Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | அமெரிக்க அனுபவம் | பொது | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
சிறுகதை
புது சோஃபா
பிளாஸ்டிக் பணம்
யாருக்கு அம்மா புரியும்?
- கீதா பென்னெட்|செப்டம்பர் 2013||(4 Comments)
Share:
அம்மா... மே மாதத்தில் மதர்ஸ் டே, அன்னையர் தினம் என்று அமெரிக்காவில் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள், சென்னையில் இருக்கும் உனக்கு நான் கடிதம் எழுதுகிறேன். ஆனால் தபாலில் அனுப்ப மாட்டேன்.

இந்தக் கடிதம் நானாக எழுதவில்லை. டாக்டர் லலிதா கிருஷ்ணமூர்த்தி சொல்லிதான் ஆரம்பிக்கிறேன். போன மாதம் அரிசோனாவிலிருந்து வந்து சென்னையில் நம் வீட்டில் உன்னுடன் ஒரு மாதம் தங்கினேன். திரும்பி வந்ததிலிருந்து மனசு கல்லாகக் கனக்கிறது. என் நிலையைக் கண்டு இரண்டு வாரங்களுக்கு முன் திடீரென்று உன் மாப்பிள்ளை சீனு தான் 'லோலிடான்னு ஒரு சைக்கியாட்ரிஸ்ட் பத்தி ராஜா சொன்னான். புதுசா வந்திருக்காளாம். அனுபவம் மிகுந்தவள். உன் ஒய்ஃபை அனுப்புன்னு சொன்னான்..' என்று அனுப்பினார்.

அப்பாயிண்ட்மெண்ட் ஏற்படுத்திக் கொண்டு லோலிடாவைப் பார்க்க சென்றேன். அவருக்கு வயது ஐம்பதுக்குமேல் இருக்கும். பக்கா தமிழச்சிதான். "என் பெயர் லலிதா. அது அமெரிக்கன்ஸ் வாயிலே நுழையாததால் லோலிடான்னு மாத்திக்கிட்டேன்" என்றவர் என்னிடம் நிறையக் கேள்விகள் கேட்டார். "உன்னையும் என்னையும் தவிர வேறு யாருக்கும் நீ சொல்லப்போவது எதுவும் போகாது. அதனால் மனம் விட்டுப் பேசு" என்று அவர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன். அழுதேன். அவர் சொன்னபடியே உனக்குக் கடிதம் எழுத உட்கார்ந்திருக்கிறேன்.

அம்மா. எனக்குத் தெரிந்த மட்டிலும், 'அன்று இன்று' என்று எழுதப் போகிறேன். எனக்கு அப்போது வயது ஐந்து. உனக்கு நாற்பது. இன்று எனக்கு நாற்பது.
அன்று நீ "மீனா குட்டி, சீக்கிரம் வாடா. பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆச்சு. குளிப்பாட்டி விடறேன்" என்று என்னை அழைப்பாய். என் உடைகளைக் கழட்டுவாய். வென்னீரைச் சரியான சூட்டில் விளாவி, வாசனை சோப் தடவி குளிப்பாட்டி விடுவாய். வாரம் இரண்டு நாட்கள் நல்லெண்ணெயில் மருதாணி, சிவப்புச் செம்பருத்தி என்று சேர்த்துக் காய்ச்சி, பரபரவென்று தலையில் தேய்த்துவிட்டு, சீயக்காய்த் தூள் உபயோகிப்பாய். கண்ணில் பொடி விழுந்துவிட்டது என்று நான் படுத்துவேன். குளித்து வந்தவுடன் சட்டென்று டர்கிஷ் டவலைச் சுற்றி விடுவாய். உடம்பு நிறைய டால்கம் பவுடரைத் தெளித்துவிட்டு ஏற்கனவே அயர்ன் பண்ணி வைத்த உடைகளை மாட்டி விடுவாய். முகத்திற்கும் பவுடர் போட்டு கண்ணுக்கு மை இட்டு அருமையாக 'என் மீனு குட்டிக்கு திருஷ்டி படக்கூடாது' என்று கன்னத்தில் ஒரு பொட்டு வைப்பாய்.

இன்று நான் எலும்புக் கூடாக இருக்கும் உன்னை எழுப்பி உட்கார வைக்கிறேன். துளி நல்லெண்ணெயை உன் வெளுத்த முடியில் தடவிவிட்டுப் பின் உன் கையைப் பிடித்து பாத்ரூம் அழைத்துப் போவதற்குள் என்ன பாடு படுத்துகிறாய்? உன் புடவையைக் கழட்ட விடுகிறாயா? உன்னைக் குளிப்பாட்டுவதற்குள் எனக்கு வேர்த்து விறுவிறுத்து விடுகிறது. அதற்குமேல் உன் உடம்பைத் துடைத்து பேபி பவுடரைத் தெளித்து விட்டு நைட்கவுனை மாட்டி விடுவதற்குள் நீ அங்கிருந்து அப்படியே ஈரத்துடன் ஓடிவிடுகிறாய். கால் வழுக்கி விழுந்து விடுவாயோ என்று எனக்கு பயமாக இருக்கிறது.

அன்று என்னை உன் முன்னால் உட்கார்த்தி வைத்து என் நீள முடியைப் பிரித்துச் சிக்கு இல்லாமல் வெகுநேரம் வாரிவிட்டு இரண்டு பின்னல்கள் போட்டு விடுவாய். நினைவு இருக்கிறதா? நானோ 'போறும்மா... என்னை விடு' என்று கெஞ்சுவேன். அதற்கு பதிலாகச் செல்லமாக லேசாகத் தலையில் குட்டி ' ஏய். அசக்காதேடி. இன்னும் கொஞ்ச நேரம்தான். பொறுமையா இரேன்' என்று அடிக்கடி சொல்லுவாய். இன்று உன் தலையில் இருக்கிற கொஞ்ச முடியை வாருவதற்குள் எவ்வளவு படுத்தி எடுக்கிறாய்? 'வெள்ளை முடியை உச்சந்தலையில் சின்ன முடிச்சாகப் போட்டுவிடுகிறேன். அசக்காமல் காட்டு...' என்று உன்னை நான் தலையில் குட்டாமல் கோபப்படாமல் சொல்கிறேன்.

அன்று 'ஏண்டா.. சாப்பிட இப்படிப் படுத்தறே? இந்தக் கீரையை மட்டும் கொஞ்சமாவது சாப்பிடு. இதோ ஏரோப்ளேன் வருது பார்... ஆ .... அம்...' என்னைப் படுத்தி எடுத்து தட்டில் இருக்கிற பருப்பு சாதம், கீரை, பச்சைக் காய்கறிகள் என்று ஊட்டிவிடுவாய். எத்தனை நாள் ராத்திரி வாசலில் நின்றுகொண்டு என்னை இடுப்பில் வைத்துக்கொண்டு 'இதோ... ஆச்சுன்னு சாப்பிடணும்... இல்லாட்டா ரெட்டைக் கண்ணன் வந்து உன்னைப் பிடிச்சுப்பான்..' என்று மிரட்டியிருக்கிறாய்? சில சமயங்களில் 'இதோ. நிலா பாரு... கண்ணோல்லியோ.. ஆ காட்டு..' என்று தாஜா பண்ணுவாய். இன்று நான் உனக்குப் பிடிக்குமே என்று பாகற்காய் பிட்லையை என் கையாலேயே பண்ணினேன். சேப்பங்கிழங்கு பொரியல் வறுத்தேன். ஆனால் எவ்வளவு கெஞ்சியும் நீ வாயைத் திறக்கவே இல்லை. எப்படியோ உன் வாயில் கொஞ்சம் ஊட்டினேன். நீயோ 'சே! கசப்பு..' என்று அதை அப்படியே என் மேலே துப்பினாய். உன் கையைப் பிடித்துக்கொண்டு நான் வெகு நேரம் கண்ணீர் விட்டது உனக்குத் தெரியுமா? அன்று என்னைக் கைப்பிடித்து வெளியே கூட்டிப் போவாய். கடைக்குப் போனாலும், ஏன், வாசலுக்குப் போனால்கூட, உன் விரல்கள் என் குஞ்சு விரல்களை எப்போதும் பற்றியிருக்கும். அதே மாதிரிதான் இன்று உன்னைக் கைப்பிடித்து டாக்டர் வீட்டுக்குக் கூட்டிப் போய்வந்தேன்.
அன்று எனக்கு எப்படி எல்லாம் புதிது புதிதாக உடுத்தி அழகு பார்ப்பாய்? நீ எனக்கு ஒரு புது கவுன் மாட்டின உடனே நான் அதைக் கழற்றி எறிந்து விடுவேனாம். 'ஏண்டி இப்படி படுத்தறே. இந்தப் பூப்போட்ட கவுன் உனக்காக விட்டல் ராவ் கிட்டே சொல்லி தைச்சது. வாடி ராஜாத்தி... இதைப் போட்டுக்கோ. என் கண்ணே பட்டுடும் போல் இருக்கே' என்று எனக்கு திருஷ்டி கழித்துக் கொட்டுவாய். இன்று உன் உடல் வற்றி, வெறும் எலும்புக்கூடுதான் இருக்கிறது. வெளியே போக வேண்டுமென்றால் மட்டுமே உனக்குப் புடவை கட்டிவிடுவேன். ஆனால் நீ அதையும் அப்படியே அவிழ்த்துப் போட்டுவிடுகிறாய். நான் மறுபடி கட்டுகிறேன்.

அம்மா! அப்பா நம் இருவரையும் தவிக்கவிட்டு இறந்த பின்னும் என்னை எப்படியெல்லாம் ஆசை ஆசையாய் வளர்த்தாய்? 'என் ராஜாத்தியைக் கொத்திண்டு போறதுக்கு ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவிலிருந்து வரத்தான் போறானாக்கும்' என்று ஏகத்துக்கும் பெருமையாக அலட்டுவாய். அதே மாதிரி ஸ்ரீனிவாஸ் என்னை ஒரு கல்யாணத்தில் பார்த்தான். அமெரிக்கா திரும்பிப் போவதற்குள் இவளை என் மனைவியாக்கிக் கொண்டுதான் திரும்புவேன் என்று ஒற்றைக் காலில் நின்றான். நீயோ மிகப் பெருமையாக 'எப்படி? நான் சொன்னதுதானே நடந்தது!' என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாய். அமெரிக்காவில் கணவன், இரண்டு குழந்தைகள் என்று குடித்தனம் செய்யும் எனக்கு உன்னோடு வருஷத்துக்கு ஓரிரு வாரங்களே இருக்க முடிந்தது என்றாலும் அதையும் நீ ஏற்றுக்கொண்டாய்.

இரண்டு மாதங்களுக்கு முன் டாக்டர் இந்திரஜித் என்னை நேரடியாக ஃபோனில் கூப்பிட்டு 'உன் அம்மாவுக்கு அல்ச்ஷைமர் முற்றிவிட்டது. அவளுக்கு எதுவும், யாரையும் நினைவில் இல்லை. இனி அவளை நர்சிங் ஹோமில் சேர்ப்பது தவிர வேறொன்றும் செய்யமுடியாது. நீ உடனே புறப்பட்டு வா' என்று சொல்லிவிட்டார்.

நானும் அடுத்த விமானத்தில் வந்தேன். என் அம்மா! கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த என்னையே உனக்கு அடையாளம் தெரியவில்லை. யாரையோ மூன்றாம் மனுஷியைப் பார்ப்பது போல்தான் பார்த்தாய். ஆனால் அன்று குழந்தையாக இருந்த எனக்கு நீ செய்த அத்தனையையும் உனக்கு நான் திரும்பிச் செய்தேன். என்னுடைய மன திருப்திக்காக மட்டுமே உன்னை என் குழந்தையாகவே எண்ணிச் சீராட்டினேன். தாலாட்டினேன். அதற்காவது எனக்குக் கொடுப்பினை இருந்ததே. அதற்கு அந்த கடவுளுக்கு நன்றி!

அம்மா! எந்தச் செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு. ஏனம்மா எனக்கு அமெரிக்க மாப்பிள்ளை வேண்டும் என்று ஆசைப்பட்டாய்? உன் கனவு நிறைவேறியது. ஆனால் நான்....? உன் உயிர் போகும்வரை உன்கூடவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் என் கணவன், குழந்தைகளை விட்டுவிட்டு நான் வர முடியுமா? அதனால்தான் தினம் உனக்கு ஒரு கடிதம் எழுதுவேன். ஆனால் போஸ்ட் செய்ய வேண்டியதில்லை. இதுதான் எனக்குச் சிகிச்சையாம்.

பெற்ற பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டுத் தனியாக வாழும் பெற்றோரைப் பற்றித்தான் எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் பெற்றவரைத் தனியாக விட்டுவிட்டு வந்து வெளிநாட்டில் வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கும் என்னைப் போன்றவர்களின் கண்ணீர் யாருக்கு அம்மா புரியும்?

கீதா பென்னெட்
More

புது சோஃபா
பிளாஸ்டிக் பணம்
Share: 




© Copyright 2020 Tamilonline