Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
குறுநாவல்
சில மாற்றங்கள் (மாற்றம் – 3)
- சந்திரமௌலி|ஆகஸ்டு 2011||(1 Comment)
Share:
Click Here Enlargeஇதுவரை:
பிரபல மருந்துக் கம்பெனியில் அதிகாரியாக வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாக நியூ யார்க் வருகிறான். வழியில் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஒருநாள் தங்குகிறான். தினேஷ் வேலை இழந்த தனது நண்பன் ரங்கனுக்கு, ஸ்ரீ கம்பெனியில் வேலை வாங்கித்தர வேண்டுகிறான். ரங்கனின் தகுதிகளைப் பார்க்கும் ஸ்ரீ அவனுக்கு நிச்சயம் வேலை தருவதாகச் சொல்கிறான். ஆனால் ரங்கனின் புகைப்படத்தையும், அவன் சொந்த விவரங்களையும் பார்த்ததும் மனதை மாற்றிக் கொள்கிறான். தன் சிறு வயதில் ஆறாத காயத்தை அளித்து, வாழ்நாள் முழுதும் மறக்க முடியாமல் செய்த ரங்கன் இவன்தான் என்று அடையாளம் கண்டதும் தன் சிறுவயது நிகழ்வுகளை மனதில் ஓட்டுகிறான்.

ரங்கன் ஏற்படுத்திய ஆறாத காயம் என்ன? அந்தக் காயத்துக்கு மருந்து என்ன? மேலே படியுங்கள்....

*****


பத்தாம் வகுப்பு ஆரம்பித்த முதல்நாள் எல்லாம் மங்களகரமாக, ஒரு பெரிய மிஷனுக்குத் தயாராவது போன்ற பரபரப்புடன் இருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து, சரஸ்வதி நமஸ்துப்யம் எல்லாம் முடிந்ததும் ரங்கனின் அப்பா கரெஸ்பாண்டண்ட் குப்புராஜும், தலைமை ஆசிரியரும் நன்றாகப் படிப்பது, பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்குவதன் அவசியம் ஆகியவை பற்றிப் பேசினார்கள். தலைமை ஆசிரியர் எங்கள் வகுப்பைப் பார்த்து, "இந்த வருசம் நெல்லாப் படிக்கிற பிள்ளைங்களை ஒரே வகுப்புல போட்டிருக்கோம். மத்த வகுப்புகளைவிட அதிகம் பயிற்சி கொடுக்கப் போறோம். உங்களில் ஒருத்தராவது மாநில அளவுல நல்ல மதிப்பெண் வாங்கோணும். இந்த கூரைக் கொட்டகை பள்ளிக்கூடம் அப்பத்தான் பிற்காலத்துல கல் கட்டடமா மாறும், பெரிசா வளரும். சேட்டையெல்லாம் விட்டுட்டு கெவனமா படிங்க" என்றார்.

இந்தப் பீடிகைகளின் பின்னால் எக்கச்சக்கமான தூக்கம் கெடுக்கும் பரீட்சைகளையும், முட்டி ஒடிக்கும் வீட்டுப் பாடங்களையும், கரைந்து போகும் விளையாட்டுப் பிள்ளைப் பருவத்தையும் மனக்கண்ணில் பார்த்து மற்ற மாணவர்கள் பிரமித்து நின்றபோது, "கண்டிப்பா ஸ்டேட் ரேங்க் வாங்குவேன் சார்" என்று ரங்கன் கை தூக்கினான். ஈன்ற பொழுதின் பெரிதுவந்து பெருமையாகப் பார்த்த அவன் அப்பாவிடம், தலைமை ஆசிரியர் "யாரு புள்ள இது, கண்டிப்பா செய்யும்" என்று ஆமோதித்துத் தலை ஆட்டினார். வகுப்பு கலையும்போது ரங்கன் எத்தனாவது ரேங்க் வருவான் என்பதுதான் பேச்சாக இருந்தது, எவருக்கும் அவன் ரேங்க் வாங்குவதில் சந்தேகமில்லை.

