|
|
|
நம்மில் சிலருக்குத் தூங்கும்போது மூச்சு தடைப்படுவது உண்டு. அதற்கு உறக்கத்திடை மூச்சுத் திணறல் (sleep apnea) என்று பெயர். உடல் பருமன் அதிகம் இருப்பவர்களிடம் இந்த நோய் அதிகம் காணப்படுகிறது. இந்த நோய் இருப்பதே பலருக்குத் தெரிவதில்லை.
நோயின் அறிகுறிகள்
- அதிகமாகக் குறட்டை விடுதல்
- தூக்கத்தில் மூச்சு நின்று போய் விழித்துக் கொள்ளுதல்
- தொடர்ந்து அதிகமாக மூச்சு வாங்குதல்
- தூக்கம் அடிக்கடி கலைந்து போதல்
- பகலில் தூங்கி வழிதல்
- காலையில் தலைவலியோடு எழுதல்
- காலை எழும்போது தொண்டை வறட்சி
இதுபோன்ற தொந்தரவுகள் தினமும் காணப்பட்டால் மருத்துவரை நாட வேண்டும். குறிப்பாக, பகலில் தூங்கி வழிதல் அபாயகரமான விளைவுகளைத் தரலாம். வாகனம் ஓட்டும்போதும் வேலையில் கருவிகளை உபயோகிக்கும் போதும் துங்குவது ஆபத்தானது. குறட்டைச் சத்தம் அதிகமாகி மற்றவர் தூக்கத்தையும் கெடுக்கலாம். அப்போது மருத்துவ உதவி பெறுவது அவசியம்.
காரணங்கள் இந்த வியாதி மூன்று வகைப்படும். இதில் முக்கியவகை தொண்டைப் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு அதனால் சுவாசம் தடைப்படுவது. இது Obstructive Sleep Apnea என்று அழைக்கப்படும். தொண்டைப் பகுதியில் இருக்கும் தசைகள் தளர்வதால் மூச்சுக்குழாய் அடைபட்டு இது ஏற்படுகிறது. இதனால் ஒரு சில நொடிகளுக்கு சுவாசம் நிற்கிறது. உடனடியாக மூளை செயல்பட்டு இதை நிவர்த்தி செய்ய அதிகமாக மூச்சுவிடத் தூண்டும். இதுபோல ஒரு மணி நேரத்தில் இருபது முதல் முப்பது முறை வரை ஆகலாம்.
இப்படித் தூக்கத்தில் நடப்பதை இவர்கள் அறிவதில்லை. ஆனால் காலையில் எழும்போது நன்கு உறங்கிய உணர்வு இருப்பதில்லை. அதனால் தூங்கி பகலில் வழிவார்கள்.
யாருக்கு இந்த நோய் வரக்கூடும்?
- உடல் எடை அதிகமாக இருப்பவர்கள்
- கழுத்துப்பகுதி 43 cm அல்லது 17 inch க்கு அதிகமாக இருப்பவர்கள்
- உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள்
- தொண்டைப்பகுதி குறுகி இருப்பவர்கள் (டான்சில் மற்றும் அடினாய்ட் பெரிதாக இருக்கலாம்)
- ஆண்கள் குறிப்பாக, 65 வயதுக்கு மேலானவர்கள்
- புகைபிடிப்பவர்கள்
- அதிக மதுபானம், தூக்க மருந்து உண்பவர்கள்
|
|
பின்விளைவுகள் இந்த நோயினால் ரத்த அழுத்தம் உயரலாம். மூளைக்கு ஆக்சிஜன் குறைவாகக் கிடைப்பதால் சில பின்விளைவுகள் ஏற்படலாம். பக்கவாதம் தாக்கலாம். இருதயம் பாதிக்கப்படலாம். பகல் வேளையில் தூங்குவதால் விபத்துகள் நடக்கலாம்.
ஏதேனும் அறுவை சிகிச்சை தேவைபட்டால் அதற்கு மயக்க மருந்து அளிக்க வேண்டி வரும் போது பாதிப்புகள் ஏற்படலாம்.
பரிசோதனை, தீர்வுமுறை இந்த நோய் இருப்பதை ஊர்ஜிதம் செய்ய சில பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. ஒரு இரவுத் தூக்கத்தை பரிசோதனைக் கூடத்தில் கழிக்க நேரிடும். இந்தப் பரிசோதனையில் (Sleep study) வரும் முடிவுகளை வைத்துத் தீர்வு முறை முடிவு செய்யப்படும். மூக்கில் ஒரு குழாய் மூலம் ஆக்சிஜன் வைத்து இரவு படுக்க வேண்டி வரலாம். இன்னும் சிலருக்கு CPAP என்ற முறையும், BPAP என்ற முறையும் அளிக்கப்படலாம். வேறு சிலருக்குப் பல்மருத்துவர் மூலம் சில கருவிகள் பொருத்தப்பட வேண்டியிருக்கலாம். இன்னும் சிலருக்குத் தொண்டைப் பகுதியில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
ஆனால் மிக முக்கியமான நிரந்தரத் தீர்வு எடை குறைப்பதின் மூலம் கிடைக்கும். எத்தனையோ காரணங்களுக்காக எடை குறைக்க முயற்சி செய்கிறோம். இந்த உறக்கத்திடை மூச்சுத் திணறல் நோய் வராமல் இருக்கவும், வந்தால் தீர்வு காணவும் எடை குறைப்போம். இவர்கள் மதுபானம் அருந்துவதைக் குறைக்க வேண்டும். தூக்க மருந்துகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு பக்கமாகத் தூங்குவது நல்லது.
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |
|
|
|
|
|
|
|