Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சிறப்புப் பார்வை | அஞ்சலி | சமயம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | அமெரிக்க அனுபவம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மூத்தவனே அவனி காத்தவனா
- ஹரி கிருஷ்ணன்|மார்ச் 2014||(2 Comments)
Share:
மக்களாட்சி மலர்ந்துவி்ட்ட காலத்தில் வசி்க்கும் நமக்கு, மன்னராட்சிக் காலத்தில் நிலவிய முறைமைகள்-அதிலும் குறிப்பாக இந்தியத் திருநாட்டில் நிலவிய நிலமைகள்-மிகவும் மசங்கலாகவே தெரிவிக்கப்பட்டும் புரிந்துகொள்ளப்பட்டும் இருக்கின்றன. ராமாயண பாரத இதிகாசங்களையும் பாகவதம் முதலான புராணங்களையும் ஆழ்ந்து படிக்கும்போது ஒரு பேருண்மை புலப்படுகிறது. மக்களாட்சிக் காலத்தைக் காட்டிலும் மிக அதிகமாக மன்னராட்சிக் காலத்தில், மன்னர்கள், மக்களுடைய குரலுக்கு மதிப்பளித்திருக்கின்றனர்; மக்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்திருக்கின்றனர். சொல்லப் போனால், ஒரு நாட்டில், மன்னனுக்குரிய இடம் என்னவென்பது காலந்தோறும் மாறிக்கூட வந்திருக்கிறது. "நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" என்று புறநானூறு பாடியது. ஒரு நாட்டுக்கு நெல்லோ, நீரோ உயிரன்று. மன்னன்தான் நாட்டின் உயிர் என்றொரு கருதுகோள் சங்க காலத்தில் தமிழகத்தில் நிலவி வந்திருக்கிறது. அதாவது, நாடு உடல் என்றால், மன்னன் அந்த உடலுக்கமைந்த உயிர் என்று பொருள்படும். கம்பன் இதைத் தலைகுப்புறக் கவிழ்த்துப் போட்டான். பாலகாண்டத்தில், தசரதன் அரசாண்ட முறையை வருணிக்கும்போது,

வயிரவான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்,
உயிரெலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,
செயிரிலா உலகினில், சென்று, நின்று, வாழ்
உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்.


என்று தசரதன் அரசாண்ட தன்மையைச் சொல்கிறான். 'வச்சிரத்தால் இயன்ற சிறந்த ஆபரணங்களை அணிந்தவனும், சிங்கம் போன்ற வலிமை கொண்டவனுமான தசரதன், குற்றமற்ற இவ்வுலகிலே பொருந்தியுள்ள அத்தனை உயிர்களும் ஒன்றாகத் தங்கி நிலைபெறுவதற்குரிய உடலாக நின்று மக்களைக் காத்தான்'என்று கம்பன் பேசும்போது, 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்'என்ற கருத்தாக்கம் முற்றிலுமாக அடிபட்டுப்போய், மக்கள்தான் உயிர். மன்னன், மக்களாகிய உயிர் தங்குவதற்கான உடல்தான் என்ற புதுக்கருத்து உயிர் பெறுகிறது. இதில் இன்னொரு கருத்தும் பொதிந்திருக்கிறது. நிலைபெற்று நிற்பது மக்கள்தாம். மன்னர்கள் காலந்தோறும் மாறக் கூடியவர்கள். உயிரானது ஓர் உடலை நீத்து இன்னோர் உடலாகப் பலவேறு உடல்களை, பற்பல பிறவிகளில் அடையக்கூடியது. எனவே, மன்னன், மன்னனுக்கு அடுத்த மன்னன், அவனுக்கு அடுத்த மன்னன் என்று மாறிமாறி வரக்கூடிய மன்னர்கள் உடல்களே; மக்களே உயிர் என்று மக்களாட்சித் தத்துவத்தின் வித்தை ஆழ ஊன்றினான் கம்பன்.

ஆனால், கம்பனுடைய பாடல்களில், அயோத்தியா காண்டத்தில்

வெயில்முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர்,
உயிர்முதல் பொருள் திறம்பினும், உரை திறம்பாதோர்;
மயில்முறைக் குலத்து உரிமையை, மனுமுதல் மரபை;
செயிருறப் புலைச் சிந்தையால், என் சொனாய்? தீயோய்!