இந்தச் சூழ்நிலையில் நானும் முனைந்து படித்தேன். வகுப்பில் ஆசிரியர்கள் கேள்வி கேட்டால் அதுவரை ரங்கனே பெரும்பாலும் பதில் சொன்ன நிலை மாறி, நானும் நன்றாக பதில் சொன்னேன். எங்கள் மாணிக்கம் சார், மூன்று வாரங்களிலேயே நான் முனைப்பாகப் படிப்பதைக் கண்டு உற்சாகப் படுத்தினார். வகுப்பிலேயே ஒருநாள் "நம்ம வகுப்புல ரங்கனும், சீனுவும் இப்படியே படித்தால் நல்ல மதிப்பெண் வாங்க வாய்ப்பிருக்கு" என்று சொல்லிவிட்டார். ரங்கன் அதை ரசிக்கவில்லை, அவனோடு என்னைச் சேர்த்து சொன்னதை அவமானமாக எடுத்துக் கொண்டான். மறுநாள் மாணிக்கம் சார் வகுப்புக்குள் நுழையும் முன் கரும்பு கடித்துத் துப்பிய சக்கை அவரது நாற்காலியில் கிடந்தது. எப்பவும் அமைதியாக, வாப்பா போப்பா என்று மாணவர்களை மரியாதையாக நடத்தும் மாணிக்கம் சார் கொதித்து விட்டார். "எவண்டா இந்த ஈனமான காரியத்தை சேன்சது. வாத்தியார அவமானப்படுத்தறதா நெனச்சு உன் தரத்தை தாழ்த்திக்கிற. இத்தயா நான் கத்துக்குடுத்தேன். இங்க துப்பியிருக்கிற எச்சி சக்கைக்கும் இத்த சேன்ச மட்டிப்பயலுக்கும் வித்தியாசமில்ல. காலைல வகுப்பு கூட்டின பொறவு நீங்கள்ளாம் தான் உள்ள வந்திருக்கீங்க. உங்கள்ள யாரோதான் இத சேன்சிருக்கணும். யாருன்னு சொன்னா தப்பினீங்க, இல்லை இன்னிக்குப் பாடநேரம் பூரா மொத்தப் பயபுள்ளைகளும் வெளில, வெய்யில்ல முட்டி போடணும்."

எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். யாரும் ஒன்றும் சொல்ல முன்வராத நிலையில் வேறு வழியில்லாமல் சதையைக் கிழிக்கும் சரளை மண்ணில் பளீர் வெயிலில் முட்டி போட்டோம். அன்று மதிய உணவு வேளையில் ரங்கனிடம் பேச நேரம் பார்த்தேன். அவன் தனியாக மாட்டவே இல்லை. வேறு வழியில்லாமல் மற்ற மாணவர்கள் இருக்கும் போதே பேசினேன்.

ரங்கா, நான்... நான் கொஞ்சம் தனியாப் பேசணும்.

தனியாத்தானே.... தோ.... அங்க புளிய மரத்தாண்ட போயி பேசு, தனியா. என்னாண்ட ஏன் கேக்குற?

பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டதுபோல் மற்ற மாணவர்கள் கிக்கிக்கீ என்று சிரித்தார்கள்.

மத்தவங்க முன்னாடி பேச வேணாம்னு பாத்தேன். அந்த கரும்பு சக்கையை மாணிக்கம் சார் நாற்காலில இன்னிக்குக் காலைல போட்டது நீதான். எனக்குத் தெரியும். கூடப் படிக்கிற பையன மாட்டிவிடக்கூடாதுனு தான் சும்மா இருந்தேன். ஆனா, இனி இப்படி இன்னொரு சேட்டை பண்ணீன்னா வாத்தியார் கிட்ட சொல்லிடுவேன். உன்னால நாங்க தண்டனை வாங்கிக்கிட்டு, பாடம் இழக்க முடியாது.

