Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
வாசல் அனுபவம்
அம்மாவின் பிரார்த்தனை
குழந்தை வளர்ப்பு
- எல்லே சுவாமிநாதன்|நவம்பர் 2013||(1 Comment)
Share:
"நாம எப்ப சான் ஹோசே போகணும். பெரிய பொண்ணு தன் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள கூப்பிட்டாளே" என்றார் ரங்கண்ணா.

"அது கேன்சலாயிடுத்து. குழந்தகளை சம்மர் கேம்புக்கு அனுப்பறாளாம். நாம வரவேண்டாம்னு சொல்லிட்டா" என்றாள் லக்ஷ்மி.

"பரவாயில்லை. நாம ரெஸ்ட் எடுப்போம். ஆமா, சேஷகோபாலன் கச்சேரி சனிக்கிழமை சாயங்காலம் இருக்கு. ஜானாவும் ரமணியும் கையிலே புளியோதரை கட்டிண்டு காலையிலேயே கிளம்பறாளாமே?"

"ஏன்?"

"ஹால் சீப்பாக் கெடச்சிதுன்னு சான் டியெகோ பக்கத்துல புக் பண்ணிட்டாங்களாம் சபாவுல. காரை ஓட்டிண்டு போக நேரம் ஆகுமே."

"ஆனா நாம போகமுடியாது. நம்ம சின்னப் பொண் லல்லியோட நானி வேலைலேருந்து நின்னுட்டாளாம். லல்லி குழந்தையப் பார்த்துக்க நம்மை உடனே வரச் சொல்லியிருக்கா" என்று ஈமெயிலைக் காட்டினாள் லக்ஷ்மி.

மறுநாளே ரங்கண்ணாவும் லக்ஷ்மியும் பிளேன் பிடித்து சிகாகோ வந்தார்கள். லல்லியும் லக்ஷ்மணும் ஏர்போர்ட்டுக்கு வந்து அழைத்துப் போனார்கள்.

"நாலு நாளா நானி தேடிண்டு இருக்கம். சரியா யாரும் அமையல. இன்னிக்குக்கூட மூணு பேரு காலையில இண்டர்வ்யூக்கு வரா. நீங்களும் வந்து கூட உட்காருங்கோ" என்றாள் லில்லி.

லில்லி, லக்ஷ்மண், ரங்கண்ணா சோபாவில் அமர, லக்ஷ்மி தரையில் பேரக்குழந்தை பாபுவோடு அமர்ந்தாள்

முதலில் வந்த கிளாரா என்ற ஆஃப்ரிக்க பெண்மணி, தன்னுடைய தகுதிகளைச் சொன்னாள். குழந்தையைப் பார்த்துக் கொள்வதில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்றாள். "காலையில் 9 மணிக்குதான் வருவேன். சீக்கிரம் வரணும்னா டாக்சி பிடிச்சுதான் வரணும். அதுக்கு காசு நீங்கதான் கொடுக்கணும். சம்பளம் கேஷாதான் வேணும். செக் கொடுத்தா நீங்கதான் என் வருமான வரியையும் சேத்துக் கட்டணும்" என்று அவள் சொல்லும்போது, குழந்தை பாபு கத்த ஆரம்பித்தான். லக்ஷ்மி அவனை சமாதானம் செய்ய "லுலுலு" என்று சொல்லிக்கொண்டே அவனெதிரில் கிலுகிலுப்பையை ஆட்டினாள்.

இதைக் கவனித்த கிளாரா, "தட்ஸ் நாட் த வே…. லெம்மீ ஹாண்டில் ஹிம்" என்று சொல்லி, குழந்தையை முறைத்துப் பார்த்து கைவிரலால் தன் வாயைப் பொத்திக் கொண்டாள்.

பாபு பயந்து கத்தலை நிறுத்தியதோடு அல்லாமல் விரலை உதட்டில் வைத்துத் தன் வாயையும் மூடிக்கொண்டது. லக்ஷ்மியும் தன் புடவையை இழுத்திப் போர்த்திக் கொண்டு தலையைக் குனிந்து அடக்கமாக அமர்ந்து கொண்டாள். இதற்காகவே கிளாராவை வேலைக்கு சேர்த்துக்கொண்டால் தேவலை என்று நினைத்தார் ரங்கண்ணா.

