Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | சாதனையாளர் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிரிக்க சிந்திக்க
Tamil Unicode / English Search
ஹரிமொழி
பேராசிரியர் நினைவுகள்: அண்ணாச்சி ஆடுறாரு...
- ஹரி கிருஷ்ணன்|ஜனவரி 2013||(1 Comment)
Share:
உருள்பெருந் தேர்க்கு அச்சாணி அன்னாரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வள்ளுவ உவமைகள், கால, தேச எல்லைகளைக் கடந்து இன்றும் சிந்திப்பதற்கும் உணர்வதற்கும் எளிதாக இருப்பதைப் பற்றியும் பேசினோம். அவர் காட்டும் அச்சாணியையும், அச்சாணியன்னாரோடு அது பொருந்திப் போகும் தன்மையையும் சற்று பார்க்கலாம்.

எல்லாப் பொருட்களுக்கும் பயன்பாட்டு மதிப்பு (use value, utility value) உள்ளுறை மதிப்பு (intrinsic value) என்று இரு வேறுபட்ட மதிப்புகள் உண்டு. பொன், ஆபரணமாக மாறினால், அதன் மதிப்பு சற்று கூடலாம். ஆபரணத்தின் செய்நேர்த்தி, பொன்னுக்கு உண்டான மதிப்பைச் சற்றே கூட்டலாம். ஆனால், ஆபரணமாக இருந்தாலும், வெறும் தங்கப் பாளமாகவே இருந்தாலும், தங்கத்துக்கு உண்டான மதிப்பில் பெரிய அளவில் மாறுதல் ஏதும் ஏற்படாது. மரம், கட்டையாகவே கிடந்தால் அதன் மதிப்பு வேறு; விறகாக விற்றால் அதன் மதிப்பு வேறு; அதே மரக்கட்டை மேசை நாற்காலியாக மாறினால், அதற்குண்டாகும் மதிப்பு அதிகரிக்கிறது. வேடிக்கையாக ஒன்று சொல்வது உண்டு. கையில் கடிகாரம் கட்டியிருக்கிறீர்கள். நாற்பது, ஐம்பதாயிரம் கொடுத்து வாங்கிய கடிகாரமாக இருக்கலாம். அதைக் கொடுங்கள், தனித்தனி பாகமாகப் பிரித்து உங்கள் கையிலேயே கொடுத்துவிடுகிறேன். இப்போது அதன் மதிப்பு என்ன? நூறு ரூபாய் பெறாது. இல்லையா? இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் பயன்பாட்டாலும், செய்நேர்த்தியாலும் மதிப்பு கூடும். மிகச் சிலவற்றுக்கு எந்த வடிவத்தில் இருந்தாலும் அதன் மதிப்பில் பாதிப்பேற்படாது.

அச்சாணியும் அப்படித்தான். அதற்கென்று தனிப்பட்ட மதிப்பு ஏதும் கிடையாது. உருள்பெருந் தேரிலிருந்து கழற்றி விட்டால் அச்சாணிக்கு என்ன மதிப்பு? எவ்வளவு கொடுப்பீர்கள்? அது வெறும் இரும்புத் துண்டு. இரும்பின் எடைக்கு உண்டான மதிப்பு, அதுவும் தேய்மானம் போன மதிப்பு கிடைத்தால் அதிகம். ஆனால், அதே அச்சாணி, தேரின் சக்கரத் தண்டில் இருக்கும்போது, அதன் மதிப்பு எல்லையைத் தாண்டுகிறது. ஏன்? அவ்வளவு பெரிய பாரமான தேர், உருளும்போது உண்டாகக்கூடிய பெரும் அழுத்தம் சக்கரத்தில் விழுந்து, அதன் தண்டில் விழுந்து, அச்சாணியின்மேல் விழுகிறது. அத்தனை அழுத்தத்துக்கும் ஈடுகொடுப்பதாய் இருக்கிறது அந்த இரும்புத் துண்டு.

மனிதர்களிலும் அப்படித்தான். தன் முயற்சியால், தன் ஆற்றலால், தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும் தன்மையால் பொன்னைப் போலச் சுடர் விடுபவர்களும் உண்டு. தானிருக்கும் இடத்தால், ஆற்றும் செயலால் முக்கியத்துவம் பெறுபவர்களும் உண்டு. பல சமயங்களில் ஒன்றிருந்தால் ஒன்று இருக்காது. என்னதான் முயன்றாலும், தங்கத்தால் அச்சாணி செய்துவிட முடியுமா? செய்தால் தாங்குமா?

ஆக, 'இந்த இடத்துக்கு இதுதான் பொருத்தம்' என்று கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட உலோகமே அச்சாணியாக வடிவெடுப்பதைப் போல், அதிகார மையங்களிலும் உயர் பதவிகளிலும் அமர்த்தப்படுபவர்கள், அந்தந்தப் பதவிக்கு உகந்தவர்களாகத்தான் இருக்க முடியும். ஆனால், அவர்கள் எல்லோருமே, பொன்னைப் போன்ற சுயமதிப்பையும், இரும்பைப் போல அழுத்தம் தாங்கும் தன்மையையும் ஒன்றாக வாய்க்கப் பெற்றவர்களாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் இரும்பைப் போல இருந்தாக வேண்டும் என்பதே அடிப்படை விதி. அதை மாற்றிவிட முடியாது. இது ஒன்று. இன்னொன்றைப் பார்ப்போம்.

தேர் உருண்டுகொண்டிருக்கும் வரையில் அச்சாணியை எடுத்துவிட்டு, இன்னொரு அச்சாணியை அங்கே பொருத்திவிட முடியாது. It is a moving structure. அச்சாணியை மாற்றித்தான் ஆகவேண்டும் என்னும் நிலை ஏற்படும்போது, தேரை நிறுத்திவிட்டுதான் அந்த வேலையைச் செய்ய முடியும். அப்படித்தான் முக்கியமான பதவிகளை வகிப்பவர்களின் நிலையும். ஒரு சாதாரணப் பதவியை வகிக்கும் ஒருவர், ராஜினாமா செய்தால் அவருக்கு ஒரு மாதகால முன்னறிவிப்புத் தரவேண்டியிருக்கிறது. அந்த இடைக்காலத்தில் இன்னொருவரை அந்தப் பணியில் அமர்த்தி, புதியவரை இவரிடம் சற்றே 'வேலை பழகிக் கொள்ளும்' வாய்ப்பை நிர்வாகம் ஏற்படுத்தித் தருகிறதல்லவா? ஆனால், அதுவே பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் பதவி விலகினால், முன்னறிவிப்பு தரவேண்டிய காலம் மூன்று மாதமாகவும், அதற்கு மேலும்கூட விரிவடைகிறது. இன்னொருவரை அந்தப் பொறுப்பில் அமர்த்தி, அவருக்குச் சூழல் பழகவேண்டியதற்கான காலத்தையும் கொடுத்த பிறகே, இவரைப் பணியிலிருந்து விடுவிக்க முடிகிறது. அது தேராக இருந்தாலும் சரி, நிர்வாகமாக இருந்தாலும் சரி, 'அச்சாணியை மாற்றுவதற்கு' அவகாசம் தேவைப்படுகிறது. தேரை நிறுத்தித்தான் ஆகவேண்டும்.
ஆக, இன்றி-அமையாதவர் என்று ஒருவரும் கிடையாது. ஒருவர் இல்லாவிட்டால் மற்றவர் அந்தச் சுமையைத் தாங்க வருவார்தான். என்றாலும், அப்படிச் சுமையைத் தோள் மாற்றித் தருவதற்கு அவகாசம் தேவைப்படுகிறது. Nobody is indispensable. But it takes some time to enable to dispense with anybody.

ஆக, பொன்னைப்போல் தனக்கென சுதந்திரமான தனிமதிப்பு உள்ளவராகவே இல்லாவிட்டாலும், பளுதாங்கும் திறனால் உயர் பதவிகளில் அமர்த்தப்படுபவர் இரும்பைப் போல் இருந்தே ஆகவேண்டும். ஆனால், நகையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பு மாறாது. அச்சாணியாக இருக்கும் வரையில்தான் அந்த இரும்புத் துண்டுக்கு அவ்வளவு மதிப்பு. அச்சாணி என்ற இடத்திலிருந்து விலகினால் அது மறுபடியும் பழையபடி இரும்புத்துண்டுதான். ஆனால் இப்போது அது தேய்ந்த இரும்புத் துண்டு. இதை அப்படியே உயர்பதவிகளில் இருப்பவர்களோடு பொருத்திப் பார்க்க முடியும். அதிகாரி, அதிகாரியாக இருக்கும் வரையில்தான் அதிகாரம். அதிகாரத்திலிருந்து விலகியபின், அவர் பழையபடி மனிதர்தான். அவருடைய மனிதத்தன்மையைச் சார்ந்தே அவர் மதிப்பு அமைய முடியும்.

ஒருவனுடைய மற்றத் தன்மைகள்--சமூக, பொருளாதார, இன்னபிற--எப்படி இருந்தாலும், அவன் அழுத்தங்களைத் தாங்கக்கூடிய நிலையில் இருக்கும் வரையில் அவன் அச்சாணிதான். வெறும் இரும்புதானே என்று நினைத்துவிடாதே. இரும்பால்தான் அச்சாணியாக இருக்க முடியும். என்னதான் முயன்றாலும், பொன்னால் அச்சாணி அமைக்க முடியாது. அப்படியே பிடிவாதமாகச் செய்தாலும், அது கொஞ்ச காலத்துக்குத்தான் தாக்குப் பிடிக்கும். மனிதர்களில் எல்லா வகையும் உண்டு. பொன் மனமும் இரும்பு குணமும் அமைந்தவர்களும் உண்டு. வெறும் இரும்பு குணம் மட்டுமே கொண்டவர்களும் உண்டு. முதல் ரகத்தவர்கள், பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உள்ள மதிப்போடு இருப்பார்கள். இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர்கள், பதவிக் காலம் வரையில் முக்கியத்துவத்தோடு இருப்பார்கள்.

