|
செப்டம்பர் 2011: வாசகர் கடிதம் |
|
- |செப்டம்பர் 2011||(2 Comments) |
|
|
|
|
தென்றல் ஆகஸ்ட் இதழில் டாக்டர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் நகைச்சுவைத் துணுக்கு ஒன்றில் "பையத் தாங்க என்கிறதுக்கு மெதுவாக் குடுங்கன்னு அர்த்தம்" என்று சொல்லியிருக்கிறார். திருஞானசம்பந்தர்
செய்யனே திரு ஆலவாய் மேவிய அய்யனே அஞ்சல் என்று அருள் செய் எனைப் பொய்யராம் அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே
என்ற பதிகத்தில் இதே பொருளில் பயன்படுத்தி உள்ளார். இதனோடு தொடர்புடைய சம்பவத்தைச் சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் பாடும்போது, "பையவே சென்று பாண்டியர்க்காகெனப் பணித்தார்" என்று பாடுகிறார். இந்த ஞானசம்பந்தனின் நகைச்சுவை துணுக்கைக் கண்டதும் எனக்குத் திருஞானசம்பந்தரின் நினைவு வந்தது.
கி.கண்ணன், அசோக் நகர், சென்னை 600083
*****
ஜூலை மாதத் தென்றலில் வெளியான 'ரொட்டி அய்யா' கதை படித்தேன். மனதைத் தொட்டது. கண்ணீரை அடக்க முடியவில்லை.
ராம் மாணிக்கம் (ஆன்லைனில்)
***** |
|
கடல் கடந்து வீசிய தென்றல் கடந்த மே மாதம் அமெரிக்கா வந்து 2 மாதம் தங்கிவிட்டு இந்தியா திரும்பினோம். விமானப் பயணத்திற்காக ஜூன் மாதத் தென்றல் புத்தகத்தை எடுத்து வந்தேன். எப்போது யு.எஸ். வந்தாலும் தென்றல் படிப்பதில் ஆர்வம் உள்ளவள் நான். எனது ஃப்ளாட்டின் கீழ்தளத்தில் புதிதாக வந்துள்ள ஒரு பெண்மணி ஒருநாள் என்னிடம் படிக்க ஏதாவது புத்தகம் உள்ளதா என்று கேட்டு வந்தார். மற்ற தமிழ்ப் புத்தகங்களுடன் தென்றலைக் கொடுத்து 'நல்ல தரமான புத்தகம். அமெரிக்காவாழ் தமிழர்களுக்காக வெளிவருகிறது' என்று கூறினேன். மறுநாள் காலை அப்பெண்மணி என்னிடம் வந்து சற்றுத் தயங்கியவாறு, 'உங்களுக்கு தென்றலை திருப்பித்தர வேண்டுமா?' என்று கேட்டார். ஒன்றும் புரியாமல் நான் அவர்களைப் பார்க்க, ஒன்றுமில்லை. அடுத்த மாதம் முதன்முறையாக அமெரிக்கா செல்லும் தன் மகளுக்குத் தேவையான பல தகவல்கள் அதில் உள்ளதாகவும் அவளுக்குத் தென்றல் மிகவும் உபயோகப்படும் என்றும் கூறினார். தென்றல் செய்யும் சேவையில் சிறுதுளிப் பங்கு எனக்குக் கிடைத்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
கடல் கடந்து இந்தியா வந்து வீசிய தென்றல் உலகமெங்கும் வீச வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
பத்மா மணியன், பங்களூரூ |
|
|
|
|
|
|
|
|