் திறந்திருப்பதே ஒரு விதமான பலவீனமும் கூட. அண்ட்ராய்ட் என்பது ஒரு பெயர் என்றாலும், சில விதமான அண்ட்ராய்ட்கள் உருவாகி (லினக்ஸ் போல) கொஞ்சம் சிதறல் (fragmentation) ஏற்பட்டுள்ளது. மேலும் பலவிதமான கணினித் தாக்குதல்களுக்கும் (cyberattacks) தீய மென்பொருட்களுக்கும் (malware) அண்ட்ராய்ட் எளிதாக உள்ளாகிறது. நான் கண்டுள்ளது என்னவெனில், IOS-இன் ஒருங்கிணைப்பு பலத்தால் சிலர் அந்த மேடையில் தங்கள் பயன்பாட்டு மென்பொருளை முதலில் அறிமுகம் செய்துவிட்டுச் சிலகாலத்துக்குப் பிறகு அதை அண்ட்ராய்ட் மேடைக்கு கூகிள் ப்ளே மூலம் கொணர்கிறார்கள்.

மேசைக் கணினிகளிலும், நோட்டுப் புத்தகக் கணினிகளிலும் ஆதிக்கம் செலுத்திய மைக்ரோஸாஃப்ட் விண்டோஸ் ஸ்மார்ட் ஃபோன்களிலும் பலகைக் கணினிகளிலும் தூரத்திய மூன்றாம் மேடையாகிவிட்டது (அதுவும் நிறுவனங்களில்தான் கைக்கணினிகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.)

ஒரு முக்கியக் கருத்து: நீங்கள் உங்கள் தீர்வுப் பொருளைப் பல மேடைகளில் அளிப்பதாக இருந்தால் மிகக்கீழ்ப் பொது வகுப்பு (lowest common denominator) என்னும் பொறியில் (trap) சிக்கிக் கொள்ளாதிருக்க தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மேடைக்கும் ஒருவிதமான ஆழ்வும் பயனர் இடைமுக (user interface) அம்சங்களும் உள்ளன. உங்கள் பயன்பொருள் பலன் அம்சங்கள் பொதுவாக இருப்பினும், பயனர் இடைமுகமாவது மேடையின் விசேஷ அம்சங்களைப் பயன்படுத்தி அம்மேடைக்கு இயல்பாக வேண்டும். பலன் அம்சங்களைக் கூட அம்மேடையின் மிக விசேஷமான அம்சங்களைப் பயன்படுத்துவது நன்று. உதாரணாமாக ஆப்பிள் மேடையின் விரல்ரேகை அம்சமும், அண்ட்ராய்ட் மேடையின் அருகுத் தொடர்பும் (near field communication) குறிப்பிடத் தக்கவை.

ஓர் இறுதிக் குறிப்பு: நான் மேற்கண்ட பதிலை கைக்கணினிகளுக்கான மென்பொருள் மேடைகளைப் பற்றி மட்டும் கொடுத்துள்ளேன். ஆனால் இதே மாதிரியான பொதுவான கோட்பாடுகளை மற்ற வகையான மேடைகளுக்கும் மனதில் கொண்டு செயல்படலாம். (உதாரணமாக இன்டெல் மற்றும் ARM கணினிச் செயலிகளுக்கும் இந்த மாதிரியான கருத்துக்கள் பயன்படும்).

மேடைகளுக்கு எப்படித் தீர்வுப் பொருள் உருவாக்குவது பற்றி சற்றேனும் விளக்கியிருக்கிறேன் என நம்புகிறேன். இது ஒரு பெரிய தலைப்பு. அதனால் விவரிப்பதென்றால் பலதரப்பட்ட மேடைகளைப் பற்றி விளக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இத்தோடு சுருக்கமாக முடித்துக் கொண்டு அடுத்து வேறு ஆரம்பநிலை யுக்தி ஒன்றைப் பார்ப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline