Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
குறுநாவல்
சில மாற்றங்கள் (பகுதி- 7)
- சந்திரமௌலி|டிசம்பர் 2011|
Share:
Click Here Enlargeஇதுவரை...
பிரபல மருந்துக் கம்பெனி ஒன்றின் நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து தவிக்கும் தன் மற்றொரு அமெரிக்க நண்பன் ராஜுக்கு வேலை கேட்கிறான். ராஜின் தகுதிகளில் திருப்தியுறும் ஸ்ரீ அவனுக்கு வேலை தருவதாக வாக்களிக்கிறான். மேற்கொண்டு ராஜின் விவரங்களைப் பார்க்கும்போது அவன் தன்னோடு சிறு வயதில் ஒன்றாகப் படித்துத் தன் வாழ்வில் ஆறாத தழும்பை ஏற்படுத்திய ரங்கராஜ் என்பதை அறிந்துகொண்டு தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான். பழிவாங்கும் எண்ணத்தோடு தன் பள்ளி நாட்களையும் ரங்கராஜோடு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் அசை போடுகிறான். இதை அறியாத ரங்கராஜ், தன் மனைவி கவிதாவை வேலையிடத்தில் விட்டுவிட்டு, குழந்தை நித்யாவோடு தினேஷ் வீட்டுக்கு, ஸ்ரீயைச் சந்திக்கக் கிளம்புகிறான். நடுவழியில் மழையில் மாட்டிக் கொள்கிறான். ஸ்ரீக்கு ஏற்பட்ட காயம் என்ன? ராஜுக்கு வேலை கிடைக்குமா? அவன் கஷ்டம் தீருமா? அவனது மறுபக்கம் என்ன?

*****


தோளில் பலமாக ஒரு அடி விழவே, நினைவுகள் கலைக்கப்பட்டு நிகழ்காலத்துக்கு வந்தான் ஸ்ரீ. "மணி இப்பவே ஏழாயிடுச்சு. இந்த ராஜ் வர வழியா காணும். நான் கால் பண்ணி சொல்லிடறேன், இன்னிக்கு மீட் பண்ண வேணாம்னு, இட் இஸ் கெட்டிங் லேட். நீயும் ஒரு மாதிரி சோர்ந்து இருக்க" என்று சொல்லியவாறே வைன் பாட்டிலையும், கிண்ணங்களையும் மேசையில் வைத்தான் தினேஷ்.

"இல்லப்பா, இன்னும் கொஞ்சம் பாக்கலாம். நான் சோர்வாலாம் இல்லை, ப்ராஜக்ட் பத்தி திங்க் பண்ணிட்டிருக்கேன். ஜஸ்ட் அ பிட் டல்லாயிருக்கு."

"என்னோட கொஞ்சம் சரக்கு போடு, எல்லாம் அமர்க்களமா தெளிஞ்சிடும். என்ன ஊத்தவா, இல்லை இன்னும் பழைய வெண்ணை மாதிரி மடியா இருக்கியா?"

"இன்னும் அப்படியே தான். இதெல்லாம் எனக்கு சரிப்படாது."

"அது எப்படி சரிப்படாதுனு சொல்ற. நீ இதை ட்ரை பண்ணாம எப்படி ஒதுக்கலாம்?"

"எல்லாத்தையும் ட்ரை பண்ணிட்டு சரி, தப்பு டிசைட் பண்ண முடியாது. உனக்கு உன்னோட கம்ப்யூட்டர் உதாரணமே ஒண்ணு சொல்றேன். தெரியாத வெப்ஸைட்டெல்லாம் தொட்டா, வைரஸ் வரும்னு தெரியும். தொட்டாலும் எனக்கு ஒண்ணும் ஆகலைனு சொன்னா, அது பேக்ரவுண்ட்ல தன் வேலையை பண்ணிக்கிட்டு, கடைசில எல்லாத்தையும் க்ராஷ் பண்றதில்லையா. இது அதே மாதிரிதான். ஆளை வுடு."

பெரிய கும்பிடு போட்டு, "தெரியாம கேட்டுவிட்டேன் சுவாமிஜி" என்றான் தினேஷ்.

"நீ கேட்டதும் ஒரு விதத்துல நல்லதுதான், இதுலேருந்து எனக்கு ஒண்ணு புரியுது. நீ இப்படி ட்ரை பண்ணி எல்லாத்தையும் டிசைட் பண்ணனும்னு நினைக்கறதாலதான் உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலன்னு நான் நினைக்கிறேன்."

இப்படி சொன்னதும், ஸ்ரீக்கு தன் கல்யாணம் நிச்சயம் ஆனது நினைவுக்கு வந்தது. என் பெரும் குறையை, எடுத்துச் சொன்னதன் பிறகும், அதை ரொம்ப சாதாரணமாக எடுத்துக்கொண்டு, என் ஒளிவு மறைவில்லாத நேர்மையைப் பாராட்டி, கல்யாணத்துக்குச் சம்மதம் உடனே சொன்ன சௌம்யா நினைவுக்கு வந்தாள்.

என் பிரச்னைகளிலிருந்து மீண்டு சாதாரண வாழ்க்கை நிலைக்கு வருவதற்குள் அப்பா ரிடையர் ஆகி, அம்மாவுக்கு ஆர்த்ரைடிஸ் வந்து, இருவருக்கும் வயதும் ஆகிவிட்டது. நான் அப்போதுதான் என் குறையையும் மீறி வேலையில் ஒரளவு முன்னுக்கு வந்து கொண்டிருந்தேன். அந்த பத்தாம் வகுப்பு தேர்வு நாளுக்குப் பிறகு வெகு காலம் கழித்து என் வாழ்க்கையில் வசந்தம் மறுபடி துளிர்ப்பது போல இருந்தது.. அப்பாவும் அம்மாவும் என் திருமணப் பேச்சை ஆரம்பித்தார்கள். டாக்டரும், மூன்று வருடமாக எந்த பிரச்சனையும் இல்லாததால் கல்யாணம் செய்து கொள்வதில் எந்த பிரச்சனையும் வராது என்று தேறுதல் சொன்னார். ஆனாலும், எனக்குத் தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. எப்போதாவது தனலட்சுமி, ரங்கன் போன்றோரைப் பற்றி நினைத்துக் கொள்வேன், அவர்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி, குடும்பத்தோடு சந்தோஷமாயிருப்பார்கள், நமக்குத்தான் இப்படி என்று தோன்றும். என் மனதில் கல்யாணம், குடும்பம் போன்ற ஆசையெல்லாம் முளைக்கும் முன்னேபட்டுப்போய் விட்டது, அதனால் பிடி கொடுக்காமல் இருந்தேன். அப்பா, அம்மாவின் நெருக்குதல் நாளுக்கு நாள் அதிகமாகவே ஒரு வழியாகப் பெண் பார்க்க ஒப்புக்கொண்டேன் – ஒரு நிபந்தனையோடு.

"இவ்வளவு நீங்க சொல்றதால, கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன். ஆனால், பெண்ணிடமும், அவள் வீட்டாரிடமும் எல்லா விஷயத்தையும் சொல்லணும். என்னுடைய இந்தக்குறை, எப்பலிருந்து இருக்கு, இதனால் என்ன பிரச்சனை எல்லாத்தையும் ஒண்ணு விடாமல் சொல்லணும். இதையும் மீறி என்னைக் கல்யாணம் செய்துக்க ஒருத்தி இருக்கான்னு சொன்னா, தாராளமா உங்க இஷ்டப்படி கல்யாணம் பண்ணிக்கிறேன். இல்லைனா இப்படியே ஒண்டியா இருந்துடறேன். ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாது."

விளக்கெண்ணை குடித்த குழந்தைகள் போல முகத்தை வைத்துக்கொண்டாலும் ஏதோ இந்தவரை சம்மதித்தானே என்று, வேகமாகப் பெண் பார்க்கத் துவங்கினார்கள்.

