Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | நூல் அறிமுகம் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
அம்மாவுக்குத் தெரியாமல்....
நெஞ்சத்துக் கோடாமை
- இளங்கோ மெய்யப்பன்|ஜூன் 2013||(1 Comment)
Share:
இது மே 22ம் தேதி அன்று நடந்தது, மூன்று வருடங்களுக்கு முன்.

கல்லுப்பட்டியிலிருந்து சரியாக 2 மணிக்கு காரைக்குடிக்குப் புறப்பட்டோம். நான், அம்மா, சோகி ஆச்சி. அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. எட்டு மணி நேர மின்வெட்டு எங்களையெல்லாம் வாட்டிக் கொண்டிருந்தது. நான் அமெரிக்காவிலிருந்து சென்றிறங்கிய இரண்டாவது நாள். மே 23ம் தேதி விழாவுக்காகச் சொந்தங்கள் ஒருவர் ஒருவராக வரத் தொடங்கிவிட்டனர்.

ஜெனரேட்டர் தினமும் எட்டு மணி நேரம் ஓட வேண்டிய சூழ்நிலை. பாவம் அண்டை வீட்டுக்காரர்கள். எட்டு மணி நேர ஜெனரேட்டர் சத்தமும் அது விடும் புகையும் அவர்களை இம்சைப்படுத்தி இருக்கவேண்டும். தெரிந்த குடும்பத்தில் விழா என்று எண்ணிச் சும்மா இருந்திருக்கவேண்டும். நாங்கள் இருந்த ஐந்து நாட்களில் ஒரு முறைகூடப் புகார் வரவில்லை.

அந்தக் கடும் வெயிலில் வண்டியில் உட்கார்ந்திருந்தது கொஞ்சம் சுகமாகத்தான் இருந்தது. கல்லுப்பட்டி வாழ்க்கையில் வண்டி ஒன்றில்தான் குளிர்சாதன வசதி உண்டு. அதை ரசித்துக் கொண்டிருந்த அதே வேளையில் வெயிலில் நடமாடியவர்களைப் பார்த்துச் சற்று வருத்தமாகவும் இருந்தது. பொழப்பு நடந்தாகணுமே.

வண்டி காரைக்குடியின் கல்லுக்கட்டி பகுதியைச் சென்றடைந்தது. எல்லாம் ஒருவழிப் பாதையாக மாறிவிட்டன. ஓட்டுனர் ஜெமினி ரொட்டிக் கடையின் முன்னால் எங்களை இறக்கிவிட்டு, வண்டி நிறுத்த இடந்தேடும் பெரும்பணியைச் செய்யப் போய்விட்டார்.

முதலில் கொப்படை அம்மன் கோயிலருகில் ஒரு பழக்கடையில் பழங்கள் வாங்கப் போனோம். "சோகு, நீ வாங்கிக்கிட்டு இரு. நான் இந்தா ராமலிங்கம் ஸ்டோர்ஸ் வரைக்கும் போயிட்டு வந்திடுறேன்" அம்மா இதைச் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்கள்.

"இளங்கோ, நீ போய் ஜெமினி கடைல நம்ம ஆர்டர் கொடுத்த ரொட்டி மிட்டாய் வந்திடுச்சானு கேட்டுக்கிட்டுவா."

அம்மாவின் செயல்திறனிலும் நிர்வாகத் திறனிலும் நல்ல முன்னேற்றம்தான்.

"முகூர்த்த நாள். நிறைய கல்யாணங்கள். நிறைய ஆர்டர் சார் மூணு நாளா. ஆர்டர் இன்னும் வரலை சார். இன்னிக்கு சாயங்காலம் வந்திடும் சார்." ஜெமினி கடைக்காரருக்கு நல்ல வியாபாரம்.

"ஏங்க, இதுக்குன்னு நான் திரும்பி கல்லுப்பட்டிலேருந்து வரணுமா? எத்தன மணிக்கு வரும்? இருந்தே வாங்கிக்கிட்டு போறேன். நாலு மணிக்குத் திரும்பி வந்து பாக்கிறேன்" என்று சொல்லிப் பழக்கடையை நோக்கி நடந்து சென்றேன். கடைக்கு அருகில் சென்றுவிட்டேன்.

"இளங்கோ!" சோகி ஆச்சியின் குரல். "இந்த பழக்கடைக்காரர்கிட்ட 180 ரூபாய் கொடு. என்ன விலை சொல்றான். ஒரு கிலோ ஆப்பிள் 120 ரூபாயாம். என்ன அநியாயம். நான் 90 ரூபாய்க்கு பேசிட்டேன். 2 கிலோ வாங்கி இருக்கேன். 180 ரூபாய் மொத்தம்."

ஆயிரம் ரூபாய் நோட்டுதான் இருந்தது. நீட்டினேன். செல்பேசி ஒலித்தது. எடுத்தேன். அப்பாதான். சரியாகக் கேட்கவில்லை. சற்றுத் தள்ளி நடந்து அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அதே நேரத்தில் அம்மா என்னைப் பார்த்து கையசைத்து ஏதோ சொல்ல முயற்சி செய்தார்கள். அம்மாவை நோக்கி நடந்தேன். அப்பாவிடம் பேசி முடித்து, அம்மா கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லியபடியே அம்மாவுடனும் சோகி ஆச்சியுடனும் அடுத்த கடைக்குச் சென்றுவிட்டேன். ஆயிரம் ரூபாயையும் பழக்கடைக்காரரையும் மறந்துவிட்டேன்.

இரவு பொட்டியடியில் உட்கார்ந்து கணக்கு எழுதும்போதுதான் அந்த ஆயிரம் ரூபாய் நினைவுக்கு வந்தது. அடடா! இப்படி யாராவது மறப்பாங்களா? இப்படி இருக்கோமே நாம, பொறுப்பு இல்லாம. மிகவும் சங்கடமாக இருந்தது. யாருகிட்டயும் சொல்ல வேணாம். போனாப் போகுது. இதுக்குதான் பேரம் பேசக்கூடாது. சோகி ஆச்சியின்மேல் கோபம் வந்தது. முப்பது ரூபாய்க்குப் பாத்தே, இப்ப எவ்வளவு போயிடிச்சு. சே!

அடுத்த நாள் அம்மாவும், அப்பாவும் காரைக்குடியில் வங்கிக்குக் கிளம்பினார்கள். நானும் கூடப் போனேன். வங்கி கல்லுக்கட்டி பகுதியில்தான் இருந்தது.

"நீங்க போங்கப்பா. நான் இதோ வரேன்."

"ரொம்ப நேரம் ஆக்காதே" அப்பா எச்சரித்தார்.

"இல்லைப்பா. ரெண்டு நிமிஷம்."

அந்தக் கடையை நோக்கி நடந்தேன். என்ன பதில் சொல்லப் போறான்? கேட்கலாமா? சிரிப்பானோ? நான் எதிர்பார்த்த நான்கு பதில்கள்:

"அப்படியா சார்? நேத்திக்கு 2 மணிக்கா? நான் கடைல இல்லையே. தம்பிதான் இருந்தான். அவன் ஒண்ணும் சொல்லவே இல்லையே."

"இந்த மாதிரி எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க?"
"தோ பாருடா. இவரு ஆயிரம் ரூபாய் கொடுப்பாராம். 820 ரூபாய் சில்லறை வாங்காம போவாராம். ஏன் சார். ஏமாத்தறதுக்கு நான்தான் கிடைத்தேனா? என் நெத்தில இளிச்சவாயன்னு எழுதி ஒட்டி இருக்கா?"

"ஒரு நாளைக்கு 100 பேர் நம்ம கடைக்கு வராங்க. ஞாபகம் இல்லை சார்."

இந்தப் பதில்களை எல்லாம் எதிர்பார்த்துக்கொண்டே கடையை அடைந்தேன். அவனேதான். அதே ஆளுதான். போய்க் கேப்போம்.

"நேத்திக்கு ........" என்று ஆரம்பித்தேன்.

"சார். வாங்க சார். என்ன சார் நீங்க. ரொம்ப வேகமா நடக்கறீங்க சார். போன்ல பேசிக்கிட்டிருந்தீங்க. முடிக்கட்டும்னு பாத்தேன். முடிச்ச உடனே அவ்ளோ வேகமா நடந்து போய்ட்டீங்க. கொஞ்சநேரம் பாத்தேன். காணவே இல்லை சார். இந்தாங்க 820 ரூபாய். பழம் 180 ஆச்சு சார். மீதி 820.”

அசந்து போய் நின்றேன். அவன் கையிலிருந்து நீட்டிக்கொண்டிருந்த நோட்டுகளில், 700 ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டேன். ஒரு 100 ரூபாய் நோட்டையும் இரண்டு 10 ரூபாய் நோட்டையும் எடுக்கவில்லை.

"என்ன சார்?"

"வச்சுக்கோங்க"

"எதுக்கு சார்?"

"உங்க நேர்மைக்குன்னு வச்சுக்கோங்களேன்"

"இல்லை சார். வியாபாரத்தில இப்படிப் பணம் வாங்கிக்கமாட்டேன் சார். வேணா 120 ரூபாய்க்கு பழம் எடுத்துக்கோங்க. என்ன பழம் சார் வேணும்?"

அந்தக் கடும் வெயிலில் நாள்முழுக்க அங்கே நின்று வியாபாரம் செய்வது மிகக் கடினம். அதிலும் வருபவர்கள் எல்லாம் பேரம் பேசுவார்கள். அவனுக்கு 820 ரூபாய் என்பது பெரிய பணம். பல காரணங்கள் சொல்லிச் சுலபமாக அதை அவன் வைத்து கொண்டிருக்கலாம். இந்தச் சூழலில் நேர்மையாக இருப்பது அரிது. அவன் நேர்மையாக இருந்தான். இவன்போன்ற மனிதர்கள் ஒரு சிலரே.

'கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி' - இந்த குறளை அவன் படித்திருக்கிறானோ இல்லையோ, அதன்படி நடக்கிறான். அவன்தான் சான்றோன்.

இளங்கோ மெய்யப்பன்,
கலிஃபோர்னியா
More

அம்மாவுக்குத் தெரியாமல்....
Share: 


© Copyright 2020 Tamilonline