சம்பளம், இன்னும் சில விவரங்கள் கேட்டுவிட்டு அவளை அனுப்பினார்கள்.

அடுத்ததாய் நடுத்தர வயது வட இந்தியப் பெண்மணி வந்தாள். "நமஷ்கார். மேரி நாம் வத்ஸலா ஹை" என்று தொடங்கியவுடன், "ப்ளீஸ் டாக் இன் இங்லீஷ்" என்றாள் லில்லி. அவள் இங்கீஷில் சொல்ல ஆரம்பித்ததும் இந்தியிலேயே பேச விட்டிருக்கலாம் என்று தோன்றியது.

தான் அமிதாப் பச்சனின் நண்பர் ஒருவர் பேரனுக்கு நானியாய் இருத்ததைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டாள். பல இந்தியக் குடும்பங்களில் வேலை செய்ததைச் சொன்னாள். பகலில் குழந்தை பார்த்துக் கொள்வதுடன் சாயங்காலம் வீட்டுக்குப் போகும்போது சப்பாத்தி சப்ஜியும் செய்துவைக்க முடியும் என்றாள்.

ரங்கண்ணா மகிழ்ச்சியுடன், "அச்சா" என்றதும், தன் கைப்பையைத் திறந்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவைப் பிரித்து நீட்டினாள். அதில் வெண்டைக்காய் சப்ஜி வைத்து சுருட்டி வைக்கப்பட்டிருந்த சப்பாத்திகளை நீட்ட லக்ஷ்மணும் லில்லியும் மறுத்துவிட ரங்கண்ணா ஆவலுடன் ஒரு சப்பாத்தியை எடுத்து சுவைத்து "சூப்பர்" என்றார்.

அவள் சில கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு "குழந்தை தூங்கவைக்கப் பாட்டும் பாடுவேன்" என்று சொல்லி "ஆவோ கிருஷ்ணா மேரி கர் கி" என்று ஒரு வரி பாடினாள். "ஆஜாரே பர்தேசி" பாடத்தெரியுமா என்று ரங்கண்ணா கேட்க "தெரியாது" என்றாள்.

"தட்ஸ் ஆல். அப்பா நீங்க ஏதாவது கேள்வி கேட்கணுமா?" என்றாள் லில்லி.

சிறிது சீரியசாக யோசித்து "கைஸே பனா தா, பிண்டி ஸப்ஜி" என்றார் ரங்கண்ணா. லக்ஷ்மி முகத்தைத் தோளில் இடித்துக் கொண்டு "ரொம்ப அவசியம் உங்கப்பாக்கு. வெண்டைக்காய் சப்ஜி மசக்கை" என்றாள்.

"வாட்" என்ற லல்லி, விஷயம் தெரிந்ததும், "ஷட் அப் டாட். வி டோண்ட் வாண்ட் எனி ஸப்ஜி" என்று அடக்கினாள்.

அடுத்ததாய் வந்தவள் நடுத்தர வயது வெள்ளைக்காரி. தனது சான்றிதழ்களைக் கொடுத்தாள்.

உங்களுக்கு வெஸ்டர்ன் ம்யூசிக் பிடிக்குமா என்று கேட்டு, பையிலிருந்து ஒரு புல்லாங்குழலை எடுத்து ஒரு ட்யூன் வாசித்துவிட்டு "பாட்டு அடையாளம் தெரிகிறதா' என்றவுடன், லல்லி பதில் சொல்லாமல் ரங்கண்ணாவிடம் "அப்பா உங்களுக்குத் தெரியறதா" என்றாள்

"தெரியாம என்ன..பழய பாட்டுன்னா இது….பெண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே….இதானே? ஜிக்கி பாடியிருக்கான்னு நெனக்கிறேன்……"

"அப்பா அது ஜிக்கியோட தமிழ் பாட்டுல்ல... அந்த லேடியோட ட்யூன் "த்ரீ லிட்டில் மைஸ்" ஜான் ப்ரெளன் பாடினது…."