ஒரு ஞாயிற்றுகிழமை அம்மா லாக்கரில் இருந்த எல்லா நகைகளையும் போட்டுக்கொண்டு, எனக்கும் முகமெங்கும் பவுடர அப்பி விட்டாள். சென்னயை விட்டு எங்கோ தள்ளி இருந்த ஒரு பாக்கத்தில் அந்தப் பெண்வீட்டுக்கு வாடகைக் காரில் போய் இறங்கினோம். பெண் வீட்டார் மிரண்டு விட்டார்கள். ஏதோ கண்காட்சி நடப்பது போல் அக்கம்பக்கத்திலிருந்தெல்லாம் கொல்லென்று ஜனங்கள் கூடிவிடவே நான் மிரண்டு விட்டேன். சொந்த வீடாக இருந்தாலும் வசதி ரொம்பக் குறைச்சல் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. நாங்கள் உட்காரவே பக்கத்து வீட்டிலிருந்து இரவல் வாங்கிய நாற்காலிகள் போட்டிருந்தார்கள். நான் சற்று அழுத்தி உட்கார்ந்ததும் பக்கத்து வீட்டுப் பையன் என்னைப "பார்த்து" உட்காரச் சொல்லி குட்டைப் போட்டு உடைத்து விட்டான்.

கவர்மெண்டில் ஏதோ ஒரு ஓரத்தில் குமாஸ்தா உத்தியோகம் பார்த்து ரிடையரான, அப்பா. அம்மா கிடையாது. வயதான பாட்டி. காலேஜில் படிக்கும் தம்பி. பெண் ஆர்ட்ஸ் காலேஜில் பீஏ முடித்துவிட்டு, டைப் ரைட்டிங், தையல், சமையல் என்று வாழ்க்கைக்கு அதிலும் கல்யாணம் ஆகிப் போகப்போகும் பெண்ணுக்கு தேவையானவற்றைக் கற்று வருபவள். இவ்வளவு தான் எனக்குப் பெண்ணைப்பற்றி சொல்லப்பட்டது. இவையும், பெண்வீட்டின் சூழ்நிலையும் என்னைச் சங்கடம் பண்ணியது. ஏழ்மையில் இருப்பதால், எங்காவது தள்ளிவிடும் நோக்கதில் இந்த ஏற்பாடு நடப்பதாகச் சந்தேகப்பட்டேன். என் குறைகள் பெண்ணுக்கு சொல்லாமல் மறைத்திருப்பார்கள் என்று ஆணித்தரமாக நம்பினேன். வழக்கமான நமஸ்காரம், கோலம் போட்டால் ஊரே நின்று பார்க்கும், பையனுக்கு எளிமைதான் பிடிக்கும் போன்ற மிகைப்படுத்தப்பட்ட பெருமைகள், உறுத்தாத பொய்களுக்குப் பிறகு சொஜ்ஜி, பஜ்ஜியும் சாப்பிட்டாகிவிட்டது.
எல்லாம் நல்லாயிருந்தது. நாங்க வீட்டுக்குப் போயி கலந்து பேசிட்டு முடிவைச் சொல்லி அனுப்பறோம் என்றார் அப்பா. "அப்பா, ஒரு நிமிஷம், எனக்கு பொண்ணோட தனியா கொஞ்சம் பேசணும்."

சிறிது தயக்கத்துக்குப் பிறகு பாட்டி பெண்ணுக்குச் சில தனிப்பட்ட அட்வைஸ் கொடுத்த பிறகு, பெண்ணை நான் தனியாகப் பார்க்க அனுமதிக்கப்பட்டேன். முதல் முறையாக சௌம்யாவை தனியாகப் பார்த்தேன். பெரிய அழகியெல்லாம் இல்லை, ஆனாலும் ஏதோ ஒரு வசீகரம், பாங்கு என்னைக் கவர்ந்தது. என்றாலும் என்னைப்பற்றி அவளுக்கு முழுமையாகத் தெரியாது என்ற எண்ணம் என்னை தயங்க வைத்தது.

சங்கடமான மௌனத்தை அவள்தான் கலைத்தாள். "உக்காருங்க, ஏதோ பேசணும்னு சொன்னீங்களே. என்னப்பத்தி ஏதாவது இன்னும் தெரிஞ்சிக்கணுமா?"

