Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிரிக்க சிரிக்க
நவராத்திரி பார்ட்டி
- எல்லே சுவாமிநாதன்|ஆகஸ்டு 2011||(2 Comments)
Share:
"இந்தியா கிச்சன்னு சூப்பர் ரெஸ்டாரண்ட் வந்திருக்காம்மா. என் ஸ்கூல் சினேகிதியெல்லாம் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. ஆலு கோபி மசாலானு ஒரு டிஷ்ஷாம். சப்பாத்தியோட சாப்பிடத் தூக்கலா இருக்குமாம்" என்றாள் பாமா.

"பிட்சா ஹவுசுக்கு போகலாம். டீப் டிஷ் வெஜ்ஜி பிட்சா ரெண்டு ஸ்லைஸ் சாப்பிட்டா அமக்களமா இருக்கும்" என்றான் ரமேஷ்.

வாசலில் ரவியின் கார் நிறுத்தப்படும் சத்தம் கேட்டது.

"உங்க அப்பா வந்தாச்சு.... அப்பாவைக் கேட்டு ராத்திரி சாப்பிட எங்க போகலாம்னு முடிவு பண்ணிடலாம். வந்த உடனேயே பிடுங்காதீங்க. அவர் வந்து முகம் கழுவி டிரஸ் மாத்திட்டு வர வரைக்கும் பொறுங்க" என்றாள் ஹேமா.

சில நிமிடங்கள் கழித்து சோபாவில் வந்து சோர்வாக அமர்ந்தான் ரவி.

"ரொம்பக் களைப்பா இருக்கீங்க, ஆபீஸ்ல வேலை அதிகமா?" என்றாள் ஹேமா.

"அதையேன் கேக்கிற. மனுசனைப் பிச்சுப் பிடுங்கறானுக. நாளைக்கி சனிக்கிழமை கூட 4 மணி நேரம் மீட்டிங் உண்டாம். போய்த் தொலைக்கணும். பொண்டாட்டி பிள்ளையோட வார இறுதிநாள்னு கொஞ்சம் ஜாலியா இருக்கணும்னா விட மாட்டானுக. ஆமா, இன்னி ராத்திரிக்கு சாப்பிட என்ன பண்ணிருக்கே?"

"இன்னிக்கு சாதம் மட்டும் வடிச்சேன். குழந்தைங்க வீட்ல சாப்பிட மாட்டோம். வெளிய சாப்பிடணும்னு படுத்தினாங்க. அதுனால வேற எதுவும் சமையல் பண்ணல. எங்க போகணும்னு நீங்கதான் முடிவு பண்ணணும்னு காத்திருக்காங்க. எனக்குப் பசியில்ல. வேணும்னா ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுடுவேன்"

பாமாவும், ரமேஷும் தங்கள் விருப்பங்களைச் சொன்னார்கள்.

"இப்பத்தான் ஒரு மணி நேரம் டிராபிக்ல கார் ஓட்டிட்டு வந்து கடுப்பா இருக்கு. லாஸ் ஏஞ்சலிசில கார் ஓட்றதாலயே மனிசன் ஆயுள் பத்து வருசம் குறையுதாம். இப்ப எனக்கு மறுபடியும் கார் ஓட்டிக்கிட்டு வெளிய போய் சாப்பிட இஷ்டமில்ல. பிட்சா ரெஸ்டாரெண்ட்னு போனா அம்பது அறுவது டாலருக்குக் குறையாம வீணாச் செலவாகும். பேசாம வீட்லயே இருந்து சாதம், பழம், ஐஸ்கிரீம்னு ஏதாச்சும் சாப்பிட்டு வயத்தை ரொப்பிடலாம். ஞாயித்துக் கிழமை வெளியில போயிசாப்பிடலாம். என்ன?"

கொஞ்ச நேரம் அங்கே ஒரு பேச்சு யுத்தம் நடந்தது. பாமா ஆலு கோபி மசாலாவின் பெருமையைச் சொல்ல, ரமேஷ் பிட்சா ஹவுசின் பிட்சா வகைகளைப் பட்டியலிட்டான். ரவி கடுப்புடன் "ஹேமா ஒன் பங்குக்கு என்ன சொல்லப் போறே, சொல்லு" என்றவுடன் ஹேமா சொன்னாள், "சரி நான் ஒரு யோசனை சொல்றேன். எல்லோரும் என் சினேகிதி மாலினி வீட்டுக்கு சாப்பிடப் போயிடலாமா. இன்னிக்கி வரச் சொல்லியிருக்கா. இப்பத்தான் என் நினைவுக்கு வந்துது."

"எதுக்கு" என்றான் ரவி.

"அவ கொலு வெச்சிருக்காளாம். இன்னிக்கு நவராத்திரி டின்னர் பார்ட்டியாம். கூப்பிட்டிருக்கா. நாலுலேருந்து எட்டு மணி வரையும் பார்ட்டி. ஸ்நாக், டிபன், சாப்பாடு எல்லாம் இருக்குமாம். குழந்தைங்களுக்கு பிட்சா கூட இருக்கும்னு சொன்னா. நவராத்திரிக்குப் போனமாதிரியும் இருக்கும். பொம்மைக் கொலுவும் பார்க்கலாம். நமக்கு வயிறும் ரொம்பிடும் நாலு பேரைப் பார்த்துப் பேசின மாதிரியும் இருக்கும். காசும் செலவில்ல. அதிக தூரம் டிரைவிங் பண்ணத் தேவையில்ல. அஞ்சு நிமிசத்தில அவங்க வீட்டுக்குப் போயிடலாம். உங்களால ஓட்ட முடியலன்னா நான் வேணுன்னா காரை ஓட்டறேன்."

ரவிக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துவிட்டது. "இதுக்குதான் மனைவி வேணும்கிறது. மதியுடையாள், மதி முகத்தாள், மந்திரி போன்றாள், மனையாள் சொல்லுக்கு மிக்க மந்திரமும் உண்டோ மானிலத்தில்!"

"போதும் அறுக்காதீங்க. சீக்கிரம் கிளம்பலாம். டிரஸ் மாத்திக்கங்க எல்லோரும். மணி ஏழாச்சு. க்விக்." அரை மனதுடன் பாமாவும் ரமேஷும் சேர்ந்து கொண்டார்கள்.

பார்ட்டி முடிந்து வீட்டுக்கு வரும்போது இரவு மணி ஒன்பதாகிவிட்டது. வீட்டுக்கு வந்ததும் ரவி, " ஹேமா..சாதம் இருக்குன்னு சொன்னியே. கொஞ்சம் தயிர் விட்டுப் பிசைஞ்சு தரியா. அவங்க வீட்ல சாப்பாடு சரியா கிடைக்கல. கொஞ்சம் ஆறிப்போன சுண்டலும் உப்புமாவும்தான் கிடைச்சுது."
"ஆமாம்மா. பிட்சா எல்லாம் நாம் போறச்சேயே காலியாயிடுச்சு. எனக்கும் கொஞ்சம் சாதம் குடு" என்ற ரமேஷை பாமாவும் ஆமோதித்தாள்.

ஹேமா சாதம் பிசைந்து தட்டில் போட்டு, உருளைக்கிழங்கு வறுவல் ஊறுகாயுடன் பறிமாற எல்லோரும் ஒரு வழியாய்ப் பசி தணிந்தார்கள்.

"நாங்க அவடார் சிடி போட்டு படம் பார்க்கப் போறோம்" என்று ரமேஷும், பாமாவும் ஹாலுக்குப் போனார்கள். ரவியும், ஹேமாவும் படுக்கையறைக்குப் போனார்கள். பாமா சிடி போட்டுவிட்டு ரமேஷை திரும்பிப் பார்த்தாள். "எதுக்குடா மாலினி ஆன்டி வீட்ல எங்கிட்ட இருவது டாலர் வாங்கிட்டுப் போனே?" என்றாள்.

"மாலினி ஆன்டி பையன் படிக்கிற பள்ளிக்கூடத்தில நிதி திரட்டணும்னு, சாக்லெட் விக்கச் சொல்லியிருக்காங்களாம். வாங்கிக்க. உனக்கு எவ்வளவு வேணும்னான். நாலுன்னு சொன்னேன், இருவது டாலர் குடுடான்னுட்டான். எங்கிட்ட காசில்ல அதான் உங்கிட்ட வாங்கிக் குடுத்துட்டேன்."

"அய்யோ ஒரு டாலர் பொறாத சாக்லெட் அஞ்சு டாலரா. எங்க. எடு பார்க்கலாம். இப்பத் திங்கலாமா?"

"அங்க வந்திருந்த ஷீலா ஆன்டி குழந்தை வீட்டுக்குப் போறப்ப காரில ஏறாம அழுதிட்டு இருந்திச்சா. ஒரு பேச்சுக்கு, அழாதடா சாக்லட் கேண்டி தரேன்னு பையைக் காட்டினேன். அவன் பையோட வாங்கிக்கிட்டு தாங்க்யூன்னு காரில ஏறிட்டுப் போயிட்டான். திருப்பிக் கேட்க வெக்கமா இருந்துது."

