Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | சாதனையாளர் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிரிக்க சிந்திக்க
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
முத்து ரொம்ப மாறிப் போய்ட்டான்!
- சுப்புத் தாத்தா|ஜனவரி 2013|
Share:
ஓர் ஊரில் முத்து என்ற முரடன் ஒருவன் இருந்தான். அவன் பெரிய போக்கிரி, சண்டைக்காரன். கடைக்குப் போய், பொருட்களை வாங்குவான், பணம் தரமாட்டான். யாராவது கேட்டால் அடித்து உதைப்பான். உணவு விடுதிக்குச் சென்று வயிறு முட்டச் சாப்பிடுவான், பணம் தராமல் போய்விடுவான். எல்லோருக்குமே அவனைப் பார்த்தால் பயம்தான்.

அந்த ஊருக்கு புதிதாக ஒரு நெல் வியாபாரி ஒருவன் வந்தான். அவனிடம் பிற வியாபாரிகள் முத்துவைப் பற்றி எச்சரிக்கை செய்தனர். நெல் வியாபாரி உடனே, "என்ன இது அநியாயமாக இருக்கிறது. நீங்கள் ஏன் அவனை எதிர்த்துப் போராடக் கூடாது?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "பலமுறை போராடித் தோற்று விட்டோம். அவனை எதிர்த்தால் இங்கு கடையே இருக்காது. எல்லாவற்றையும் அடித்து, உடைத்து நாசம் செய்து விடுவான். ஊர் நியாயாதிபதியிடம் முறையிட்டும் பயனில்லை. அவர் வீட்டையே அவன் கொளுத்தி விட்டான். மகா முரடன்" என்றனர்.

சிறிது நேரம் யோசித்த நெல் வியாபாரி, "இதற்கு ஒரு வழி செய்கிறேன். நான் சொல்கிறபடி நீங்கள் செய்தால் அவனை நம் பக்கமே வராமல் செய்து விடலாம்" என்று தன் திட்டத்தைச் சொன்னான்.

சில நாட்கள் சென்றன.

சந்தைக்குப் போய்விட்டு கை வீசித் திமிராக நடந்து வந்து கொண்டிருந்தான் முத்து. வழியில் எதிர்ப்பட்டான் சிறுவன் ஒருவன். அவன் முத்துவிடம் "அண்ணே, என்ன உங்களுக்கு உடம்பு சரியில்லையா, ரொம்ப வாடிப் போய் இருக்கீங்களே!" என்றான்.

"அடேய், கைய வீசிக்கிட்டு நான் நடந்து வர்றது தெரியலை. போடா முட்டாள்" என்று சொல்லி அவன் முதுகில் ரெண்டு அடி வைத்துத் துரத்தினான்.

சற்று தூரம் சென்றதும் மாடுகளுடன் ஒரு உழவர் எதிரில் வந்தார். அவர், "என்னப்பா மேலுக்குச் சுகமில்லையா! முகம் ரொம்ப வாடியிருக்கே!" என்றார்.

"பேசாமப் போங்க. நான் நல்லாத்தான் இருக்கேன்" என்றான் முத்து.
ஆனாலும் அவன் மனதில் திடீரென ஒரு சந்தேகம் வந்தது. 'ஒருவேளை, உண்மையிலேயே நமக்கு உடல்நலமில்லையோ, நம்மால்தான் அதை உணர முடியவில்லையோ' என நினைத்தான். அப்படி நினைத்ததும் அவனுக்கு ஒரே பதட்டமாகி விட்டது உடம்பு படபடத்தது. காய்ச்சல் வரும்போல் இருந்தது.

தனது வீட்டுக்குச் சென்றான். பக்கத்து வீட்டுக்காரர் முத்துவைப் பார்த்து, "என்னப்பா, இப்படி முகமெல்லாம் கறுத்து வாடி இருக்கே, என்ன ஆச்சு?" என்றார்.

முத்துவுக்குச் சொல்லத் தெரியவில்லை. தன் வீட்டுக்குள் போய்ப் படுத்துவிட்டான். நிஜமாகவே அவனுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது.

நெல் வியாபாரியும் பிறரும் தங்கள் தந்திரம் பலித்ததை எண்ணி மகிழ்ந்தார்கள். ஆனாலும் அவன் உடல்நலம் பெற உதவினார்கள்.

அதுவரை பிறரை அதட்டி, மிரட்டி உணவுண்டு கொண்டிருந்தவன் அன்று முதல் தினமும் கஞ்சியை மட்டுமே குடிக்க வேண்டி வந்தது. சில நாட்களில் முத்து உடல்நலம் தேறினான். தான் உடல்நலமற்று இருந்தபோது பிறர் வந்து தனக்கு உதவியதை நினைத்தான். இவர்களுக்கு எந்த விதத்திலாவது நாம் உதவியாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன், அந்த ஊரின் காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். மக்களைத் திருடர் பயத்திலிருந்தும், மிருக பயத்திலிருந்தும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றான்.

தற்போது அந்த ஊர் மக்கள் அவனை 'முரடன் முத்து' என்று அழைப்பதில்லை; 'வீரன் முத்து' என்றே அழைக்கின்றனர்.

சுப்புத்தாத்தா
Share: 




© Copyright 2020 Tamilonline