|
|
|
|
அன்புள்ள சிநேகிதியே...
ஒரு விசித்திரமான அனுபவம். கசப்பான அனுபவம். முதுகில் குத்துவதைப்போல. உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். என்னைப் பொருத்தவரையில் I am done with this girl! விவரம் தெரிந்தவுடன் எப்படி நினைப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். அவள் பக்கம்தான் நியாயம் பேசுவீர்கள். என்னுடைய முடிவிலிருந்து நான் மாறப்போவதில்லை. நன்றி கெட்டவர்களுடன் நட்பு தேவைதானா?
என்னைவிட வயதில் 10 வருடம் சின்னவள். இந்தியாவிலேயே அவள் குடும்பம் ஒரு Dysfunctional Family. அவள் அப்பாவிற்கு முதல் மனைவி மூலம் ஒரு பையன். அப்புறம் இந்தப் பெண்ணின் அம்மா காதல் திருமணம். இவள் அம்மாவையும் சரியாக வைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் பிரிந்து வளர்ந்தனர். ஏதோ தூரத்து உறவு. நாங்கள் இந்தியா போயிருக்கும் போது எங்களைப் பார்க்க வருவாள். ஒருமுறை எங்கள் குழந்தைகள் இருவரையும் பொறுப்போடு இரண்டு நாள் பார்த்துக் கொண்டாள். நானும் என் கணவரும் ஒரு சாவு வீட்டுக்குப் போக வேண்டியிருந்தது ஒரு இந்தியா ட்ரிப்பின் போது. எங்களுக்கு அவள்மேல் மிகவும் பாசமும் அக்கறையும் அதிகரித்தது. ஏதேனும் சந்தேகம் கேட்டு அடிக்கடி மெயில் அனுப்புவாள். குழந்தைகளுக்கு யார் மூலமாவது கிஃப்ட் அனுப்புவாள். எத்தனை அருமையான பெண், இவளுக்கு ஒரு நல்ல கணவன் அமைய வேண்டும், வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறாள் என்று என் கணவரிடம் அடிக்கடி சொல்வேன்.
போன வருடம் அவளை sponsor செய்ய முடியுமா என்று கேட்டு எழுதியிருந்தாள். இல்லாவிட்டால் அந்த மாநாட்டில் பங்கேற்க முடியாது என்று விவரித்திருந்தாள். நாங்கள் சந்தோஷமாக உதவி செய்தோம். 6 மாதம் தங்க 'விசா' கிடைத்தது. முதலில் 2 வாரம் என்று சொன்னவள், அப்புறம் சில மாதங்கள் தங்கும் எண்ணத்தைத் தெரிவித்தாள். 'வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்கிறாள்' என்று நினைத்து நாங்கள் அவளைக் குடைந்து எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அவள்பேரில் எந்தச் சந்தேகமும் இல்லை. எங்கள் வீட்டில் தங்கச் சொன்னோம். அவளை வேற்று மனிதராக நினைக்காததால் வீக் எண்ட் பார்ட்டி இருந்தால் அவளையும் கூட்டிப் போவோம். நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். பார்த்த எல்லாருக்குமே அவள் நல்லவள் என்றுதான் பட்டது. எனக்கு வேலைகளில் உதவி செய்வாள். குழந்தைகளுக்கு ப்ராஜெக்ட் வொர்க்கில் உதவி செய்வாள்.
