Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | பயணம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புதுமைத்தொடர் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
நேர்காணல்
கிரிக்கெட் வீரர் வெங்கடராகவன்
ப்ருஹத்வனி - இசைவழியே கிராமக் குழந்தைகளுக்குக் கல்வி
- கேடிஸ்ரீ|டிசம்பர் 2005|
Share:
Click Here Enlargeபேராசிரியா கே.எஸ். சுப்ரமணியன்

1989-ம் ஆண்டு பேரா. கே.எஸ். சுப்ரமணியன் மற்றும் டாக்டர் எஸ். சீதா இருவரின் முயற்சியில் உருவானது 'ப்ருஹத்வனி'. வேதியியல் பட்டதாரியான பேரா. சுப்பிரமணியன் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். Asian Cultural Council Fellowship பெற்று நியூயார்க் சென்ற இவர் அமெரிக்காவின் ஆம்ஹெர்ஸ்ட் (Amherst) கல்லூரி, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம் மற்றும் சென்னைப் பல்கலையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இசை கற்க மொழி, மதம், ஜாதி என்ற பிரிவினை கிடையாது. இசை ஓர் உணர்வு; அந்த உணர்வை யார் வேண்டுமானாலும் பெறலாம் என்கிறது 'ப்ருஹத்வனி'. சமீபத்தில் திருவண்ணாமலையின் அருகே உள்ள வில்வரணி கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு இசைவழியே கல்வியையும் எடுத்துச் சென்றிருக்கிறது ப்ருஹத்வனி.

பேரா. கே.எஸ். சுப்ரமணியனைத் தென்றல் வாசகர்களுக்காகச் சந்தித்து உரையாடியபோது...

கேள்வி: ஆங்கிலப் பேராசிரியரான உங்களுக்கு சங்கீதத்தின் மேல் எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது?

பதில்: பாரம்பரியமிக்க இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். பிரபல காரைக்குடி வீணை சாம்பசிவ ஐயர் என்னுடைய தாத்தா. அந்த நாளில் என் தாத்தா சாம்பசிவத்தின் வீணை வாசிப்புக்கு புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை மிருதங்கம் வாசிக்க, முத்தையா பாகவதர் பாட்டுப் பாடுவார்.

எனது 13-வது வயதில் நான் குடும்பத்தாரை விட்டுத் தாத்தா சாம்பசிவ ஐயரிடம் வீணை கற்றுக்கொள்ள வந்தேன். தாத்தாவே எங்கள் குடும்பத்தில் வீணை வாசிப்பதில் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அப்போதெல்லாம் ஒருநாளைக்குச் சுமார் எட்டு முதல் பத்து மணி நேரம் வரை தினமும் வீணை வாசிப்பேன்.

கேள்வி: 'ப்ருஹத்வனி' எப்போது ஆரம்பிக்கப் பட்டது? நோக்கம் என்ன?

பதில்: அடிப்படை இல்லாமல் எதுவும் இல்லை. அப்படிதான் சங்கீதமும். இசையின் அடிப்படைபற்றிய அறிவைப் பரந்த அளவில் கொண்டுவர வேண்டும் என்று நினைத் தேன். சரளிவரிசைக்கும், ஜண்டை வரிசைக்கும் வலுவான அடிப்படை இருக் கிறது. எல்லா இசையும் ஒன்றுதான். அந்த அடிப்படையைக் கற்பிக்கவே 'ப்ருஹத்வனி' என்ற இசைப்பள்ளியைத் துவக்கியது.

டாக்டர் எஸ். சீதாவும், நானும் இணைந்து ப்ருஹத்வனியை 1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி ஆரம்பித்தோம். இதன் முக்கியக் குறிக்கோள் கர்நாடக இசையை உலக அளவில் கொண்டு செல்லவேண்டும் என்பதே. இசை ஒரு நுண்கலை மட்டுமல்ல, மனிதனின் உள் உணர்வுகளை, அவன் ஆன்மாவை உயர்நிலைக்குக் கொண்டு வருவதற்கான ஒரு கருவி ஆகும்.

