உமா ஜெயராசசிங்கம் சீர்காழி சிவசிதம்பரம்
|
|
|
|
|
பார்வைக்கு வினோத் ராஜன் ஒரு சராசரி இளைஞர். வயது 23. இன்னும் சொல்லப் போனால், தமிழ் அவரது தாய்மொழி கூட அல்ல. ஆனாலும் மொழிகளில் விசேட ஆர்வம் கொண்ட இந்தச் சென்னைவாசி தமிழில் மரபுப் பா எழுதுபவர்களுக்கு உதவ ஒரு மென்பொருள் தயாரித்திருக்கிறார். அதன் பெயர் 'அவலோகிதம்'. அதன் வலை முகவரி: www.virtualvinodh.com/avalokitam. இதைப்பற்றி மேலே அவரிடமே கேட்டு அறியலாம்.
தென்றல்: வணக்கம் வினோத், அவலோகிதம் செய்ததற்குப் பாராட்டுகள். அது என்ன செய்யும்? ப: அவலோகிதம் - தமிழ் மரபுப் பாக்களை பகுப்பாய்வு செய்யும் ஒரு யாப்பு மென்பொருள். அதில் ஒரு செய்யுளை உள்ளிட்டால், அதை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலிய யாப்பு உறுப்புகளை வெளியிடும். பிறகு, அவை தமிழ்ப் பா விதிகளுக்குள் பொருந்துகிறதா என்று பார்க்கும். அப்படி ஏதாவது பாவகையின் விதிகள் முழுசாப் பொருந்திச்சுன்னா, அந்தப் பாவகையைச் சொல்லும்.
தற்போதைக்கு இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நால்வகைப் பாக்களையும் அவற்றின் துணைப் பிரிவுகளையும் அதோடு கூட நால்வகைப் பாவுக்குரிய நான்கு பாவினங்களையும், அதன் துணைப்பிரிவுகளான தாழிசை, துறை, விருத்தம் ஆகியவற்றையும் கண்டு சொல்லும்.
சீர்களை அலகிடுதல் தளை கணக்கிடுதல் இவற்றை இதன்மூலம் கற்கலாம். நீங்க ஒரு பா எழுதிட்டு அது இலக்கண சுத்தமா இருக்குதான்னு சரி பாக்கலாம், ஏதேனும் தமிழ்ப் பாவின் யாப்பு தெரியணும்னா இதில் இட்டு விபரங்களைப் பெறலாம். உதாரணமா, விருத்த வகையின் சந்த அமைப்பு எப்படி அமைந்திருக்கிறது என்று பார்க்கலாம். இப்படி, பலவிதங்களில் இம்மென்பொருளை பயன்படுத்தலாம். இது PHP மற்றும் Javascript மூலமாக இயற்றப்பட்டது. இதன் நிரல் முற்றிலும் GNU GPL உரிமத்தில் திறவுமூலத்தில் (open source) வெளியிடப்பட்டுள்ளது. யார் வேண்டுமென்றாலும் தடையின்றி மூல நிரலைப் பார்த்து, பிரதி எடுத்து, அதை மேம்படுத்தலாம்.
கே: அவலோகிதம் மென்பொருளைச் செய்யணும்னு உங்களுக்கு எப்படித் தோன்றியது? ப: பொதுவாகவே எனக்கு இந்திய மொழியியல் சார்ந்த மென்பொருட்களில் அபரிதமான ஈடுபாடு. நான் அறிந்த வரையில் இந்திய மொழிகளிலேயே கணினி மொழியியல் சார்ந்த மென்பொருட்கள் சமஸ்கிருதத்தில்தான் அதிகம். சமஸ்கிருதத்துக்கான பல மொழியியல் மென்பொருட்களை உபயோகித்தவன் என்ற வகையில், அவை எனக்கு அம்மொழியைக் கற்க உதவின, என்னுடைய ஆர்வத்தையும் தூண்டும் வகையில் இருந்தன.
அதே போலத் தமிழுக்கும் செய்ய வேண்டியது அவசியம் என்று தோன்றியது. இளைஞர்கள் தமிழ் சார்ந்தவற்றைக் கற்க ஊக்கப்படுத்த, தமிழில் மொழியியல் சார்ந்த மென்பொருட்கள் பல உருவாக்கப்பட வேண்டும்.
பள்ளித் தமிழ் கேள்வித் தாளில், செய்யுளை அசை பிரித்து அலகிடு என்று கூறுவார்கள். சிலருக்கு இது எளிதாக இருக்கும். பலர் சிரமப்படுவார்கள். அந்த நினைவில், ஏன் செய்யுளை அலகிடுவதற்கென்று ஒரு மென்பொருள் கருவி உருவாக்கக்கூடாது என்று யோசித்து, செய்ய ஆரம்பித்தேன். அது முடிந்த பிறகு, அடுத்த கட்டமாக, தளை கணக்கிடுதல், பா வகை கண்டறிதல் முதலியவற்றையும் சேர்த்து விடலாமே என்று கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து, ஒரு வழியாக தமிழ் யாப்புக்கென ஒரு மென்பொருளே உருவாகிவிட்டது!
கே: இதில் நீங்கள் சந்தித்த சிக்கல்கள் என்னென்ன? ப: ஆரம்பத்தில் அசை பிரித்தலுக்கான நிரலை எழுதுவது சிக்கலாக இருந்தது. அதற்கான வழிவகைகள் தெளிவான உடனே சிக்கல்கள் ஏதும் இல்லை. சுயமாகத் தமிழ் யாப்பிலக்கண விதிகளைக் கற்றுப் புரிந்துகொள்ளச் சில காலம் பிடித்தது. தமிழ் யாப்பு விதிகள் தெளிவாக இருந்தபடியால், அவற்றை நிரலாக்குவதில் சிக்கல்கள் எதுவும் இல்லை.
உண்மையாகச் சொன்னால், ஓரளவு யாப்பு விதிகள் தெரிந்தவுடன் தான், தமிழ்ப் பாக்களை நுணுக்கமாக ரசிக்க முடிந்தது. புதுக்கவிதை என்ற பெயரில் விதிகள் ஏதும் இல்லாமல் கவிதை இயற்றும் இக்கால கட்டத்தில், நுணுக்கமான யாப்பு விதிகளுக்கு உட்பட்டு அதேசமயம் சொற்சுவையும் பொருட்சுவையும் குறையாமல் அக்காலத்தில் எழுதிய புலவர்களை நினைக்கும்போது வியப்பே ஏற்படுகிறது. |
|
|
கே: உங்களைப்பற்றிச் சொல்லுங்கள்... ப: 2000 ஆண்டில் எட்டாம் வகுப்பில் கணினி வாங்கிய நிலையில், அதில் முதலில் நிறுவியது இந்தோமெயில் என்ற பன்மொழி பொருள்தான். ஏனோ கணினியில் இந்திய மொழி எழுத்துக்களை முதன்முதலில் பார்த்ததில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் இருந்தது. அந்த சந்தோஷம் இன்றுவரை தொடர்கிறது. ஆசிய எழுத்துக்களை ஒன்றுடன் ஒன்று பரிவர்த்தனை செய்ய அக்ஷரமுகம் என்ற மென்பொருள் கருவியை உருவாக்கி உள்ளேன். அதேபோல, தமிழைச் சர்வதேச ஒலியியல் எழுத்துக்களில் (IPA) ஒலிபெயர்க்கும் கருவியினை செய்துள்ளேன். கிரந்த எழுத்துக்களைக் கற்க விரும்புவோருக்கு மின்னூல் ஒன்று உருவாக்கியிருக்கிறேன். அதை இங்கிருந்து இறக்கிக் கொள்ளலாம்.
பூர்வீகச் சென்னைவாசி. படித்தது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேதிப்பொறியியலும் தகவல் தொழில்நுட்பமும். இப்போதைக்கு நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் சோதனையாளராகப் பணி புரிகிறேன். எனக்கு இந்தியமொழிகள்/எழுத்துக்கள் சார்ந்த கணினியியலில் ஆர்வம் அதிகம். யூனிகோட் சார்ந்த விஷயங்களையும் கவனிப்பதுண்டு. எனக்குத் தத்துவவியலில் ஒருவித ஈர்ப்பு. என்னை அத்வயவாதியாக கருதலாம்-அத்வயவாதக்கருத்துக்களில் ஒரு பிடிப்பு உண்டு. நி:ஸ்வபாவம் இதம் ஜகத்.
கே: மேற்கொண்டு என்ன? ப: வருங்காலத்தில், இன்னும் இந்த மென்பொருளை மேம்படுத்த வேண்டும். விருத்த வகைகள், தொடை வகைகள் முதலியவற்றைப் பல்வேறு நுணுக்கமான யாப்பு விதிகளையும் கண்டறியும் வண்ணம் மேம்படுத்துதல் அவசியம். இதைத் தவிர, தமிழ் புணர்ச்சி விதிகளைச் செயல்படுத்தும் மென்பொருள் ஒன்றைச் செய்யும் எண்ணம் உள்ளது, அதேபோல ஆங்கிலத்தை இந்திய மொழிகளில் ஒலிபெயர்க்கும் கருவியை உருவாக்கும் யோசனை உள்ளது.
இளைஞரல்லவா, உற்சாகத்தோடு பேசுகிறார். தொற்றிக் கொள்கிற உற்சாகம்! ஏராளமாகப் படிக்கிறார். இசை கேட்கிறார். அப்படியும் இவருக்குக் கவிதைக்கும் தத்துவத்துக்கும் நேரம் இருக்கிறதே என்று வியந்தபடி விடை பெறுகிறோம். இவரது மென்பொருள் கருவிகளையும் பிற படைப்புகளையும் பார்க்க: www.virtualvinodh.com
உரையாடல்: மதுரபாரதி
'அவலோகிதம்' என்ற பெயர் ஏன்? பண்டைய தமிழ் பௌத்தர்கள், கருணையின் உருவகமான அவலோகிதேஸ்வரன் அகத்தியருக்குத் தமிழை உபதேசித்ததாக நம்பினர். “அவலோகிதனின் மெய்த்தமிழ்” என்று வீரசோழிய இலக்கணத்தின் ஆசிரியரான புத்தமித்திரனார் போற்றுகிறார். அவலோகிதேஸ்வரர் பொதிகை (போதாலக) மலையில் உறைந்ததாகவும் நம்பினர். அவலோகிதேஸ்வரர் வழிபாடு பரவிய கிழக்காசிய நாடுகளில் எல்லாம் தத்தமது ஊர்களில் ஒரு 'பொதிகை'யை ஸ்தாபித்து அங்கு அவலோகிதனை வீற்றிருக்கச் செய்து இன்றளவும் போற்றி வருகிறனர். ஆனால், இந்தியாவில் பௌத்த மதம் முற்றிலும் மறைந்த நிலையில் அந்த நினைவுச்சுவடுகூடத் தமிழகத்தில் இல்லை.
'நேமிநாதம்' என்ற இலக்கண நூல் ஒன்று உண்டு. அதை இயற்றிய ஜைனரான குணவீர பண்டிதர், ஜைன தீர்த்தங்கரரான நேமிநாதரின் மீதுள்ள பக்தியினால் நூலுக்கு 'நேமிநாதம்' என்று பெயரிட்டார். அதைப் பின்பற்றி, தமிழ் பௌத்தர்கள் போற்றிய அவலோகிதனின் பெயரை ஒட்டி 'அவலோகிதம்' என்று பெயரிட்டேன்.
வினோத் ராஜன்
*****
என்ரீக்கேயும் எம்.எஸ்.ஸும்! நமது பூர்வீக சமயத்தையும் கலாசாரத்தையும் என்றைக்கும் மறக்கக்கூடாது. நமது தார்மீக நெறியை என்றைக்கும் விடக்கூடாது அதில் மிக உறுதியாக இருக்க வேண்டும். இப்போதைய சூழ்நிலைக்கு தேவையானது இதுதான். அதே சமயத்தில் மேற்கத்திய கலாசாரத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மேற்கத்திய முறைகளை ஸ்வீகரிக்கும் அதே நிலையில் நமது பூர்வீக முறைகளின் அடிப்படை பிரக்ஞையும் இருக்க வேண்டும். என்ரீக்கேவின் பாப் இசையை ரசிக்கும் அதே சமயத்தில் எம்.எஸ். பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.
வினோத் ராஜன் |
|
|
More
உமா ஜெயராசசிங்கம் சீர்காழி சிவசிதம்பரம்
|
|
|
|
|
|
|