ஐயய்யோ.... – பயப்படுவது மாதிரி இரண்டு கைகளை மார்புக்கு குறுக்கே ஒடுக்கிக் கொண்டு. நீ பாத்தியா நான் பண்ணினத. பெரீசா பேச வண்ட்ட. வாத்தியார்கிட்ட சொல்லுவேன், சிவாஜிகிட்ட சொல்லுவேன்னு மெரட்டினா பயந்துடுவமா.

எனக்குத் தெரியும், நீதான் பண்ணின. ஊர்ல இந்த நேரத்துல கரும்பு எங்கியும் கிடைக்காது. உங்க வீட்டுத் தோட்டத்துல மட்டும்தான் இருக்கு. தவிர உன் சைக்கிள் நிறுத்தற இடத்துல கரும்பு சக்கை பாத்தேன் – அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்துச் சொன்னேன்.

கண்டு புடிச்சார்டா சிஐடி சங்கரு. கரும்பு எங்க வீட்ல இருந்தா நான்தான் சக்கையை போட்டுருப்பேனா. உங்கப்பா பேங்க்ல வேலை செய்யிராருன்னா ஊர்ல உள்ள பணமெல்லாம் உன்னிதா - கள்ளத்தனமாகப் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு அதே நேரம் மாட்டிக்கொண்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் ஏடாகூடமாகத் திருப்பிப் பேசினான்.

வேணாம் ரங்கா. நீ நல்லா படிக்கிற, அதுல கவனம் செலுத்து, எங்களையும் படிக்க விடு. உனக்கு நான் நல்லா படிக்கிறது போட்டி மாதிரி தெரிஞ்சா நீ அதைவிட நல்லா படிச்சு உன் திறமையைக் காட்டு. என்னை ஏன் வெறுக்கறனு தெரியல. உன்ன மாதிரி நல்லா படிக்கிற பையனோட ஒரே வகுப்புல இருக்கறதால நான் எவ்வளவு முனைப்பா படிக்க முடியறது தெரியுமா?

ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது தம்பி- என்று டெண்ட் கொட்டகையில் பார்த்த உத்தம புத்திரன் வசனத்தைக் கட்டைக் குரலில் கைகளைக் கசக்கிப் பேசிவிட்டு, நீ எனக்குப் போட்டியா. ஏதோ ரெண்டு, மூணு கேள்விக்கு பதில் சொல்லிட்டு வாத்தியார் தட்டிக் குடுத்தா பெரீசா சாதனை பண்ணிட்டதா நெனப்பா. இதுவரை எல்லாத்துலயும் எப்பவும் நான் முதல். வர்ற கால் பரீட்சைல அதை நிரூபிக்கறேன். இப்ப பொத்திக்கிட்டு போ – என்று வாய் பொத்தி அபினயித்தான்.

நான் ஒரு தீர்மானமாக திரும்பி நடந்தேன்.

ஏய் சீனி.. சீனி.. வேகமாப் போ. எறும்பு தூக்கிகிட்டு போயிடப் போகுது..சீனி சீனி வேலையப் பாத்துப் போனீ.. –என்று பாட்டுப் பாடினார்கள்.

*****
மாணவர்கள் இறுக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். கால் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தி மாணிக்கம் சார் மேஜையில் ஜீனி பூதம் மாதிரி எங்களை வெறித்தது. அடித்தும் போடலாம், ஆளையும் அசத்தலாம். ஒழுங்காக எழுதியவர், எழுதாதவர் என்ற வித்தியாசமில்லாமல் நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம்.

‘எல்லாப் பயபுள்ளைகளும் நெல்லாவே செய்திருக்கீங்க ரெண்டு பேரைத் தவிர’ என்று நிறுத்தி, கனைத்துக் கொண்டு அந்த ரெண்டு பெர் ரொம்ப நெல்லா செய்திருக்காங்க. மொதல்ல அவங்கள கூப்புடறேன். ரங்கன் – 467 மார்க். அறிவியலைத் தவிர மத்த எல்லா பாடத்திலேயும் முதல் மார்க். அடுத்த முறை அதுலயும் நல்லா வாங்கணும். – ரங்கன் பெருமையாக எழுந்து நின்றான். எல்லாரும் கை தட்டினோம்.