இரண்டு மாதம்கூட ஆகியிருக்காது. நாங்கள் ஒரு திருமணத்திற்குப் போக வேண்டியிருந்தது. குழந்தைகளை அழைத்துக் கொண்டு போகமுடியாது. Baby sitter ஏற்பாடு செய்யவில்லை. இவள்தான் வீட்டில் இருக்கிறாளே, சில மணி நேரம்தானே என்று இருந்தோம். திடீரென அந்த வியாழக்கிழமை அவசரமாக ஒரு இன்டர்வியூவுக்குப் போக வேண்டுமென்று சொன்னாள். அடுத்த நாள் கிளம்பி ஞாயிறு மாலை வருவதாகச் சொன்னாள். யார் வீக் எண்டில் இன்டர்வியூ வைக்கிறார்கள், எதற்கு இரண்டு நாள், எங்கே தங்கப் போகிறாள்? என்று கேட்க வேண்டியது எல்லாம் கேட்டோம். ஒரு நண்பர் வீட்டில் தங்குவதாக ஏதோ சொன்னாள். யார் அந்த நண்பர், புத்தம் புதிதாய் என்று தோன்றியது. சரி, ஏதோ வேலை கிடைத்தால் போதும். face book contacts எதாவது இருக்கலாம் என நினைத்தேன். மறூநாள் ரயில் நிலையத்திலிருந்து வர உதவி கேட்டாள். செய்தோம். அந்த வாரக்கடைசியில் திருமணத்துக்கு பேபி சிட்டர் கிடைக்காமல் நான் மட்டும் தனியாகப் போய்விட்டு வந்தேன். அன்றிலிருந்தே ஒரு சிறிய பிளவு எனக்கும் இந்தப் பெண்ணிற்கும் ஏற்பட்டது போல இருந்தது.
மறுநாள் திரும்பி வந்த பிறகு அந்த ஒரு வாரம் பழைய நிலைமைக்குத் திரும்பி மிகவும் நட்பாக இருந்தாள். நானும் பழைய நிலைக்கு வந்து சந்தோஷமாக இருந்தேன். அவளைப்பற்றித் தவறாக நினைத்தது என் கற்பனையாக இருக்கும் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால் அடுத்து வந்த வாரங்களில் அவள் அதேபோன்று வெள்ளிக்கிழமை போய் ஞாயிற்றுக்கிழமை வராமல் திங்கள் கிழமை (நாங்கள் வேலைக்குப் போயிருக்கும் சமயத்தில்) வந்திருந்தாள். மாலை நாங்கள் வரும்போது நன்றாகச் சமைத்து வைத்திருந்தாள். என் கணவருக்கு அவளுடைய செய்கை சிறிது விசித்திரமாக இருந்தது. என்னை எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்று கட்டளை போட்டிருந்தார். இருந்தாலும் சில சமயம் எனக்குப் பொறுக்காமல் ஏதேனும் விவரம் கேட்பேன். அவள் சொல்லும் பதில்கள் முன்னுக்குப் பின்னாக இருக்கும். எப்படி, அவளுக்கு வாரா வாரம் வெளியூர் போகப் பணம் இருக்கிறது? யாருடன் தங்குகிறாள்? எப்படி ரயில்நிலையத்திலிருந்து வீட்டிற்கு வருகிறாள்? டிரெய்னிங் என்று சொல்கிறாள். வாரக்கடைசியில்தான் வேலை என்பாள். விசிட்டர் விசாவில் எப்படி வேலை பார்க்க முடியும்? I digested everything with a pinch of salt. என் குழந்தைகள் அவளிடம் ஒட்டிக் கொண்டனர். ஏதோ இடம் கொடுத்திருக்கிறோம். சாப்பாடும் பெரிய விஷயமில்லை. நாம் அவளுடைய சொந்த விஷயங்களைத் துருவிக் கேட்க உரிமையில்லை என்று முடிவு செய்தேன். அவளுக்கும் ஏதோ புரிய ஆரம்பித்திருக்கிறது. அவ்வளவு பாசமாக, நெருக்கமாக இல்லை என்பதை உணர்ந்தாள். She was pretending to be normal.