வேகம், போட்டி, மோதல்கள், பிளவுகள், வன்முறை மற்றும் சுயநலம் சூழ்ந்த இன்றைய யுகத்தில் இறைச் சிந்தனையில் லயிப்பதற்கு மனிதனுக்கு நேரமிருப்பதில்லை. ''ஆன்மீகப் பக்குவமும் ஞானமும் இல்லாத நிலையில் மிகவும் தேவைப்படுகிற சுயத்தை நமக்குள் கண்டுபிடிப்பதற்கு இசையைத் தவிர வேறு எந்த வழிமுறைகளும் இல்லை'' என்பது சுவாமி தயானாந்த சரஸ்வதியின் கூற்று. இசை விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தை யும் இணைக்கிறது. இசையில் மோதலுக்கு வாய்ப்பே இல்லை. தனக்குத் தானேயும், அனைத்துடனும், ஈஸ்வரனுடனும் தொடர்பு கொள்வதற்கு இசை இன்றியமையாதது. இசை என்னும் மகத்துவத்தின் பலன்களை அனுபவிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. எந்த வாய்ப்பும் இல்லாத கிராமக் குழந்தைகளுக்குக்கூட இசையின் பலன்கள் எட்டவேண்டும்.

கேள்வி: ப்ருஹத்வனி அன்றைய குருகுலமுறை யையும், நவீனகால முறையையும் இணைக்கும் ஒரு பாலமாகச் செயல்படுகிறது என்று சொல்லலாமா?

பதில்: கண்டிப்பாகச் சொல்லலாம். ஏனென்றால் குருகுலமுறையில் குருவிற்கும், சிஷ்யனுக்கும் நேரடிய ¡ன தொடர்பு இருந்தது. அவர் களுக்குள் ஒருவிதமான ஆத்ம ஈடுபாடு இருந்தது. குருகுல முறையில் ஒவ்வொரு மாணவனின் வளர்ச்சியையும், முன்னேற்றத் தையும் குரு நேரடியாகக் காணமுடிகிறது. நவீனமுறையில் தனிப்பட்ட முன்னேற்றத் திலும், கவனத்தைச் செலுத்த முடிகிறது.

இவ்விரண்டு முறையிலும் உள்ள நல்ல விஷயங்க¨ளை இணைத்து காமெட் (COMET - Correlated Objective Music Education and Training) என்ற ஓர் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இசையைப் பற்றிய ஆய்வு, பதிவு செய்யும் முறை, சுயமாகக் கற்றுக்கொள்கிற வாய்ப்பு, விளக்கங்கள் என்று பலவற்றைச் சொல்லிக் கொடுக்கிறது ப்ருஹத்வனி.

கேள்வி: 'காமெட்' அமைப்பு எந்த வகையில் செயல்படுகிறது?

பதில்: இது இசைபற்றிய நுணுக்கங்களை எட்டும் திறவுகோல் என்றே சொல்லலாம். இசைக்கான 14 படிநிலைகளைச் சொல்கிறது. காமெட் மூலம் இசையில் மாணவர்கள் பரிமளிக்க முடிகிறது. இசையில் நல்ல சமநிலை, தரம் ஏற்பட வழிவகுக்கிறது. குரல் வளம் பெருகுவது மட்டுமல்லாது, கேட்டவுடனேயே சங்கீதத் தைக் குறியீடுகளாக எழுதும் ஆற்றலை அளிக்கிறது.

இசை உடலில் உள்ள நோய்களைத் தீர்ப்பது மட்டுமல்லாமல் நினைவாற்றலை வளர்க்கிறது. பள்ளிப்பாடங்களைப் பயில் வதை எளிமையாகவும் விஞ்ஞானபூர்வ மாகவும் ஆக்கியுள்ளது காமெட். அது மட்டுமல்லாமல் இன்னும் பல நடவடிக்கை களிலும் இசையின் பங்களிப்பு விரிவடைந்து இறுதியாக இறைவனை உணர வைக்கிறது. இப்போது இதற்கான அடித்தளப் பணியை மேற்கொள்வதில் ப்ருஹத்வனி ஈடுபட்டுள்ளது.