"இல்.. இல்லை…உக்காரல்லாம் வேணாம். ஒரே ஒரு விஷயம்தான் பேசணும். அதுவும் உங்களை பத்தி இல்லை, என்னைப் பத்தி." ஆச்சரியமாகப் பார்த்தாள். பின் சுதாரித்துக் கொண்டு, "எதுவானாலும் தயங்காம சொல்லுங்க. அப்புறம்… என்னை ‘நீ’னே சொல்லலாம். நீங்கனு சொன்னா என்னவோ போல இருக்கு."

"நீங்க…. நீ என்னைப் பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதா வேணாமான்னு முடிவெடுக்கணும். முக்கியமா, என் குறையைப் பத்தி..."

"எனக்கு எல்லாம் தெரியும், நீங்க எதையும் மறைக்கக் கூடாதுன்னு முன்னாடியே எல்லாத்தையும் சொல்லணும்னு சொன்னீங்களாமே. எங்க அப்பா சொன்னாரு. அதுதான் மூணு வருஷமா எந்த பிரச்சனையும் இல்லாம வேலைக்குப் போறீங்களே."

"மூணு வருஷமா எந்த பிரச்சனையும் இல்லைதான். ஆனா இப்படியே இருக்கும்னு கேரண்டி கிடையாது. சில சாதாரண விஷயங்களைப் பண்றதுக்கு கூட இது தடையா இருக்கலாம். நீ படிச்சவ, உனக்கு நான் என்ன சொல்றேனு புரியும்னு நினைக்கிறேன்."

"உங்களுடைய வெளிப்படையான பேச்சும், நேர்மையும் எனக்கு பிடிச்சிருக்கு. உங்களுக்குக் குறை இருக்கிறதா நான் நினைக்கலை. உங்களுக்காவது என்ன குறைன்னு தெரியும், அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்து குணமும் ஆயிட்டீங்க. பிற்காலத்துல எனக்கு என்ன ஆகும்னு எப்படித் தெரியும். அப்படி வரும்போது நல்லா கவனிக்க ஆறுதலாயிருக்க நேர்மையான, அன்பான ஒருத்தர் வேணும். அந்த குணம் உங்ககிட்ட இருக்குனு நான் நினைக்கிறேன்" என் கண்களைப் பார்த்து, மிகத் தெளிவாக அவள் பேசியது என் தயக்கத்தை உடைத்தது. நிச்சயம் இவள் ஒரு தனி ரகம். முதல் முறையாக அவளைப் பார்த்து சிரித்தேன்.

"எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. அப்ப நான் வரேன்" என்றேன். முதல் முறையாக அவள் வெட்கப்பட்டாள். அதாவது வெட்கப்பட முயன்றாள்.

"என்ன எல்லாம் பேசியாச்சா. போகலாமா. அப்ப நாங்க போயி உங்களுக்கு…" என்ற அப்பாவை இடைமறித்து, "எனக்கு பொண்ணை பிடிச்சிருக்கு. கல்யாணத்துக்கு சம்மதம்" என்றேன். ஒரு முழு நிமிட அமைதிக்குப் பிறகு, எல்லாரும் கைகொடுத்துக் கொண்டார்கள். வெற்றிலை பாக்கு மாற்றிக் கொண்டார்கள். வீடு திரும்பும்போது அதுவரை நான் சுமந்து கொண்டிருந்த கஷ்டங்களையெல்லாம், நொடிப் பொழுதில் தூக்கி எறிந்துவிட்டு, என் மனம் முழுவதும் சௌம்யா நிறைந்திருந்தாள். எதுவும் பேசாமல் ஒரு சத்சித் ஆனந்த நிலையில் நான் வருவதை, அம்மாவும், அப்பாவும் வினோதமாகப் பார்த்தார்கள். நான் அதுவரை சுமந்து கொண்டிருந்த சிலுவை இறக்கி வைக்கப்பட்டது. ரங்கனைப் பற்றி நினைப்பதும், அந்தப் பழைய சம்பவத்தைப் பற்றி நினைப்பதும் ஒழிந்து போனது. சௌம்யா சொன்னபடியே, எனக்கு நல்ல துணையாக, ஆறுதலாக இருந்தாள். சித்தார்த் பிறந்தது, எனக்கு வேலையில் மேலே மேலே ஊக்கம் கிடைத்து உயர்ந்தது எல்லாம் என் பழைய கோபங்களைத் தூக்கியெறிய வைத்தது.

ஆனால், இன்று அந்த ரங்கனைப் பற்றித் தெரிந்து கொண்டதிலிருந்து, எனக்குள் அடங்கியிருந்த அந்த கோபம் மறுபடி கொப்பளித்துவிட்டது. பழி வாங்கவேண்டும் என்ற மிருக மனம் விழித்துக் கொண்டது.

"சரி தினேஷ் நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாமலே இருக்க? உனக்கு என்ன குறை?"

"ஒரு குறையுமில்லை, எல்லாம் காலாகாலத்தில் நடக்கலேனா இப்படித்தான். எல்லாம் காலேஜில இல்லை வேலைக்குப் போற இடத்துல காதலிப்பாங்க, கல்யாணம் பண்ணுவாங்க. என் அதிர்ஷம், படிச்சது ஜெண்ட்ஸ் காலேஜ், வேலைக்குப் போன இடத்துல உன்னை மாதிரி தடிப்பசங்க கூட வெயில்ல சுத்தற சேல்ஸ் ரெப் உத்தியோகம்."

"காதலிக்க வேணாம், வீட்ல பாக்கற பொண்ணை பண்ணிக்க வேண்டியதுதானே?"

"விடுவாங்களா வீட்ல. ஆனா, பாத்த எதுவும் எனக்குப் பிடிக்கலை. எனக்கு, எவளோ ஒருத்திய கல்யாணம் பண்ணிட்டு, அப்புறம் காதலிக்க முயற்சிக்கறதெல்லாம் சரிப்படாது. பாத்த உடனே ஒரு ஃபயர் ஏற்படணும். பத்திக்கணும். அடிவயத்துல அந்தக் காதல் பட்டாம்பூச்சி சிறகடிக்கணும். எங்க அப்பா, அம்மா பாத்த எந்தப் பொண்ணும் சரியில்லை. இந்த ஃபீலிங்க்ஸ் எதுவும் வரலை."

"ஒரு பொண்ணுகிட்டயுமா…"

"ஆங். ஒரு பொண்ணைப் பாத்துட்டு வீட்டுக்கு வந்து ரொம்ப நேரம் கழிச்சு வயத்துல சிறகடிச்சுது. கடைசில அது காதல் பட்டாம்பூச்சியில்லை. அவங்க வீட்ல சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி ஒத்துக்காததாலேனு புரிஞ்சது."

"ஏன் நீ, அமெரிக்கா வந்ததும் இங்க யாரையாவது லவ் பண்ணவேண்டியது தானே. இப்ப வசதியாதானே இருக்க."

"பாத்துகிட்டுதான் இருக்கேன். வயசுதான் கூடிக்கிட்டே போகுது. காதலோ, எனக்குப் பிடிச்ச ஒருத்தியோ இன்னும் கை கூடலை. சரி இரு. மறுபடி இந்த ராஜுக்கு ஒரு ஃபோன் பண்ணிப் பாக்கறேன். என்னவோ எனக்கு வேலை கிடைக்க நானே கஷ்டப்படறா மாதிரி அவனுக்கு ஃபோன் பண்ண வேண்டியிருக்கு."

ஃபோன் இந்தமுறை கிடைத்தது. ஃபோனை தினேஷ் ஸ்பீக்கர் மோடில் போட்டதால் அந்தப் பக்கம் பேசுவது தெளிவாகக் கேட்டது. "ஹலோ. ஏய் ராஜ். வேர் ஆர் யூ. என்னப்பா நீ ஒண்ணறை மணி நேரமா உனக்காக காத்துகிட்டிருக்கோம். என்ன ஆச்சு?"

"தினேஷ். ரொம்ப ஸாரி. வர வழியில, பெரிய மழை, இன்னும் விடலை. டயர் பஞ்சர். ஸ்டெப்னி மாத்தக்கூட முடியலை. இதுல செல்ஃபோன் சிக்னலும் கொஞ்ச நேரமா டவுன். அதனாலதான் டிலே. ப்ளீஸ் எனக்கு எப்படியாவது இந்த இண்டர்வியூ நடக்கணும் இன்னிக்கு. இந்த வேலையைத்தான் நான் நம்பியிருக்கேன்."

"ஓகே ஓகே. இப்ப இன்னும் மழை பெய்யுது" திரையை விலக்கிப் பார்த்துக்கொண்டே சொன்னான் தினேஷ். "இனிமே மழை நின்னு, நீ ஸ்டெப்னி மாத்தி எப்ப வர்ரது. எனக்கு நீ எங்க இருக்கேன்னு லொகேஷன் எக்ஸாக்டா சொல்லு, நான் இப்ப உடனே கிளம்பி வரேன். என் வண்டியிலே நாம இங்க வரலாம். உன் வண்டியை அப்புறம் எடுத்துக்கலாம்." ராஜ் சொன்ன விவரங்களைக் குறித்துக்கொண்டு, தினேஷ் கிளம்பினான்.

"இன்னிக்குனு பாத்து இப்படி ஆவுது. நான் போய் அவனைக் கூட்டி வரேன். முக்கால் மணி நேரம், மிஞ்சினா ஒரு மணி நேரத்துல வந்துடறேன். நீ அதுக்குள்ள சாப்பிட்டு ரெடியாயிரு" என் பதிலுக்குக் காத்திராமல் விர்ரென்று புறப்பட்டான் தினேஷ். மழை இன்னும் நிற்கவில்லை, வைப்பரை மறுபடி ஓடவிட்டு, குளிரத் தொடங்கியதால் காரின் உள்ளே ஹீட்டரைப் போட்டான் ராஜ். இன்னும் கொஞ்ச நேரத்தில் தினேஷ் வந்துவிடுவான், அவனோடு போய்விடலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான். குழந்தை பின் சீட்டில் இந்த எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. மின்னும்போதும், இடிக்கும்போதும் சின்னதாக உடலை உதறிக் கொண்டது.

தற்செயலாக சாலையை ஹெட்லைட் வெளிச்சத்தில் பார்த்தான். இரண்டு பளபளக்கும் விழிகள், மருட்சியோடு ஒரு மான் சாலையைக் கடக்கப் பார்த்தது. அதே நேரம் எதிரில் வேகமாக ஒரு லாரி வந்தது. ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் மிரண்ட மான் எப்படிப் போவது என்று பயந்து தயங்கி லாரியின் குறுக்கே சரியாக, தவறான நேரத்தில் விழுந்தது. ஒரே நொடியில் அந்த உயிர் பலியானது. ராஜ் உடனே வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டான். வருத்தப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்த மருண்ட விழிகள், அந்த பயம், மிரட்சி…

கண்ணனூர் தேர்வு நாள் அன்று சீனுவின் மிரட்சியையும், பயத்தையும், இதே மான் துடித்தது போன்ற துடிப்பையும் அவனுக்கு அது நினைவுபடுத்தியது. பரீட்சைக்கு இரண்டு நாள் முன்பே, அப்பா தனியாக என்னிடம் "கணக்கு பரீட்சை அன்னிக்கு ஃப்லையிங்க் ஸ்குவாட் நம்ம ஸ்கூலுக்கு வரப்போறாங்க. இதை எல்லார்ட்டயும் சொல்லிகிட்டிருக்க முடியாது. நீ ஒழுங்கா படிப்பேனு தெரியும். ஆனா, மத்தவன விட எப்படியாவது நல்ல மார்க் வாங்கணும்னு ஏதாவது காப்பி அடிக்க முயற்சி செஞ்ச, வம்புல மாட்டிக்குவ. அதான் தனியா எச்சரிச்சேன்" என்றார்.