எலிசபெத் மகிழ்ச்சியுடன் 'ரைட் யு ஆர்’ என்று சொல்லி, 'நான் குழந்தைக்கு இங்லீஷுடன் நிறுத்திக்க மாட்டேன். உங்க ஊர் பாஷை என்ன" என்றாள்.

ரங்கண்ணா "தமிழ்…. உலகத்திலேயே ரொம்ப ரொம்ப பழைய மொழியாக்கும்" என்று சொல்லி "ஓங்கலிடைத் தோன்றி" என்ற செய்யுளைச் சொல்லப்போக, லல்லி "அப்பா..தட்ஸ் இனஃப், யு மேட் த பாயிண்ட்" என்று அடக்கினாள்.

எலிசபெத் பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்த்து, "எஸ் எஸ் டமில்… ஐ ஹாவ் ஸம் ஸீடிஸ்… குர்வி குர்வி நேலு கொட்ட வாண்டடாம்…. ஐ கேன் ப்ளே இட் ஃபார் ஹிம்" என்றாள்.

ரங்கண்ணா அது "குருவி குருவி வந்துதாம், நெல்லுக் கொத்த வந்ததாம்".. நைஸ் ஸாங்…. யு ட்யூப்"ல இருக்கு என்றதும், லக்ஷ்மணும் லல்லியும் ஒரே நேரத்தில் "வேண்டாம், தமிழ் படிச்சா குழந்தை கன்ஃப்யூஸ் ஆயிடும். பத்து வயசு ஆனப்பறம் கோயில்ல பாலவிஹார்ல தமிழ் கத்துக்கலாம்" என்றார்கள்.

"எனக்கு ஃபிரெஞ்சும் ஜெர்மனும் தெரியும்" என்றாள் எலிசபெத்.

"ஃபிரெஞ்சு சொல்லிக் குடுத்தா தப்பில்ல" என்றான் லக்ஷ்மண். "உய்" என்றாள் லல்லி.

நாங்கள் யோசித்துச் சொல்கிறோம் என்று அவளையும் அனுப்பிவிட்டார்கள்.

இப்ப வந்த மூணுபேர்ல யாரை எடுத்துக்கலாம் அம்மா? என்றாள் லல்லி.

"முதல்ல வந்தவ வேண்டாம். அவளால அவளையே சுமக்க முடியாது. குழந்தையையும் எப்படி சுமப்பா? அவ பார்வையே சரியில்ல. முழிக்கற முழி பயம்மா இருக்கு. அவ வேண்டாம்" என்றாள் லக்ஷ்மி.

"வத்ஸலா பரவாயில்ல. நம்மூர்க்காரி. குழந்தய நன்னா பாத்துப்பா. ராமாயணம் பாரதம் கூட சொல்லித் தருவா. சப்பாத்தி அருமையா பண்றா…வெண்டைக்கா ஸப்ஜி இன்னும் வாயிலேயே இருக்கு" என்று ரங்கண்ணா பரிந்துரைக்க, லக்ஷ்மி "அவ வேண்டவே வேணாம். தடி மாதிரி நா ஒருத்தி உட்கார்ந்திருக்கேன்…. ஒரு மரியாதைக்கு நீயும் சப்பாத்தி எடுத்துக்கோன்னு கேட்கலியே. உங்க அப்பாவாவது எனக்கு ஒண்ணு வாங்கித் தந்திருக்கலாமில்லியா. தன் வயத்தை மட்டும் பாத்துக்கத் தெரிஞ்சுது" என்று புலம்பினாள்.

"வத்ஸலா இங்கிலீஷே சரியில்ல. வேண்டாம்" என்று லல்லி சொல்ல லக்ஷ்மண் ஆமோதித்தான்.

கடைசியில் எலிசபெத்தை அமர்த்துவதாக முடிவு செய்து ஈமெயில் போட்டார்கள்.

"தேங்க்ஸ். இன்னும் மூன்று நாட்களில் வந்து வேலை ஏற்கிறேன்" என்று அவள் பதிலுக்கு டெக்ஸ்ட் அனுப்பினாள்.

