|
|
|
|
தமிழுக்கும் வளம் சேர்த்த தமிழறிஞர்களில் தமிழையும், தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் மிக நுணுக்கமாக ஆய்ந்து காத்திரமான பல நூல்களைத் தந்து தமிழ் வளர உழைத்தவர் கா. அப்பாதுரையார். இவர், குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில் காசிநாதப் பிள்ளை, முத்துலக்குமி அம்மாள் தம்பதிக்கு ஜூன் 24, 1907ல் மகனாகப் பிறந்தார். இயற்பெயர் நல்லசிவம். தொடக்கக் கல்வியை ஆரல்வாய்மொழியிலும், பள்ளிக் கல்வியை நாகர்கோவிலிலும் பயின்றபின் திருவனந்தபுரத்தில் பட்டப்படிப்பை முடித்தார். தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் நல்ல புலமை மிக்கவராகத் திகழ்ந்த இவர், 1927ல் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின் சென்னை வந்த அப்பாதுரையார் திராவிடன், ஜஸ்டிஸ் போன்ற இதழ்களில் சில மாதங்கள் பணியாற்றினார். பச்சையப்பன் கல்லூரியில் தற்காலிகப் பணிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இவர், தமக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் இந்தியா, பாரததேவி, லோகோபகாரி போன்ற இதழ்களில் கட்டுரைகளும், பாடல்களும் எழுதினார். ஆனாலும் நிரந்தரமான பணி சென்னையில் அமையாத காரணத்தால் காரைக்குடி சென்றார். 'குமரன்' இதழின் ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார்.
அதீத சுதந்திர மனப்பான்மை கொண்ட அப்பாதுரையார் ஒரே இடத்தில் பணி புரியவில்லை. தேனீபோலப் பல இடங்களிலும் பறந்து திரிந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டார். ஏற்கனவே ஹிந்தியை நன்கு பயின்று அதில் 'விசாரத்' பட்டம் பெற்றிருந்த இவர், திருநெல்வேலி மாவட்டத்தின் பல இடங்களில் ஹிந்தி பரப்புநராகப் பணியாற்றினர். தமிழ்மீது கொண்ட ஆர்வத்தால் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் தனிவழியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எல்.டி. பட்டம் பெற்றார். 1937 முதல் 1939 வரை திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் ஹிந்தி பண்டிதராகப் பணி. இக்காலகட்டத்தில் நாச்சியாருடன் இவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. இரண்டே ஆண்டுகளில் நாச்சியார் மறைய, அப்பாதுரையின் வாழ்வில் சோகம் சூழ்ந்தது. தொடர்ந்து தந்தையும் மறைந்தார். அக்காலகட்டத்தில் கட்டாய ஹிந்திக் கல்வி நிறுத்தப்படவே பணியை இழந்தார். ஆனாலும் மனம் தளராமல் இலக்கியத்திலும், பல்வேறு மொழிகள் கற்பதிலும் கவனத்தைச் செலுத்தினார். பிற்காலத்தில் பன்மொழிப் புலவர் என்று அவர் போற்றப்பட்டமைக்கு இக்கால கட்டமே அடிப்படையாக அமைந்தது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம், பிராகிருதம், மலையாளம் தவிர ஆப்பிரிக்க, கிரேக்க, ஜப்பான் மொழிகள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்று அறிந்தவராக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
இந்நிலையில் அமராவதிபுதூர் குருகுலப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. அப்போது அவரிடம் மாணவராகப் பயின்றவர்தான் கவிஞர் கண்ணதாசன். சிலகாலம் கோனாபட்டு சரஸ்வதி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த அப்பாதுரையார், பின் சென்னைக்குச் சென்றார். 