குழந்தைகளுக்குப் பாரம்பரிய இசையைச் சொல்லிக் கொடுப்பதால் அவர்களின் நினைவாற்றல், மொழிகளை அறிந்து கொள்ளும் ஆற்றல், சிந்திக்கும் திறன் வளர்ச்சி அடைவதுமட்டுமல்ல அவர்களால் எதையும் சட்டெனப் பிடித்துக்கொள்ள முடிகிறது.

கேள்வி: காமெட்டின் இளநிலை பட்டப்படிப்பு இசைக்கல்லூரியின் இளநிலை பட்டப்படிப்பு போன்றதா?

பதில்: ஆம். காமெட்டின் இளநிலை பட்டப் படிப்பு இசைக்கல்லூரியின் இளநிலை படிப்புக்கு இணையானது என்று சொல்ல லாம். தாளம், லயம் ஆகிவற்றில் சுத்தமான பயிற்சி அளிக்கப்படுகிறது. இவற்றின் உயர்நிலைகள் பயிற்றுவிக்கப்படுவது மட்டுமல்லாமல் இசைக்குறியீடு (notation) மற்றும் கட்டமைப்பு (கம்போசிஷன்) ஆகியவையும் பயிற்றுவிக்கப்படுகின்றன. சுமார் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் இசை நிகழ்ச்சி வழங்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இங்கு மாணவர் ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஆசிரியரின் நேரடிக் கண்காணிப்பில், ஆரோக்கியமான சூழலில் இசை பயில் கிறார்கள் என்பது முக்கியமான விஷயம். மொத்தம் 6 செமஸ்டர். ஒவ்வொரு அரையாண்டு முடிவிலும் பல முன்னணிக் கலைஞர்கள் முன்னிலையில் மாணவர்கள் இசை நிகழ்ச்சி நடத்துவர். அவர்களிடம் பயிற்சியும் எடுத்துக்கொள்கிறார்கள்.

இரண்டு வருடத்திற்கான முதுநிலை பட்டப்படிப்பும் உண்டு. இதன் முடிவில் மாணவர்கள் இசைநுணுக்கம் மற்றும் நிகழ்ச்சி வழங்குவதில் மட்டுமல்லாமல் ஆய்வுகள் செய்யவும், வகுப்புகள் நடத்தவும், பாடல்கள் எழுதவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தவிர, அவரவருக்கு விருப்பப்பமான இசைக்கருவியில் தனித்துவமாக விளங்குவதற்கான பயிற்சிகளையும், தகுந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கிறோம்.

கேள்வி: ப்ருஹத்வனியின் வேறு பணிகள் என்னென்ன?

பதில்: ஒவ்வொரு வருடமும் பல பெரிய வித்வான்கள் வீணையைப் பக்கவாத்தியமாகக் கொண்டு கச்சேரி செய்கிற நிகழ்ச்சிகளை ப்ருஹத்வனி நடத்தி வருகிறது. வீணைபற்றிய கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கிறது. வீணையைத் தயாரிக்கும் குடும்பங்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவது போன்ற பலவிஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.

ப்ருஹத்வனியில் மாணவர்களுக்காக நவீன வசதிகொண்ட ஒலிப்பதிவு சாதனங்களும், இசையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதற்கான வசதிகளும் உள்ளன என்பது சிறப்பம்சம். மிகப்பெரிய இசை நூலகம் ஒன்றும் உள்ளது. இதில் அரிய பல இசைநாடாக்கள் தரமான டிஜிட்டல் வடிவில் உள்ளன.

கேள்வி: வெளிநாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரி செய்த அனுபவங்கள் பற்றியும், நீங்கள் பெற்ற விருதுகள் பற்றியும்...

