Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | அஞ்சலி | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
விளையாட்டு விசயம்
குளிர் விளையாட்டுகள், சூடான தகவல்கள்
- சேசி|பிப்ரவரி 2006|
Share:
Click Here Enlarge"லூஜ், கர்லிங், பாப்ஸ்லே..." என்று தொடர்ந்த என்னை நிறுத்தி என் நெற்றியைத் தொட்டுப் பார்த்த நண்பர், "என்ன உடம்புக்கு முடியலையா?" என்றார். "ஐயா, நான் பிதற்றவில்லை, இவையெல்லாம் பனி விளையாட்டுக்கள்" என்றேன். 2006-ம் ஆண்டு பனிக்கால ஒலிம்பிக்ஸ் இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையில் இருக்கும் டொரினோ நகரை மையம் கொண்டு ·பிப்ரவரி 10 முதல் 26 தேதிவரை நடக்கவிருக்கின்றன. "சென்னையின் உச்சி பிளக்கும் வெய்யிலில் வளர்ந்தவன் நான். குளிர்பானத்தில் போட்டுக் கொடுத்த அரை அங்குலப் பனிக்கட்டியைத் தவிரப் பனியைப் பார்க்காதவன். எனக்கென்ன தெரியும் பனி விளையாட்டுக்கள் பற்றி?" என்றார் நண்பர்.

நம்மில் பலர் அப்படி நினைத்தாலும், ஜமைக்காவைச் சேர்ந்த தீவான் ஹாரிஸ் அப்படி நினைக்கவில்லை. 1988-ல் கனடாவில் நடந்த பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில், வெப்பப் பிரதேசமான ஜமைக்காவில் இருந்து நான்கு பேர் கொண்ட பாப் ஸ்லெட் குழுவோடு பங்கேற்று சாதனை புரிந்தார். குட்டிப் படகு போல் இருக்கும் வாகனத்தில் நால்வர் நெருக்கமாக ஒருவர் பின் ஒருவர் அமர்ந்து வளைவான பாதைகளில் தலை தெறிக்கும் வேகத்தில் சறுக்கிச் செல்வதுதான் பாப் ஸ்லெட் விளையாட்டு. ஆரம்பத்தில் பின்னால் இருந்து தள்ளும் வேகமும், பிறகு நால்வரும் வண்டியில் தாவியேறி ஒருங்கியைந்து பாதையின் வளைவுகளுக்கேற்ப உடலை வளைத்து வண்டியை வேகமாகச் செலுத்துவதும்தான் முக்கியமான நுணுக்கங்கள். இது ஜமைக்காவில் நடக்கும் புஷ்கார்ட் டெர்பி என்ற விளையாட்டைப் போலவே இருக்கிறது என்று நினைத்த ஹாரிஸ் ஜமைக்காவின் தேசியப் படையிலிருந்து நால்வரைத் தேர்ந்தெடுத்து இந்த விளையாட்டில் ஜமைக்காவின் சார்பாகப் பங்கெடுத்துக் கொண்டார். பனியே இல்லாத நாட்டிலிருந்து வந்து, பனியே இல்லாமல் பயிற்சி செய்து பங்கெடுத்துக் கொண்ட அவர்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு. அந்த ஆண்டு பல நெருக்கடிகளைச் சந்தித்தாலும், 1992 ஒலிம்பிக்ஸில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளைப் பின்தள்ளி ஜமைக்கா 14-வது இடத்தைக் கைப்பற்றியது. இவர்களது வெற்றியைத் தொடர்ந்து மெக்ஸிகோ, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ போன்ற வெப்பப் பிரதேச நாடுகளும் தற்போது இந்த விளையாட்டில் பங்கெடுத்துக் கொள்கின்றன. ஜமைக்காவின் பாப் ஸ்லெட் குழுவின் கதையை மையமாகக் கொண்டு, வால்ட் டிஸ்னி நிறுவனம் கூல் ரன்னிங்ஸ் என்ற திரைப்படம் எடுத்தது.

ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்கிய கிரேக்க நாட்டின் ஆதென்ஸ் நகரில் 1896-ல் முதலாவது நவீன ஒலிம்பிக்ஸ் (Modern Olympics) நடத்தப்பட்டது. 1908-ல் முதன் முறையாக ·பிகர் ஸ்கேட்டிங் ஒலிம்பிக்ஸில் சேர்க்கப்பட்டது. பின்னர் 1920-ல் ஐஸ் ஹாக்கி சேர்க்கப்பட்டது. 1924-ல் முதன் முறையாக முழு நீள குளிர்கால ஒலிம்பிக்ஸ் பிரான்ஸ் தேசத்தில் நடைபெற்றது. 1992-வரை கோடைக்கால ஒலிம்பிக்ஸ் விளை யாட்டுகளும், குளிர்கால விளையாட்டுகளும் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அதே ஆண்டில் நடைபெற்று வந்தன. 1994-ல் நார்வே நாட்டின் லில்லிஹாமர் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸில் இருந்து இவை வெவ்வேறு ஆண்டுகளில் நடத்தப்படுகின்றன.

லில்லி ஹாமர் ஒலிம்பிக்ஸ் அமெரிக்க ·பிகர் ஸ்கேட்டிங் வீராங்கனைகள் நான்ஸி காரிகன், டான்யா ஹார்டிங் இடையே நடந்த பூசல்களுக்கும் பெயர்போனது. நான்ஸி ·பிகர் ஸ்கேட்டிங் துறையில் வேகமாக முன்னேறி 1992 ஒலிம்பிக்ஸில் வெங்கலப் பதக்கத்தையும், 1993-ல் அமெரிக்கப் போட்டியில் முதலிடத்தையும் கைப்பற்றினார். அமெரிக்க வீராங்கனை கிரிஸ்டி யமகுச்சி-க்குப் பின் சிறந்த வீராங்கனையாக வருவார் என்ற எதிர் பார்ப்பு இருந்தது. இந்த நிலைமையில் 1994-ல் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான தேர்வுகள் நடந்தபோது அவர்மீது பொறாமை கொண்ட டான்யா ஹார்டிங் தன் கணவரோடு சேர்ந்து திட்டமிட்டு அடியாளை வைத்து நான்ஸி யைத் தாக்கினார். நான்ஸிக்கு முழங்காலில் பலத்த அடி. மெல்லுவதற்கு அவல் கிடைத் ததும் பத்திரிகைகளும், செய்தித்தாள்களும் பலவிதமான கிசுகிசுக்களும், குழப்பச் செய்திகளும் வெளியிட ஆரம்பித்தன. அடிபட்டதற்காகக் கழிவிரக்கத்துடன் அழுது பேட்டியளித்த நான்ஸி பத்திரிகைகளால் கேலி செய்யப்பட்டார்.

ஆனால் அந்த வருடம் ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது யுக்ரேனைச் சேர்ந்த அக்ஸானா பாயுல் என்ற வீராங்கனை. ஆனால் அதிலும் ஒரே குழப்பம். நான்ஸிக்கும், அக்ஸானாவிற்கும் இடையே போட்டி மிக நெருக்கமாக இருந்தது. மிகக் குறுகிய வித்தியாசத்தில் தங்கத்தை இழந்த நான்ஸி விரக்தியில் அக்ஸானாவைத் தாக்கிச் சொன்ன வார்த்தைகளைத் தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பக் காண்பித்தனர். ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் முடிந்தும் நான்ஸியின் பிரச்சினைகள் முடியவில்லை. அவருக்கும், பின்னால் அவர் திருமணம் செய்து கொண்ட அவரது ஏஜண்டுக்கும் இடையே இருந்த தொடர்புபற்றியும் பல கிசுகிசுக்கள் வந்தன. இவற்றால் பிரபலமான நான்ஸியை, வால்ட் டிஸ்னி நிறுவனம் விளம்பரத்திற்காக 2 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால் ·பிளாரிடா டிஸ்னி உலகில் நடக்கும் ஊர்வல நிகழ்ச்சியில் பங்கேற்பதை மட்டம்தட்டி நான்ஸி சொன்ன கருத்து ஒலிபெருக்கியில் அனைவரும் கேட்கும்படியாக வெளியாகி அதிலும் அவர் பிரச்சினையில் மாட்டிக் கொண்டார். கிசுகிசுப்புகள், பிரச்சினைகள், சர்வதேசப் போட்டிகள், அமெரிக்காவின் அடுத்த நட்சத்திரம் என்ற எதிர்பார்ப்பு என்று பல்முனை சோதனைகளையும் தாங்கமுடியாத நான்ஸி தொலைக்காட்சியில் கொடுத்த ஒரு பேட்டியில் உடைந்து அழுதுவிட்டார். போட்டிகளில் இருந்து பின்னர் விலகி இப்போது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்கிறார்.
டான்யா ஹார்டிங் எப்போதுமே விளை யாட்டைவிட அவர் செய்யும் மற்ற காரியங்களுக்காகப் பெயர் எடுப்பவர். 1993 அமெரிக்க ·பிகர் ஸ்கேட்டிங் போட்டியில் தனது உடை கழன்றதால் இரண்டாவது முறை வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார். மற்றொரு போட்டியில் தனது ஆட்டத்தைப் பாதியிலேயே நிறுத்தி விட்டுக் காலணி சரியில்லை என்று புகார் செய்தார். 1994 ஒலிம்பிக்ஸ் போட்டியின் போது கூட அவரது பெயரை அழைத்த போது வராமல் தனது ஷ¥ லேஸ் சரி யில்லை என்று காரணம் சொன்னார். நான்ஸி மேல் செய்த தாக்குதலுக்காகக் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்கள் சிறையில் இருந்தார். அது மட்டுமா? அவர் தன் கணவரோடு படுக்கை அறையில் நெருக்கமாக இருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் கலக்கியது. சிறையிலிருந்து வெளியான பின்னரும் பலமுறை பிரச்சினைகளுக்கு உள்ளாகிப் போலீசிடம் சிக்கினார். பின்னர் 2002-ல் பெண்கள் குத்துச் சண்டையில் பங்கெடுத்துக் கொண்டு மீண்டும் பத்திரிகைச் செய்திகளில் தோன்றினார்.

9/11 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்கா வின் சால்ட் லேக் நகரில் பலத்த பாதுகாப்புடன் நடந்த 2002 ஒலிம்பிக்ஸ் பரபரப்பான செய்தியுடன் துவங்கியது. இந்த விளையாட்டுகளை ஏற்பாடு செய்த குழு ஒலிம்பிக் செயற்குழுவில் பலருக்கும் லஞ்சம் கொடுத்து ஆட்டங்களை சால்ட் லேக்கிற்குக் கொண்டு வந்தது என்பது வெளியாயிற்று. இதனால் ஒலிம்பிக் செயற்குழுவில் பலரும் தண்டிக்கப்பட்டனர், பதவி விலகினர். ஒலிம்பிக் விளையாட்டுக்கான இடத்தேர்வு செய்யும் முறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

2002 ஒலிம்பிக்ஸில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவன் பிராட்பரி 1000 மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். உலகின் தெற்குப் பகுதியிலிருந்து முதன் முறையாகக் குளிர்கால ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றவர் என்ற பெயர் பெற்றார். ஆனால் அவருக்குத் தங்கம் கிடைத்த விதம் ஒரு சோகமான நகைச்சுவையாக ஆஸ்திரேலியர் களிடையே பரவிவிட்டது. காலிறுதிப் போட்டியில் தோற்றிருக்க வேண்டிய பிராட்பரி மற்றொரு வீரர் ஆட்டத்திலிருந்து நீக்கப் பட்டதால் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரை இறுதிப் போட்டியில் நான்கு போட்டியாளர்கள் மோதிக்கொண்டு கீழே விழுந்ததால் அதிலும் வென்று இறுதிப் போட்டிக்குச் சென்றார். இறுதிப் போட்டி யிலும் ஐந்தாவது இடத்தில் இருந்த அவர் ஏனைய வீரர்கள் மோதிக் கீழே விழ, தங்கத்தைக் கைப்பற்றினார். இதிலிருந்து மற்றவர்களின் தோல்வியால் வெற்றி காண்பது என்ற பொருளில் “to do a Bradbury” என்ற சொல்வழக்கு ஆஸ்திரேலியர்களிடம் பரவியது.

