Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | பயணம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புதுமைத்தொடர் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
இலக்கியம்
கார்த்திகை விழாவிற்கு வருவார்!
- பெரியண்ணன் சந்திரசேகரன்|டிசம்பர் 2005|
Share:
Click Here Enlargeதமிழரின் மிகமிகப் பழைய பண்டிகையான கார்த்திகை விழாவைக் குறித்து அந்த விழாக் கொண்டாட்டத்தைக் குறிப்பிடும் ஒரு சங்க இலக்கியப் பாடலை இங்கே காண்கிறோம்.

தலைவன் ஒருவன் பெரும்பொருள் ஈட்டும் பொருட்டு மலையும் காடும் கடந்து சென்றிருப்பதால் நெடுநாள் அவனைப் பிரிந்திருக்கும் தலைவியிடம் அவள் தோழி ஆறுதல் சொல்ல வந்தாள்.

இனிய கனவுகளும் நல்ல சகுனங்களும்

ஆனால் தலைவியோ பின்வருமாறு கூறினாள்:

"அம்ம வாழி தோழி! கைம்மிகக்
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும்
புனைவினை நல்இல் புள்ளும் பாங்கின!
நெஞ்சும் நனிபுகன்று உறையும்!"
(அகநானூறு: 141:1-4)

[கைம் மிக = அளவுக்கு மிகுந்து; கங்குல் = இரவு; புனை = சித்திரம்; இல் = இல்லம்; புள் = அறிகுறி, சகுனம்; பாங்கு = இடம்; புகன்று = விரும்பி]

"வாழி நீ தோழி! கேள் நான் சொல்வதை. இரவுதோறும் கனவுகள் இனியவாக உள்ளன. நனவிலும் நம் சித்திரவினை அலங்காரமுள்ள அழகிய இல்லத்திலே அறிகுறிச் சகுனங்கள் மங்கலமான இடத்தில் தோன்றுகின்றன. என் நெஞ்சமும் வருத்தமின்றி மிக விரும்பி அமைகின்றது!"

இடையாற்றில் புதுமணப் பெண்ணின் சமையல் அவ்வாறு தலைவி கூறக் கேட்ட தோழி வியப்படைந்தாள். வழக்கமாகத் தலைவன் பிரிவால் வருந்தியிருக்கும் தலைவி ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று நினைத்தாள். தலைவி மேலும் சொல்லினாள்:

"தலைவர், சோழன் கரிகால் வளவனின் இடையாறு என்னும் ஊரில் நிரம்பிய செல்வம்போலும் நிதி சேர்க்க விரும்பினார்" என்று சொல்லி அந்த இடையாற்றின் மங்கலக் காட்சியை வருணித்தாள்:

"துவரப் புலர்ந்து தூமலர் கஞலித்
தகரம் நாறும் தண்நறுங் கதுப்பின்
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ"
(அகநானூறு: 141:12-15)

[கஞலி = நெருங்கி; தகரம் = வாசப்பொருள்; அயினி = உணவு; கடி = காவல்; நகர் = வீடு; இரீஇ = இருத்தி]

நிறைகருப்ப நாரை

"அங்கே புதுமணம் புரிந்த பெண் தலைகுளித்து அதை முற்றிலும் உலரவைத்து அழகிய மலரைச் செருகித் தகரம் மணக்கும் தன்னுடைய குளிர்ந்த கூந்தலை உடையவளாக உணவு நிரம்பிய தன் பாதுகாப்பான வீட்டில் சமையற் கலயத்தைத் தாங்கும் பல மேடுகள் கொண்ட அடுப்பில் பாலை உலையில் இருத்திச் சமைப்பாள்..."

அப்பொழுது

"கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிதுஇடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு..."
(அகநானூறு: 141:16-19)

[கூழை = கொத்து, நெருக்கமான; தொடி = கைவளை; செய் = வயல்; வாங்கு = வளைந்த; காழ் = உறுதி; வெரீஇய = வெருண்ட; கமஞ்சூல் = நிறைகரு; குருகு = நாரை]

"நெருங்கிய கூந்தலை உடைய சிறுவளை அணிந்த பெண்கள் பெரிய வயலில் விளையும் நெல்லின் வளைந்த கதிரை முறித்துப் பச்சை அவலை இடிக்கும் பெரிய உறுதியான உலக்கையின் கடுமையான இடியோசைக்கு நிறைகருப்பமான வெண்நாரை வெருளும்..."

அந்த நாரை வெருண்டு...

"தீங்குலை வாழை ஓங்குமடல் இராது,
நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும்..."
(அகநானூறு:141:20-21)

[மா = மாமரம்; பறை = பறப்பு, பறத்தல்; பயிற்றும் = பயிலும்]

"இனிய குலை வாழையின் பெரிய மடலிலே இராமல், நெடிய கிளையை உடைய மா மரத்திலே போகச் சிறு பறத்தலைப் பயிலும்". நிறைகருப்பமானதாலே பக்கத்திலே உறுதியான பிடிப்பில்லாத வாழைமடலிலே தங்காமல் கொஞ்சம் பறந்துபோய் மாமரக் கிளையிலே அமர முயலும் நுணுக்கத்தைக் காணவேண்டும் இங்கே. மேலும் தாய் நாரையின் நிலைக்குக் கூட நெகிழும் உள்ளத்தையும் காணவேண்டும் நாம்.