"எனக்கு இன்னும் ரெண்டு வாரம் ஆபீஸ் வேலை பிசியா இருக்கும். லக்ஷ்மணுக்கும் ஆடிட் ஒர்க் நடக்கிறது. இன்னும் ஒரு நாள்தான் நான் ஃப்ரீ. அதுக்குள்ள எப்படி உங்களுக்கு குழந்தைய கவனிச்சிக்கணும்னு சொல்லிடறேன். அந்த நானி வர வரைக்கும் நீங்கதான் பார்த்துக்கணும்" என்ற லல்லியை வியப்போடு பார்த்தார்கள்.

"குழந்தய பார்த்துக்க எனக்கு நீ சொல்லித்தரயா? நானும் குழந்த பெத்து வளத்தவதான்…. வேளா வேளைக்கு பாலும் சீரியலும் கொடுத்தா போதாதோ..உனக்கு நான் புழுங்கரிசிக் கஞ்சி கொடுத்துதான்..."

லக்ஷ்மி மேலும் தொடருமுன் லல்லி கையமர்த்தினாள். "அம்மா நீ என்னை வளர்த்தது பழைய கதை. இப்ப எல்லாம் மாறிடுத்து. கம்ப்லீட் ரெகார்டிங் வேணும். பொறுமையா நான் சொல்றதைக் கேளு. அவனுக்கு பால், ரைஸ் சீரியல், ஆப்பிள் சாஸ், வெஜிட்டபிள் எல்லாம் டைம் டேபிள்படி கொடுக்கணும். கொடுத்த டைம், சாப்பிட்ட அளவு, கிண்ணியில மிஞ்சின அளவு எல்லாம் கம்யூட்டர்ல என்டர் பண்ணணும். எப்போ ஆய், மூச்சா போறது எல்லாம் ரெகார்ட் பண்ணணும். குழந்தைக்கு தூக்கம் வந்தா...."

"தெரியுண்டி மடிமேல போட்டுண்டு தட்டி தூங்க வெக்கணும். இதானே? தூளி கட்ட இங்க வசதி இருக்கா?" என்றாள் லக்ஷ்மி.

"ராங் அம்மா. குழந்தய அவன் ரூம் தொட்டில்ல போட்டுட்டு கதவை சாத்திண்டு வந்துடணும்."

"அய்யோ கத்துமே..தனியா ரூம்ல போடணுமா? எனக்கு மனசு கேக்காது. நீங்க எல்லாம் எங்க பெட்ல பத்து வயசுவரைக்கும் படுத்துண்டது உனக்கு மறந்து போயிடுத்தா?"

"கத்தினா கத்தட்டும்னு டாக்டர் சொல்லியிருக்கார். அது தனியா இருந்து பழகினாதான் பிற்காலத்தில் ஹாஸ்டல்ல தைரியமா தனியா இருக்கப் பழகும். தூங்கி எழுந்த டைம் கூட கம்யூட்டர்ல..."

"நோட்ல எழுதி வெச்சா போறாதோ" என்றாள் லக்ஷ்மி.

"நோ. கம்யூட்டர்ல டேடாபேஸ்ல போட்டா, பிரச்னைன்னா டாக்டருக்கு அனுப்பி செக் பண்றது ஈசி. செய்வியா?"

லக்ஷ்மி தலையாட்டினாள்.

"அப்பா இப்ப உங்களுக்கு பாபுவோட பொம்மை பத்தி சொல்லப் போறேன். எனக்கு நான் குழந்தையா இருக்கறச்ச என்ன பொம்மை கொடுத்தே?"

ரங்கண்ணா யோசித்து, "உனக்கு பார்பி பொம்மை, பவுடர் டப்பா, பிலாஸ்டிக் டப்பா இப்படி ஏதோ இருந்துது. உங்கம்மா ஊர்லேருந்து ஒரு மரப்பாச்சி வாங்கிண்டு வந்தா. அதை நீ காலிலே போட்டுண்டு காயம் வந்ததால அதை எடுத்து ஒளிச்சு வெச்சிட்டோம்" என்றார்.