'லிபரேட்டர்', 'விடுதலை' போன்ற இதழ்களில் சில காலம் பணியாற்றினார். மத்திய அரசின் செய்தித் தொடர்புத் துறையிலும் பணி செய்தார். ஆனால் அக்காலகட்டத்தில் அவர் எழுதிய 'இந்தியாவின் மொழிச் சிக்கல்' எனும் நூலால் பதவியிழக்க நேரிட்டது. தொடர்ந்து சிலகாலம் அவர் பணியில் இல்லை என்றாலும் வரலாற்றாய்விலும், மொழியியலிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். முயன்று உழைத்து நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். வரலாற்றாய்வில் அவரது முதல் நூலான 'குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு' அக்காலத்தில்தான் வெளியானது. அந்நூல் அவருக்கு மிகுந்த புகழைத் தேடிக் கொடுத்தது. உணர்ச்சிகளைவிட உண்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் திறம்பட ஆய்வு செய்து அவர் நூல்களை வெளியிட்டார். அவற்றுக்குப் பாராட்டுக் கிடைத்த அதே அளவுக்கு எதிர்ப்பும் விளைந்தது. என்றாலும் அப்பாதுரையார் அவற்றைக் கருத்தில் கொள்ளவில்லை. தமது ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்தார். 'தென்னாட்டுப் போர்க்களங்கள்' எனும் ஆய்வு நூல் அவரது திறமைக்குச் சான்றாகியது. அந்நூல் குறித்து அண்ணா, "இந்நூல் என்னை மிகவும் கவர்ந்த நூல். இதை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும். எத்தனை ஆயிரம் கவிதைகள், இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி வியந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்பாதுரையார் திராவிடச் சிந்தனை கொண்டவர். ஆனால் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தார். அதேசமயம் ஆன்மீகத்தின் பெயரால் விளங்கிக் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளைச் சாடினார். தேசியத்துடன் இணைந்த திராவிடச் சிந்தனை அவருடையது. ஆரம்பகாலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டார். இதுபற்றி அவர், "நாட்டு விடுதலை இயக்கத்தில் என் முதல் உணர்வுகள் பிரம்ம ஞானசபை இயக்கத்தையும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., லாலா லஜபதிராய், லோகமானிய பாலகங்காதர திலகர் ஆகியோரின் தீவிர தேசிய இயக்கத்தையும் சார்ந்தவை" என்கிறார். பெரியார், கவிமணி போன்றோருடன் நல்ல நட்பும் அன்பும் கொண்டிருந்தார். பாரதியின்மீது மிகுந்த பற்றும் மதிப்பும் கொண்டவர். அவரை உலகக் கவிஞராகக் கருதினார். பாரதிதாசனுடனும் நெருக்கமான நட்புக் கொண்டிருந்தார். அப்பாதுரையாரின் 'தமிழ் வாழ்க' என்ற நூலையே, பாரதிதாசன், 'தமிழியக்கம்' என்ற கவிதை நூலாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் ஹிந்தி மொழி ஆசிரியராக இருந்த போதும் ஹிந்திப் பாடம் கட்டாயமாக்கப்பட்ட போது நாடெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார். குறிப்பாக 1948ல் பெரியார் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தனது இரண்டாவது மனைவி அலமேலுவுடன் கலந்து கொண்டார். ஆனாலும் பெரியார், தமிழை ஒரு பயன்பாட்டுக் கருவி என்பதைத் தாண்டி உணர்வோடு நோக்கும் கொள்கையற்றவராய் இருந்ததால் அவரை விட்டு விலகினார். அண்ணாதுரையுடன் இணைந்து திராவிட, தமிழ்ப்பணி ஆற்றத் தொடங்கினார். |
|
