அது...
|
|
|
|
|
கடும் வெய்யில் கொளுத்தும் அந்த உச்சிவேளையில் அவள் மண்குடத்தை இடுப்பில் இடுக்கியபடி வேகநடை போட்டாள். வெறிச்சோடிக் கிடந்த சீகார் நகர வீதிகளில் வெப்பத்தோடு புழுதியையும் சேர்த்து அள்ளிக்கொட்டியது அனல் காற்று.
முக்காட்டுத்துணியை முகத்தை மூடுமாறு இன்னும் இழுத்து விட்டுக்கொண்டாள். பின்கழுத்தில் துளிர்த்த வியர்வை அவள் முதுகில் இறங்கிப் பிசுபிசுத்தது. அதிகாலையிலோ, அந்தியிலோ நீரிறைக்கப் போகலாம்தான். ஏச்சையும் பேச்சையும், எகத்தாள நக்கலையும்விட இந்தப் புழுதி வேக்காடு எவ்வளவோ தேவலாம், சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
சுடுமணலா? சுண்ணாம்புக் காளவாயா! சப்பாத்துகளில் நெருப்புப் பற்றியெரிய ஓட்டமா, நடையா என்பது புரியாத ஒரு நடை நடந்தாள். யாரிவள்? ஊன்குறை கண்டவர்கள் ஊர்ந்தாவது தத்தம் இடம் உறையும், ஊர் விலக்கிய நோய் கொண்டோரும் தண்ணீர்நிலை காணும் இந்த உச்சிவேளையில் இவளுக்கேன் இந்தப் பயணம்.
இலியோரா.... இவள் ஒடுவது ஊருக்கு வெளியே யாக்கோபு மகராசன் தந்த கேணியைத் தேடி மட்டுமல்ல, மணவாழ்க்கை தராத மருந்தைத் தேடி. மலடி, கைம்பெண், வேசி என அவள் வேதனையைப் பட்டங்களாய் கேலி செய்யாத ஒரு தோழமையைத் தேடி. அவள் நிதம் சிந்தும் கண்ணீரைக் காணும் கண்காணா ஒரு தெய்வத்தைத் தேடி.... இப்படியாய்த்தான் இவள் பயணம் ஒவ்வொரு பகலும் தொடர்கிறது.
இன்னும் கொஞ்சம் தூரம்தான், இதோ ஊர்வெளியை எட்டியாயிற்று. அவள் நடந்து வந்த, கடந்துவந்த வாழ்க்கைப் பாதையைக் கொஞ்சம் நினைத்துப் பார்த்தாள். சுயபச்சாதாபமோ, சுயபரிசோதனையோ, இல்லை இது என்ன யுக்தியோ அவள் அப்படி அசைபோட்டுப் பார்க்கும் பொழுதெல்லாம், இந்த அனல்வழிப் பயணம் அத்தனை லேசாய்ப் போகும்.
ஈலாவுடன் அவள் திருமணம். நாடோடிகளின் கூத்தில்கூடச் சொல்லாக் காதல் கூற்று. பிரியமும், அன்புமாய் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தீர்ந்த வாழ்க்கையில் பொருளாதாரம் பிரச்சனையாய்ப் போனதுதான் துரதிர்ஷ்டம். பிழியப் பிழிய அழுது அவள் பிரியாவிடை கொடுத்தாள், அவன் பிழைப்பிற்கு ஊர்விட்டபோது.
அவனும் நாடு கடந்து போகையில் "கலங்காதே கண்மணியே, என் அம்மாமன் அங்கே பெருந்தனக்காரன். ஒட்டகம் மட்டும் அவனுக்கு ஒரு நூறாம். மகனில்லாத மாமனுக்கு மகனாய்ப் போகிறேன். வெகுசீக்கிரம் உன்னை அழைத்துக் கொள்வேன்" என அவன் சொன்னதெல்லாம் சரி. ஆனால், மாமனுக்கு மகள் இருந்த கதையைமாத்திரம் அவன் சொல்ல மறந்திருந்தான். மறந்திருந்தானோ, மறைத்திருந்தானோ? மறு மகனாய்ப் போனவன் மருமகனாய் ஆன மாத்திரத்தில் அவள் வாழ்க்கையில் வலியின் முதற்கதவு திறந்துகொண்டது.
