Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்
- பா.சு. ரமணன்|மே 2014|
Share:
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் ஹோம் சயன்ஸ் (மனை அறிவியல்) பட்டதாரி; அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழகத்தில் இத்துறையில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்; ஆசிரியராகப் பணி புரியத்துவங்கி, பல்கலைக்கழகத்தின் வேந்தராக உயர்ந்த முதல் தமிழ்ப்பெண் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர் டாக்டர். ராஜம்மாள் தேவதாஸ். இவர் ஜூலை 15, 1919 அன்று வட ஆற்காட்டின் செங்கம் நகரில் பாக்யநாதன்-சொர்ணத்தம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஒன்பது பேர். தந்தை வன இலாகா அதிகாரி. அடிக்கடி பணி மாறுதல் ஏற்பட்டதால் மகளின் கல்வி தடைப்படக் கூடாது என்பதற்காக திருச்சி கிறிஸ்டியன் போர்டிங் ஸ்கூலில் ராஜம்மாளைச் சேர்த்தார். தொடர்ந்து உயர்நிலைக் கல்வியை சென்னை நார்த் விக் பள்ளியில் பயின்று பள்ளி இறுதியை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தந்தை திடீரென நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். தான் உயிரோடிருக்கையிலேயே ராஜம்மாளுக்குத் திருமணம் செய்ய விரும்பினார். தன் தாய்மாமன் தேவதாஸை மணந்தார் ராஜம்மாள். அப்போது அவருக்கு வயது 16. தேவதாஸ் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். கல்வியின் அருமையை உணர்ந்திருந்த அவரிடம் மென்மேலும் கற்கும் தன் ஆர்வத்தைத் தெரிவித்தார் ராஜம்மாள். கணவரின் ஆதரவில் கல்வி தொடர்ந்தது. 1937ல் தந்தை காலமானதால் குடும்பம் தத்தளித்த போதும் விரைவிலேயே மீண்டது. இக்காலகட்டத்தில் மோகன் என்ற குழந்தைக்குத் தாயானார் ராஜம்மாள். அதன் பின்னரும் அவரது கற்கும் ஆர்வம் விடவில்லை. ராணி மேரி கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 'ஹோம் சயன்ஸ்' பாடப்பிரிவில் சேர்ந்தார். தங்கப் பதக்கத்துடன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் 'ஹோம் சயின்ஸ்' பட்டதாரியாக வெளியில் வந்தார். அதே கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு வரவே, ஏற்றுக் கொண்டார்.

அது சுதந்திரப் போராட்டக் காலம். ராஜம்மாளுக்கும் காந்தியச் சிந்தனைகளின் மீது ஆர்வம் உண்டானது. கதராடை அணிய ஆரம்பித்தார். சிறு வயதிலிருந்தே கிராமச் சூழலில் வளர்ந்ததால் கிராமத்துப் பெண்களின் பிரச்சனைகளை முழுமையாக உணர்ந்திருந்தார். அவர்கள் வாழ்க்கை முன்னேற ஒரே வழி கல்விதான் என்று முடிவு செய்தவர், அதற்காக உழைப்பதைத் தம் வாழ்நாள் லட்சியமாக உறுதி பூண்டார். இந்நிலையில் அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழகத்தில் ஊட்டம் மற்றும் மனை அறிவியல் படிப்பைக் கற்க இவருக்கு வாய்ப்பு வந்தது. மத்திய அரசின் உதவியுடன் அங்கு சேர்ந்து பயின்று எம்.எஸ்ஸி. (Food and Nutrition), எம்.ஏ. (Home Science Education) பட்டங்கள் பெற்றார். தொடர்ந்து Nutrition & BioChemistry துறையில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். இந்தியா சுதந்திர நாடாகியிருந்த அக்கால கட்டத்தில் அமெரிக்கப் பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்ற மிகச்சில இந்தியர்களில் ராஜம்மாள் தேவதாஸும் ஒருவராக இருந்தார். இந்தியா திரும்பிய அவருக்கு மத்திய அரசின் பணி கிடைத்தது. பெண்களின் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது.

