உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் பாலிகை திட்டம்
|
|
|
|
|
"இந்த அலமுவுக்குக் கொஞ்சமும் போறாது. அப்புறம் இப்படியா செய்வாள்? சாயங்காலம் வரட்டும். பார்த்துக்கறேன். புலம்ப ஆரம்பித்தால் இப்போது நிறுத்த முடியாது, முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும்..." என்று மனதிற்குள் புலம்பியவாறே மொட்டை மாடிக்கு வந்தாள் பாரு. சிறிய தூறலாய் ஆரம்பித்திருந்த மழை வலுக்க ஆரம்பித்தது. தலையில் ஒரு துண்டைப் போட்டு, இரண்டு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அப்படியும் தொப்பலாய் நனைந்து விட்டாள். வரட்டும், ஒரு கை பார்க்கிறேன் இந்த அலமுவை என்று மனதிற்குள் கருவிக் கொண்டாள். ஆமாம், டிவியில் மழை வரப்போகிறது என்று ஒருநாள் முன்பே வானிலை அறிக்கை விட்டால்தான் என்ன? மழை வந்து போனபின், இன்று கனமழை பெய்தது என்று சொல்லி என்ன பிரயோஜனம்? எப்போதுதான் நாம் முன்னேறப் போகிறோம்? என்று அலமுவில் ஆரம்பித்த வசவு, வானிலை அறிக்கைக்குத் தாவியது.
அதற்குள் ஒரு குரல், பக்கத்து வீட்டு வாண்டு, "மாமி, மாமா வடாம் எப்படியிருக்குன்னு பார்க்கணுமாம், கொஞ்சம் பொறிச்சு எடுத்துண்டு வரச் சொன்னா" என்றது. கேட்கவா வேண்டும்? ஏற்கனவே எல்லோரையும் வைது கொண்டிருந்த இந்த மாமியாகப் பட்டவள், ஒரு மினி பத்ரகாளியாக மாறினாள். "டேய், இந்த மழையில், இந்த மனுஷன் உன்னையா அனுப்பினார்? உங்கம்மாவுக்கு யார் பதில் சொல்றது? கீழே போகப்போறியா இல்லையா?"
வாண்டுவுக்கு மாமாவின் கேள்வியா முக்கியம்? அவன் வந்ததே மழையில் நனையத்தானே? "மாமி, மாமா வடாம் கேட்கறார்" என்றான் மறுபடியும் உற்சாகமாக, கைகளால் கார் ஓட்டிக் கொண்டே.
"டேய் போ, போயி இப்போ ஒண்ணும் கிடையாதுன்னு மாமாகிட்டே சொல்லு" என்ற மாமி, பாரு என்ற பார்வதியாகப் பட்டவள், மழையில் நனைந்து கொண்டிருந்த, வடாம் பரத்தியிருந்த பிளாஸ்டிக் ஷீட்டை மடிக்க ஆரம்பித்தாள். இனியும் இங்கிருந்தால், அம்மாவிடம் அடிவாங்கிக் கொடுக்காமல் இந்த மாமி விடமாட்டாள், கீழே போய் பேப்பர் கப்பல் விடலாம் என்ற வாண்டு கீழே இறங்கியது.
*****
வடாம் போடுவதென்பது லேசுப்பட்ட காரியமில்லை. அதிலும் இலைவடாம் சிலரால் மட்டுமே முடிகிற காரியம். சென்னையில் கோடை வெயிலை வீணாக்காமல், இந்த அலமுதான் "மாமி, இலைவடாம் போட்டுத் தரட்டுமா? வடாம் போட்டு, அது காய்ந்து டப்பாவில் போட்டுத் தருவது வரை என்னோட பொறுப்பு. ஏதோ கொடுக்கிறதைக் கொடுங்கோ" என்று நப்பாசையைக் கிளப்பி விட்டாள். ஏதோ அவ்வப்போது வெளியே கடையில் வடாம் வாங்கிக் காலம் தள்ளிக் கொண்டிருந்த பாருவுக்கும் வடாம் போட்டு ரொம்ப வருஷமாயிடுத்தே, வடாம் போட்டால் என்ன என்று தோன்றியது. இப்போதெல்லாம் யார் சிரமமெடுத்து வடாமெல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இட்லி, தோசை மாவுகூடக் கடையிலிருந்து வாங்கியாகி விடுகிறது.
இப்பல்லாம் அப்பளம், வடாம் யார் முன்னே மாதிரி அடிக்கடி பொறிக்கிறார்கள்? அதுவும் எண்ணை விக்கிற விலையில்? அதிலும், டாக்டர் வேறு கண்டிப்பாக எண்ணையில் பொறித்த அயிட்டங்களைச் சாப்பிடாதீங்கோ என்று ஒவ்வொரு முறையும் பயமுறுத்துகிறார். செக்கப் போனால், ஒழுங்கா வாக்கிங் போறேளான்னு வேற கேக்கறார். எங்கே ஒழுங்காப் போக முடிகிறது? அதான் வீட்டு வேலையே சரியாக இருக்கே, அதுவும் எக்சர்சைஸ்தானேன்னு சொன்னால், அதெல்லாம் போறாதும்மா, நடக்கத் தனியா டைம் ஒதுக்கிக் கண்டிப்பாப் போகணும்னு ஒவ்வொரு தடவையும் ஒரே புராணம். இப்பொதெல்லாம் டாக்டர் கேட்டால், "ஓ தினமும் வாக் போயிடறேனே" என்று பொய் சொல்லி தப்பித்துக் கொள்கிறாள். அவருக்கா தெரியாது? மனதிற்குள் சிரித்தபடி, "சரிம்மா, விடாம கன்டின்யூ பண்ணுங்கோ" என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்.
***** |
|
மாடியிலிருந்து கொண்டு வந்த வடாத்தை மீண்டும் காற்றாடப் பரத்திப் போட்டாள். ஊஞ்சலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த மாமா, பேப்பரிலிருந்து தலையை எடுத்து, "பாரு, இந்த மழைக்கு இதமா கொஞ்சம் வடாம் பொறிச்சுத் தாயேன்" என்றார்.
"இப்போ கொஞ்சம் சும்மா இருக்க மாட்டேள்? ஏற்கனவே நான் இங்கே கஷ்டப்பட்டுண்டு இருக்கேன். இந்த அலமு வரட்டும், பார்த்துக்கறேன் அவளை," என்றாள்.
"இங்கே பாரு பாரு, அலமுவை ஏன் வீணா கோச்சுக்கற? அவ என்ன பண்ணுவா பாவம்? நீதான் மழை வர்றது தெரிஞ்சு வடாத்தைக் கொண்டு வந்திருக்கணும்"
"ஏன் சொல்லமாட்டேள்? மாடிக்கு ஏறி இறங்கறதுக்குள்ள இந்தக் கால் படுத்தற பாடு எனக்குன்னா தெரியும்!"
"சரி சரி, புலம்பத் தொடங்கிடாதே."
"பழைய வடாம் கொஞ்சம் டப்பாவில் இருக்கு, பொறிச்சு எடுத்துண்டு வரட்டுமா?"
"வேண்டாம், வேண்டாம். இந்த வடாம் சங்காத்தமே வேண்டாம். ஆளை விடு" என்ற மாமா பேப்பருக்குள் முகத்தை மறைத்துக்கொண்டார்.
வாசலில் அழைப்பு மணி ஓசை கேட்டது. இந்த மழையில் யாராயிருக்கும் என்ற பாரு வாசலுக்கு விரைந்தாள்.
"அட, அம்மா! என்னம்மா இந்த மழையில் வந்திருக்க? ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா?"
பாருவின் அம்மா, குடையை மடித்தபடியே கையிலிருந்த பெரிய டப்பாவைப் பாருவிடம் கொடுத்தாள்.
"என்னம்மா இது? பெரிய டப்பாவா இருக்கே!"
"பாரு, உனக்கு இலைவடாம் பிடிக்குமேன்னு போட்டேண்டி. காலைலதான் போட்டேன். அடிக்கிற வெயிலில் ஒரே நாள்ல காஞ்சுடுத்து. மழை வறதேன்னு அப்பப்போ மாடிக்குப் போய்ப் பார்த்து, மழைக்கு முந்தியே வடாத்தை எடுத்துண்டு நேரே இங்கே வரேன். போ, போய், மாப்பிள்ளைக்கு இரண்டு வடாம் பொறிச்சு எடுத்துண்டு வா" என்றாள் எண்பது வயது நிரம்பிய பாருவின் தாயார்.
பிருந்தா ஐயர், மேடிசன், அலபாமா. |
|
|
More
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் பாலிகை திட்டம்
|
|
|
|
|
|
|