Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
தெளிவு
கோபாலன்
பாட்டி தாத்தா வேணும்!
கலிஃபோர்னியாவில் வந்து ஒரு கால்கட்டு
- டி. சந்தானம்|ஏப்ரல் 2013||(1 Comment)
Share:
"கர்ப்பரக்ஷாம்பிகை அம்மனை வேண்டிண்டு காசை மஞ்சத் துணியில் முடிந்து வை." அமெரிக்கா கிளம்ப இன்னும் மூன்று நாட்களே இருக்க, வெளிநாட்டு மருத்துவக் காப்பீடு எடுக்க மெடிகல் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். சீக்கிரம் கிளம்பு என்று மனைவி பிரபாவை துரிதப்படுத்தினார் அத்வைத்.

"எனக்கு என்ன பகவானுக்கு இருப்பதுபோல் நாலு கையும், காலில் சக்கரமுமா இருக்கு? நானும் காலம்பர எழுந்ததிலிருந்து உட்காரக்கூட இல்லை. போதாதற்கு வலது கால்ல ஆணி உபத்திரவம் வேற. வேகமா நடக்க முடியலை. நான் என்ன செய்யறது? இது சரியாறதக்கு குறைந்தது இரண்டு மாதமாவது ஆகும்னு நம்ம டாக்டர் சொல்றார்," புலம்பினாள் பிரபா.

"எனக்கும் பயமாகத்தான் இருக்கு. வைதீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமியிடம் நம்ம பொண் மீராவுக்குச் சுகப் பிரசவம் ஆனால் வெள்ளியில் முழு உருவம் சாத்துவதாக வேண்டிண்டிருக்கோம். அத்தோட, உன் கால் ஆணி உபத்திரவமும் சரி பண்ணிக் கொடுப்பா என்று ஒரு வெள்ளிப் பாதம் சாத்தறதாவும் வேண்டிப்போம், கவலைப் படாதே" என்று மனைவிக்கு ஆறுதல் சொன்னார்.

ஸ்ரீ வைத்தியநாத சுவாமி தன் பக்தர்களின் இந்த உரையாடலைக் கேட்டுத் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார். இவர்கள் படும் கஷ்டத்திற்கெல்லாம் நம்மிடம் விடை தேடி, எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இவர்கள் வேண்டுதலுக்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனையில் ஆழ்ந்தார்.

சற்று நேரம் கழித்து இன்ஷூரன்ஸ் முகவர் ரகு வந்து அவர்களை மெடிகல் டெஸ்டிற்கு அழைத்துச் சென்றார்.

மறுநாள், ரகு பாலிசிகளுடன் வந்து விளக்கமும் கொடுத்தார். இருவருக்கும் சேர்ந்து மொத்தம் 42,131 ரூபாய் ஆகிறது. இந்தப் பாலிசிகள்படி, முன்னரே இருக்கிற வியாதிகளுக்கு, அதாவது உங்கள் சர்க்கரை வியாதி, மாமியின் ரத்தக்கொதிப்பு சம்பந்தப்பட்ட ட்ரீட்மென்டுகளுக்கு யு.ஸ்.இல் வைத்தியம் செய்ய நேரிட்டால், இந்தப் பாலிஸிகள் மூலம் ஒரு நிவாரணமும் கிடைக்காது. அதுபோல், எந்த ட்ரீட்மெண்டுக்கும் குறைந்தது 100 டாலர் கொடுக்க வேண்டியிருக்கும். இவைகளை, மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

இது என்ன, இன்ஷூரன்ஸ் எடுத்துப் போவதில் ஒரு பயனும் இருக்காது போல இருக்கே? பகவான் வைதீஸ்வரன்தான் காப்பாற்ற வேண்டும்! அத்வைத் கவலையில் ஆழ்ந்தார்.

அன்று இரவு ஸ்கைப்பில் அவர்களின் மகள் மீரா பேசினாள். "அம்மா, உன் வரவை ரொம்ப ஆசையோட எதிர்பார்த்து இருக்கிறோம். நீ வந்த பிறகு எனக்குச் சற்று ஓய்வு கிடைக்கும். SFO விமான நிலயத்தில் அதிக கெடுபிடி இருக்காது" என்று மீரா சொல்லிவிட்டு, தனக்கு வேலை இருப்பதாக விடை பெற்றாள்.

சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலயத்திலிருந்து வெளியே வரும்போதே, அத்வைத்தும் பிரபாவும் தங்கள் உடல்நலத்தைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாமென்று தங்களுக்குள்ளேயே தீர்மானம் செய்து கொண்டு மீராவைக் கண்களால் தேடினர். பிரபா பயணக் களைப்பாலும், கால் ஆணி வலியினாலும், மெல்லவே நடந்து வந்தாள்.

சாண்டா கிளாராவில் மீராவின் ஃப்ளாட் மூன்றாவது மாடியில் உள்ளது. நல்ல வேளை, அங்கே ஒரு பழைய காலத்து லிஃப்ட் இருக்கிறது. ஆனால், அதன் ஒவ்வொரு கதவும் தள்ளமுடியாத அளவுக்கு யானை கனமாக இருந்தது. தினமும் மாடி ஏறி இறங்குவது மிகச் சிரமமாக இருக்கப் போகிறது என்ற கவலை தோய்ந்த நினைவுடன், பிரபாவும் அத்வைத்தும் வந்த முதல் நாளே சற்று மனம் தளர்ந்து போய்விட்டனர்.

ஊருக்கு வந்து இரண்டாம் நாள். "அம்மா, நாம ரெண்டு பேரும் கடைக்குப் போய்ட்டு வரலாம். நடந்தே போய்டலாம், உனக்கும் பொழுது போகும்" என்றாள் மீரா.

பிரபா தன்னால் வேகமாக நடக்க முடியாத நிலையை மகளிடம் ஊருக்கு வந்தவுடனேயே சொல்லத் தயங்கினாள். இங்கு வந்திருப்பதோ மகள் பிரசவத்தின்போது துணையாக இருக்க வேண்டுமென்று. இந்தக் கால் நோவால் ஒரு உதவியும் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று வருந்தி, என்ன செய்வதென்று தெரியாமல் அத்வைத்தை திரும்பிப் பார்த்தாள் பிரபா.

தன் மனைவியின் சங்கடத்தைப் புரிந்து கொண்டு, "இல்ல மீரா, அம்மாவால இன்று அதிகமா நடக்க முடியாது. அவளைத் தொந்தரவு செய்யாதே, நான் வேண்டுமானால் வருகிறேன்" என்று தன் மனைவியின் உதவிக்கு வந்தார்.

இப்படியாக, முதல் வாரம் சென்றுவிட்டது. இதற்கிடையில், மீரா தன் பெற்றோர்களை முதல் மாடியில் உள்ள துணி துவைக்கும் தானியங்கி இயந்திரம் இருக்கும் இடத்தைக் காண்பித்து, அதை உபயோகிக்கும் விதத்தையும் விவரித்து, அவர்களின் உதவியை நாடினாள். பிரபா, தன் கணவரிடம், இங்கு வந்து திரிசங்கு சொர்க்கத்தில் மாட்டிக்கொண்ட நிலைக்கு ஆளானது போன்ற தன் நிலமையைப் பற்றி வருந்தி மனம் புழுங்கினாள்.
ஒரு நாள் பிரபா மிகச் சிரமப்பட்டு அத்வைத்தின் உதவியுடன் துணி துவைப்பதற்காகக் கீழ் மாடிக்கு லிஃப்ட் மூலமாகச் செல்ல முயன்றாள். அத்வைத் லிஃப்டின் கதவைத் தள்ளிப் பிடித்துக் கொண்டார். பிரபா, துணிகளுடன் அத்வைத் கையின் கீழ்ப்புறமாக நுழைய முயற்சித்தாள். அப்போது, அவள் தலை சற்று அத்வைதின் கையில் படவும் கதவின் வலு தாங்காமல் அத்வைத் தன் கையை விட்டுவிட்டார். கதவு படால் என்று மோத, பிரபா கையில் உள்ள துணிகளுடன் லிஃப்டிற்குள் விழுந்தாள். விழுந்த வேகத்தில் வலது கால் கதவின் கீழ் மாட்டிக்கொண்டது. அங்கே ஒரு நாய் கடித்த புண்போலச் சதை வழண்டு புண்ணாகி விட்டது. காலும் நன்றாக வீங்கி விட்டது. பிரபா அரை மயக்கத்துடன் அத்வைத்தின் மேல் சாய்ந்தாள்.

அரை மணி நேரம் வீடு அமளிப் பட்டது. நல்ல வேளை மீரா வீட்டில் இருந்தாள். உடனே, தன் தோழியின் உதவியுடன் அருகிலுள்ள ஹாஸ்பிடலுக்கு பிரபாவை அழைத்துச் சென்றாள். அங்கு எலும்பு முறிவுப் பகுதியைத் தேடி ரிசப்ஷனில் சிறிது நேரம் காக்க வேண்டியிருந்தது. அதற்குள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிவிட்டன. என்ன ஆகுமோ? என்ன கேட்பார்களோ? எவ்வளவு செலவாகுமோ?.....

"மிசஸ் பிரபா அத்வைத், ப்ளீஸ் கம்," குரல் கேட்ட திக்கில் பார்த்தாள் மீரா. "அம்மா, உன்னைத்தான் கூப்பிடுகிறார்கள். நீ இங்கேயே இரு" என்று கூறி மீரா சென்று தன் அம்மாவின் நகரமுடியாத நிலைமையை விவரித்தாள்.

"ஓகே, ஷோ ஹர் இன்ஷுரன்ஸ் பேப்பர்ஸ்" ரிசப்ஷன் பெண்மணி கேட்டார். "ஆல்ஸோ ஷோ ஹர் பாஸ்போர்ட்."

"என்ன பிரச்சனை?" அடுத்த கேள்வி.

மீரா நடந்ததை விளக்கிச் சொன்னாள்.

ஒரு சில நிமிடம், ரிசப்ஷன் பெண்மணி தன்முன்னே இருந்த கம்ப்யூடரில் டைப் செய்தபடி தானேயும் ஏதோ பேசிக் கொண்டார். எந்தப் பிரிவின் கீழ் அந்தப் பிரச்சனை வரும் என்பதை சற்று உரக்கவே சொல்லிப் பார்த்தார். மீராவிற்கு யோசனை ஆகிவிட்டது. அவரிடம் தயங்கிக் கேட்டாள், "எனி ப்ராப்ளம்?"

அதற்கு அந்தப் பெண்மணி "ஒன்றும் இல்லை" என்று சொல்லி, அம்மாவை ஒரு தள்ளு நாற்காலியில் வைத்து, ஒரு டாக்டர் பெயரைச் சொல்லி, உள்ளே அழைத்துப் போகுமாறு சொன்னார். அதற்கு முன்பாக 100 டாலர் செலுத்த வேண்டும் என்றும் சொன்னார்.

அம்மா தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டே, 'போச்சு, முதல் தண்டம் நூறு டாலர்' என்று எண்ணியபடியே இன்னும் நம்மால் நம் பெண்ணுக்கு என்ன செலவாகுமோ என்று கவலை தோய்ந்த முகத்துடன் இருந்தாள்.

டாக்டர், அம்மாவைப் பரிசோதித்து விட்டு, ஒரு பெரிய லிஸ்டைக் கொடுத்து, அதில் உள்ள பரிசோதனைகளையும், மூன்று எக்ஸ்ரேக்களையும் செய்துகொண்டு விரைவில் வருமாறு கூறினார். அடுத்த ஒரு மணி நேரத்தில், அம்மாவுக்கு வேண்டிய சிகிச்சைகளைத் தொடங்கி, கால் அடிபட்ட இடத்தில் கட்டுப்போட்டு, சில மருந்துகளையும் எழுதிக் கொடுத்தார். இன்று இங்கேயே இருக்க வேண்டும், நாளை வீடு செல்லலாம் என்றார். டாக்டர் தன் வேலையை முடித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

மறுநாள், டாக்டர் வந்து அம்மாவைப் பரிசோதித்து விட்டு, உங்களுக்கு அடிபட்ட இடத்தில் முன்பே கால் ஆணியோ அல்லது அதுபோன்ற புண்ணோ இருந்திருக்கிறது. நீங்கள் அதற்காக வைத்தியம் பார்க்க வந்திருந்தால், உங்களுக்கு நான் சிகிச்சை செய்திருக்க மாட்டேன். ஏனென்றால், அந்த பிரச்சனைக்கு உங்கள் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கவரேஜ் இல்லை. ஆனால், இப்போது, அதே இடத்தில் அடிபட்டதால், புதுக் காயத்துக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் பழைய கால் ஆணிக்கு என்று தனியாகச் சிகிச்சை அளிக்கத் தேவை இல்லாமல் போய்விட்டது. அதுவும் உங்களுக்குச் சௌகரியமாகப் போய்விட்டது இப்போது. இன்னும் மூன்று நாளில், நீங்கள் முன்புபோல் நன்றாக நடக்க முடியும். கவலைப்படாமல் போய் வாருங்கள், என்று அம்மாவுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார். மூன்று நாட்களுக்குப் பின் பிரபாவும் புதுத் தெம்புடன் நடக்கத் தொடங்கினாள்.

மூன்று வாரம் கழித்து, மருத்துவ மனையிலிருந்து 10,000 டாலருக்கு ஒரு பில் வந்தது. அத்வைத் அதை இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு அனுப்பிவிட்டு, நிம்மதிப் பெருமூச்சு விட்டார். இப்போ பார்த்தாயா, கடவுளின் கிருபையை. ஒரு செலவும் இல்லாமல், உன் காலாணியும் ஒழிந்தது. நம் மீராவின் பிரசவ சமயத்தில் நீயும் தெம்பாகி அவளுக்கு உதவ முடியும், என்று பிரபாவுக்குத் தெம்பு ஊட்டினார்.

ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி, 'நல்லவேளை, ஒரு வழியாக இன்ஷூரன்ஸ்காரன் என் பேரைக் காப்பாற்றி விட்டான்' என்று சொல்லிக்கொண்டே, அடுத்த வேண்டுகோள் விடுத்த பக்தனுக்கு உதவும் கவலையில் ஆழ்ந்தார்.

டி. சந்தானம்,
சான்டா கிளாரா, கலிஃபோர்னியா
More

தெளிவு
கோபாலன்
பாட்டி தாத்தா வேணும்!
Share: 
© Copyright 2020 Tamilonline