|
தமிழர்களின் சார்பில் ..... |
|
- கேடிஸ்ரீ|டிசம்பர் 2005| |
|
|
|
குஷ்புவுக்குப் பிரச்சினை ஏற்பட்டபோது அவருக்கு எதிரானவர்களிடம் மட்டுமே பத்திரிகைகள், டி.விக்கள் கருத்து கேட்டு பரபரப்பாக வெளியிட்டன. அவரது ஆதரவாளர்களிடம் கருத்து ஏதும் கேட்க வில்லை. என்னிடம் கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன். நான் அப்போது வெளி நாட்டிலிருந்ததால் இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டு சங்கடப்பட்டேன். போராட் டத்தை வெற்றிகரமாகச் சந்தியுங்கள் என்று குஷ்புவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தேன்.
இந்தியாவிற்கு 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. இந்தச் சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தானா, பெண்களுக்கு இல்லையா? பெண்கள் கருத்துச் சொல்ல சுதந்திரம் கிடையாதா? குஷ்பு வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் அவர் தமிழ்நாட்டிற்கு வாழவந்தவர். அவர் பேசியதை பிரச்னை யாக்கியவர்கள் அவரை மாநிலத்தை விட்டு ஓடு, நாட்டை விட்டு ஓடு என்றெல்லாம் சொல்கின்றனர். நான் தமிழ்நாட்டுப் பெண். நான் ஏதும் பேசியிருந்தால் என்னை பரமக்குடிக்கு ஓடிவிடு என்று சொல்லி விடுவார்களா? குஷ்பு பேட்டியில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பதில் சொல்லியிருந்தார். இதைப் புரிந்துக் கொள்ளாமல் யார் யாரோ எத்தனையோ அவமானங்களை அவருக்கு ஏற்படுத்தி விட்டனர். தமிழ்நாட்டிற்கு வாழவந்த குஷ்பு நிறைய வேதனைப்பட்டு விட்டார். இதற்காக நான் தமிழர்களின் சார்பில் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
சுகாசினி, நடிகை, சென்னையில் நடைபெற்ற 'தமிழ்நாடு உலகத் திரைப்பட விழா 2005'ல்...
*****
இன்ஜினியரிங் கல்லூரிகளில் செல்போன் பேசுவதற்குக் கட்டுப்பாடு, உடை விஷயங் களில் கட்டுப்பாடு போன்ற விதிமுறைகள், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே கொண்டு வரப்பட்டது. மாணவர்களும் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து புதிய விதிமுறைகளை வரவேற்றுள்ளனர். பெற் றோர்களும் இதற்கு ஒத்துழைப்புக் கொடுத் துள்ளனர். பல இடங்களில் நல்ல வேலை வாய்ப்புகள் இருந்தாலும் அவற்றைத் தாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்து மாணவர்கள் இப்போது கல்வி கற்பதிலேயே முழு ஆர்வம் காட்டுகின்றனர்.
தகவல் தொழில்நுட்பக் கல்வியின் மீது இருந்த மோகத்தால் மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் படிப்பது குறைந்து வந்தது. ஆனால், இப்போது மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் இருப்பது இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அதிகமான மாணவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்துறையில் வெளி நாட்டினரைச் சார்ந்திராமல் நம் நாடு தன்னிறைவை அடைய முடியும்.
விஸ்வநாதன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், சென்னையில் பத்திரிகையாளர்களின் சந்திப்பில்...
*****
தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்பி காங்கிரஸ் கட்சியில் அடியெடுத்து வைத்தபோது தொண்டர் படை அணிவகுப்பு நடைபெற்றது. சீருடை அணிந்து கேப்டனாக நேதாஜி வெள்ளைக் குதிரையில் அணிவகுத்து வந்தார். மகளிர் தொண்டர் படையை அமைத்தார். எல்லோரும் பாராட்டினார்கள். அந்தப் படையில் தமிழர்கள் அதிகம் இடம் பெற்றனர். பிறகு நேதாஜி துவக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் மகளிர் இருந்தனர்.
உலக வரலாற்றில் ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்கள் முக்கியப் பங்காற்றி யுள்ளனர். நாட்டின் விடுதலையில் பெண் களின் பங்கு முக்கியமானது. எந்தவொரு இனமும் முன்னேற, விடுதலை பெற பெண்களின் பங்கு முக்கியமானது.
பெரியார், அண்ணா ஆகியோர் பெண் ணுரிமைக்கு முக்கியத்துவம் தந்தனர். பெண்களை மதித்தனர். தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு சொத்துரிமையில் பங்கு கிடைக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்ணுரிமை கிடைக்கப் பாடுபட்டது திராவிட இயக்கம். பெண்களை தெய்வமாக மதிக்கிற, போற்றுகிற நாடு நமது நாடு. பழமையான கலாசாரம் பண்பாடு நம்முடைய சொத்து. பண்பாட்டைச் சீரழிக்காமல் பாதுகாக்கும் இயக்கும் ம.தி.மு.க.
வைகோ, ம.தி.மு.க பொதுச்செயலர், சென்னையில் நடைபெற்ற மகளிருக்கான ஒரு விழாவில்...
*****
இலங்கைக்கு எதிரான தொடரில் இந்தியா மகத்தான வெற்றிகளைக் குவித்தது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. இப்போது உலகின் இரண்டாவது சிறந்த கிரிக்கெட் அணியாக நாங்கள் விளங்குகிறோம். அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது எமக்குத் தெரியும். அதற்கான திட்டங்களுடன்தான் இந்திய மண்ணில் கால் பதித்துள்ளோம். அதனாலேயே இது சவால் நிறைந்த தொடராகவும் இருக்கும்.
அண்மையில் நியூஸிலாந்தைத் தோற்கடித் தோம். இப்போது இந்திய அணியை எதிர்கொள்கிறோம். அடுத்ததாக எமது இலக்கு ஆஸ்திரேலியா. அனைத்திலும் வெற்றிசூடுவதே எமது இலட்சியம். இந்திய அணியில் பரபரப்பூட்டி வரும் மகேந்திர சிங் தோனி குறித்து நாங்கள் கவலைப்பட வில்லை. மீண்டும் அணிக்குத் திரும்பி ரன்களை விளாசிவரும் சச்சின் டெண்டுல்கர் குறித்தே நாங்கள் அச்சப்படுகிறோம்.
கேப்டன் ராகுல் திராவிட், பயிற்சியாளர் கிரேக் சாப்பல் தலைமையிலான இந்திய அணி உண்மையிலேயே நன்றாக வேலை செய்கிறது என்பதை மறுக்க முடியாது.
மிக்கி ஆர்தர், தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர், பத்திரிகையாளர் சந்திப்பில்...
***** |
|
உலகமயமாக்கல் என்பது நமது பொருள்களையும் சேவைகளையும் பிற நாடுகளுக்கு அளிக்க, கணக்கற்ற வாய்ப்புகளை அள்ளித் தந்திருக் கிறது. அதே சமயம் இதுவரை இருந்திராத சவால்களையும் தோற்றுவித்திருக்கிறது.
பொருளாதார ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் வலுவாக இருக்கும் மேலை நாடுகளுடன் உலகமயமாக்கலில் நம்மால் தனித்து போட்டியிட முடியாது. சார்க் என்ற அமைப்பின் மூலம் நாம் கூட்டாக முயற்சி செய்தால் நல்ல பலன்கள் ஏற்படும்.
நம்மிடையே உள்ள மனித ஆற்றல் வளங்களையும் இயற்கை வளங்களையும் இணைத்து, நமது படைப்பாற்றலைக் கொண்டு உலகமயமாக்கலின் பலன்களைப் பெற வேண்டும். உலக அரங்கில் நாம் அனைவரும் முன்னேற்றம் காண வேண்டும் என்றே இதுவரை கனவு கண்டு வந்திருக்கிறோம். வரலாறு இப்போது அதற்கொரு வாய்ப்பைத் தந்திருக்கிறது. நாம் ஒற்றுமை யாகச் செயல்பட்டு அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிரதமர் மன்மோகன்சிங், சார்க் உச்சி மாநாட்டையொட்டி வங்கதேசப் பிரதமர் காலிதா ஜியா அளித்த விருந்தில்...
*****
தனி நபரைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. மனிதர்கள் கருத்துக்களை பயம் இன்றி வெளிப்படுத்தும் அமைப்பாக இது விளங்கும். எல்லோருடைய எல்லாக் கருத்துக்களையும் வெளிப்படுத்தும் களமாக இது இருக்கும். மனிதர்கள் அடிப்படையில் தம் விருப்பு வெறுப்புகளில், கருத்துகளில் வித்தியாசப்பட்டவர்கள். அவர்களின் சிந்தனைகளை, நம்பிக்கைகளை, வாழ்க்கை முறையை ஒரே கொட்டடிக்குள் அடைக்க நினைப்பது மிகக் கொடிய வன்முறை.
'கருத்து' எந்தவித அரசியல் சார்புமற்ற ஓர் அமைப்பு. 'கருத்து' என்கிற இந்த அமைப்புக் குப் பிரத்யேகமாக எந்தக் கருத்தும் கிடையாது. இது எல்லா விதக் கருத்து களையும் வெளிப்படுத்துவதற்கான களம் மட்டுமே. ஆரோக்கியமான கருத்து வேறுபாடு களை இந்த அமைப்பு வரவேற்கிறது.
கனிமொழி, 'கருத்து' இயக்கத் தொடக்கவிழாவில்...
தொகுப்பு: கேடிஸ்ரீ |
|
|
|
|
|
|
|