கணக்குப் பரீட்சைக்கு முன் தினம் இரவு செந்தில் வீட்டுக்கு வந்தான். "ரங்கா, நீ சொன்னாப் போலவே சீனு, தனலட்சுமி ரெண்டு பேர் கிட்டயிருந்தும் அவங்க எழுதின கணக்கு நோட்ஸ் பேப்பரை வாங்கிட்டேன். நாளைக்கு என்ன பண்ணனும்."

"வெரிகுட்ரா செந்தில், நாளைக்கு தனலட்சுமி பரீட்சைக்கு உட்கார்ர டெஸ்க் அடில அவ எழுதின பேப்பரை வெச்சிடு. அவ பரீட்சை எழுதறதுக்கு முன்ன டெஸ்க்ல என்ன இருக்குனு பாக்கறது கிடையாது. ஆனா, சீனு அப்படியில்லை. நீ அவன் எழுதின பேப்பரை உன்கிட்டயே வெச்சுக்க. சரியா காப்பி அடிக்கிறவங்களை பிடிக்கிற ஸ்குவாட் வரும்போது நீ இந்த பேப்பரை அவன்கிட்ட வீசிடு. ரெண்டு பேரும் மாட்டிக்குவாங்க."

"டேய் என்னை இப்படி பண்ண வெக்கிறியே, நான் வம்புல மாட்டினா..."

"அதெல்லாம் மாட்டமாட்ட. இது வரை எல்லா பரீட்சையிலும் என்னை பாத்து காப்பி அடிக்க விட்டேன் இல்லை. எப்படியும் நீ பாஸ் பண்ணிடுவ. அதுக்கு நீ எனக்கு இதை செய்யணும். உனக்கு ஐடிஐல எடம் கிடைக்க எங்க அப்பா மூலமா ஏற்பாடு பண்றேன்."

"இல்லை, அவங்க ரெண்டு பேரும் நல்லவங்க. நல்லா பாஸ் பண்ணனும்னு துடியா இருக்காங்க."

"அப்ப எங்கிட்ட வாலாட்டியிருக்கக் கூடாது. எல்லாம் எனக்கு தெரியும், போடா" என்றேன்.

மறுநாள் நாங்கள் திட்டம் போட்டபடியே செந்தில் தனலட்சுமியின் டெஸ்க் அடியில் அவள் எழுதிய கணக்கு பேப்பரை வைத்துவிட்டான். சீனு நானும், செந்திலும் சேர்ந்து வருவதைப் பார்த்து மிரண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்….

எல்லாரும் மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கும்போது, ப்யூன் ஆறுமுகம் "ஃப்லையிங்க் ஸ்குவாட், ஃப்லையிங்க் ஸ்குவாட்" என்று கத்திக்கொண்டே போனான். மாணவர்கள் பரபரப்பானார்கள். செந்தில் என்னைப் பார்க்கவே, நான் அவனுக்கு தலை அசைத்தேன். அவன் புரிந்துகொண்டு, சீனு எழுதிய கணக்குப் பேப்பரை, அவன் எழுதிக் கொண்டிருந்த பரீட்சைத் தாளின் மீது, யாரும் பார்க்குமுன் தூக்கி எறிந்தான்.

திடீரென விழுந்த காகிதத்தை, அனிச்சையாக பிரித்து, எங்கிருந்து வந்தது என்று சீனு உணர்வதர்குள், பரீட்சை ஹாலின் வாசலில் அரசாங்கத் தேர்வு அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். சீனு, படபடப்பாக, இதைப் பார்த்துக்கொண்டே என்ன செய்வதென்று தெரியாமல், அந்த காகிதத்தைத் தன் பரீட்சை விடைத்தாளுக்கு அடியில் வைத்துக் கொண்டான். இதை, கவனித்தோ என்னவோ, ஒரு தேர்வு அதிகாரி, சீனுவை நோக்கி விரைந்தார்.

தொடரும்...

சந்திரமௌலி
Share: 


© Copyright 2020 Tamilonline