Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சிறப்புப் பார்வை | அஞ்சலி | சமயம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | அமெரிக்க அனுபவம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
மங்களநாத சுவாமி ஆலயம், உத்தரகோசமங்கை
- சீதா துரைராஜ்|மார்ச் 2014|
Share:
மங்களநாத சுவாமி ஆலயம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் மங்களநாதர். அம்பாள் மங்களநாயகி. இலந்தை மரத்தின் அடியில் சுயம்புவாய் முளைத்த தூயமூர்த்தியுடன் விளங்கும் இக்கோயில் மிகப் பழமையானது. மண் முந்தியோ, மங்கை முந்தியோ என்ற சொல்மொழிக்குச் சான்று இவ்வாலயம். 'உத்தரம்' என்றால் உபதேசம். 'கோசம்' என்றால் இரகசியம். மங்கையாகியாகிய உமாதேவிக்கு வேத ரகசியங்களை ஈசன் போதித்த தலம் என்பதால் உத்தரகோசமங்கை. அவ்வாறு நந்திதேவர் வாயிலைக் காக்க, ஈசன் அம்மைக்கு உபதேசம் செய்யும்போது, விநாயகரும் முருகனும் நந்தியின் கட்டளையை மீறி உள்ளே சென்றதால் இவ்வாலயத்தில் இருவரும் இடம்மாறி அமர்ந்துள்ளனர். வியாசர், மயன், மண்டோதரி, மிருகண்டு முனிவர், மாணிக்கவாசகர், பாணாசுரன், பதஞ்சலி, வியாக்ரபாதர், அருணகிரிநாதர், காரைக்காலம்மை ஆகியோர் வந்து வழிபட்ட தலம். பிரம்ம தீர்த்தம், அக்னி தீர்த்தம், அரித்வ தீர்த்தம், சீதப்புனல், வியாச தீர்த்தம் என்று பல தீர்த்தங்கள் காணப்படுகின்றன. இத்தலத்தில் தாழம்பூவுக்குச் சாப விமோசனம் ஏற்பட்டதால் இங்கு சிவ பூஜையில் தாழம்பூ இடம்பெறுகிறது.

அம்பாள் நான்கு கைகளுடன் வலது கையில் ருத்ராட்சமாலையுடனும், இடது கையில் தாமரைப்பூவுடனும், மற்ற இரு கரங்களும் அபய ஹஸ்தமாகக் காட்சி அளிக்கிறார். அம்பாள் சிவபூஜை செய்ததன் அடையாளம் ருத்ராட்சமாலை மற்றும் தாமரைப் பூ என்பது ஐதீகம். ஆவுடையார் கோயிலில் குரு உபதேசம் பெற்ற மாணிக்கவாசகர், மறைந்துவிட்ட தம் குருவை மீண்டும் பல இடங்களில் தேடினார். இறுதியில் அவர் தம் குருவைக் கண்ட இடம் திரு உத்தரகோச மங்கை. தம் குருவான ஈசனைப் புகழ்ந்து அவர், "ஈசனுக்குச் சொந்த ஊரும் தங்கும் இடமும் பார்மேல் சிவபுரம் திரு உத்தரகோச மங்கையே" என்று பாடுகிறார். ஸ்ரீ சொக்கலிங்கப் பெருமான், அம்பிகையை பரதவர் மகளாகப் பிறக்கும்படிச் சபித்து, பின் சாபவிமோசனம் அளித்து, இத்தலத்திலேயே தங்கி வேதப்பொருளை உபதேசித்து அடியார்கள், யோகிகள் யாவருக்கும் ஞானோபதேசம் செய்து வீடு நல்கி, பின் அங்கயற்கண்ணி அம்மையுடன் மதுரைத் தலம் சேர்ந்ததாகச் சொல்கிறது தலபுராணம்.

உலகிலேயே வேறெங்கும் இல்லாத பச்சை மரகதக்கல்லினால் ஆன நடராஜர், தனிச்சன்னிதியாக அல்லாமல் தனிக்கோயிலில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், பிரகாரம், விமானங்கள் இவற்றுடன் எழுந்தருளியிருப்பது இத்தலத்தில்தான். எப்போதும் சந்தனக்காப்பில் இருக்கும் இவரை ஆண்டுக்கொருமுறை திருவாதிரை அன்று மட்டும் சுயமேனியில் தரிசிக்க முடியும். ரத்தினத்தினால் ஆன நடராஜர் உள்ள தலம் என்பதால் இது ரத்தின சபை. தில்லையில் அம்பலத்தில் ஆடிய இறைவன், அம்பாளுக்கு ரகசிய தாண்டவத்தை முதன்முதலில் இங்குதான் ஆடிக் காட்டினார் என்பதால் இது ஆதி சிதம்பரம். சீடர்களுடன் இணைந்து சிவ சகஸ்ரலிங்கமாகக் காட்சி அளிக்கும் தலமும் இதுதான். நடராஜர் சன்னிதியை அடுத்து சகஸ்ரலிங்கர் சன்னிதி அமைந்துள்ளது. இங்கு வியாசரும், புஜண்ட மகரிஷியும் தவம் செய்வதாக ஐதீகம். அருகில் தலவிருட்சம் இலந்தை அமைந்துள்ளது. நடராஜர் சன்னிதியின் பின்புறம் அம்பாள் சன்னிதி. திருவாதிரை அன்று இங்கு விசேஷபூஜை நடக்கிறது. அதன் பின்னரே நடராஜருக்குப் பூஜை நடக்கும். அம்பிகை திருவாதிரை விரதம் இருந்து சிவனருள் பெற்றாள்.
ஆலய முகப்பில் இரண்டு கோபுரங்கள். வலதுபுறம் கோபுரத்தின் முன்னும் நர்த்தன விநாயகர், சுப்ரமணியர், இடப்புறம் மொட்டைப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி. அருகிலிருக்கும் சின்னஞ்சிறிய தூணில் யானை உருவம், காசளவு வட்டத்தில் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. அந்த சிறிய தூணின் மேலே உள்ள சிறு துவாரத்தின் வழியாக நூல் விட்டு மறுபுறம் இழுக்கலாம். பிட்சாடணர், தக்ஷிணாமூர்த்தி உள்படப் பல சிற்பங்கள் அழகுற அமைந்துள்ளன.

மாணிக்கவாசகர் திருவாசகத்திலுள்ள திருப்பள்ளியெழுச்சியில்:

அது பழச்சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொணடு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள்ளாய்


என்று பாடி உள்ளார். சிதம்பரத்தில் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் கையெழுத்துப் போடும்போது அழகிய திருச்சிற்றம்பலமாகிய அறையிலாடிய சிற்றம்பலத்தில் இருந்து எழுந்தருளி, பொன்னம்பலமாகிய சிதம்பரத்திற்கு வந்து கையெழுத்திட்டிருப்பது சிறப்பு. இவ்வாலயத்தின் நான்கு சன்னிதிகளும் நான்குவித காரண, காரிய, புராண சிறப்புப் பெற்றிருப்பது விசேடம். வாழ்வில் ஒருமுறையேனும் சென்று தரிசிக்க வேண்டிய ஆலயம் உத்தரகோசமங்கை ஆலயம்.

சீதா துரைராஜ்
Share: 
© Copyright 2020 Tamilonline