CCC மாணவர்கள் குவித்த பரிசுகள் சிகாகோ முத்தமிழ் விழா அக்சஸ் பிரெய்லி: காயத்ரி சத்யா கச்சேரி ப்ரியா ஷங்கர் நடனம் சிகாகோவில் யோக சங்கீதம் ஹன்ட்ஸ்வில்லில் தமிழ்ப் புத்தாண்டு விழா சுனாமி நிதிக்காக அமிர்தானந்தமயி மைய இசை நிகழ்ச்சி நிவேதா சந்திரசேகர் சங்கீத அரங்கேற்றம் மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை இசை விழா செயிண்ட் லூயி நகரில் சூர்யா நடன விழா சாண்டியேகோ இசை, நாட்டிய விழா 2011 BATM சித்திரைக் கொண்டாட்டம் 2011
|
|
|
|
|
ஏப்ரல் 9, 2011 அன்று ஹூஸ்டன் மாநகர் ஜேசிசி (JCC) அரங்கில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 'சென்னை தாண்டி வருவாயா' என்ற நாடகம் சிறப்பாக நடைபெற்றது. 'பாரதி கலைமன்றம்' ஆதரவில், டாக்டர் சாரநாதன் அவர்களின் மீனாட்சி தியேட்டர்ஸ் இந்த நாடகத்தை அரங்கேற்றியது. சாரநாதன் இயக்கி, சந்திரமௌலியின் கதையாக்கத்தில் மேடையேறும் மீனாட்சி தியேட்டர்ஸின் வெள்ளி விழா நாடகமாகும்
இப்படித்தான் வாழவேண்டும் என்ற கோட்பாடுகளை உடைய 'பிரின்சிபிள்' பரமேஸ்வரனாக சாரநாதனும், வாழ்க்கை வாழ்வதற்கே என்று கட்டுப்பாடுகளை வெறுக்கும் மகனாக விஸ்வநாதனும் பாத்திரம் உணர்ந்து நடித்தார்கள். சென்னை மட்டுமே உலகமாக இந்திய நெறிகளோடு வாழும் தந்தை, Land of opportunities ஆக விளங்கும் அமெரிக்காவுக்கு மகன் செல்ல நினைப்பதைத் தடுக்கத் துடிக்கும் துடிப்பும், தன்னை மீறிச் சென்ற மகனை வெறுக்க முடியாமல் அவனைக் காண அமெரிக்கா சென்றாலும், அந்த அன்னிய தேச வாழ்க்கையில் மகனோடு ஒத்து வாழ முடியாமல் தவித்து, பின் தன் உயிர் காக்க பாடுபட்ட அனைவரையும் அவரவர் நிலைப்பாட்டில் புரிந்து கொள்வதிலும், சாரநாதனின் பாத்திரத்தோடு ஒன்றிய பண்பட்ட நடிப்பை மிகச்சிறப்பு என்னும் ஒற்றைச் சொல்லில் அடக்க முடியாது. தந்தையையும் அவர் கொள்கைகளையும் விட்டுக் கொடுக்க முடியாமல் தவித்து, பின் வாழ்க்கையின் இனிமைகளை இழக்க மனமில்லாமல் அமெரிக்கா சென்று தந்தையின் மனதை மாற்ற நினைத்து முடியாமல் ஏமாந்து, அவர் உயிருக்குப் போராடும் வேளையில் கோபத்தில் வெடித்து, பின் தவித்து உருகும் மகனாக விஸ்வநாதனின் நடிப்பும் சற்றும் குறைந்ததல்ல. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தில் இருவருக்கும் பாலமாகத் திகழும் மனைவியாக நடித்த லலிதா பாலாவின் நடிப்பு, இதயம் தொட்ட நடிப்பு. இரு நாடுகளில் வாழும்போது இந்தியப் பெண்களுக்கு ஏற்படும் கலாசார மாற்றங்களை நுட்பமாக வெளிப்படுத்தி, நிறைமாத கர்ப்பிணியாக மாமனாரின் உயிர் காக்கப் போராடும் மருமகளாக வந்த பிரியா சந்துருவின் நடிப்பு மாலை நேர வசந்தம்.
பரமேஸ்வரனின் அக்காளாக வந்த பத்மா அனந்தாவின் நடிப்பில் 37 வருட நாடக அனுபவத்தைக் காணமுடிந்தது. தத்துப் பிள்ளை கோபி, மாற்றம் விரும்பும் மாமனார் மகாலிங்கம், நாட்டுக்கு நாடு நிறம் மாறும் ஜானி, கலக்கல் நாயர், வயிற்றெறிச்சல் வைத்தி, புதுப்பேட்டை நக்கல் டில்லி, கூலான டாக்டர் கோபால் எனக் கலகலப்புக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமே இல்லை. இப்பாத்திரங்களை ஏற்று நடித்த மணி, ரவி சேஷாத்ரி, வெங்கி, அருண், முரளி, குமார், தூப்பில் நரஸிம்மன் ஆகியோர் தத்தம் பாத்திரத்தின் கனம் அறிந்து இயல்பாக நடித்தது அருமை. |
|
சந்திரமௌலியின் கதையாக்கம் மிகச் சிறப்பு. இந்த நாடகத்தின் சிறப்பே இரு நாடுகளின் கலாச்சாரச் சிறப்புகளையும் கவனத்தோடு இணைத்ததும், இத்தகைய சம்பவங்கள் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் எப்போதேனும் கடந்து சென்ற உணர்வோடு, உறவுகள் விலங்காகக் கூடாது என்பதையும் மிக ஆணித்தரமாக வலியுறுத்தியதே ஆகும். மிகச் சிறந்த இசை, ஒளியமைப்பு, காட்சியமைப்பு போன்றவை இந்த நாடகத்தின் தரத்தை வேறு தளத்துக்கு கொண்டு சென்றது. உணர்வை உருக்கும் டைடில் பாடலை உருவாக்கிய வெங்கி, தாரா, புதுவை நம்பிக்குப் பாராட்டுக்கள்.
நாடகத்தின் இறுதியில் சாரநாதன் அவர்களுக்கு பாரதி கலை மன்றம் சார்பில் 'நாடகச் செம்மல்' பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கே. பாலச்சந்தர், சுகி சிவம், டி.வி.வரதராஜன், AVM. சரவணன், சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா, ஒய்.ஜி.மகேந்திரா, டெல்லி கணேஷ், மோகன்ராம், வேணு அரவிந்த், அபிஷேக் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்த்துக்களும் சாரநாதனுக்கும், அவர் குழுவினருக்கும் கிடைக்கப்பெற்றன.
விஜயா ராமச்சந்திரன், ஹூஸ்டன் |
|
|
More
CCC மாணவர்கள் குவித்த பரிசுகள் சிகாகோ முத்தமிழ் விழா அக்சஸ் பிரெய்லி: காயத்ரி சத்யா கச்சேரி ப்ரியா ஷங்கர் நடனம் சிகாகோவில் யோக சங்கீதம் ஹன்ட்ஸ்வில்லில் தமிழ்ப் புத்தாண்டு விழா சுனாமி நிதிக்காக அமிர்தானந்தமயி மைய இசை நிகழ்ச்சி நிவேதா சந்திரசேகர் சங்கீத அரங்கேற்றம் மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை இசை விழா செயிண்ட் லூயி நகரில் சூர்யா நடன விழா சாண்டியேகோ இசை, நாட்டிய விழா 2011 BATM சித்திரைக் கொண்டாட்டம் 2011
|
|
|
|
|
|
|