"குட். இப்ப டைம் மாறிடுத்து. விளையாடற பொம்மைகள்தான் குழந்தைக்கு மூளை வளர்ச்சி தரதுன்னு கண்டுபிடிச்சிருக்கா. நானும் லக்ஷ்மணும் அதுபத்தி ஒரு கிளாஸ் போறோம். இதோ பார் பொம்மை" என்று ஒரு சதுர பிளாஸ்டிக் பெட்டியைக் காட்டினாள். அதில் நிறைய பட்டன்கள் இருந்தன. ஒரு பட்டனை அமுக்கினாள். ஏ, பீ, ஸீ, டி வரிசையாய் ஒலித்தது. இன்னொரு பொத்தானை அமுக்க, ஒண்ணு, மூணு, அஞ்சு, ஏழு, பதினொண்ணு, பதிமூணு என்று வந்தது.

"என்ன தப்புத் தப்பா இருக்கே" என்றார் ரங்கண்ணா… "எங்க நாளில ஒண்ணு, ரெண்டு , மூணு, நாலுன்னு வரிசையா எண்ணுவோம். இப்ப புதிசா மாத்திட்டாங்களா?"

"இது பேரு ப்ரைம் நம்பர்ப்பா. ப்ரைம் நம்பர்னா அதே நம்பராலோ அல்லது ஒண்ணாலோ மட்டும்தான் வகுக்க முடியும்."

"அடேங்கப்பா" என்றார் ரங்கண்ணா.

"இது மட்டுமில்ல இன்னும் நிறைய மாட்யூல் உண்டு, குவாண்டம் மெக்கானிக்ஸ், ஷ்ராடிங்கர் ஈக்வேஷன், தெர்மொடைனமிக்ஸ் எல்லாம் இருக்கு. மூளை வளர்ச்சிக்கு இதெல்லாம் அவசியம். நீ இத எல்லாம் குழந்தைக்கு தினசரி போட்டுக் காட்டணும். செய்வியா?"
என்னது? தான் காலேஜில் படிச்சபோது கேள்விப்பட்டது எல்லாம் குழந்தை ஒரு வயசில கத்துக்குமா? தன் மூளைவளர்ச்சி மீதே ரங்கண்ணாவுக்கு சந்தேகம் வந்தது. ஒரு வயசுக்குள்ள இதெல்லாம் கத்துண்டுட்டா குழந்தை ஸ்கூல்ல போயி படிக்க என்னது மிஞ்சும் என்ற கவலையும் வந்தது.

"லல்லி, இது நானே கொஞ்ச நாள் விளையாடி புரிஞ்சிக்கணும் போல இருக்கே" என்றார். லக்ஷ்மியைப் பார்த்து, "நல்லவேளை லக்ஷ்மி, நாம் அப்பவே பெத்து வளத்துட்டம். இந்த நாளில குழந்தை வளக்கறது ஒண்ணும் அவ்வளவு சுலபமாப் படலே" என்றார்.

"நானி இண்டர்வ்யூன்னு வீட்ல சமைக்கல. எல்லோரும் ரெஸ்டாரண்ட்ல சாப்பிடலாம்" என்று லல்லி இத்தாலிய ரெஸ்டாரண்டுக்கு அழைத்துப் போனாள்.

"லஞ்சுக்கு சாலட் போதும்" என்று சொல்லி அவள் ஆர்டர் செய்தாள். சர்வர் கொணர்ந்து தட்டில் வைத்த கீரையை பார்த்ததும் ரங்கண்ணாவின் முகம் மாறியது. "இது என்ன?" என்றார்.

"இது அருகில்லா ஸாலட் அப்பா. ஸ்பெஷல் கீரை. சாப்பிடுங்க" என்றாள் லல்லி.

"லல்லி. இதெல்லாம் நம்ம ஊர்ல ஆடு மாடுக்கு போடற சமாசாரம். இது எனக்கு வேண்டாம்" என்று ரங்கண்ணா மறுக்க, அவருக்குத் தனியாக வெஜிடபிள் சூப் தருவிக்கப்பட்டது.