2002 ஒலிம்பிக்ஸில் மீண்டும் ·பிகர் ஸ்கேட்டிங் போட்டிகளில் ஒரு கலகம் வந்தது. இந்த முறை ஜோடியாகப் பங்கேற்கும் இரட்டையர் ஆட்டத்தில். கனடாவைச் சேர்ந்த ஜேமி சலே, டேவிட் பலேட்டியர் ஜோடி மிகச்சிறப்பாக ஆடி ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தது. அவர்கள் ஆட்டத்தில் ஒரு தவறுகூட இல்லை. ஆனால் முடிவுகள் வெளியான போது அனைவருக்கும் அதிர்ச்சிதரும் வகையில் ஓரிரு சிறு தவறுகள் செய்த ரஷ்ய ஜோடி தங்கத்தை வென்றது. கனேடியர் களுக்கோ வெள்ளிப் பதக்கம். ரஷ்யா, போலந்து, யுக்ரேன், ·பிரான்ஸ் நாடுகளிலிருந்து வந்த நடுவர்கள் ரஷ்ய ஜோடி வென்றதாக அறிவித்தனர். ஆனால் அமெரிக்கா, கனடா, ஜெர்மெனி, ஜப்பான் நாட்டு நடுவர்கள் கனேடியன் ஜோடி வென்றதாகக் கூறினர். மீண்டும் பத்திரிகைகளும், தொலைக்காட்சியும் இந்தச் செய்தியை மிகவும் பரபரப்பாக்கின. இதனால் சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவும், சர்வதேச ஸ்கேட்டிங் யூனியனும் இந்த முடிவைப் பரிசீலனை செய்தன. அந்தப் பரிசீலனையில் ·பிரஞ்சு நாட்டு நடுவர் மற்ற நாட்டு நடுவர்களுடன் உள்கூடி ரஷ்யாவிற்குச் சாதகமாகத் தீர்ப்பு சொன்னார் என்று முடிவாயிற்று. அதனால் அந்த நடுவர் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து உடனடியாக நீக்கப் பட்டார். கனடா நாட்டு வீரர்களுக்கும் தங்கப் பதக்கம் தருவது என்று முடிவாயிற்று. அதன்படி ரஷ்யா, கனடா இரண்டு நாடுகளும் தங்கத்தை வென்றன!

கிரிக்கெட், ·புட்பால் போன்ற ஆட்டங்களில் விளையாடி கோடி, மில்லியன் என்று பணமும், சர்வதேச ரசிகர்களிடம் புகழும் அடையும் விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். டான்யா ஹார்டிங் போல ஆட்டத்தில் கவனம் செலுத்தாமல் தவறான வழிகளில் சென்று பிரச்சினைகளில் மாட்டிக் கொள்பவரும் உண்டு. ஆனால் கர்லிங், லூஜ் போன்ற பலரும் அறியாத விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்குகொள்ளும் வீரர்கள்தான் ஒலிம்பிக் ஆட்டங்களுக்கு உயிர் கொடுப்பவர்கள். இவர்களுக்கு பணம், புகழை விட தாங்கள் விளையாடும் ஆட்டத்தின் மேலுள்ள ஆர்வமே அதிகம். அதனால் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கும் இவர்களுக்கு நாம் தலை தாழ்த்தி வணங்குவோம். இந்த ஆண்டு ஒலிம்பிக்ஸில் இந்த ஆட்டங்களைச் சற்றே கூர்ந்து கவனித்து இவர்களுக்கு ஆதரவு அளிப்போம்.

சேசி
Share: 




© Copyright 2020 Tamilonline