பதில்: நான் அகில இந்திய வானொலியில் 'ஏ' கிரேட் கலைஞராகப் பணிபுரிந்த காலத்தில் வடஅமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கச்சேரிகள் செய்திருக்கிறேன். நான் தயாரித்த Music for Vina (1975) Preis Der Deutschenschallpalatten கிரிட்டிக் விருதைப் பெற்றது முக்கியமானதாகும். இந்த ஆல்பத்தை என் சகோதரி ராஜேஸ்வரி தயாரித்தார். 1991-ம் ஆண்டு சென்னை மியூசிக் அகாதெமியில் நான் தயாரித்த கிராமிய மற்றும் கர்நாடக சங்கீதத்திற்குச் சூரியகாந்தா விருது வழங்கி கெளரவித்தார்கள். என்னுடைய மற்றொரு ஆல்பமான 'சுனந்தா' (Sunanda) 1993-ல் விருது பெற்றது. நான் இசைபற்றிய புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். எனது ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல நாளிதழ்களிலும், உலக அளவில் பல புத்தகங்களிலும் வெளிவந்துள்ளன.

கேள்வி: நம் பாரம்பரிய இசையைக் கற்க 'ப்ஹத்வனி'க்கு வரும் வெளிநாட்டவர்களின் இசை ஆர்வம் பற்றி...

பதில்: பல வெளிநாட்டினர் ப்ருஹத்வனியில் இசை கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் வருவது பிரமிக்க வைக்கிறது. அவர்களின் ஈடுபாடும் நம் இசையின் மேல் வைத்திருக்கும் மதிப்பும் எங்களை ஆச்சர்யப்படுத்துகிறது.

டிரம்ஸ், சாக்ஸ·போன் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கவும், வாய்ப்பாட்டு கற்றுக் கொள்ளவும் ப்ருஹத்வனியை நாடும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை பெருகி வருவதிலிருந்து இசை மொழி, மதம், சாதி என்ற எல்லைகளைக் கடந்தது என்று சொல்ல வைக்கிறது.

கேள்வி: 'ப்ருஹத்வனி' தன்னுடைய வளர்ச்சிக்கான ஆதாரங்களை எவ்வாறு திரட்டுகிறது?

பதில்: ப்ருஹத்வனி இசையை இலவசமாகப் பயிற்றுவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அதன் வளர்ச்சிப் பணிகளுக்காகப் பல்வேறு இசை நிகழ்ச்சிகளைக் கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகிறது. 2004 ஜனவரி மாதம் சென்னை வாணிமஹாலில் இரண்டு நாட்களுக்கு ஓர் இசை நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள், பக்கவாத்தியக் கலைஞர்கள் கலந்து கொண்னர். முதல் நாள் 'Within Boundaries' என்கிற தலைப்பில் பாரம்பரியப் பாடல்களை வழங்கினோம்.

மறுநாள் 'இமேஜ்' அரங்கத்தில் 'Beyond Boundaries' என்ற தலைப்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கிராமியப் பாடல்கள், சாஸ்திரியப் பாடல்கள், ஜாஸ் என்று பலவிதமான பாடல்கள் இடம்பெற்றன. அதுமட்டுமல்லாமல் ப்ருஹத்வனியில் அப்போது பயின்றுகொண்டிருந்த வெளிநாட்டு இசைக்கலைஞர்கள், லால்குடி GJR. கிருஷ்ணன், கிராமிய இசைக்கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் இணைந்து வழங்கியது பெரிய வரவேற்பைப் பெற்றது.
Click Here Enlargeகேள்வி: ப்ருஹத்வனியின் 'இசைவழிக் கல்விப் பாடசாலை' என்கிற புதிய திட்டத்திற்கான அடிப்படைக் காரணம் என்ன? இந்த திட்டம் எந்த வகையில் செயல்படுகிறது?

பதில்: தமிழ் தாய்மொழியாக கொண்ட நம்மில் பலருக்குத் தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கத் தெரியவில்லை என்பது கசப்பான நிஜம். ர, ழ, ல, ள போன்ற எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்க வருவதில்லை. உச்சரிப்பே சரியாக வராதபோது தமிழை எப்படிப் பரப்ப முடியும்? கிராமத்துப் பள்ளிகளுக்குச் சென்றபோது அங்கு ஆசிரியர்களுக்கே உச்சரிப்பு சரியாக வராததைக் கண்டு பரிதாபப்பட்டேன். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். சங்கீத்தின் மூலமாக நல்ல தமிழ் உச்சரிப்பைக் கொடுக்க நினைத்தேன். ஏனென்றால் இசை ஒன்றுதான் மொழியுடனே நேரடித் தொடர்புகொண்டிருக்கிறது.