மறுநாள் லல்லியும் லக்ஷ்மணும் வேலைக்குப் போக ரங்கண்ணாவும் லக்ஷ்மியும் குழந்தையைப் பார்த்துக் கொண்டார்கள்.

"நான் குழந்தைக்கு சீரியல் தரேன். உங்களுக்கு தோசை பண்ணி வெச்சிருக்கேன். சீக்கிரம் சாப்பிடுங்கோ. அப்புறம் குழந்தயோடு விளையாடுங்கோ" என்றாள் லக்ஷ்மி.

ரங்கண்ணா கிச்சனுக்குப் போனார். அங்கிருந்த பச்சை சட்னி அவரைக் கவர்ந்தது. "லக்ஷ்மி எனக்குப் பிடிக்கும்னு கொத்தமல்லி சட்னி பண்ணியிருக்கா" என்று மனதுக்குள் மகிழ்ந்து, மிளகாய்ப் பொடியைத் தவிர்த்து, சட்னியைப் போட்டுக் கொண்டார். ஒரு வாய் தின்றதும் அவர் முகம் மாறியது. "என்ன லக்ஷ்மி அழகா சட்னி பண்ணிட்டு உப்பு உறைப்பு போடவே மறந்திட்ட பாரு" என்றார்.

"அய்யோ அது உங்களுக்கு சட்னி இல்ல. குழந்தைக்கு கீரை அரைச்சு வெச்சிருக்கேன். லல்லி கொடுக்கச் சொல்லி இருக்காள். பக்கத்தில தோசைக்கு மிளகாய்ப் பொடி இருக்கே பார்க்கலியா?"

அடிப்பாவிகளா..இப்படி உப்பு உறைப்பு இல்லாம ஒரு கீரையை குழந்தைக்குக் கொடுக்க எப்படி மனசு வந்தது? என்று நினைத்துக் கொண்டார்.

இரண்டு நாள் எல்லாம் நல்லபடியாய் முடிந்தது. மறுநாள் பகலில் குழந்தைக்கு வயிறு உப்பி மலச்சிக்கல், வயிற்று வலி வந்து குழந்தை அழத்தொடங்கியது.

ரங்கண்ணா பதறிப்போய், "லல்லியக் கூப்பிடு எந்த டாக்டர்கிட்ட போகணும்னு சொல்லுவா" என்றார்.

"இதுக்கு எதுக்கு லல்லியும் டாக்டரும்... நாம சமாளிச்சிடலாம். போய் ஓம வாட்டர் வாங்கிண்டு வாங்கோ தெருக் கோடியில ஒரு இந்தியன் கடை இருக்கு" என்றதும், அங்கே போய் ஒருமணி நேரம் கழித்துத் திரும்பி வந்தார் ரங்கண்ணா.

"அங்கே ஓமம் இருந்தது ஓம வாட்டர் இல்லை. மத்த கடையிலும் கெடைக்கல. இப்ப என்ன செய்யலாம் லக்ஷ்மி? லல்லியக் கூப்பிடவா?" என்றார்.

லக்ஷ்மி மகிழ்ச்சியுடன், "கவலைப்பட வேண்டாம். இப்ப குழந்தைக்கு மலச்சிக்கல் சரியாயிடுத்து. ரெண்டு தடவை போயாச்சு" என்றாள்.

"என்ன மருந்து குடுத்த நீ"

"கால் ஸ்பூன் மஞ்சப்பொடி போட்டு பாலில கலக்கிக் குடுத்தேன்."

"வெரி குட். டாக்டர்கிட்ட போயிருந்தா ஏகப்பட்ட சார்ஜ் ஆயிருக்கும்."

இரவு எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின் லல்லியும் லக்ஷ்மியும் கிச்சனில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார்கள். "அம்மா என்ன இது… சின்க்ல மஞ்சளா ஏதோ இருக்கு. என்ன?"

"அதுவா..மஞ்சப் பொடி கரைச்சேன். கொஞ்சம் சிந்திடுத்து போல. சோப்பு போட்டா போயிடும். நான் தேய்க்கவா?"