இந்நிலையில் கோவையில் பெண்களின் முன்னேற்றத்துக்காக அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரியைத் துவக்கிய தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்க ராஜம்மாளை அழைத்தார். தன் கனவு நிறைவேற இது ஒரு நல்வாய்ப்பாகும் என்றுணர்ந்த ராஜம்மாள் தேவதாஸ் தம் மத்திய அரசுப் பணியைத் துறந்து, கல்லூரிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கல்லூரியின் உயர்வுக்காக கடுமையாக உழைத்தார். தான் வேறு கல்லூரி வேறு என்றெண்ணாமல், சில ஆண்டுகளிலேயே அக்கல்லூரியைக் கோவையின் முதன்மையான கல்லூரியாக உயர்த்தினார். சமூக சேவையுடன் இணைந்த கல்வியையும் அறிவியல், மனை அறிவியல், உணவுசார் கல்வி, சூழலியல் எனப் பல துறைகளிலும் பல்வேறு புதிய பாடத் திட்டங்களைக் கொணர்ந்தார். புதிய பட்ட மற்றும் பட்டய, பட்டமேற்படிப்புகளை அறிமுகப்படுத்தினார். மேலும் உழைத்து கல்லூரியை இந்தியாவின் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாக வளர்த்தெடுத்தார்.

கிராமப்புறங்கள் கல்வியில் பின்தங்கி இருக்கக் காரணம், அம்மாணவர்களுக்குச் சமச்சீர் உணவு கிடைக்காததும், வறுமையுமே காரணம் என்பதை உணர்ந்த அவர், அதுகுறித்து ஓர் ஆராய்ச்சி அறிக்கையை அரசுக்கு அனுப்பினார். 1963ல் ஒரு மாதிரிப்பள்ளியை உருவாக்கி, கல்வியோடு அங்கேயே மதிய உணவையும் அளிக்க ஏற்பாடு செய்தார். அதன் தொடர்ச்சியே பிற்காலத்தில் சத்துணவுத் திட்டமாக உருப்பெற்றது. அத்திட்டத்தின் ஆலோசகராகவும் ராஜம்மாள் தேவதாஸ் பணியாற்றினார். குழந்தைகள் போதிய, சமச்சீரான உணவு கிடைக்காததால் இறப்பு சதவிகிதமும் நோய்களும் அதிகரிக்கின்றன என்பதை ஆய்ந்தறிந்த அவர், குழந்தைகளுக்கு, குறிப்பாக ஐந்து வயதுக்குட்பட்ட கிராமப்புறக் குழந்தைகளுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், சமச்சீரான சத்துணவு வழங்கப்படுவதன் முக்கியத்துவத்தை அரசிடம் வலியுறுத்தினார். இன்றைக்கு அத்திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. மாற்றுத் திறனாளிக் குழந்தைகளும் மற்ற குழந்தைகள் போல் செயல்பட, கல்வி கற்க, பாடத்திட்டங்களை வகுத்து Community Based Rehabilitation (CBR) Program என்பதை அமைத்து அவர்கள் முன்னேற உதவினார். கோவையின் விவேகானந்தபுரத்தில் இவர் உருவாக்கிய அவிநாசிலிங்கம் ஊரக மையம் ஒரு முன்மாதிரி அமைப்பாகத் திகழ்கிறது.
1978ல் அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரிக்கு சென்னைப் பல்கலைக்கழகம் 'தன்னாட்சி' அதிகாரம் வழங்கியது. இதைப் பெற்ற அக்காலத்தின் எட்டு கல்லூரிகளில் இது ஒன்றுதான் மகளிர் கல்லூரி. 1988ல் இக்கல்லூரி நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி பெற்று அவிநாசிலிங்கம் பெண்கள் பல்கலைக்கழகமாக உயர்ந்தது. ராஜம்மாள் தேவதாஸ் அதன் துணைவேந்தர் ஆகவும், பின்னர் அதன் வேந்தராகவும் உயர்ந்தார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களுடன் தொடர்பினை விரிவாக்கி மாணவ, மாணவியர் மென்மேலும் கற்கவும், ஆசிரியர்கள் மூலம் அறிவுப் பரிவர்த்தனைகள் நிகழவும் காரணமானார்.