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு எங்கள் ஊரைச் சேர்ந்தவர் பிஸினஸ் விஷயமாக இங்கே வந்திருந்தார். என் அம்மா சில சாமான்கள் அவர் மூலமாகக் கொடுத்தனுப்பியிருந்தார். அவர் திரும்பி இந்தியாவுக்குக் கிளம்பும் நேரம் வந்துவிட்டது. நாங்கள் போய்ப் பார்க்க முடியவில்லை. கடைசியில் அவரை வீட்டுக்குச் சாப்பிட அழைத்து வந்தோம். பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் இந்தப் பெண் வெளியில் போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். அவரைப் பார்த்ததும் ஒரு சங்கடத்துடன் சிரித்தாள். அவர் சகஜமாக, "என்னம்மா, உன்னையும் சாப்பிடக் கூப்பிட்டிருக்காங்களா? நல்லது, அவர் எப்படியிருக்கார்?" என்று கேட்டார். அவள், "நல்லாயிருக்காரு" என்று பதில் சொல்லிவிட்டு என்னிடம் "ஒரு சாமான் மறந்து போய்விட்டேன். எடுக்க வந்தேன்" என்று வெடுக்கென்று பதில் சொல்லிவிட்டு மறுபடியும் வெளியே கிளம்பிப் போய்விட்டாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்புறம் அவரை மெள்ள விசாரித்ததில் பாதி விவரம் தெரிந்தது. எங்கள் வீட்டிற்கு சுமார் 40 மைல் தூரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு வாரத்திற்கு முன்பு அவளை, அவர் பார்த்திருக்கிறார், ஒரு ஆணுடன். தெரிந்த முகம் என்று இவரே போய் இவளைப் பார்த்து அறிமுகம் செய்து கொண்டார். அந்தப் பையனை அவள் தன் கணவன் என்று சொன்னாளாம். இரண்டு பேரும் வேறு வேறு மாகாணத்தில் வேலை செய்வதால் வார இறுதியில் சந்தித்துக் கொள்வார்களாம். அவர்கள் போனபிறகுதான் இவருக்கு உரைத்ததாம். அந்தப் பையனையும் இவருக்கு முன்பே ஊரில் தெரியும். பார்த்துப் பல வருடங்களாகியிருக்கிறது. முழுப்பெயரையும் சொல்லாமல் பாதிப்பெயரைச் சொல்லி அறிமுகம் செய்திருக்கிறாள்.
இவள் எங்களுடன்தான் இருக்கிறாள் என்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. "நாளைக்கு ஊருக்குத் திரும்பி விவரம் கேட்டுச் சொல்கிறேன்" என்று அந்த நண்பர் கிளம்பிப் போனார். இவள் வேலை என்று சொன்னவள் ஃபோன் செய்து ஒரு வாரம் ட்ரெய்னிங், அடுத்த வாரம்தான் வீட்டுக்கு வருவேன். வேலை கன்ஃபர்ம் ஆக வாய்ப்பு இருக்கிறது என்று வாய்ஸ் மெயில் விட்டிருந்தாள். என்னத்தைச் சொல்வது? போன நண்பர் நான்கு நாட்களில் ஃபோன் செய்து எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காண்பித்தார். அவள் கணவன் என்று சொன்னது பாய்ஃபிரண்ட். அந்தப் பையனுக்கு ஏற்கனவே உறவுக்காரப் பெண்ணுடன் திருமணம் ஆகி இருந்தது. சாக்குப்போக்கு சொல்லி அவளை ஊரில் விட்டுவிட்டு இங்கே வேலைக்கு வந்துவிட்டான். எங்கள் வீட்டில் இருந்த அவள் அங்கேயே அவனுடன் தொடர்பில் இருந்திருக்கிறாள். எங்களை ஸ்பான்சராகப் பயன்படுத்தி இங்கே அவன் இருக்கும் இடத்திற்குச் சமீபத்தில் வந்து விட்டாள். அவன் ஏதோ நண்பனுடன் ஒரு அறையில் தங்கிக் கொண்டு இருக்கிறான் போலிருக்கிறது. அந்த நண்பன் இல்லாத சமயத்தில் இவர்கள் இருவரும் இணைந்து இருப்பார்கள் போலிருக்கிறது. அந்த நண்பன் 2, 3 தடவை எச்சரிக்கை செய்திருக்கிறான். அவனும் பொறுக்க முடியாமல் அவர்கள் வீட்டிற்கு விஷயத்தைச் சொல்லியிருக்கிறான். Oh my god! ஏதோ மர்மக்கதை போல இருந்தது. இப்படி நானும், என் கணவரும் நல்லது செய்யப் போய் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற நினைப்பு வந்தாலே, ஆத்திரம் வருகிறது.