அத்தனை மங்கலமும் நிகழ்ந்தது இடையாற்றில்.

சுருங்கிய குடியை நிலை நிறுத்திய கரிகாலன்

"செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல்லிசை வெறுக்கை தருமார் ...
தேங்கமழ் நெடுவரைப் பிறங்கிய
வேங்கட வைப்பின் சுரன் இறந்தோர்"
(அகநானூறு: 141: 22-24, 28-29)
[இசை = புகழ்; வெறுக்கை = செல்வம்; தருமார் = தர, கொணர; வரை = சிகரம்; பிறங்கிய = உயர்ந்த; வைப்பு = இடம்; சுரன் = வழி; இறந்தோர் = சென்றோர்]

"நிலை சுருங்கிப்போன குடியை மீண்டும் நிலை நிறுத்திய பெரும்புகழ் உடைய கரிகாலன் என்னும் வெற்றிப்போர் நிகழ்த்தும் சோழனின் இடையாற்றில் உள்ளதுபோன்ற செல்வத்தைக் கொணரத் தேன் கமழும் நெடிய சிகரங்களோடு உயர்ந்த வேங்கட நாட்டின் வழியில் சென்றோர்"...

இங்கே சுருங்கிய குடியை நிலைநிறுத்தியது கரிகாலன் சிறுபிள்ளையாக இருக்கும் பொழுது அவன் குடும்பத்து எதிரிகள் அவனைச் சிறையடைத்து ஆட்சியைக் கைப்பற்றியதும் பிறகு அவனே சூழ்ச்சியுடனும் துணிவுடனும் சிறையிலிருந்து சிங்கக்குருளை தப்பியதுபோல் தப்பி ஆட்சியை மீட்டுத் தன்குடியை நிலைநிறுத்தியதைக் குறிக்கிறாள். அந்த நிகழ்ச்சியைச் சங்க காலத்துப் பாடலான பட்டினப்பாலை விளக்கமாகக் கூறுகிறது.

நல்லிசை வெறுக்கை என்பதால் குறைகுற்றம் இல்லாத வகையில் ஈட்டிய செல்வம் என்று தெரிகிறது.

"அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்"
(திருக்குறள்: பொருள்செயல்வகை: 5)
[புல் = சேர்]

அன்பொடும் அருளோடும் வாராத பொருளாக்கத்தைச் சேராதவராகச் செல்லவிடுங்கள் என்று வள்ளுவன் ஓதுகிறான்.

கார்த்திகை விழாவிற்கு வருவார்

கார்த்திகை விழாவிற்கு வருவார் அவர் என்று சொல்லி அந்தக் கார்த்திகை விழாக் கொண்டாட்டத்தையும் விவரிக்கிறாள் தலைவி:
"எஞ்சாது
உலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்"
(அகநானூறு: 141: 4-8)

[உலந்து = ஓய்ந்து; நாஞ்சில் = ஏர் கலப்பை; மாகவிசும்பு = உயர்வானம்; கிளர = ஒளிற; அறுமீன் = கார்த்திகை நட்சத்திரம்]

"மீதியின்றி உலகோர் தம் உழவுத்தொழில் ஓய்ந்து ஏர் கலப்பைகள் கிடந்து மழைபெய்தல் நீங்கிய பருவத்தில் உயர்ந்த வானத்தே நிலாவிலே சிறுமுயல்போலும் மறு ஒளிற முழுமதியம் நிறைந்து ஆறுநட்சத்திரங்களின் கூட்டமான கார்த்திகை நட்சத்திரம் கூடிய பெரிய இருண்ட நடு இரவில்..." என்று கார்த்திகை விழா நடக்கும் பொழுதைக் குறிக்கிறாள் தலைவி.

இன்றும் கார்த்திகை மீனும் முழுமதியமும் சேர்ந்த பொழுதிலேதான் நாம் கார்த்திகை விழாக் கொண்டாடுகிறோம்.

வீதிமுழுதும் விளக்கு வைப்பு:

"மறுகு விளக்கு உறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர வருகதில் அம்ம!"
(அகநானூறு: 141: 9-11)

[மறுகு = வீதி; உறு = வை; தூக்கு = தொங்கவிடு; விறல் = வலிமை; துவன்றிய = நெருங்கிய; அயர = கொண்டாட]

"வீதிமுழுதும் விளக்கு வைத்து பூமாலைகள் தொங்கவிட்டுப் பழைய வலிமை மிகுந்த தொன்மையான குடிகள் வாழும் நம்மூரில் பலருடன் கூடி விழாவை ஒருங்கே கொண்டாட வருவார், தோழி!" என்று தலைவி தன் இனிய கனவும் இனிய நிமித்தங்கள் நிறைந்த நனவும் தோற்றுவித்த மங்கல நிகழ்ச்சியைச் சொல்லினாள்.

தோழிக்கு ஆறுதல் சொல்லும் வேலை இனி எங்கே!

பெரியண்ணன் சந்திரசேகரன்
அட்லாண்டா
Share: 




© Copyright 2020 Tamilonline