திருவண்ணாமலையில் இளையராஜாவின் நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்கிற வாய்ப்புக் கிடைத்தது. அங்குதான் நான் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற திருப்பதி என்பவரைச் சந்தித்தேன். தமிழ்மீது மிகுந்த பற்று கொண்டவர். அதன்பின் ஏற்பட்ட நட்பால் அவர் அடிக்கடி எங்கள் ப்ருஹத்வனிக்கு வருவார். இங்கு வெளிநாட்டினர் சிலருக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் பணியைச் செய்து வந்தார். இந்த நிலையில்தான் நான் எங்களின் 'இசைவழிக் கல்வி பாடசாலை' பற்றி அவரிடம் சொன்னேன். ஆனால் திருப்பதி தன்னுடைய கிராமமான வில்வரணியின் குழந்தைகளுக்கான கல்விக்காக தன் வாழ்க்கை முழுவதையும் அர்பணிக்க வேண்டும் என்று எண்ணினார். அதனால் நான் அவரை அணுகி எங்கள் திட்டத்தைச் சொன்னதும் "எனக்குப் பண உதவி தேவையில்லை. தங்குவதற்குச் சிறிய குடிசை இருந்தால் போதும்" என்றார். தனக்கும் குழந்தைகளுக்கு இசைமூலம் கல்வி கற்றுக்கொடுக்க ஆசை, ஆனால் இது சரியாக வருமா என்று தயங்கினார். எடுத்துச் சொல்லி அவரது தயக்கத்தைப் போக்கினோம். மூன்று மாதம் அவருக்கு உதவிப்பணம் தந்து, அடிப்படைப் பயிற்சி அளித்தோம். ஆத்திசூடியிலிருந்து தொடங்கினோம். பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை அழைத்து ஆரம்பியுங்கள் என்றோம்.

விழுமியம் சார்ந்த கல்வியை (value based education) அவர்களுக்கு அளித்தோம். தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் 12 புத்தகங்களிலிருந்து முக்கியமான விஷயங்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்து அந்த முறையில் பயிற்சி கொடுக்கச் சொன்னோம். இதன் மூலம் அக்குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆசைப்பட வேண்டும் என்று சொன்னோம். மிகுந்த ஆர்வத்துடன் மூன்று வாரம் அங்கு பணியாற்றி விட்டு இங்கு வந்து ஒருவாரம் மேலும் பயிற்சி எடுத்துச் செல்வார்.

சரளி வரிசையில் 'சரிகம பதநிச சநிதப மகரிஸ' என்பது 'உண்மை பேணும் கோயில் உந்தன் உள்ளே வாழும் தெய்வம்' என்று வரும். எடுத்தவுடனே குழந்தைகளுக்குப் புரிந்த தமிழில் இசையைச் சொல்லிக் கொடுக்கிறோம். நகரில் பணக்காரக் குழந்தைகள் கற்றுக் கொள்வது அதிசயம் அல்ல. ஆனால் கிராமத்துக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் ஆரம்பித்தோம்.

வில்வரணி கிராமத்து மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். ஓரளவுக்கு அடிப்படைக் கல்வி வசதி இருந்தாலும் பெரும்பாலான குழந்தைகளால் உயர்நிலைப் பள்ளிக்குமேல் படிப்பைத் தொடருவதில்லை. இந்தக் குழந்தைகள் தினக்கூலிகள் அல்லது விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை போன்ற நகரங்களில் வேலைதேடிச் சென்றுவிடுகின்றனர். கல்வி 8 அல்லது 10 வகுப்புடனே முடிந்து போகிறது. இத்தகைய குழந்தைகளுக்கு இசையின் மூலமாக மேற்கொண்டு கல்வியை ஏன் அளிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் உருவானதுதான் இசைவழிக்கல்வி பாடசாலைத் திட்டம்.

ஆத்திசூடி, திருக்குறள் போன்றவற்றைப் பாடங்களாக எடுத்துக் கொண்டு அவற்றுக்கு இசையமைத்துக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். இரண்டு மாதத்திற்குள் வியத்தகு மாற்றத்தை அங்கு காணமுடிகிறது. இந்த இசைப்பள்ளியில் 5 முதல் 15 வயதுவரை உள்ள சுமார் 37 குழந்தைகள் கற்கின்றனர். எல்லோருமே வசதி வாய்ப்புகள் அற்ற குழந்தைகள்தாம். இந்தக் குழந்தைகள் இரண்டு மாதத்திலேயே ஆச்சரியப்படத்தக்க விதத்தில் இசை கற்றது சிறப்பு. இதற்கு முழுப் பெருமையும் திருப்பதியைத்தான் சேரும்.

தற்போது மேலும் பல குழந்தைகள் ஆர்வத்தோடு வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, இந்த குழந்தைகளின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை இசைவழிப் பாடசாலைக்கு அனுப்புவதில் அக்கறை காட்டுகின்றனர்.

கேள்வி: இசைவழிக் கல்விப் பாடசாலை திட்டத்தின் குறிக்கோள்கள் என்னென்ன?

பதில்: விளையாட்டு முறையில் இசையின் மூலம் ஆரம்பக் கல்வியை குழந்தைகளுக்கு கொடுப்பது. இரண்டாவதாக அறநெறி சார்ந்த தமிழ்ப் பாடல் மற்றும் கதைகளுக்கு இசையமைத்து எளிதாகச் சொல்லிக் கொடுப்பது. சரியாகத் தமிழை உச்சரிக்கவும், பேசவும் கற்பிக்கிறோம்.

இயற்கையின் ஓசைகளைக் குழந்தைகளை நுணுக்கமாக உணரவைத்து, இரைச் சலுக்கும் இசைக்கும் இடையேயான வேறுபாட்டைப் பகுத்துப்பார்க்கும் திறனைக் குழந்தைகளுக்கு ஊட்டுகிறோம். சொல் வதைச் சிறப்பாக வெளிப்படுத்த ஏதுவாகக் குழந்தைகளின் குரலில் ஏற்ற இறக்கங்களை ஒலிக்க வைக்கிறோம்.

இதைத் தவிர ஒவ்வொரு தனிப்பட்ட குழந்தையின் வளர்ச்சிக்கு உகந்த ஆக்க பூர்வ சூழலை உருவாக்குவதற்கு வழி வகை செய்கிறோம்.

கேள்வி: எதிர்காலத்திட்டம்...

பதில்: வில்வரணியைச் சுற்றியுள்ள கிராமங் களுக்கும் - ஏன் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் - இத்திட்டத்தைச் செயல் படுத்த எண்ணியிருக்கிறோம். அதற்காக இசையார்வமுள்ள தமிழ் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவிருக்கிறோம். மாதத்தில் ஒரு வாரம் சென்னைக்கு அவர்களை வர வழைத்து அவர்களின் பணிகள் பற்றிய விளக்கவுரை, ஆய்வுரைக் கூட்டங்களை நடத்தவிருக்கிறோம். இன்னும் மூன்றாண்டுக் குள் ஆரம்பப் பள்ளிப் பாடக்கல்வியை எங்கள் அமைப்பின் மூலம் சுமார் 800 குழந்தைகளுக்காவது எடுத்துச் செல்ல வேண்டும் என்பது முக்கியக் குறிக்கோள். அதுபோல் பள்ளிக்கூடங்களில் இத்தகைய இசைவழிப் பாடத்திட்டங்களை அறிமுகப் படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்வோம்.

5-வது வகுப்பு பாடத்திட்டத்தில் இருப்ப வற்றைப் பாடல்களாக அமைத்து இசையுடன் சொல்லிக் கொடுக்கவிருக்கிறோம். இது போல் விஞ்ஞானம், கணக்கு என்று எல்லாவற்றையும் பாட்டுகளாக மாற்றி அவர்களுக்குக் கற்பிக்கவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம்.

சந்திப்பு: கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி
More

கிரிக்கெட் வீரர் வெங்கடராகவன்
Share: 
© Copyright 2020 Tamilonline