என்று மந்தரையைப் பார்த்து கைகேயி பேசுவதாக வரும் பாடலின் நுண்பொருளை மிகப்பல அறிஞர்கள் ஆழ ஊன்றிப் பாராதது துரதிர்ஷ்டமே. இந்தப் பாடலின் மேம்போக்கான பொருளை நோக்கும்போது-அதாவது, தற்காலத்தில் அறிஞர் பெருமக்கள் உரைத்துவரும் உரைகளின் அடிப்படையில் பார்க்கும் போது-ஒரு மன்னனுடைய மூத்த மகனுக்கே அரசுரிமை என்பது ஒருவித தானியங்கு உரிமை-automatic right-என்ற அபிப்பிராயமே இப்போது நம்மிடையே நிலவிவருகிறது. கம்பராமாயணத்தில் வரும் இந்தப் பாடலுக்கு உரிய இடம் பொருள் ஏவலுடனான ஆழ்பொருளை நாம் கவனிக்கத் தவறுகிறோம். அது மட்டுமேயல்லாமல், இக்ஷ்வாகு வம்சத்திலும் சரி, குரு வம்சத்திலும் சரி, மூத்த பிள்ளைகள் மோசமான பிள்ளைகளாக இருந்தார்களேயானால் அவர்களை நாட்டைவிட்டுக் காட்டுக்குத் துரத்திவிடுவதும் நிகழ்ந்திருக்கிறது. அப்படிக் காட்டுக்கு அனுப்பப்பட்ட பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு அரசுரிமை கிடைத்ததா என்றால், இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த அசமஞ்சன் என்ற அயோக்கிய சிகாமணியின் மகனுக்கு மட்டுமே அரசு கிடைத்திருக்கிறது; மற்றவர்கள் விஷயத்தில் அவ்வாறு நடைபெறவில்லை என்பது நோக்கத் தக்கது. அது மட்டுமேயல்லாமல், ஐந்தாவது மகனும், மூன்றாவது மகனும் அரசனாகப் பொறுப்பேற்றதும் நடைபெற்றிருக்கிறது. யயாதியின் ஐந்தாவது மகனான பூருதான் அரசேற்றான். அவன் வம்சம்தான் பௌரவ வம்சமாகி, பின்னாளில் அந்த வம்சத்திலுதித்த குருவின் பெயரால் கௌரவ வம்சமானது. பீஷ்மரின் தந்தையான சந்தனு மகராஜா, அவருடைய தந்தையான பிரதீபனுக்கு மூன்றாவது மகன். சந்தனுவுக்கு தேவாபி, வாலிகன் என்று இரண்டு அண்ணன்கள் இருந்தனர்.
பாண்டு நாட்டை யாரிடம் ஒப்படைத்தான் என்ற விவரம் ஆதிபர்வத்தில், ஒப்படைக்கும் சமயத்தில் இல்லை. பின்னால் உத்தியோக பர்வத்தி்ல் இந்த உண்மைகளையெல்லாம் துரியோதனனிடத்தில் திருதிராஷ்டிரனும், துரோணரும் சொல்கிறார்கள். இதுவரையில் நான் படித்த எந்தப் பதிப்பிலும் ஆய்விலும் இல்லாத செய்தி இது. 'பட்டம் சூட்டப்பட்டவன் பாண்டுவே. ஆகவே, அவனுடைய மக்களே இயற்கையான வாரிசுகள். அரசில் எனக்கே உரிமை இல்லை என்னும்போது, உனக்கு எங்கிருந்து உரிமை வந்தது' என்று திருதிராஷ்டிரன் கேட்கிறான். அதைத் தொடர்ந்து துரோணர் ராஜ்யத்தைப் பாண்டு எப்படி, யார்யாரிடம் ஒப்படைத்தான், எப்படி விதுரர் நிதிக்குப் பொறுப்பேற்றார், எப்படி பீஷ்மர் ராணுவத்துக்குத் தலைமையேற்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானர் என்பதையெல்லாம் சொல்கிறார்.

