Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | பொது | அமெரிக்க அனுபவம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | Events Calendar | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
வயசு காலத்தில்
தேனக்காவின் கல்யாணம்
ஒரு மணி நேரம்
- விக்ரமாதித்தன்|ஜூலை 2013||(1 Comment)
Share:
அவள் மென்மையானவள். இந்த திடீர் அதிர்ச்சியை அவள் தாங்கமாட்டாள் என்று உறவினர்கள், அவளுடைய கணவன் இறந்த துக்கச் செய்தியை வள்ளியம்மையிடம் நிதானமாக, அதிக ஆரவாரமில்லாமல் கூறினர்.

அவளுடைய சகோதரி சிந்தாமணி, பாதி வரிகளை விழுங்கி, குறிப்பினால் அவளுடைய கணவனின் மறைவை உணர்த்தினாள். அப்போது அவர்களின் குடும்ப நண்பர் சிங்காரவேலனும் அங்கே நின்றுகொண்டிருந்தார். தன்னுடைய பத்திரிக்கைக்கு ரயில் விபத்தில் இறந்தவர்களின் பெயர்களை நிருபர் கொடுக்க, அதில் வள்ளியம்மையின் கணவர் கபிலனின் பெயரைப் பார்த்து முதலில் அதிர்ச்சியில் உறைந்தவர் அவரே! தன் பால்ய சிநேகிதனின் மகளான வள்ளியம்மையைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்து வருபவர் சிங்காரவேலர். சுட்டிப்பெண்ணாய், குறும்பும், துள்ளலும், ஓட்டமுமாய் குழந்தைப் பருவம், கன்னிப் பருவம் என இருந்த வள்ளியம்மை, கல்யாணத்திற்குப் பிறகு நேரெதிர். பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டிலும் பொறுமைசாலி எனப் பெயரெடுத்து, அடக்கமான பெண் இவளே எனும்படியாக அனைவரின் பாராட்டையும் பெற்றவள். கபிலன் ஏறக்குறைய இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் அவள் குடும்பத்தை நடத்திப்போவதை அவர் அறியாதவரில்லை. "இந்த நல்லப் பெண் கட்டுக் கழுத்தியாக மஞ்சள் குங்குமத்தோடு நெடுநாள் வாழவேண்டும்" என்று வேண்டுபவர் சிங்காரவேலர்.

நிருபர் சேதி கொண்டுவந்தாலும், இறந்தது கபிலன்தானா என்பதை ரயில்வே அதிகாரி ஒருவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு உறுதிசெய்த பின்னரே, வள்ளியம்மையைக் காண அவசர அவசரமாக விரைந்தார்.

துக்கச் செய்தியைக் கேட்டதும், வள்ளியம்மையிடம் ஒரு வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது. மற்ற பெண்கள் போன்று அவள் தேம்பித் தேம்பி அழவில்லை. தன்னுடைய சகோதரி சிந்தாமணியை அணைத்துக்கொண்டு ஒருமுறை ஓ என்று அழுதுவிட்டு, சுவற்றில் ஆணியில் மாட்டப்பட்டிருந்த சாவியைப் படக்கென எடுத்துக்கொண்டு மடமடவென மாடிக்கு விரைந்து, பூட்டைத் திறந்து, உள்ளுக்குள் நுழைந்து மாடிக்கதவை அடைத்துக்கொண்டு விட்டாள். இதனைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவள் ஆர்ப்பாட்டம் செய்வாள் அல்லது துக்கத்தில் உறைந்து நிற்பாள் என்றே அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவளுடைய நடவடிக்கை வேறு விதமாய் இருந்தது.

ஒரு வரவேற்பறை, ஹால், தனியறை, குளியலறை, கழிப்பறை எனக் கச்சிதமான மாடிப்பகுதி. குடி, சூதாட்டம், கூத்தி எனக் கபிலனின் சாம்ராஜ்யம் அது. வேலைக்காரி போல் சுத்தம் செய்ய மட்டுமே இவளைக் கூப்பிடுவான். கபிலனின் அந்தப்புரம் இனி இவள் வசம்.

மாடியறைக்குள் ஒரு நாற்காலியில் அமர்ந்தாள் வள்ளியம்மை. அக்கணம் அவள் தன்னுடைய உடம்பில் ஒரு புது உற்சாகத்தை உணர்ந்தாள். என்றைக்கும் திறந்திருக்கும் அந்த ஜன்னலிலிருந்து ஒரு குளிர்ச்சியுடன் மெல்லிய தென்றல் அவள் முகத்தை வருடிச் சென்றது. பல நாட்களுக்கு முன்பு குடுவையில் செருகிவைத்த மரிக்கொழுந்துத் துளிர் வாடாமல் இருப்பது அவள் கண்களுக்குப் புலப்பட்டது. சமையலறை வாடையை மட்டுமே சுவாசித்த அவளது நாசிக்கு இன்று மழையின் மண்வாசம் சட்டென்று புலப்பட்டது. தன் கணவனின் கட்டளைகளை மட்டுமே கேட்டுச் சலித்த அவளது காதுகளுக்கு, இன்று "அம்மா! காய்" என்று கூவிச்செல்லும் தள்ளுவண்டிக்காரனின் கூவல் புதுமையாகக் கேட்டது. தூரத்து தொழிற்சாலையில் ஒலிக்கும் மணியோசை அவளுக்கு அமுதகானம்போல் கேட்டது. தன்னைச் சுற்றிலும் பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிக் கூட்டம் சிறகடித்துப் பறப்பது போன்று உணர்ந்தாள்.

ஜன்னலின் வழியாக வெளியே பார்த்தாள். மழைக்கு அடிவாரம் போட்ட வானில் கருமை நீங்கி வெளிர்த்திருந்தது வெண்மேகங்கள் தன்னை வரவேற்பதுபோல் உணர்ந்தாள். "என்னே ஒரு மகிழ்ச்சி! யாரிடமும் சொல்லமுடியாத நெகிழ்ச்சி!" கவி வரிகளாய் அவள் வாயில் உதிர்ந்தன.

கட்டிலின்மீது தாறுமாறாகக் கிடந்த விரிப்பு, தலையணை, போர்வை என அனைத்தையும் எடுத்துக் கீழே வீசினாள். "குப்பை!" என ஆசிர்வாதம் செய்துவிட்டு, வெற்றுக் கட்டிலில் படுத்து, தனது இரு கைகளையும் மடித்துத் தன் சிரத்தின்கீழ் வைத்து அண்ணாந்தபடி விழிகளைத் துழாவவிட்டு யோசிக்கலானாள். சுவற்றின் மேல்மூலையில் அவள் கல்யாணம் ஆகிவந்த கையோடு மாட்டிய சிவன்-பார்வதி படம் மங்கிப்போன நிலையிலும் பளிச்சென அவள் கண்ணில் பட்டது. தொண்டையை நீவிவிட்டபடி மேன்மையாய்க் களுக்கெனச் சிரித்தாள். சிவனுக்கு நஞ்சு தொண்டையில் நின்றதுபோல, வள்ளியம்மையின் சோகம் தொண்டயுடன் நின்றது அவளுக்குப் புரிந்தது.

சிறு பிள்ளையாக இருக்கும்போது, தூங்குவதற்குக்கூட அழுது ஆர்ப்பாட்டம் செய்தவள், இன்று தன் கணவன் இறந்துவிட்ட செய்தி கேட்டு ஒரு உணர்வுமில்லாமல் இருந்தாள்.

"அதனாலென்ன?" அவள் வாய் முணுமுணுத்தது.
சிறு வயதில் கட்டுப்பாடுகள் இல்லாமல் வளர்ந்தவள், கட்டுப்பாடுகளே வாழ்க்கையாக மாறி ஒன்றல்ல இரண்டல்ல, பதினேழு ஆண்டுகள் கொத்தடிமையாக வாழ்ந்ததை உணர்ந்தாள். இம் என்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்பதாகப் போன வாழ்க்கையை எண்ணியபடியே ஜன்னல் வழியே வானத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தவள் திடீரென, பல வண்ண வானவில் தோன்றி, தன்னை வெளிச்சத்திற்கு அழைப்பதைக் கண்டாள்.

கண்ணுள் இறங்கிய அந்த வண்ணப் பூரிப்பில், பல நாட்களாகக் காத்துக்கொண்டிருந்த ஒன்றை இன்று திடீரென அடைந்துவிட்டது போன்றதொரு உணர்வு அவளுக்குள் எழுந்தது. ஆனால் அந்த "ஒன்று" எது? அது எது என்பதை விவரிக்க வார்த்தைகள் அவளிடம் இல்லை. ஆனால் அது தன்னுடைய உயிரோடு உயிராகக் கலந்த ஒன்று என்பதுமட்டும் புரிந்தது அவளுக்கு.

சிறுவயதில் அவள் கேட்ட கதையில் நிகழ்ந்ததுபோல, வானத்திலிருந்து ஒரு அதிசயக் கம்பளம் வேறொரு உலகத்திற்கு அவளைக் கூட்டிச் செல்வதற்காக அவளை நோக்கிப் பறந்து வருவது போல அவள் உணர்ந்தாள், முல்லை அரும்புகள் குப்பென மலர்ந்து அந்த அறை முழுவதிலும் வியாபித்தது போன்று அவள் உணர்ந்தாள். அவளுடைய மார்பகங்கள் மாறி மாறித் துடித்தன. அவள் காத்துக்கொண்டிருந்த ஒன்று அவளை நெருங்கிவிட்டதைப்போல அவள் உணர்ந்தாள். அதை வரவேற்றுத் தனதாக்கிக்கொள்ள மனதைத் தயார்படுத்திக் கொண்டாள். அவளது கைகள் தன்னிச்சையாக முன் நீண்டன.

அக்கணம், உழைப்பு — உழைப்பு — உழைப்பு ஒன்றே வாழ்க்கையென — உழைத்துக் களைத்து வறண்டு கிடந்த தனது இரண்டு கைகளையும் கண்டு வெட்கித் தலைகுனிந்தாள். செருப்பாலும், கொம்பாலும், துடைப்பத்தாலும் தான் வாங்கிக் குவித்த தேக அடையாளங்களை எண்ணிப் பார்த்தாள். கண்கள் பிதுங்குமளவுக்கு மென்னியைப் பலமுறை கபிலன் நெறித்ததால் கூம்பிப்போன நெஞ்சுக்குழியைத் அங்குலம் அங்குலமாகத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.

குறையைத் தன்னிடத்திலே வைத்துக்கொண்டு, ‘கொட்டி மாடு’ என்று சொல்லிச் சொல்லி அவன் எட்டி எட்டி உதைத்த வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டாள். "மறைக்க முடியாத வடுக்கள் மறக்கமுடியாத அரக்கன்," அவளுடைய நா அவளுடைய அனுமதி இல்லாமலே வார்த்தைகளை உதிர்த்தது. "விடுதலை! விடுதலை! விடுதலை!" இசை நயமாக அவள் உதடு மெல்ல முழங்கியது.

அக்கணம் யாருமே இல்லாத அந்த அறையில் அவளுடைய கண்கள் விட்டத்தில் எதையோ உற்றுப் பார்த்தபடி இருந்தன. அவளது உடம்பில் ரத்த ஓட்டம் பலமடங்கு அதிகமானது. இருதயம் வேகமாய்த் துடித்துக்கொண்டே இருத்தது. அவளின் தலைக்குப் பின்னால் ஒரு ஒளி தோன்றியது, அது உடல்முழுவதும் பரவி அவளைச் சிலிர்க்க வைத்தது. அவளுடைய நாடி நரம்புகளில் ஒரு புத்துணர்ச்சி பரவியது.

தன்னை ஆட்கொண்ட இந்தப் புதிய உணர்வையும், அதனுடைய வலிமையையும் எண்ணி அவள் மெய்மறந்தாள். இது சாதரணமான ஒரு நிகழ்வல்ல என்பதை உணர்ந்த அவள், அதை மனதாரப் போற்றினாள்.

சாவு விழுந்த வீட்டில் இப்படியும் கூட எண்ண முடியுமா? நகராத கைகள், பொலிவில்லாத முகம், பஞ்சடைந்த கண்கள் என்றபடி கிடக்கும் இறந்தவரைப் பார்த்தால், பொதுவாக எவருக்கும் கண்ணீர் பாய்ந்தோடும் என்று அவளுக்குத் தெரியும்.

ஆனால், தன்னை என்றைக்குமே அன்போடு பார்க்காத முகம், அரவணைக்காத கைகள், மனைவி என்றால் அடிமை என்றே நினைத்துவிட்ட மனம் – இவற்றைக் கொண்டிருந்த ஒரு ஜடம்தான் இன்று அவள்முன்னே ஒரு உணர்வும் காட்டாத உயிரற்ற பொருளாகக் காட்சியளிக்கப் போகிறது. "வரட்டும்! அந்த ஜடத்தைப் பார்த்து நானும் எந்த உணர்வையும் காட்டக்கூடாது" என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

"ஆனால் இங்குள்ள கூட்டத்திற்காகவேனும் கொஞ்சம் அழவேண்டும்" என்று உள்ளம் சொல்ல "பிணம் வரட்டும்! கண்ணீரை வரவழைத்துக் கொள்ளலாம்" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

அதே கணம் அவளுடைய எண்ணங்களை முன்னோக்கிச் செலுத்தினாள். வரப்போகிற வருடங்கள் அனைத்தும் அவளுடையதே, அவளிடமிருந்து அதைப் பறிக்க எவருமில்லை. இரு கரங்களையும் நீட்டி அந்தத் தருணங்களை வரவேற்றாள்.

வரும் காலங்களில், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தனிமையே அவளுடைய வாழ்க்கை. ஆனால் தனிமையிலும் ஒரு இனிமை, ஏனெனில் அது அவளுடைய வாழ்க்கை. அதைப் பறிக்க யாருமில்லை. அணையில்லா நதிபோலத் தான் நினைத்ததைச் செய்ய அவளுக்குச் சுதந்திரம் உண்டு. பிறரின் அடிமைப்படுத்தும் ஆசைகளுக்கு இனி அவள் ஆளாகவேண்டியதில்லை. பெண்ணை அடிமைப்படுத்தும் குணம் படைத்தவர்கள், அதை ஒரு குற்றமாகக் கருதாமல் அதை மரபாகக் கருதுவதை அவள் வெறுத்தாள்.

"ஓரிரு குழந்தைகளாவது பிறந்திருக்கலாம். சொந்தம் எனச் சொல்ல!" ஆனால் அவை அவனையே உரித்து வந்திருந்தால்? அது எத்தனை கொடுமையாய் இருந்திருக்கும்? கொட்டி மாடு என எட்டி எட்டி உதைத்தானே அதுவே மேல் என்றல்லவா ஆகியிருந்திருக்கும்?

இத்தனைக் கொடுமைக்கிடையிலும் கபிலனைச் சில நேரங்கள் காதலித்ததை அவளால் மறுக்க முடியவில்ல. ஆனால் அவனைக் காதலித்ததைவிட அவனை வெறுத்த நேரங்களே அதிகம். பட்ட கஷ்டத்துக்குப் பரிசாக அவள் தற்போது அடைந்துள்ள பேரானந்தம் அளவிட முடியாததாக இருந்தது. எனவே கபிலனை அவனது மரணத்தோடு மறந்து விடுவது என முடிவெடுத்துவிட்டாள்.

"விடுதலை! உடலுக்கும் உள்ளத்துக்கும் இன்று முதல் விடுதலை!" என்று தனக்குள் மீண்டும் முணுமுணுத்துக் கொண்டாள்.

மாடியின் கதவை அடைத்துக்கொண்டு உள்ளே சென்றவள் என்ன செய்கிறாள் என்றறியாமல் வெளியில் உள்ளவர்கள் பயந்துபோயினர். "ஒருவேளை தற்கொலை செய்து கொண்டுவிட்டாளோ?" சிந்தாமணி பதறிப்போய் கதவைத் தட்டினாள். பதிலேதும் வராததால், கதவின் சாவித் துளையில் சிரமப்பட்டுப் பார்த்தாள். எதுவும் தெரியவில்லை. தங்கை தற்கொலை செய்துகொண்டுவிட்டாள் என்று பதறி "வள்ளியம்மை! என்ன செய்கின்றாய் நீ! உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன் எனக்காக கதவைத் திற!" என்று வேண்டினாள்.

உள்ளே நாற்காலியில் அமர்ந்தபடியே வரப்போகின்ற மழைக்காலம், பனிக்காலம், இலையுதிர்காலம் மற்றும் வெயில்காலங்களில் தான் என்ன செய்வது என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்த வள்ளியம்மை உள்ளிருந்தபடியே "நான் நன்றாகத்தான் இருக்கின்றேன். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்" என்று கடுமையாகப் பேசினாள்.

"வெளியே வாயேன்!"

"கொஞ்ச நேரம் என்னைத் தனியாய் விடுங்களேன்!"

சிறிது நேரத்திற்கு பின், தானாக வந்து கதவைத் திறந்து கண்ணீர் மல்க தன்னுடைய சகோதரியின் கரம் பிடித்தபடியே, மெதுவாகப் படிக்கட்டுகளில் இறங்கி, சிங்காரவேலனை நோக்கி நடந்தாள். அவரிடம் தனது கணவனின் மரணத்திற்குப் பிறகு, தான் எவருடனும் செல்லாமல், அந்த வீட்டிலேயே தனியாக வாழ்வதையே விரும்புவதையும், எவரும் இவ்விஷயத்தில் மாற்றுக் கருத்தைச் சொல்லி அவளை நிர்ப்பந்திக்காதபடி பார்த்துக்கொள்ளுமாறு சொல்லி வைத்துவிடவேண்டும் என்று நினைத்தாள்.

சிங்காரவேலனை நோக்கி அவள் நடந்துகொண்டிருந்த அந்த நேரத்தில் யாரோ ஒருவர் வீட்டின் வெளிகேட்டை, மெதுவாகத் திறந்து, வீட்டுக்குள் நடந்து வந்தார். அவர் வேறு யாரும் அல்ல கபிலன்தான்!

வழக்கம் போன்று, அதே படாடோபம், மைனர் செயின், வலக்கையில் வாட்ச், கூலிங் கிளாஸ், சிக்கென்ற டி ஷர்ட் அணிந்து உள்ளே வந்த கபிலனை வள்ளியம்மை அப்படியே அதிர்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தாள். எத்தனை அக்கிரமம் செய்தாலும், எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ளாத கபிலனின் ராசி அவளுக்குத் தெரியும். விபத்து நடந்த இடத்தில் அவன் இல்லை, தப்பி விட்டான் என்பது உறுதியானது. சிங்காரவேலர் விபத்துபற்றி அவனிடம் கேட்டபோது, அவ்வாறு ஒரு விபத்து நடந்தது என்பதைப் பற்றிக்கூட அறியாமல் இருந்தான். அனைவர் கண்ணிலும் இருந்த சோகத்தைக் கண்டு, விஷயத்தைப் புரிந்து எகத்தாளமாகச் சிரித்தான். அவனது சிரிப்பின் கெக்கலிப்பு வீட்டுக்குள்ளே ஒலித்து மீண்டது.

வள்ளியம்மையின் காலுக்குக் கீழே பூமி நழுவியது. அவளின் பின்மண்டையில் ஏற்கனவே கிளம்பித் தயாராய் நின்று கொண்டிருந்த ஒளி அவளது கண்களின் வழியே புறப்பட்டது.

ஆம்புலன்ஸ் விரைந்தது; விடுபட்ட பிராணனைச் சிறை மீட்பதா? கணவன் உயிருடன் திரும்ப வந்ததின் இன்ப அதிர்ச்சி தாளமுடியாமல் வள்ளியம்மை இறந்துவிட்டதாக மருத்துவர்கள்அறிவித்தனர்.

விக்ரமாதித்தன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

கேட் ஷோபேன் (Kate Chopin):
1850-1904; அமெரிக்க எழுத்தாளர்; பெண்ணிய எழுத்துக்களின் முன்னோடி.

விக்ரமாதித்தன்:
வயது 18; அமெரிக்காவில் கல்லூரி மாணவர். தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து வருபவர். சிறந்த ஆங்கிலப் படைப்புக்களைத் தமிழாக்கம் செய்ய ஆர்வம் கொண்டவர்.
More

வயசு காலத்தில்
தேனக்காவின் கல்யாணம்
Share: 




© Copyright 2020 Tamilonline