"அம்மா இது ஸ்பெஷல் ஆர்டர் சின்க். ஸாஃப்ட் ஸ்பான்ஜ் போட்டு தேய்க்கணும். இல்லாட்டி கீறல் விழுந்திடும்"

"ஏண்டி நா பாக்காத சின்ங்கா….எத்தனை வருஷம்மா" என்று லக்ஷ்மி தொடங்க, ரங்கண்ணா "உங்க அம்மா கெட்டிக்காரி. குழந்தைக்கு ஓம வாட்டர் கிடைக்காட்டாலும் மஞ்சப்பொடி போட்ட பால் கொடுத்து சரி பண்ணிட்டா. தாங்க்ஸ் சொல்லு" என்றார்.

அவ்வளவுதான். "வாட்" என்று குதித்தாள் லல்லி.

"என்னைக் கேட்காம எப்படிக் கண்டதை குழந்தைக்கு நீ குடுக்கலாம்? மஞ்சள்போட்ட மில்க்கா? ஸ்ட்டுபிட். ஓம வாட்டர்? வாட்டீஸ் இட்?"

உள்ளே வந்த லக்ஷ்மண் விவரம் அறிந்து "கம்ப்யூட்டர் எங்கே?" என்று கேட்டு அதில் பார்த்து, "ஐ காண்ட் பிலீவ் இட். லல்லி இதப்பாரு" என்றான்.

லல்லி பார்த்துவிட்டு "ஓ, நோ" என்று கத்த "என்னடி, என்ன ஆச்சு" என்று லக்ஷ்மி பதற, ரங்கண்ணா "லக்ஷ்மண்..என்னாச்சப்பா. சொல்லு" என்றதும், "பேபிக்கு ரொம்ப ஜாஸ்தியா சாப்பாடு உள்ள போயிடுத்து" என்று சொல்லி "லல்லி. டாக்டரைக் கூப்பிடு ஹாஸ்பிட்டல் போகலாம். எமர்ஜென்சிக்கு போகணும்" என்றான்.லல்லி டாக்டரை அழைத்தாள்.

"என்ன ஜாஸ்தி" என்று கேட்ட ரங்கண்ணாவுக்கு, கம்ப்யூட்டரைக் காட்டினான் லக்ஷ்மண். "பாருங்க 22 கப் சீரியல் கொடுத்திருக்காங்க" என்றான். ரங்கண்ணா திரையை ஆராய்ந்தார். டாக்டரிடமிருந்து கால் வந்தது. டாக்டர் பேசி முடித்து ஒரு மருந்தை சிபாரிசு செய்தார்.

லக்ஷ்மண், "மருந்து பேரு கர்க்கியூமின்னாம். ஒரு ஸ்பூன் வாட்டர்ல கரைச்சு மூணு வேளை தரணுமாம். நாளைக்கு பார்மசிக்குப் போய் வாங்கிண்டா போதுமாம்" என்றான்.

"ஏதோ தப்பு நடந்திடுத்து இங்க. லக்ஷ்மி நீ 22 கப்பா சீரியல் கொடுத்த? பொட்டியிலேயே அவ்வளவு இருக்காதே….. பேத்தலா இருக்கே…" என்றார் ரங்கண்ணா.

"அய்யோ..ரெண்டு கப்புதான் குடுத்தேன். கம்ப்யூட்டர்லயும் போட்டேனே. தவறிப்போய் 22ன்னு அடிச்சிட்டேனோ. எனக்கு கம்ப்யூட்டர் இன்னம் சரியா பழகல" என்றாள் லக்ஷ்மி.

ரங்கண்ணா கூகிளில் தேடிவிட்டு, "கர்க்யூமின்ங்கிறது மஞ்சள்லே எடுக்கிற கெமிக்கல். வயித்து உபாதைக்கு நல்லது. நாம சமையலுக்கு மஞ்சள் பயன்படுத்தறோம் ஆயிரக்கணக்கான வருஷமா. அதுனாலதான் லக்ஷ்மி கொடுத்த மஞ்சள் வேலை செஞ்சு குழந்தயக் குணப்படுத்தி இருக்கு" என்றார்.