அந்த நண்பர் ஃபோன் செய்து இரண்டு நாட்களுக்குப் பிறகு இவள் வந்தாள். மிகவும் நட்பாகப் பேச ஆரம்பித்தாள். குழந்தைகளுக்கு சாக்லேட்ஸ் வாங்கி வந்திருந்தாள். உரிமையாக அவர்களைக் கூப்பிட்டாள். எனக்கு அவளை நேரே பார்க்கப் பிடிக்கவில்லை. சமைக்கும் அடுப்பின் முன்னால் நின்றுகொண்டே, "குழந்தைகள் படிக்கிறார்கள். By the way, நாளைக்கு எனக்கு இரண்டு வாரம் தங்குவது போல இரண்டு குடும்பத்தினர் வருகிறார்கள். Basement Room கண்டிப்பாக வேண்டும். நீ உன் நண்பர் வீட்டிற்குப் போய்விடுவது நல்லது" என்றேன்.
"எனக்குத் தெரியாதே! நீங்கள் அவர்கள் வருவதாகச் சொல்லவில்லையே" என்றாள். "இப்போ சொல்றேன். நீ ஒரு வாரமா வீட்டில் இல்லை; முன்னால சொல்லலை. அப்படிச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லைன்னு நினைக்கிறேன்" என்றேன். சிறிதுநேரம், பின்னாலேயே நின்றாள். நான் திரும்பிப் பார்க்கவில்லை. 'ஓகே' என்று கீழே போனாள். தன் சாமான்களை வாரிப் போட்டுக்கொண்டு மேலே வந்தாள். "எல்லாத்துக்கும் தேங்க்ஸ். என் பேர்ல என்ன கோபம்னு தெரியலை. That uncle is gossipy" என்றாள். நான் கதவைத் திறந்து வைத்தேன். 5 நிமிடத்தில் வாடகைக் கார் வந்தது. அவளுக்கு திரும்பக் கையசைக்கக்கூடப் பிடிக்கவில்லை. நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். I was unable to connect the dots. சினிமாவில் வருவதுபோல, நயவஞ்சகம். She used us. அவ்வளவுதான். நல்லவர்களை நாம் எப்படித்தான் அடையாளம் கண்டு பிடிப்பது?
இப்படிக்கு ................... |
|
அன்புள்ள சிநேகிதியே
விறுவிறுப்பான கதை - மன்னிக்கவும் - கதையல்ல. இதுபோன்ற உண்மைச் சம்பவங்கள், எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் வாழ்விலும் நடந்திருக்கிறது. "I am done" என்று நீங்கள் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டீர்கள். உங்களைக் குறை சொல்லமாட்டேன். சுயநல ஆசைகள் பெருகும்போது, சிலர் மற்றவர்கள் கொடுக்கும் அன்பையும், ஆதரவையும் அடமானம் வைத்து விடுகிறார்கள். அந்தப் பெண் ஏன் அப்படிச் செய்தாள் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. Dysfunctional Family பொருளாதார நிலைமை, சமூகம் அங்கீகரிக்காத காதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவருடைய சொந்த விவகாரங்களில் தலையிட எனக்கு உரிமையில்லை. Breach of trust ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அது உங்களைப் போலவே எல்லோரையும் பாதிக்கும். நாம் அன்பு செலுத்துகிறோம், ஆதரவு கொடுக்கிறோம் என்பதால் அந்தப் பெண் எல்லா உணர்ச்சிகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லைதான். இருந்தாலும், mislead செய்வது, 'பொய்யை'விடச் சின்னத்தனமானது. உறவில் முறிவு ஏற்படப் பொதுவாக எனக்குத் தெரிந்தவரை ஐந்து காரணங்கள் இருக்கும் - being economical with truth; distortion of truth; suppression of truth; negation of truth and diversion of truth. வாசகர்கள் அழகாக அர்த்தம் புரிந்துகொண்டு வரிசைப்படுத்துவார்கள் என நினைக்கிறேன். You are also one among them. Cheer up. இதுபோன்ற அனுபவங்கள் நல்லவர்களை இனம்காண மிகவும் உதவுகிறது. நான் உங்கள் கட்சி.
வாழ்த்துக்கள் சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|