படுக்கையறையில் ரவி பையிலிருந்து ஒரு சீட்டை எடுத்துப் பார்த்துவிட்டு "தண்டச்செலவு"என்று சொல்லி டிரஸ்ஸர் மேல் வைத்தான். ஹேமா அதை எடுத்துப் பார்த்தாள். "கால்ஃப்", "மீன் பிடித்தல்" என்ற இரு சஞ்சிகைகளுக்கான ஒரு வருட சந்தா செலுத்தியதற்கு ரசீது அது.

"கால்ஃபா. நீங்க கால்ஃப் ஆடறதில்லயே. மீன் பிடித்தலா. நாம சைவம். மீன் பிடிக்கிறதைப் பத்தின பத்திரிக்கை உங்களுக்கு எதுக்குங்க" என்றாள் வியப்புடன்.

"உன் சினேகிதி மாலினி பெண் ஸ்கூலுக்குனு நிதி திரட்ட பத்திரிக்கைக்கு சந்தாதாரர் சேர்த்துத் தராளாம். ஒரு லிஸ்டை வெச்சிக்கிட்டு அதுலேருந்து குறைஞ்சது ரெண்டு பத்திரிக்கை எடுத்துக்கணும்னு பிடிவாதமாச் சொல்லிடுச்சு. அவங்க வீட்டுக்கு சாப்பிடப் போயிருக்கோம். வாங்காட்டி நல்லா இருக்காது. வேற வழியில்ல. இருக்கறதிலேயே மலிவா இருந்த இரண்டு பத்திரிக்கைகளை செலக்ட் பண்ணினேன். ஒரு வருஷ சந்தாவுக்கு செக் எழுதிக் கொடுத்தாச்சு எழுவது டாலருக்கு. பத்திரிக்கை தண்டம்தான். படிக்காமலயே தூக்கி எறிய வேண்டியதுதான். அங்க போனதே தப்பு."

"நானும் ஒரு தப்பு பண்ணிட்டேன்" என்றாள் ஹேமா.

"என்ன பண்ணின" என்றான் ரவி திகைப்புடன்.

"நவராத்திரி பார்ட்டியோட அம்வே பார்ட்டியும் வெச்சிருந்தா மாலினி. பெண்களை எல்லாம் ஒரு ரூமுக்கு அழச்சிட்டு போனா. அங்க அம்வேல விக்கற சாமான் எல்லாத்தையும் டேபிள்ல பரத்தி வெச்சிருந்தா. வாங்கிக்கங்கன்னு வற்புறுத்தினா. மத்த பெண்களும் வாங்கினாங்க. கெளரவப் பிரச்சனையா ஆயிடுச்சு. இருக்கிறதிலயே மலிவா ஒண்ணு நானும் வாங்கித் தொலைச்சேன்."

"என்ன வாங்கின, ஹேமா?"

"சோப்பு"

"குளிக்கத் தேய்ச்சுக்கற சோப்பா. போன வாரம்தானே ரெண்டு டஜன் வாங்கிப் போட்டே? அதுவே ஒரு வருஷத்துக்கு வருமே."

"குளிக்கற சோப்பு இல்ல. துணிக்குப் போடற பவுடர் சோப்பு ஆர்டர் பண்ணினேன்..... எண்பது டாலர் ஆச்சு. எங்கிட்ட பணம், செக் இல்லனு சொல்லிப் பார்த்தேன். சார்ஜ் கார்டு இருந்தாப் போதும்னு வாங்கி சார்ஜ் பண்ணிட்டா" என்றவள் ரவியின் முகமாற்றத்தை அறிந்து "கவலைப் படாதீங்க. துளி சோப்பிலயே நிறைய நுரை வருமாம். இனிம அஞ்சு வருஷத்துக்கு நமக்கு துணிக்குப்போடற சோப்பு வாங்க வேண்டிய தேவையே இல்லீங்க" என்றாள்

"இனிம நீ நவராத்திரி, சிவராத்திரி பார்ட்டினு ஐடியா குடு. அப்புறம் நடக்கறதே வேற" என்று ரவி கத்தினது எதற்காக என்று ஹேமாவுக்குப் புரியவில்லை.

எல்லே சுவாமிநாதன்
Share: 
© Copyright 2020 Tamilonline