இலியோரா
|
|
|
|
|
ஐஃபோன் அலாரம் காலை ஆறு மணி என்பதைச் சுட்டி அடித்து ஓய்ந்தது. எழுந்து பல் விளக்கும்போது 'அதன்' நினைவு வந்தது. அன்று எப்படியும் கடைக்குப் போய் அதை வாங்கிவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். தோழிகளை மதிய உணவுக்கு அழைத்திருந்ததால் அதற்குண்டான வேலைகளைச் செய்யத் தொடங்கினேன். மதியம் அவர்களுடன் நேரம் போனதே தெரியாமல் அரட்டை அடித்தேன். அவர்கள் விடைபெற்றுச் சென்றவுடன் அதுவரை மறந்திருந்த அதன் நினைவு மறுபடியும் வந்தது. கடைக்குக் கிளம்ப ஆயத்தம் ஆனேன். அப்பொழுது தொலைபேசி ஒலித்தது. கல்லூரியில் படிக்கும் என் மகன். பேசி முடித்துவிட்டுக் கிளம்பினேன்.
செல்லும் வழியெல்லாம் அதை நினைத்தபடியே காரை ஓட்டினேன். கடையில் பால், காய்கறி எல்லாம் எடுத்தாகிவிட்டது. நான் அதைத் தேடினேன். கண்ணில் படவில்லை. இறுதியாகக் கண்கள் அதைக் கண்டன. ஒரு சிறிய சந்தோஷம். அதை எடுப்பதற்காக அந்தப் பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். "என்ன செக்-அவுட்டா?" என்ற சத்தம் கேட்டு திரும்பினேன். என்னுடைய நண்பர். மனதிற்குள் இவர் எங்க இங்க வந்தார் என்று நினைத்தபடியே, "ஆமாம் என்று சொல்லி அவருடன் அதை எடுக்காமல் செக்-அவுட் கவுன்டரை நோக்கி நடந்தேன். இருவரும் வெளியே வந்து அவரவர் காரை நோக்கி நடந்தோம். அதை வாங்க முடியவில்லை என்ற குறை இருந்தாலும் அடுத்த வாரம் வரும்போது வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து வீடு திரும்பினேன்.
ஒரு வாரம் ஓடிவிட்டது. அன்று ஞாயிற்றுக் கிழமை. மாலையில் கணவருடன் கடைக்குக் கிளம்பினேன். மாலையானதால் எல்லாரும் அடுத்த நாள் பள்ளி, அலுவலகம் செல்வதற்கான வேலையில் இருப்பார்கள், கடையில் தெரிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினத்தேன். இன்று எப்படியும் அதை வாங்கிவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். கடைக்குள் நுழையும் போதே என்னுடைய தோழி அவள் கணவருடன் கடைக்கு வந்திருப்பதைப் பார்த்துவிட்டேன். அப்பொழுதே தெரிந்துவிட்டது இன்றைக்கு நான் அதை வாங்கப் போவதில்லை என்று.
ஏன்தான் இப்படி அதை எடுப்பதற்கு வெட்கமாக இருக்கிறதோ என்று என்மீதே கோபம் வந்தது. அந்தக் காலத்தில் எல்லாம் இப்படி நாமே அதை எடுத்துக்கொண்டு வரமுடியாது. மருந்துக் கடையில் கேட்டு வாங்க வேண்டும். அப்போதெல்லாம் கடைக்குப் போய் என் அம்மா அதை வாங்கி வருவாள். ஆனால் எனக்கு ஏனோ அதை வாங்குவதில் அத்தனை வெட்கம்.அவர்கள் போய்விட்டால் நாம் அதை வாங்கிவிடலாம் என்று சும்மா சுத்திக்கொண்டு இருந்தேன்.
கடை மூடும் நேரம் ஆகிவிட்டது. அவர்கள் கிளம்புவதாகத் தெரியவில்லை. கூடவந்த என் கணவரோ என்ன செய்கிறாய், எல்லாம் எடுத்தாகி விட்டதே, கிளம்ப வேண்டியதுதானே என்று பொறுமை இழந்து பேசினார். அவர்களிடம் விடை பெற்று வருத்தத்துடன் அதை வாங்காமல் வெளியே வந்தேன். வரும் வழியில் அவர்களுக்கு ஏன் அத்தனை நேரம் ஆயிற்று என்று யோசித்தேன். ஒருவேளை அவளும் அதை வாங்கத்தான் வந்தாளோ, நான் போவதற்காகக் காத்திருந்தாளோ என்று நினைத்தேன். |
|
அடுத்த வாரம் வந்தது. அன்று பகலில் போய் வாங்கத் தீர்மானித்தேன். உள்ளே நுழைத்ததும் கடை முழுவதும் கண்களால் ஒரு அலசு அலசினேன். தெரிந்தவர்கள் ஒருவரும் இருக்கவில்லை. அப்பாடா என்று விறுவிறுவென்று நடந்து அதை எடுத்து ஷாப்பிங் கார்ட்டில் வைத்தேன். வீட்டிற்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களையும் வேகவேகமாக வைத்து எடுத்துக்கொண்டு கிளம்பினேன். அப்பாடா இன்று எடுத்துவிட்டோம் என்ற சந்தோஷத்துடன் வாங்கியதற்கான ரசீதைப் பெற்றுக் கொண்டு என் காரை நோக்கி நடந்தேன். கார் டிரங்க்கில் ஒவ்வொன்றாக வைத்தேன். எல்லாம் வைத்தாகி விட்டது. அதை வைக்கக் கையை அதன் அருகில் கொண்டு போனேன். "ஹாய்" என்று என் பெயரைச் சொல்லி அழைத்தது பரிச்சயமான குரல். திரும்பிப் பார்த்தால் என் நண்பரும் அவருடன் பணிபுரியும் சக அலுவலரும். இவர்கள் இங்கு என்ன செய்கிறார்கள் என்று நினைத்தேன்.
அவர்கள் அதைப் பார்த்திருப்பார்களோ என்ற சந்தேகம் வந்தது. அப்போதுதான் கடைக்கு வந்து கொண்டிருந்தார்கள் என்பதால் அதைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று தீர்மானித்து அவர்கள் கார் நிறுத்திய இடத்தை நோக்கி நடந்தேன். அவர்களின் நலன் விசாரித்துவிட்டு என் காரின் டிரைவர் பக்கக் கதவின் அருகில் வந்தேன்.
ஷாப்பிங் கார்ட்டில் இருந்த அதை அவர்கள் கடைக்குச் சென்றபின் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கையில், அவர், "You left something in your cart" என்று சொல்லிக்கொண்டே கடைக்குள் நுழைந்தார். அசடு வழிந்தவண்ணம் நான் யாருக்கும் தெரியாமல் வாங்கிய முடிச் சாயத்தை (Hair dye) எடுத்து காருக்குள் போட்டுவிட்டு, இத்தனை நாட்களாகக் காப்பற்றி வந்த என் இளமையின் ரகசியம் வெளியாகி விட்டதே என்ற வருத்தத்துடன் காரைக் கிளப்பினேன்.
சீதா நாராயணன் |
|
|
More
இலியோரா
|
|
|
|
|
|
|