மனையறிவியல் துறையை நமது நாட்டுக்கேற்ப மாற்றியமைத்த பெருமைக்குரிய இவர் மனையறிவியல் சங்கத்தின் (Home science Association) தலைவியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இவரது ஆலோசனைகளைக் கைக்கொண்டே தமது பாடத்திட்டங்களை வடிவமைத்துக் கொண்டன. தமிழக அரசின் திட்டக்கமிஷன் உறுப்பினராகவும் ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என உலகின் பல நாடுகளுக்கும் சென்று சர்வ தேசக் கருத்தரங்குகளில் உரை நிகழ்த்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகளுக்கான சமச்சீர் சத்துணவின் தேவை குறித்துப் பேசியிருக்கிறார். எப்போதும் சுறுசுறுப்பாய் உழைத்த இவர் தனது எழுபத்தொன்பதாம் வயதில்கூட டெல்லியில் நடந்த உலக வங்கிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளிடையே விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அறிவு வளர்வதற்காக 'விஞ்ஞானச் சுடர்' என்ற இதழைக் கொண்டுவந்தார். அதன் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். தவிர, 530க்கு மேல் ஆய்வுக்கட்டுரைகளும், 350க்கு மேல் குறிப்பேடுகளும் அளித்துள்ளார். நமது 'உணவைப் பற்றிய உண்மைகள்', 'குடும்பக்கலை' என பல தலைப்புகளில் 57 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் குழந்தைகள் நலம் பற்றி இவர் எழுதியுள்ளவை 17 நூல்கள்.

இவர் ஆற்றிய பணிகளுக்காக பல்வேறு பெருமைகள் இவரைத் தேடி வந்துள்ளன. டெல்லி சாஹித்ய சம்மேளனம் இவருக்கு 'விஞ்ஞான சரஸ்வதி' என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது. தமிழக அரசு 1977ன் சிறந்த ஆசிரியைக்கான விருதை வழங்கி கௌரவித்தது. மனிதவள மேம்பாட்டுத்துறையின் தேசிய விருது, துர்காபாய் தேஷ்முக் விருது, பிர்லா விருது, மஹிளா சிரோன்மணி விருது, தாகூர் விருது, மால்கம் ஆதிசேஷய்யா விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவருக்கு, இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருதை வழங்கிச் சிறப்பித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திற்காக குறிப்பிடத்தக்க பங்காற்றிய இவருக்கு 1998ம் ஆண்டிற்கான ஜானகி தேவி பஜாஜ் விருது வழங்கப்பட்டது. வியன்னாவில் நடந்த பன்னாட்டு மாநாட்டில் இவருக்கு International Nutrition Scientist Award வழங்கப்பட்டது. ஒரிகன், அயர்லாந்து பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.

வாழ்நாள் முழுதும் கல்வி உயர்வு, பெண்கள் நலம், குழந்தைகள் நலம், சமச்சீர் உணவு போன்றவை பற்றியே சிந்தித்து வாழ்ந்த டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ், தமது 83ம் வயதில் மார்ச் 17, .2002 அன்று சிட்னியில் தன் மகன் இல்லத்தில் காலமானார். அவர் விதைத்த விதைகள் இன்று மாணவர்களாகவும், செயல்திட்டங்களாகவும் உலகெங்கும் பரவிப் பயனளித்துக் கொண்டிருக்கின்றன. கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் நியூட்ரிஷன் சொசைட்டி ஆஃப் இந்தியா இணைந்து அவரது நினைவைப் போற்றும் வகையில் ராஜம்மாள் பி. தேவதாஸ் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. மறக்கக்கூடாத ஒரு முன்னோடி டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்.

(தகவல் உதவி: 'Amma, Dr. Rajammal P. Devadas, a Beacon of Light' மற்றும் முக்தா சீனிவாசன் எழுதிய 'இணையற்ற சாதனையாளர்கள்')

பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline