Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
பாட்டி சொன்ன பழமை
மனசு
டவுனில் சில வெள்ளாடுகள்
வந்தி
கல்லடி
- தேவி அண்ணாமலை|டிசம்பர் 2012|
Share:
அந்த அரை சாமத்து வேளையில் அவனுக்காய்க் காத்திருந்தாள். கண்களில் மையை இன்னும் ஒருமுறை அழுந்த இட்டுவிட்டு, லெபானிய வணிகன் ஒருவன் விற்காமல் போய்.... ஊர் திரும்பிப் போகிற போக்கில் இவள் புனைந்திருந்த பானைகளுக்கு மாற்றாய்த் தந்த வாசனைத் திரவியம் பூசிய அவளது நீண்ட அடர்ந்த முடிக்கற்றைகளை நீவியவாறு யோசனையோடு காத்திருந்தாள்.

நீளவாக்கான மாசறு முகம், செதுக்கியது போன்ற மூக்கு, கருநீல விழிகள். அவை அயர்வுடன் சொருகும் போதெல்லாம் மயக்கத்தில் கிறங்குகிறாள் போலும் என எண்ணத் தோன்றிற்று. நல்ல கோதுமை நிறத்தில் சராசரிப் பெண்ணைவிடக் கொஞ்சம் உயரமாய், அழகிதான் அவள். எப்போதும் போல அவள் எண்ணங்கள் தறிக்கெட்டுப் பின்னோக்கிப் போயிற்று. பதினேழுபேரில் ஒருத்தியாய்ப் பிறந்தது முதல், அம்மாவின் முத்தம், மிக இளம்பிராயத்திலேயே செத்துப்போன நேர்மூத்த அக்காவுடன் விளையாடிய சிறுவயது ஞாபகங்கள், பின் அந்தப் பாலை பூமியில் தன் பதின்மூன்று வயதில் ஒரு நாற்பதைந்து வயது வாலிபனுக்கு நான்காவது மனைவியாய் வாய்த்ததுவரை மனம் அலைந்து திரிந்து ஆர்ப்பரித்தது.

ஆட்டு மந்தைகளோடு ஆடாய்த்தான் போயிருந்தாள், கனவுகள் அவளைச் சிறை எடுக்கும்வரை. மனதிலும், உடலிலும் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அவள் மண வாழ்க்கை மருந்தாய் அமையவில்லை. இதோ.... இப்படிப் பேரீச்சைப் பழக்காரனின் பேரிச்சைக்கு விரும்பியே ஆட்பட்டாள். பரத்தையாம்... ஊரார் அவளுக்கு வைத்த பெயர் ஒன்றும் அவளுக்கு வலிப்பதாய் இல்லை.அவனுடன் கழிந்த பொழுதுகள் அவள் தாய், தமக்கையின் ஞாபகங்களை மீட்டெடுத்தன. இப்படி இருப்பதில் அவள் தனக்கு சந்தோஷம் என்றே எண்ணிக் கொண்டாள். யோசிக்கக் கூடாத விஷயங்களை யோசிக்கவே கூடாதென்று முடிவு கொண்டிருந்தாள். அவளுக்கு அவள் நியாயம். அவ்வளவுதான்.

"சே...என்னாவாயிற்று இத்தனை நேரம். வரமாட்டானோ என்னவோ" என்றெண்ணிய அடுத்த நொடியில் வாசலில் சத்தம். வந்து விட்டிருந்தான். மதுவின் வாடை சற்றுத் தூக்கலாய் இருந்தது. குடித்து கும்மாளமிட்டுவிட்டு வந்திருப்பான் போலும். மதுவின் வாடை அவளையும் வாட்டிற்று. ம்ம்ம்... இன்று கதைகள் பேச நேரமில்லை. குடித்தவனிடம் என்ன சொல்ல! அவன் என்ன கேட்க!

வழக்கமான அடுத்த விஷயங்கள் மளமளவென அரங்கேறின. சற்று அயர்ந்து உறங்க எத்தனிக்கையில் தடதடவெனக் கதவு அதிர்ந்தது. என்ன நடக்கிறது என அறிவதற்குள் வாட்டசாட்டமான மூவர் கதவைப் பெயர்த்துக் கொண்டு உள்ளே வந்திருந்தனர். அதிரடியாக அவளை அரைகுறை ஆடையுடன், தலைவிரி கோலமாக, அவளைத் தொடுவதே பாவம்போல தலை மயிற்றைப் பற்றித் தெருவுக்கு இழுத்து வந்தனர். கூக்குரலிட்டவாறு அவள் இன்னதென்று சொல்லிஅழைக்க முடியாத உறவினனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தாள்.