கிட்டத்தட்ட 170க்கும் மேற்பட்ட நூல்களை அப்பாதுரையார் எழுதியுள்ளார். இவர் எழுதிய ஆராய்ச்சி நூல்களான சென்னை நகர வரலாறு, கொங்குத் தமிழக வரலாறு, சரித்திரம் பேசுகிறது, ஐ.நா.வரலாறு போன்றவை குறிப்பிடத் தகுந்தவை. ஆய்வு நூல்களைத் தவிர பெஞ்சமின் ஃபிராங்கிளின், ஐன்ஸ்டீன், பெர்னாட் ஷா, சர்ச்சில், டேவிட் லிவிங்ஸ்டன், கிருஷ்ண தேவராயர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஓவியர் ரவி வர்மா, அரியநாத முதலியார், ஹைதர் அலி உட்படப் பலரது வாழ்க்கை வரலாறுகளைஎழுதியிருக்கிறார். மேலும் பிசிராந்தையார், கோவூர்கிழார், ஒளவையார், சாத்தனார் போன்றவர்களைப் பற்றியும், ஆங்கிலப் புலவர் வரலாறு, சங்ககாலப் புலவர் வரலாறு போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். சாணக்கியர், சந்திரகுப்த மௌரியர், அலெக்ஸாண்டர் போன்றோர் வாழ்க்கை பற்றிய நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
அப்பாதுரையார் பலமொழிகள் கற்று, தமிழ் மொழிமீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். ஆனால் மொழி வெறியர் அல்லர். பிற மொழிகளைவிடத் தமிழ் மொழி மிக உயர்ந்தது என்ற எண்ணம் கொண்டிருந்தார். உலகின் பிற மொழிகளோடு தமிழை ஒப்பிட்டு அதன் சிறப்பைத் தமது ஆய்வுகள் மூலம் மெய்ப்பித்தார். 'உலக இலக்கியங்கள்' என்ற நூலில், ரஷ்யா, உருது, பாரசீகம், பிரெஞ்சு, சீனம், ஜெர்மனி, வடமொழி, கிரேக்கம் தெலுங்கு, கன்னடம் எனப் பத்து மொழிகளின் இலக்கியங்களை அவர் ஆய்ந்துள்ளார். தமிழ் செம்மொழிக்கான தகுதி உடையது என்பதை உலகின் பலமொழிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து எடுத்துரைத்துள்ளார். சம்ஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், பாரசீகம், அரபு போன்ற ஏனைச் செம்மொழிகள் போன்றே உயர்தனிச் செம்மொழி தமிழ் என்பது அவர்தம் ஆய்வின் முடிவு. தமிழர், மொழி, இனம், நாகரிகம், பண்பாடு பற்றி தெள்ளிதின் ஆராய்ந்து, தமிழும், தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடி என்னும் கோட்பாட்டை முன்வைத்தார். அறிஞர் அண்ணா இவரைப் பற்றி, "அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர்; தமிழ் இனத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்துக்கும் மற்ற இனத்துக்குமிடையே பகைமூட்ட அல்ல, தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்" என்கிறார்.
மொழிபெயர்ப்புக் கலையிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். கார்ல் மார்க்ஸின் 'மூலதனம்' நூலை முதன்முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் அப்பாதுரையார்தான். அதுபோல கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் முன்னுரையைத் தமிழில் பெயர்த்துள்ளார். அதுதவிர கிட்டத்தட்ட 62 நூல்களைப் பிறமொழிகளிலிருந்து தமிழில் பெயர்த்துள்ளார். உலகத்தின் முதல் நாவல் என்ற பெருமை உடைய Talk of Genji என்ற ஜப்பானிய நாவலைத் தமிழில் பெயர்த்துள்ளார். அதனை சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ளது. அது தவிர நாடகம், சிறுகதை, அரசியல் எனப் பல மொழிகளிலிருந்து காத்திரமான பல படைப்புகளைத் தமிழில் பெயர்த்துத் தந்திருக்கிறார். வி. கனகசபைப் பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய The Tamils eighteen hundred years ago என்ற அரிய ஆய்வு நூலை தமிழில் 'ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்' என்ற தலைப்பில் தந்துள்ளார். இது குறிப்பிடத்தக்கதொரு சாதனை நூலாகும். குமரிக்கண்டம் பற்றிய தனது ஆய்வு நூலில் அப்பாதுரையார், "இன்றைய உலக அமைப்புடன் ஒப்பிட்டு நோக்கினால் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி, இந்துமாக்கடல்,தெற்கு ஆசியா, பசிபிக் கடலின் தென்பகுதி, ஆஸ்திரேலியா இத்தனையும் இலெமூரியாக் கண்டம் உள்ளடக்கி இருந்தது" என்று கூறும் செய்தி சிந்திக்க வைப்பதாகும்.
அப்பாதுரையார் குறளின்மீது மிகுந்த பற்று கொண்டவர். குறள் பற்றி ஆய்ந்து பல்வேறு விளக்கங்கள் அளித்துள்ளார். 'திருக்குறள் மணி விளக்க உரை' என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல், ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டு அவரது புகழைப் பறை சாற்றியது. திருக்குறள் உரைக்கெனவே 'முப்பால் ஒளி' என்ற இதழை ஆறு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். குறளை உலகின் பிற நூல்களோடு ஒப்பிட்டு ஆய்ந்திருப்பது அவரது பல்சார் திறமையைக் காட்டும். குறிப்பாகக் கடவுள் வாழ்த்தைப் பற்றி அவர் செய்திருக்கும் ஆய்வுகள் குறிப்பிடத்தக்கன. முதல் குறளில் வரும் "ஆதி பகவன்" என்ற சொல்லைக் குறித்துச் சிலர், அது பகுத்தறிவைக் குறிக்கும் என்றும், 'பகலவன்' என்பதன் திரிபு என்றும் கூறி வந்தனர். அதுபற்றி முழுமையாக ஆய்ந்த அப்பாதுரையார், "உண்மையில் பகவன் என்ற சொல், கடவுட் கருத்தை விளக்கிய உலக ஆசான், கடவுட் பண்புகளைக் கொண்ட முதல்வன், என்ற பொருளிலேயே வழங்கப்பட்டுள்ளது. சமற்கிருதப் பொருள் இதைச் சுட்டிக்காட்டுகிறது. சமற்கிருத உரையாசிரியர்கள் பகவன் என்பதற்குக் 'கலியாண குணங்களையுடையவன். அதாவது நற்குணக்கடல் என்றே பொருள் கூறினர். திருவள்ளுவரின் 'அறவாழி அந்தணன்' இதை நினைவூட்ட வல்லது" என்கிறார்.
1959 முதல் 1965 வரை இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதியின் துணையாசிரியர் பொறுப்பை ஏற்று அதைச் செவ்வனே நிறைவேற்றினார். அதற்கு முன்னாகத் தமிழ்-ஆங்கில அகராதியைப் பல்லாண்டுகள் ஆய்ந்து அதனைக் கழக வெளியீடாகத் தந்துள்ளார். இன்றும் பரவலாகப் புழக்கத்தில் உள்ள நுண்மையான பல கருத்துக்கள் கொண்ட அகராதி அது. மேலும் 1975-1979 ஆண்டுகளில் தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினராகவும் அப்பாதுரையார் திறம்படப் பணியாற்றியுள்ளார்.
கண்ணதாசன் தான் நடத்திய 'தென்றல்' இதழில் தனது ஆசான் அப்பாதுரையாரைத் தொடர்ந்து எழுதச் செய்திருக்கிறார். அடிக்கடி அவரது இல்லத்திற்குச் சென்று உரையாடி இருக்கிறார். கட்டுரை ஒன்றில் கண்ணதாசன், தன் ஆசிரியர் அப்பாதுரையாரின் அன்பு, கண்டிப்பு, மனிதநேயம், அறிவு, திறமை ஆகியவை பற்றி வியந்து போற்றியுள்ளார். எழுத்தாளர் புதுமைப்பித்தன் அப்பாதுரையின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு திறம் படைத்த அப்பாதுரையாரைப் பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன், "சிறந்த சிந்தனையாளர்; பகைவர் அச்சுறும்படிச் சொல்லம்புகளை வீசும் சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர்" என்று பாராட்டியுள்ளார்.
பட்டம், பதவி, புகழ், செல்வம் என எதையும் எதிர்பாராது தமிழுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்த அப்பாதுரையாருக்கு, பிற்காலத்தில் பார்வைக்குறைவு ஏற்பட்டது. அப்போதும்கூட அதற்காக வருந்தாமல், தன்னால் நூல்கள் எழுத இயலவில்லையே, தமிழ் வளர்ச்சிப் பணியில் ஈடுபட முடியவில்லையே என்று எண்ணியே அவர் வருந்தினார். மே 26, 1989 அன்று அப்பாதுரையார் காலமானார்.
எழுத்து, பேச்சு, கலை, சொற்பொழிவு, வரலாறு, பத்திரிகையியல், வரலாற்றியல், ஆராய்ச்சி எனப் பல துறைகளிலும் சான்றாண்மை பெற்று விளங்கிய கா. அப்பாதுரையார், தமிழர்கள் நெஞ்சில் என்றும் முன்னோடியாய் நிலைத்து நிற்கிறார். இன்றும் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்கு அவரது நூல்கள் சிறந்த வழிகாட்டியாய் அமைந்து உதவி வருகின்றன.
(தகவல் உதவி: பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை, சாகித்திய அகாதமி வெளியீடு)
பா.சு.ரமணன் |
|
|
|
|
|
|
|
|