சீனுவாசன் – அறிவியல் பாடத்துல முதல் மார்க் நூத்துக்கு நூறு, மத்த பாடங்கள்ல ரங்கனை விட ஒண்ணு, ரெண்டு கம்மி. மொத்தம் 480 மார்க். வகுப்பிலேயே முதல். எப்பவும் இது போலவே படிக்கணும்

ஒரு நிமிடம் அதிர்ச்சியில் வகுப்பு உறைந்து, பின் எல்லாரும் பெரும் ஆரவாரம் செய்தார்கள், ரங்கனைத் தவிர.

அன்றிலிருந்து வகுப்பில் மாணவர்களுக்கிடையேயான சமன்பாடு மாறத் தொடங்கியது. எனக்குப் பின்னால் ஒரு கும்பல் சுற்றத் தொடங்கியது. என்னோடு சேர்ந்து படிக்கவும், இருக்கவும் விரும்பினார்கள். பள்ளிக்கு வெளியிலும் நான் ஒரு நண்பர்கள் சங்கம் ஆரம்பித்து, மாதம் ஒரு ரூபாய் சந்தா கட்டினால் ஷட்டில் காக், பூப்பந்து, கேரம் எல்லாம் விளையாட ஏற்பாடு செய்தேன். அப்பா சென்னையிலிருந்து பந்து, ராக்கெட் எல்லாம் வாங்கி வந்து உற்சாகப் படுத்தினார். ரங்கனின் பொறாமைத் தீயைப் போல என்னை சுற்றி நண்பர்கள் கூட்டம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. பொறுக்காமல் ரங்கனும் போட்டி சங்கம், சந்தா இல்லாமல் இலவசமாக ஆரம்பித்து கிரிக்கெட், கால்பந்து எல்லாம் விளையாடினார்கள். "பொம்பளை விளையாட்டு விளையாடறவங்கள்லாம் அங்க போங்க, ஆம்பிளை விளையாட்டு வெளையாடணும்னா இங்க வாங்க" என்று பகிரங்கமாக ஆள்பிடிக்கத் தொடங்கினான்.

அரையாண்டுத் தேர்வில் ரங்கன் முதல் ரேங்க் வாங்கினான். என்னைவிட நான்கு மதிப்பெண்களே அதிகம். ஆனால் அவன் அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவன் முதல்மார்க் வாங்கிய சந்தோஷத்தைவிட நான் வாங்கவில்லை என்பதுதான் அதிக சந்தோஷம் தந்தது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

இந்த நேரத்தில் மதுரைக்கு அந்த வருடப் பள்ளிச் சுற்றுலா ஏற்பாடானது. பள்ளிச் சுற்றுலா என்பது வாழ்க்கை மாதிரி, இன்பமும் துன்பமும் கலந்தது. பாடங்களிலிருந்து விடுதலை, இறுக்கமான ஆசிரியர்-மாணவன் சூழலிலிருந்து நண்பர்போல ஆசிரியரோடு பழக வாய்ப்பு, "கோஷா" போட்டு தனி அந்தப்புரம் மாதிரி வைக்கப்பட்டிருக்கும் மாணவிகளும் வருவது எல்லாம் இன்பம். சுற்றுலாவுக்குப் பிறகு ’எனது இனிய சுற்றுலா’ பற்றி நான்கு பக்கங்களுக்கு கட்டுரை வரைக என்று ஆசிரியர் சொல்வது துன்பத்தில் எல்லாம் துன்பம். அனுபவிக்கும் எல்லாவற்றையும் பிணவறையில் கூறு போடுவது போல் கட்டுரை வரைந்து, பாகம் குறித்து, மதிப்பெண் வாங்குவது துன்பத்திலெல்லாம் பெரிய துன்பம். இந்த சுற்றுலாவை எப்படியும் பயன்படுத்தி ரங்கனோடு எனக்கு ஏற்பட்டிருக்கும் மோதலைச் சரிசெய்ய நினைத்தேன். சுற்றுலா அன்று ஒவ்வொரு மாணவனும் இன்னும் ஒரு மாணவனோடு கைகோக்க வேண்டும். சுற்றுலா முடியும் வரை பிரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆசிரியரின் சுமையைக் குறைக்கும், அதேநேரம் மாணவர்களுக்குப் பொறுப்பு கற்றுத் தரும் buddy system கண்ணனூர் கிராமத்திலும் இருந்தது. நான் ரங்கனின் கைகளைப் பிடித்து என் சுற்றுலா நண்பனாகத் தேர்ந்தெடுத்தேன். மாணிக்கம் சார் மகிழ்ந்து சரி சொன்னதால் ரங்கனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வினோதமாகவும், வெறுப்பாகவும் என்னைப் பார்த்துக்கொண்டே பேருந்தில் ஏறினான். ரங்கனுக்குப் பிடித்த கடலை மிட்டாய், எள்ளுருண்டை எல்லாம் தந்தேன். ஆச்சரியமாக ஆனால் ஆவலாக, சாப்பிட்டான்.

ரங்கா, இன்னிலேருந்து நீயும் நானும் நண்பர்கள். நமக்குள் சண்டை வேண்டாம். எப்படி நீ அரையாண்டு தேர்வில் நல்லா படிச்சு முதல் மார்க் வாங்கினியோ அதே போல நாம் ரெண்டு பேரும் முனைப்பா படிக்கலாம். நம்மள்ல யார் நல்லா ரேங்க் வாங்கினாலும் நம்ம ஸ்கூலுக்குதானே பெருமை. எனக்கு உன் நிலைமை புரியுது. இது உன் ஊர், நீ எப்பவும் முதல் மாணவனா இருந்த இடம். நான் திடீர்னு அந்த இடத்தைப் பறிச்சது உனக்கு தாங்க முடியலை. ஆனா இதுனால நீ உன் திறமையை இன்னும் வளர்த்துக்க முடியுதுனு பார்த்தா நான் மோசமாத் தெரிய மாட்டேன். – ஆதரவாக அவன் கைகளைப் பிடித்து சொன்னேன்.

என்ன சொல்ற சீனி – தணிந்த குரலில் கேட்டான் ரங்கன்.

யோசிச்சுப் பாரு, எப்பவும் 400-420 மார்க்தான் நீ வாங்குவே. என்னோட போட்டி போட்டு படிச்சதுல 470-480னு வாங்கற. இப்படியே படிச்சா நீ நிச்சயம் ஸ்டேட் லெவல்ல ரேங்க் வாங்கலாம். என்னோட போட்டி போட்டு பசங்க வெளையாட இப்ப ஒரு நல்ல சங்கம் ஆரம்பிச்சிருக்க. நான் உன் ஃப்ரெண்டா இருக்க ஆசைப்படறேன். உன்னோட சேந்து என்னோட திறமையையும் வளத்துக்க ஆசப்படறேன்.

நீ சொல்றது சரிதான். நீ என் வழில குறுக்கிடாட்டா நான் உனக்கு ஃப்ரெண்டா இருக்க ஆட்சேபணையில்லை.

எனக்கு அவன் சொன்னது புரியவில்லை. ஆனாலும் ஏதோ இந்த மட்டும் பகையை மறந்தானே என்று சந்தோஷப்பட்டுக் கை குலுக்கினேன். அந்தச் சந்தோஷம் சுற்றுலா முடியும்வரை கூட நீடிக்காது என்று எனக்குத் தெரியவில்லை.. விதி தனலட்சுமி வடிவில் விளையாடியது.

சந்திரமௌலி,
ஹூஸ்டன்

(மாற்றங்கள் தொடரும்)
Share: 
© Copyright 2020 Tamilonline