அவன் பயந்து போய் விட்டிருந்தான் கைகளும் கால்களும் நடுங்க அங்கியைப் பற்றியபடி எங்கோ பார்த்தபடி நின்று கொண்டிருந்தான், அவள் முகத்தை வருடி, நெற்றிமுடிக் கற்றைகளை விளையாடும் அந்தக் கரங்களை இறுக்கமாய்க் கட்டியபடி.

வெட்கமும், கழிவிரக்கமும், வேதனையும் பிடுங்கித் தின்ன, வீதியில் முக்காட்டுத் துணியோடு இன்னும் பலவற்றைத் தொலைத்தவளாய், விதியை நொந்தவாறு கண்ணீரும் கம்பலையுமாய் நகரின் நடுவில் விளங்கிய முக்கியப் பொட்டல்வெளியில் எதன்பொருட்டோ கூடிய கூட்டத்திற்கு நடுவே அவள் இழுத்து வரப்பட, நன்றாக விடிந்திருந்தது.

தலை நிமிர்ந்து பார்க்க வெட்கித்து.... அழுகையில் விக்கித்து அவள் அந்தப் பெரும்புழுதியில் வீழ்ந்து கிடந்தாள் கந்தலாய். சலசலவென கூட்டத்தின் எள்ளல் அவளை மெல்லச் சாகடித்துக் கொண்டிருந்தது. நடப்பது என்னவென்று அறியாமல் அவள் அசைவற்றுக் கிடந்தாள்.

வேதாகமத்தைக் கரைத்துக் குடித்திருந்த வேதபாரகரும், பரிசேயரும் அங்கே நடுநாயகமாய் இருந்தவரை நோக்கி உரத்த குரலில் கூறினர், "போதகரே! இதோ இந்தப் பெண்ணானவள் ஒரு பரத்தை. இன்று அதிகாலை கையும் களவுமாகப் பிடிபட்டவள். இப்படியானவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மோசே நியாயப் பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, இதற்கு நீர் என்ன சொல்லுகிறீர்?"
விதியை அறியும்பொருட்டு அவள் மெல்லக் கண்ணுயர்த்திப் பார்த்தாள். ஆங்கே, அவள் கண்ட காட்சி அவளை ஒரு கணம் தன்னிலை மறந்து பரவசத்தில் ஆழ்த்தியது.

யார் இவர்?

தன்னைச் சுற்றி நடக்கும் இத்தனை களேபரமும் பாதிக்காதவராய், அமைதியின் உருவாய், கனிவைத் திருமுகமாய், கருணையைக் கண்களாய்க் கொண்டவராய்.... இவர் யார்?

இரும்பான இதயமும், இறுமாந்த இதயமும் இவர் பிரசன்னத்தில் இளகக் காத்திருக்கும். ஈன்றெடுத்த தாயைப் போலவும், பேணி வளர்க்கும் தந்தை போலவும் ஒருசேரத் தோன்ற வீற்றிருக்கும் இவர் யார்?

அங்கே அவள் காண்பது ஞானத்தின் ஒளியா? இல்லை அதிகாலையில் உதித்த இன்னொரு ஞாயிற்றின் ஒளியா? யார் இவர்? மனிதன் போலவும் அம்மனிதனைப் படைத்த தேவன் போலவும் விளங்கும் யார் இவர்?

அவள் அறிந்த மொழியின் எந்த வார்த்தைகளாலும் எப்படி முயன்றாலும் விவரிக்க இயலாத ஒன்றைக் கண்டாள். ஒரு கணம் அவள் தான் தேர்ந்தெடுத்த வாழ்வியலை நினைத்துத் தன்னை அற்பமாகவும் அவர் அண்டையில் அத்தனை நெருக்கத்தில் அவரைக் காணக்கிடைத்ததை பாக்கியமாகவும் கருதினாள்.

புரிந்தது புரியாமலும், அறிந்து அறியாமலும், தெரிந்தும் தெரியாத நிலைஅவளுக்கு...

அந்தக் குழப்பதிலும் தெளிந்த மனநிலை. கீழே கிடந்தவள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்துக்கொண்டாள். அவள் வாழ்வின் முக்கிய தருணமிது என்று ஏதோ சொல்லிற்று.

வேதபாரகரும், பரிசேயரும், திரும்பத் திரும்பத் தாம் சொன்னதைச் சொன்னபடி இருந்தார்கள். பொறுமையற்றவர்களாய்.

அவரோ மிக நிதானமாக புழுதியில் எழுதியபடி இருந்தார்.

வேதபாரகரும், பரிசேயரும் இன்னமும் அழுந்தச் சொல்லக் கூட்டமும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டது.

புழுதியில் எழுதுவதை ஒரு கணம் நிறுத்தி அவர்களை நோக்கிப் பகன்றார் "உங்களில் யார் பாவம் செய்யாதவனோ, அவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக் கடவன்" என்று சொல்லி மறுபடியும் குனிந்து தரையில் எழுதினார்.

அதைக் கேட்ட கூட்டம் ஒரு கணம் ஸ்தம்பித்த மாத்திரத்தில் வேதபாரகரும், பரிசேயரும் அவர் சார்ந்தவர்களும் இனித் தமது தந்திரம் பலிக்காது என்று அவ்விடத்தை விட்டு நீங்கினர்.

நசரேத்து பெருமகனார் சோதித்த கேள்வி கூட்டத்தின் மனசாட்சியை மிரட்ட, முதலாவதாகப் பெரியோரும் பின்னர் சிறியோரும் அங்கிருந்து மெல்ல விலகிச் சென்றனர்.

பரம்பொருள் தந்த அரும்பொருளாம் இயேசுபிரானும், அலைக்கழிக்கப்பட்ட அந்தப் பாவப்பட்ட பெண்ணும் அந்த வெளியில் தனித்து இருந்தனர்.

இயேசுபிரான் நிமிர்ந்து அந்தப் பெண்ணைத் தவிர வேறொருவரையுங் காணாமல் "பெண்ணே! உன்மேல் குற்றஞ்சாட்டியவர்கள் எங்கே? ஒருவன்கூட உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா?" என்றார்.

நடக்கும் ஒவ்வொரு காரியமும் கனவுலக சஞ்சாரமா இல்லை தன் அறிவுக்குக்கெட்டாத மெய்யா எனப் புரியாது கிடந்தவள் தயங்கியபடி மெல்ல வாய்திறந்து உரைத்தாள் "இல்லை, ஆண்டவரே!"

இயேசு அவளை நோக்கி "நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை. நீ போ. இனி பாவஞ் செய்யாதே" என்றார்.

அவ்வளவு தானா? என் பாவங்கள் மன்னிக்கப்பட்டனவா? எனக்கு இன்னொரு பிறப்பா? இனி யாரும் என்னை எள்ளி நகையாடுவதில்லையா? நான் உமது சபையில் ஒத்துக் கொள்ளப்பட்டேனா? என் வாழ்வை நேர்செய்ய இன்னொரு சந்தர்ப்பமா? எனக்காவா? எனக்காவா நீர் பரிந்து பேசினீர்? இதோ இந்தக் கூட்டத்தில் என்னை ஆண்டு அனுபவித்தவன் இருந்திருப்பானே. அவன் வரவில்லையே? ஒரு கணத்தில் சாவின் விளிம்பில் இருந்து காத்து, புது வாழ்வு தந்தாரே....யார் இவர்? இவர் மன்னித்த மாத்திரம் என்னுள்ளம் உடைந்து கதறுகிறதே!

நெஞ்சு வெடிக்க, உதடு துடிக்க, வார்த்தைக்குள் அடங்காத அவளது உள்ளக் கொதிப்பைத் தாரையாய்ப் பிரவகிக்கும் தன் கண்ணீரினால் நன்றி தெரிவித்தாள் அந்த மன்னிக்கப்பட்ட பேதை.

மெதுவாய் எழுந்து நடக்கலானாள். உலகமே புதிதாகத் தோன்றிற்று. சிலுசிலுவெனத் தென்றல் வீசி அவள் ஊனையும் உயிரையும் ஆற்றிற்று. வழியில் அவள் வலியறிந்த யாரோ கொடுத்தனுப்பினார் போலும். ஒரு சிறுமி ஒரு முக்காட்டுத் துணியை அவள்மீது போர்த்திவிட்டு ஓடினாள். அது அவளுக்கு, அவள் மன்னிப்புக்குக் கிடைத்த அடையாளமாய், அங்கீகாரமாய்த் தோன்றிற்று. எட்டி நடை போட்டாள். இனி வாழ்வு அவள் பக்கம்.

தேவி அண்ணாமலை,
சிகாகோ
More

பாட்டி சொன்ன பழமை
மனசு
டவுனில் சில வெள்ளாடுகள்
வந்தி
Share: 


© Copyright 2020 Tamilonline