குடியாட்சியில் மக்களுக்கு அஞ்சுவதைக் காட்டிலும் முடியாட்சியில், அதாவது இந்திய, இதிகாச முடியாட்சியில் மக்கள் கருத்துக்குப் பெரிதும் அஞ்சியிருக்கிறார்கள். இதற்கு நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகளைத் தரமுடியும். ஒவ்வொரு கட்டத்திலும் திருதிராஷ்டிரனும், துரியோதனனுமே 'மக்கள் என்ன நினைப்பார்கள், என்ன சொல்வார்கள்' என்று தயங்கியிருக்கிறார்கள். பிரமாணகோடியில் பீமனுக்கு நஞ்சு வைத்ததும், அரக்கு மாளிகையும், மக்களுக்குத் தெரியாமல் மூடி மறைக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? அரசனை யார் கேள்விகேட்க முடியும்?

ஆகவே, மூத்த பிள்ளை அரசேற்பது என்பது ஒரு ஆடோமேடிக் ரைட் இல்லை என்பது தெளிவாகிறது. அரசுரிமையை வழங்குவதற்கும் பெறுவதற்கும் நான்கு நடைமுறைகள் இருந்திருப்பதை, பாரத, ராமாயணங்களிலும் மற்ற புராணங்களிலும் சொல்லப்படும் அரசேற்கை நிகழ்வுகளை ஊன்றி ஆயும்போது புலனாகிறது. இந்த நான்கு நடைமுறைகள் யாவை என்றால்,

1) தற்போது அரசனாக இருப்பவன் யாருக்குத் தன் அரசை வழங்க நினைக்கிறானோ அவன் உடலாலும், மனத்தாலும், நடத்தையாலும் தகுதி பெற்றவனாக இருக்க வேண்டும். மூத்த மகன் என்பதற்காக மன வளர்ச்சி குன்றியவனுக்கு அரசைக் கொடுத்துவிட முடியாது; முரடனுக்குக் கொடுத்துவிட முடியாது; உடற்குறை உள்ளவனுக்கும் கொடுக்க முடியாது. (இந்தக் கடைசி அம்சத்தைப் பற்றி, பிற்பாடு இன்னும் சற்று விரிவாகப் பேசுவோம்.)

2) அரசன், அரசை இன்னாருக்குக் கொடுப்பது என்று யாரைத் தீர்மானிக்கிறானோ, அவனுக்கு அரசை வழங்கத் தயாராக இருக்க வேண்டும். தயாராக இருப்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

3) அவ்வாறு அரசன் கொடுக்கும் அரசைப் பெற்றுக் கொள்கிறேன் என்று, அரசன் தீர்மானித்த அந்த மகன் ஏற்றுக் கொள்கிறேன் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அரசை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று மறுத்த மகன்கள் உண்டா என்றால், விதுரன்முதல் பரதன்வரை பலரைக் காட்ட முடியும். இவற்றைப் பிறகு விரிப்போம்.

4) இறுதியானதும் முக்கியமானதும் எதுவென்றால், உடல், மன, நடத்தைத் தகுதியுள்ள, அரசன் தன் அரசை வழங்கத் தீர்மானித்த, அரசை ஏற்றுக் கொள்கிறேன் என்று சம்மதித்த அந்த வருங்கால அரசனை, மக்கள், தங்களுடைய அரசனாக ஏற்றுக்கொள்ள சம்மதிக்க வேண்டும்.

இந்த நான்கு காரியங்களும் இராமனுக்கு முடிசூட்ட தசரதன் நினைத்தபோது நடந்ததைப் பார்க்கலாம். ராமன் எல்லா வகையிலும் பொருத்தமானவனாக இருந்தான்-மூத்தவனாகவும் இருந்தான் என்பது கூடுதல் தகுதி; முதல் தகுதியன்று. தசரதன் ராமனுக்கு அரசை வழங்க நினைத்தான்; ராமனை அரசேற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். சொல்லப் போனால், கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். ராமன் அரசேற்கச் சம்மதித்தான். தசரதன் மக்கள் அவையைக் கூட்டி அவர்களிடம் ஒருமுறைக்கு இருமுறையாக சம்மதம் கேட்டு, 'இதை எனக்காகச் சொல்கிறீர்களா அல்லது உங்களுக்கு ராமன் அரசேற்பதில் உள்ளபடியே சம்மதமிருக்கிறதா' என்று கேட்டு உறுதி செய்துகொண்ட பிறகே ராமனுக்கு முடிசூட்டும் தீர்மானம் எடுக்கப்படுகிறது.

இப்போது, மஹாபாரதத்தில் உள்ள மூத்த பிள்ளைச் சிக்கலுக்கு மீள்வோம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline