|
|
|
பழுதடைந்த சிறுநீரகங்களைப் பற்றிச் சற்றே அதிகமாகக் கேள்விப்படத் தொடங்கியது கடந்த முப்பது ஆண்டுகளில்தான். அமெரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாகச் சிறுநீரகம் பழுதுபடுவது பெரும் பிரச்சனையாக உருவாகிக் கொண்டிருக்கிறது. பணக்கார நாடான அமெரிக்கா, தன் மெடிகேர் திட்டம் மூலம் 1972ஆம் ஆண்டு முதல் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கான பெரும்பான்மைச் செலவை ஏற்றுக்கொண்டு வருகிறது.
மெடிகேர் திட்டத்தில் உள்ள நோயாளிகளில் ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமே சிறுநீரக மாற்றுச்சிகிச்சை தேவைப்படுகிறது; எனினும், மெடிகேர் திட்டத்தின் ஐந்து சதவீதச் செலவு இந்த நோய்க்கு மட்டுமே செல்கிறது. இப்படிப்பட்ட விலை அதிகமான நோய்க்குச் செலவு செய்வது அவசியமா என்று ஒருபுறம் பொதுநலக் கொள்கை விவாதம் நடந்தாலும், சிறுநீரகம் பழுதாகாமல் பாதுகாக்கப் புதிய மருந்துகளும் பல்வகை பரிசோதனைகளும் இன்னொரு புறம் செலவை அதிகப்படுத்திக் கொண்டு உள்ளன. அமெரிக்காவின் நிலைமையே இதுவென்றால், வளரும் நாடான இந்தியாவில் இந்த நோய்க்கான செலவைக் கையிலிருந்தேயோ, பணிபுரியும் நிறுவனத்தின் காப்பீடு இருந்தால் அதன்மூலமோதான் சமாளிக்க முடிகிறது. ஏழைகளால் அரசாங்க மருத்துவமனைகளில் கூட இச்சிகிச்சைகளைப் பெறமுடிவதில்லை. இதற்கெல்லாம் மேலாகச் சிறுநீரகச் சந்தை ஆரம்பித்து ஏழைகளை ஏமாற்றிச் சூறையாடும் கூட்டங்களும் இந்தியாவில் உள்ளதாகப் பரவலான செய்திகள் வேறு.
இந்நிலையில், நோய்க்கான சிகிச்சை மற்றும் அதற்க்கான முன்னேற்பாடுகள் என்ன என்பதைப் பார்க்கலாம். ஆரம்பகால நோய்க்கான அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வகைகளை இந்தப் பகுதியில் முன்னரே (ஜூலை 2010 மற்றும் ஃபிப்ரவரி 2012 இதழ்களில்) அலசியுள்ளோம். சிறுநீரகம் பழுதுபட்டு 25-30% செயல்திறன் மட்டுமே உள்ளபோது மருத்துவர்கள் பொதுவாகச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பற்றி நோயாளிகளிடம் பேசத் தொடங்குவார்கள். மாற்றுச் சிகிச்சை இருவகைப்படும்: மாற்று உறுப்புப் பொருத்துதல் (transplant) மற்றும் கூழ்மப் பகுப்பால் (dialysis) சிறுநீரகத் தூய்மை. செயல்திறன் 10-15% அளவில் உள்ளபோது இச்சிகிச்சைகள் தொடங்க நேரிடும்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்பு உறவினரிடமிருந்தோ, உறவினரல்லாத ஒருவரிடமிருந்தோ அல்லது சடலத்திலிருந்தோ (cadaver) பெறப்படும். எப்படிப் பெற்றாலும் ரத்தவகைச் சேர்க்கை அவசியம். அதற்குமேல் HLA வகைச் சேர்க்கை என்பதும் முக்கியம். அறுவை சிகிச்சை கிட்டத்தட்ட 5-6 மணி நேரம் ஆகும்; அதைத் தாங்குவதற்கான இருதயச் செயல்திறன் அவசியம். அறுவை சிகிச்சை முடிந்த கையோடு, வாழ்க்கை முழுவதும் மறுதலிப்பு (Rejection) ஏற்படாமல் இருக்க மருந்துகள் உட்கொள்ள வேண்டும். இந்த மருந்துகள் பல பக்கவிளைவுகளைக் கொண்டன; குறிப்பாகத் தொற்றுநோய், நீரிழிவு, கொழுப்புச் சத்து அதிகமாதல் ஆகியவை ஏற்படக்கூடும். மேலும், எலும்பு தேய்ந்துபோதல் மற்றும் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகம். இருந்தாலும், இன்றைய தேதியில் உறுப்பு மாற்றே சிறந்த சிகிச்சையாக உள்ளது. பல்வகை சமூக மற்றும் அறிவியல் ரீதியான காரணங்களால் இது அனைவருக்கும் அமைவதில்லை. |
|
கூழ்மப் பகுப்பு இருவகைப்படும்: ஹீமோ டயாலிசிஸ் எனப்படும் வகையில் ரத்தம் வாரத்தில் மூன்றுமுறை சுத்திகரிக்கப்படுகிறது. அதே சமயத்தில் உடலில் தங்கியுள்ள நீரும் வெளியேறுகிறது. இச்சிகிச்சை முடியக் குறைந்தபட்சம் மூன்றரை முதல் நான்கு மணிநேரம் ஆகும். முடிந்தபின், பலமணி நேரத்துக்குச் சோர்வாக இருக்கலாம். சிகிச்சையில்லாத நாட்களில் பெரும்பாலும் மற்றவர்களைப் போல சாதாரணமாக எல்லா வேலைகளும் செய்யலாம். எனினும், உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்; இல்லையேல் நுரையீரலில் நீர் கோத்துக்கொண்டு அல்லது பொட்டாசியம் அளவு அதிகமாகி இதயம் பாதிக்கப்படலாம். இதைத் தவிரத் தொற்று மற்றும் பிற சிக்கல்கள் ஏற்ப்படலாம். கடந்த ஐந்தாண்டுகளில் இச்சிகிச்சை வீட்டிலேயே செய்து கொள்ளும் வசதி (Home hemodialysis) அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறது.
இரண்டாம் வகை கூழ்மப் பகுப்பு, வயிற்று உறுப்புக்களின் மேல் உரைபோல இருக்கும் பெரிடோனியத்தில் நீர் நிரப்பி வீட்டிலேயே செய்துகொள்வதாகும். தமது காலமுறைக்கேற்ப ஒரு நாளில் 4-5 முறை செய்துகொள்ளலாம். ஒவ்வொரு முறையும் 20 முதல் 30 நிமிடம்வரை இச்சிகிச்சைக்கு நேரமெடுக்கும். இதைச் செய்து கொள்வோர் பயணிப்பது சற்றே எளிது. உணவுக் கட்டுப்பாடு முதல்வகை போல் அவ்வளவு கடுமையாக இராது.
யாருக்கு எவ்வகை கூழ்மப் பகுப்பு ஏற்புடையது என்பதை நோயாளியும் மருத்துவரும் கலந்து ஆலோசித்து முடிவுசெய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்குப் பார்க்க வேண்டிய வலைமனைகள்: www.kidney.org அல்லது www.aakp.org
டாக்டர். நிரஞ்சன், கனெக்டிகட் |
|
|
|
|
|
|
|