|
தேவையில்லாததில் ஈடுபடாதே! |
|
- அரவிந்த்|மே 2014| |
|
|
|
|
|
ஒரு காட்டில் மிகவும் தந்திரசாலியான நரி ஒன்று வாழ்ந்தது. அது ஒருநாள் இரைதேடி அலைந்தபோது, மிகுந்த பசியோடு ஒரு கழுதைப் புலி வந்தது. நரியைப் பார்த்ததும் "ஆஹா... இன்றைக்கு இதாவது கிடைத்ததே" என்று எண்ணிப் பாயத் தயாரானது.
அதைக் கண்ட நரி பயந்துபோனது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, கழுதைப் புலியைக் கவனிக்காதது போல் கீழே கிடந்த எலும்புகளைத் தின்பதாக பாவனை செய்தது. பின் உரத்த குரலில் "ஆஹா. இந்தக் கழுதைப்புலி மாமிசம் எவ்வளவு ருசியாக இருக்கிறது. தினமும் இதுபோல் ஒன்று தின்னக் கிடைத்தால் எப்படி இருக்கும்?" என்று சொல்லி நாக்கைச் சப்புக் கொட்டியது.
அதைப் பார்த்த கழுதைப்புலி பயந்து போனது. "நிஜமாகவே இந்த நரி கழுதைப்புலியைத் தாக்கி உண்ணுமோ என்னவோ! இல்லாவிட்டால் இவ்வளவு தைரியமாக அது பேசுமா? நமக்கேன் வம்பு!" என்று எண்ணி மெள்ள அங்கிருந்து பின்வாங்கிச் சென்றது.
நடந்ததையெல்லாம் மரத்தின் மேலிருந்து கவனித்துக் கொண்டிருந்தது ஒரு குரங்கு. நரியின் பகைவனான அது, கழுதைப்புலியைப் பின் தொடர்ந்து, வழியை மறித்து, நரி ஏமாற்றிய விவரத்தைச் சொன்னது. அதைக் கேட்ட கழுதைப்புலிக்குத் தாங்க முடியாத கோபம் வந்தது. "ஓஹோ, என்னையே ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறதா அந்த நரி? அதற்குத் தகுந்த பாடம் புகட்டுகிறேன். நீ வேடிக்கை பார். வா என்னுடன்" என்று குரங்கை அழைத்துக் கொண்டு சென்றது. |
|
நரி அப்போது ஒரு குகை வாயிலில் நின்று கொண்டிருந்தது. அது சிங்கத்தின் குகை. சிங்கம் தின்று எஞ்சிய துண்டுகளும் எலும்புகளும் அங்கு சிதறிக் கிடந்தன. அவற்றை உண்ணத்தான் நரி அங்கே போனது. ஆனால் கழுதைப் புலியும் குரங்கும் அங்கே வருவதைப் பார்த்ததும் பயந்து போனது. "நம் எதிரியான இந்தக் குரங்கின் வேலையாகத்தான் இருக்கும்" என்று நினைத்த நரி, அங்கே சிதறிக் கிடந்த இரையை உண்பதாக நடித்த பின், உரத்த குரலில் "ம்ம்ம்... அந்தக் குரங்கு எங்கே போய்த் தொலைந்தது? இன்னொரு கழுதைப்புலியை எப்படியாவது தந்திரமாகப் பேசி ஏமாற்றி அழைத்துக் கொண்டு வா. நான் மிகுந்த பசியாக இருக்கிறேன்’ என்று சொல்லியனுப்பி எவ்வளவு நேரமாகி விட்டது! இன்னும் காணோமே... சே... எங்கே போய்த் தொலைந்ததோ..." என்று அலுத்துக் கொண்டது.
நரி சொன்னதைக் கேட்டதும் கழுதைப்புலி திடுக்கிட்டது. "ஓஹோ.. நரி சொல்வது உண்மைதான். இந்தக் குரங்குதான் பொய் பேசி ஏமாற்றி என்னை நரிக்கு இரையாக்க இங்கே கூட்டிக் வந்திருக்கிறது" என்று நினைத்தது. ஆத்திரத்துடன் குரங்கின் மீது பாய்ந்து தாக்கி அதனைத் தூக்கிச் சுழற்றி அடித்தது. "நான்.... நான்.... " என்று ஏதோ சொல்ல வந்த குரங்கு, மரத்தில் மோதி அடிபட்டுத் தொலைவில் போய் விழுந்தது.
கழுதைப்புலி ஓடியதும் குரங்கின் அருகே சென்ற நரி, "ம்ம்ம்ம்... நமக்குத் தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டாலும், கெட்டவர்களுக்கு நல்லது செய்யப் போனாலும் இப்படித்தான் ஆகும். கவலைப்படாதே, உன் காயத்துக்கு நான் மூலிகை தேடி எடுத்து வருகிறேன். காத்திரு" என்று சொல்லிவிட்டுக் காட்டுக்குள் ஓடியது.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|