வாழ்வாதாரத்திற்கான பணத்தை ஈலா தன் வணிக நண்பன் மீகா மூலம் அனுப்பித் தருவான். குறுகிப் போவாள் ஒவ்வொரு முறையும் அவன் பணம் தரும்பொழுது. ஈலாவுக்கொரு மகன் பிறந்ததும் அதுவும் நின்றுபோயிற்று.
அடுத்து என்ன என அவள் கழிவிரக்கத்தில் கழிந்ததோர் அந்திப்பொழுதில் மீகா மணமுடிக்க ஒப்புக்கேட்டான். மணமுடித்த சில மாதங்களிலே படுக்கையில் வீழ்ந்த அவன் எழாமலே தொலைந்து போனான். கைவிடப்பட்டவள் கைம்பெண் ஆகிப் போனாள்.
யாபோ, மீகாவின் சகோதரன், அன்றைய வழக்கப்படி அவர்கள் குலம் தழைக்க அவளை மணந்து கொண்டான். வளர்ந்த முறையில் ஏதேனும் மனக்கோளாறோ, இல்லை தம்பி மனைவியைக் கொண்ட வருத்தமோ... என்ன காரணமோ. யாபோ, அவளுக்கு மணவாழ்க்கையில் தந்தது கூசும் வசைச்சொற்களும், அடியும், உதையும்தான். இப்படியாய் ஒழிந்த வருடங்களில், ஒரு வேனிற்கால முதற்கிழமையில் இலியோராவை லாயக்கற்றவள் எனத் தறித்துவிட்டான்.
அதன்பின் பேகார், அவன் வாழ்ந்தது அவளுடனா அல்லது மதுக்குடுவையுடனா என்பதில் அவளுக்கு ஓர் ஐயமுண்டு. எப்பொழுதாவது வீட்டிற்கு வருபவன், அப்பொழுதும் குடித்துவிட்டு உருண்டு கிடப்பான். அறுவடைத் திருநாள் ஒன்றில் அதிகமாய்க் குடித்து அவனும் செத்துப்போனான். பின் இவள் தந்தையொத்த அகவையில் பச்சூல், முடியாதவனுக்கு முடித்து வைக்கப்பட்ட திருமணம் அது. இப்போது, மீஷான். மீஷானும் அவளும் கூடி வாழ்ந்த வாழ்க்கையில் அவளுக்கு அதிகம் எதிர்பார்ப்பில்லை.
திருமணம், அதன் சடங்குகள், சம்பிரதாயங்கள், மதம், கோட்பாடு எல்லாவற்றிலும் ஒட்டுமொத்தமாய் நம்பிக்கையைத் தொலைத்திருந்தாள் இலியோரா. மனிதர்களைப் பற்றிச் சொல்வதற்கு அவளுக்குச் சுத்தமாய் ஒன்றுமில்லை. சீகார் பட்டணத்து பெண்டிருக்குப் பிரதான புறம்பேசும் பண்டமாய் இவள் வாழ்க்கை. கைவிடப்பட்டவள், கைம்பெண், மலடி-இவற்றோடு சேர்ந்துகொண்டது வேசி என்ற பழியும். மெலிதாய்ச் சிரித்துக் கொண்டாள் இலியோரா.
அதிகாலையிலும், அந்திப் பொழுதிலும் இறையைத் தேடுவதில் கழிந்தது அவளது நேரம். ஏன் இப்படி நடக்கிறது? நான் எப்படிக் காரணமாவேன்? கேள்விகளின் கனம் பொறுக்காது கண்ணீரோடு உறங்கிப் போவாள்.
அப்பாடா, இதோ வந்துவிட்டது சமாரியர்களின் முற்பிதா யாக்கோபு தம் செல்ல மகன் யூசுப்புக்கு தந்த நிலத்தினுள்ள இந்தக் கேணிக்கு,
"அது சரி யார் இது, இந்த மதிய வேளையில் கேணியின் மேடையில் அமர்ந்திருப்பவர். யூத இளைஞர்போல் தெரிகிறது! யூதருக்கு இந்த ஊரில் என்ன வேலை! அதுவும் பெண்கள் புழங்கும் கிணற்றடியில். ஒரே பிதாவைக் கொண்டிருந்தாலும், புனித தோரா எழுதப்பட்ட ஹீப்ருவை நாங்கள் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், ஜாதிகெட்டவர்களாய்த் தானே எங்களை யூதர்கள் எண்ணுகிறார்கள். இவ்வளவு ஏன், யூதேயாவில் இருந்து கலிலேயாவுக்கு சீகார் வழியாய் போனால் தீட்டு ஒட்டிக்கொள்ளுமென்று சீகாரைச் சுற்றிக்கொண்டு போகும் வைராக்கியம் படைத்தவர்கள்தானே இவர்கள். சரி, சரி எனக்கு எதற்கு இந்த வேண்டாத கேள்விகள். யாருடனும் எனக்கென்ன பேச்சு..." |
|
அருகில் வரும்வரை கண்டும் காணாதது போன்றே அந்த இளைஞரை அளந்தாள். பூரண சாந்தம் பொங்கும் முகம் பயணத்தில் களைத்துப் போயிருந்தது. அதிகம் படித்தவர்போல தோன்றிற்று. இலியோரா கேணியை அண்டிய அடுத்த நொடி அவளுக்காகவே காத்திருந்ததுபோல அவர் அவளை நோக்கி "பெண்ணே! என் தாகத்துக்குப் பருகத் தா" என்றார்.
யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங் கலவாதவர்களானபடியால் திடுக்கிட்டவளாய் அவள் "என்னது, என்னிடமா இவர் பேசினார்" சட்டென்று தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, வெடுக்கென்று பதிலளித்தாள் "நீர் யூதராயிருக்க, சமாரிய ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம்". அந்த யூத இளைஞர் அவளுக்குப் பிரதியுத்தரமாக: "நீ தேவனுடைய ஈகையையும், தாகத்துக்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவதண்ணீரைக் கொடுத்திருப்பார்" என்றார்.
அவள் தனது துடுக்குப் பேச்சிற்கு விடையாக அவர் அத்தனை இலகுவாகக் கருணையுடன் பேசியது அவள் நெஞ்சைத் தொட்டது. ஆனால் அவர் பதில் கண்டு இலியோரா குழம்பிப் போனாள். அவள் சற்று நிதானித்தவளாய் "ஐயனே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவதண்ணீர் உண்டாகும். இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ. அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே" என்றாள்.
அவர் மறுபடியும் அவளுக்குப் பிரதியுத்தரமாக "இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்" என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டவள் ஒவ்வொரு நாளும் இப்படி ஊருக்கு பயந்து அவள் இந்த உச்சிவேளையில் ஓடிவரத் தேவையில்லை என்ற ஏதேதோ எண்ணங்கள் எழும்பப்பட்டவளாய், சொல்லொணா ஆவலால் நிரப்பட்டவளாய், அவரை நோக்கிப் பரிதாபமாய்: "ஸ்வாமி, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தாரும்" என்றாள்.
அவர் அவளை மெதுவாய் நோக்கி "நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டு வா" என்றார்.
கழிவிரக்கம் மனதை வாட்ட ஒரு கணம் மீஷானுடன் அவள் வாழும் வாழ்க்கையை நினைத்து அயர்ந்தவளாய், மிக மெல்லிய குரலில் தயக்கத்தோடு "எனக்குப் புருஷன் இல்லை" என்றாள். அதற்கு அவர் "உனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய்" என்றார்.
விதிர்விதிர்த்துப் போனாள் இலியோரா. யாரிவர் உள்ளதை உள்ளபடி சொல்லும் இந்த உத்தமர். என் குற்றமுள்ள வாழ்க்கையைச் சொல்லும்போது கூட விகல்பமில்லாமல், ஆக்கினை தீர்க்கும் மனோபாவம் கொஞ்சமும் காட்டாமல் பேசும் இவர் யார். எலியா, எலிஷா, சாமுவேல் போன்ற தீர்க்கதரிசியோ. முற்றும் உணர்ந்தவர்போலத் தெரிகிறார். வேதாகமத்தை முழுவதுமாக முடித்தவர் போலத்தான் தோன்றுகிறார். ஒருவேளை இவரிடம்தான் என் தேடலின் விடை கிடைக்குமோ!
எண்ணங்கள் பலவாறு ஓட, அவள் அவரை நோக்கி "ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். எங்கள் பிதாக்கள் இந்த கெர்சீம் மலையிலே தொழுதுகொண்டு வந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே" என்றவாறு அவர் காலருகே அமர்ந்து கொண்டாள்.
அதற்கு அவர் "பெண்ணே! நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் சத்தியத்தோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்" என்றார்.
என்ன இது? பாரம்பரியமும் அனேக சடங்குகளைக் கொண்ட யூதமதக் கோட்பாடுகளை அறிந்த இவர், தொழுகையிடம் ஒரு பொருட்டல்ல என்கிறார். ஆவியோடும் சத்தியத்தோடும் தொழுதால் மாத்திரம் போதுமென்கிறார். சரி, சரி இவர் ஏதோ அறியாமல் சொல்கிறாரோ என்று எண்ணியவளாய் அவரை நோக்கி "கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்" என்றாள்.
அதற்கு மெலிதான புன்னகையோடு கனிவாய் அவளை நோக்கி "உன்னுடனே பேசுகிற நானே அவர்" என்றார் இயேசுபிரான்.
"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும்." என்று தீர்க்கத்தரிசி ஏசயாவினால் சொல்லப்பட்ட இளவரசர் இவர்தானா?. வெண்புரவிகளும், சேனைகளும் சூழ ராஜகுமாரனாய் நான் கற்பனை செய்திருந்த தேவன் இத்தனை எளிமையாய் எழந்தருளியுள்ளாரா? கண்ணீர்மல்க அவரைக் கண்ட உவகையில் அவள் சிலையாய்ச் சமைந்தாள்.
அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். அதிலும் அவரின் முதன்மை சீஷரான பேதுரு "நான் மேசியா என்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டவர். அவராய், அதுவும் ஒரு சமாரிய நாட்டு ஸ்திரீயிடம் தன்னை வெளிப்படுத்துகிறாரே" என்று அதிசயத்துப் போனான். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது அவரிடம் ஒருவனும் கேட்கவில்லை.
சீஷர்களின் வருகையால் உணர்வுற்ற இலியோரா கிறிஸ்துவைக் கண்ட குதூகலத்தில் அவள் குடத்தைக்கூட மறந்தவளாய் ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி "நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ" என்றாள்.
மீஷானும், இன்னும் பல இளைஞர்களும், அவளை தூஷித்த அத்தனை பேரும் அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள். "நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார்" என்று சாட்சி சொன்ன அந்த இலியோராவின் வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசம் உள்ளவர்களானார்கள்.
சமாரியர் அவரிடத்தில் வேண்டிக்கொண்டபடியே இயேசுபிரான் இரண்டு நாள் அங்கே தங்கினார். இரண்டு நாளைக்குப் பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவுக்குப் போக எல்லாரும் கொண்டாடி அவரை வழி அனுப்புமுன், இலியோராவிடம் அவள்மட்டும் கேட்க அவர் கனிவோடு சொன்னார் "பேதையே! இவர்கள் நிமித்தம் இல்லாவிடினும் உனக்காக நான் இங்கு வந்திருப்பேன். நினைவில் கொள், பிதாவாகிய ஆண்டவர் உன் உடைமையை அல்ல, உன் உடையை அல்ல, உன் உடையவனை அல்ல, உன் உள்ளத்தை, உள்ளார்ந்த பிரியத்தை, உண்மையைத்தான் காண்கிறார்".
"எனக்காகவா, எனக்காகவா ஆண்டவரே நீர் எழுந்தருளினீர்" அவள் நன்றியைக் கண்ணீராக்கி அவர்தம் கால்களைக் கழுவினாள். இலியோராவுக்கு முதன்முதலாய்த் தன் பெயரின் பொருள் விளங்க மனதில் புத்தொளி பெற்றாள் இலியோரா என்றால் ‘தேவன் என் ஒளி’ என்றல்லவோ பொருள்!
தேவி அருள்மொழி அண்ணாமலை, சிகாகோ |
|
|
More
அது...
|
|
|
|
|
|
|
|