சில நேரத்தில் அங்கே குழப்பம் தெளிந்து அமைதி வந்தது. "சாரிம்மா. தப்பா பேசிட்டேன்" என்றாள் லல்லி.

"அதுக்கென்ன. நீ இன்னம் குழந்தை வளர்த்துப் பழகலே. எதுக்கு எடுத்தாலும் டாக்டர்கிட்ட ஓட வேண்டாம். நாமளே கை வைத்தியமா செஞ்சிக்கலாம். ஓம வாட்டர், சுக்கு, திப்பிலி எல்லாம் வாங்கி வெச்சிக்கணும்...."

"லல்லி…. எலிசபெத் டெக்ஸ்ட் பண்ணியிருக்கா.. அவளுக்கு வேற நல்ல வேலை கிடைச்சிடுத்தாம். நம்மிடம் வேலைசெய்ய வர மாட்டாளாம்" என்றான் லக்ஷ்மண்.

"பரவாயில்ல. இன்னிக்கு என் ஆபீஸ்ல ஒரு பெண் புதுசா தொடங்கின டே கேர் பத்தி சொன்னா. கூப்பிட்டுக் கேட்டேன். பாபுக்கு அதில இடம் கிடச்சிடுத்து. அப்பா அம்மாவை அடுத்த புதன் ஊருக்கு அனுப்பிடலாம். ஓகே?" என்றாள் லல்லி.

"அதுக்குள்ளயா திரும்பிப் போகணும்? இன்னும் பொட்டியக்கூட முழுசாப் பிரிக்கல" என்றார் ரங்கண்ணா.

"பரவாயில்லை. நமக்கும் வீட்ல வேலை இருக்கு. நம்ம நாளில அப்பா அம்மா பக்கத்திலயே இருந்து குழந்தை பார்த்துக்கணும்னு நெனச்சோம். இப்ப டைம் மாறிடுத்து. விருந்தாளி மாதிரி வந்துட்டு போறதுதான் மரியாதை" என்றாள் லக்ஷ்மி.

அப்பொழுது செல் ஃபோன் ஒலித்தது.

சான் ஹோசேயிலிருந்து, ரங்கண்ணாவின் பெரிய பெண்தான் அழைத்தாள். "அப்பா அம்மா நீங்க ரெண்டு பேரும் ஊருக்குப் போகாம இங்க வந்துருங்க. யோசிமிட்டி மலையில காட்டுத்தீயாம். என் குழந்தைகள் சம்மர் கேம்ப் கான்சல் ஆயிடுத்து. நீங்க வந்து நாலு வாரம் பாத்துக்கணும். பெரியவனுக்கு ஏதோ மஷ்ரூம், கீரைன்னு கேம்ப்ல தின்னு வயிறு கெட்டுக்கிடக்கு. அப்பா உனக்குனு ஸ்பெஷலா ஒரிகனொ கீரை போட்ட பிட்சா பண்ணித்தரப் போறேன். நீங்க வர ஃப்ளைட் சொல்லுங்கோ. அப்புறம் பேசலாம். ஓக்கே? பை."

"அப்பவே சொன்னேன். இந்தக் கீரைப் பைத்தியம் பிடிச்சுக் கண்டதைத் தின்னாதீங்கடின்னு. கேட்டாதானே. குழந்தைக்கு வந்த பிரச்னைக்கு கீரைதான் காரணம். பெரிசா போனா புடிச்சா சாப்பிடட்டும். இப்பருந்தே உப்பு உறைப்பு இல்லாம அடைப்பானேன்? பெரிய பொண்ணால இப்ப எனக்கும் பிரச்சனை வந்திடும்போல இருக்கு. லக்ஷ்மியை எதுக்கும் கொஞ்சம் கூடுதலா மஞ்சப்பொடி வாங்கி வெச்சிக்கச் சொல்லணும்" என்று நினைத்துக் கொண்டார் ரங்கண்ணா.

எல்லே சுவாமிநாதன்
More

வாசல் அனுபவம்
அம்மாவின் பிரார்த்தனை
Share: 




© Copyright 2020 Tamilonline