இதனால்தான் இந்தக் குறளை 'வினைத்திட்பம்' என்ற அதிகாரத்தில் வைத்தார். செய்கின்ற செயலில் திண்மை, உறுதி, அபாரமான பாரங்களைச் சுமக்கும் ஆற்றல் போன்ற தன்மைகளே ஒரு செயலை நிர்வாகித்து, வழிநடத்துபவருக்குத் தேவை என்பதால், அவரிடம் இந்தத் தன்மை இருந்தாலே போதும். அந்தப் பொறுப்புக்கு அவர் தகுதி பெறுகிறார். இதைத்தான் பரிமேலழகர், 'அச்சு: உருள் கோத்த மரம். ஆணி-உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து. அதுபோல, வடிவாற் சிறியவராயிருந்தே, பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர். அவரை, அத்திட்பம் நோக்கி அறிந்து கொள்க என்பதாம். இதனால், அவரை அறியும் ஆறு கூறப்பட்டது' என்று உரை செய்கிறார்.

பாரம் சுமக்கும் தன்மையை, அடுத்த குறள், 'கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது, தூக்கங் கடிந்து செயல்' என்று பேசுகிறது. 'உருவு கண்டு எள்ளாமை வேண்டும்' என்பது, ஒரு பணியில் ஒருவரை நியமிக்கும் பொறுப்பில் உள்ளவருக்கு--வள்ளுவர் காலத்தில் அரசர்களுக்கு; நம் காலத்தில் அதற்கான பொறுப்பில் உள்ளவர்களுக்கு என்று கொள்வோமே--சொல்லப்படுகிறது. அந்தச் செயலை மேற்கொண்டவர் எவ்வாறு இயங்கவேண்டும் என்பதற்கான இலக்கணத்தைச் சொல்கிறது அடுத்த குறள்.

வள்ளுவர் சொன்னது என்னவோ, ஒரு பணியில் ஒருவரை நியமிக்கும் பொறுப்பில் உள்ளவர், அந்தப் பணிக்கு உரியவரை அடையாளம் காண்பது எப்படி என்பதற்கான வழி. என்றாலும். இந்தக் குறளுக்குள், அப்படிப்பட்ட பணியில் அமர்பவர்கள், தன்னைத் தானே செலுத்திக் கொள்ள வேண்டிய, நடத்திக் கொள்ள வேண்டிய விதத்தையும் ஒரு மறைமுக எச்சரிக்கையாகச் சொல்வது போலவும் தென்படுகிறது அல்லவா? இன்றைக்குப் பதவியில் இருக்கிறோம் என்பதற்காக, 'அண்ணாச்சி ஆடுறாரு ஒத்திக்கோ ஒத்திக்கோ' என்ற போக்கில் நடந்து கொண்டால், ஆட்டம் முடிந்ததும், போட்ட புலிவேஷம் கலைந்து போகும்.

இருக்கும் இடத்தில் இருக்கும் வரையில்தான் உனக்கு மதிப்பு. இதிலிருந்து இறங்க வேண்டிய தருணம் ஒன்றும் வரும். அந்தத் தருணத்தை எதிர்கொள்ளத் தக்கவனாக உன்னை நீயே உருவாக்கிக் கொள். உயர். உன் பயன் மதிப்பைச் சுயமதிப்பாக மாற்றும் கலையையும் கற்றுக்கொள். நாளை, நீ 'அச்சாணி' நிலையிலிருந்து உருவி எடுக்கப்பட்டபின், தெருவில் கிடக்கும் வெற்றாணி; தேய்ந்து போன இரும்புத் துண்டு! ஆகவே, உன் மதிப்பையும் நீ உணர்ந்துகொண்டு, இப்போதே நீ, பொன் நிலைக்கு--மனத்தளவில், மனித நேயத்தில், பழகும் தன்மையில், அதிகார துஷ்பிரயோகம் செய்யாத வகையில்--உயர்ந்தால், வேஷம் கலைந்த புலி வேஷதாரியாகத்தான் போவாய். வேடிக்கை பார்க்கக்கூட ஆள் இருக்காது என்ற அழுத்தமான எச்சரிக்கையையும் உள்ளடக்கி நிற்கிறது, வள்ளுவரின் அச்சாணி.

குறளின் உவமை விரிய விரிய அது எந்த வடிவங்களையெல்லாம் எடுக்கிறது, எங்கெல்லாம் பொருந்துகிறது என்று தெரிகிறதல்லவா? இந்தக் குறளுக்கு இந்த வகையில் அணுகிப் பொருள்காண வழிகாட்டியவர், ஆசிரியர் தி. வேணுகோபாலன் என்கிற நாகநந்தி அவர்கள். அவரிடம் கற்ற மற்ற குறள் நயங்களில் சிலவற்றை வரும் மாதங்களில் பார்க்கலாம்.

(தொடரும்)

ஹரிகிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline