Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
ஹரிமொழி
பேராசிரியர் நினைவுகள்: இடை விலகலாமா?
- ஹரி கிருஷ்ணன்|ஏப்ரல் 2011|
Share:
பேராசிரியரைப் பற்றிய இந்தத் தொடரில் நான் அவருடைய 'சுபமங்களா' சொற்பொழிவுத் தொடரை எந்தத் துணிவில் தொடங்கினேன் என்பது தெரியாது. சொல்லப் போனால், தொடக்கத்தில் சற்றுத் தயக்கமாகவும், பயமாகவும் கூட இருந்தது. காரணம், ஆசிரியர் நிகழ்த்திய நூற்றுக் கணக்கான-ஆயிரக் கணக்கான என்றும் சொல்லலாம்-சொற்பொழிவுகளில் 'சுபமங்களா' சொற்பொழிவுத் தொடர் மிக முக்கியமானது. பாரதி ஆய்வியலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்; ஆனால் எழுத்து வடிவில் பதிவுபெற்று, என்றென்றும் நிலைத்துநிற்க வேண்டிய அது, வெறும் ஒலிவடிவாகி, ஒரே ஒருமுறை பேசப்பட்டு, காற்றில் கரைந்து போய்விட்டது. சமகாலத் தலைமுறையினருக்கும் வருங்காலத்தவருக்கும் பாரதியின் கவிதைகளை 'எளிய பாடல்கள்' என்ற லேபில் ஒட்டி, அவற்றின் கனமான, ஆழமான, கூர்மையான தன்மைகளைக் காண இயலாமல் செய்துவிட்டார்கள் என்ற வருத்தம் ஆசிரியருக்கும் உண்டு. அவரைச் சுற்றி நின்ற, அவரிடம் பயின்ற எங்களுக்கும் உண்டு.

'எளிய பாடல்கள் என்ற எண்ணம் மனத்தில் ஆழப் பதிந்துவிட்ட காரணத்தால், 'அதான் புரிஞ்சாச்சே... அதுக்கு மேல என்ன யோசிக்க வேண்டிக் கெடக்கு' என்ற தோரணையுடன், பாரதி பாடல்களை வாசிப்பவர்களுடைய அணுகுமுறையில் ஓரளவுக்கு அலட்சியமும் புகுந்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. இதைத்தான் நான் தென்றலில் எழுதத் தொடங்கிய நாள்முதலாகத் திரும்பத் திரும்பப் பற்பல முறை எடுத்துக்காட்டுகளோடு விளக்கியிருக்கிறேன். ரௌத்திரம் பழகு என்ற கட்டுரை தொடங்கி, அண்மையில் வெளிவந்த கதலி முதல் காணி வரை என்ற கட்டுரைவரை, நெடுகிலும் 'எளிய பாடல்கள் என்ற காரணத்தால், அவற்றில் ததும்பும் ஆவேசத்தையும், உணர்ச்சிக் கலவையையும், உள்ளத்தின் அடியாழத்தில் அந்தச் சொற்கள் எற்படுத்துடுத்தும் அதிர்வுகளையும் மட்டும் அனுபவித்துவிட்டு, 'உள்ளத்தால் உணரப்படுவதே' கவிதை என்ற போர்வைக்கு அடியில் பதுங்கிக் கொண்டு, அங்கே அறிவுக்கான பங்கு தொடர்ந்து மறுதலிக்கப்பட்டு வந்துகொண்டிருக்கிறது என்ற கருத்தை, ஆசிரியரிடமிருந்து பெற்ற பயிற்சியின் அடிப்படையில் மேலும் விரிக்கும் செயலைச் செய்யத் தொடங்கினேன்.

நான் மேலே சொன்னபடி, பாரதி ஆய்வியலில் பேராசிரியருடைய சுபமங்களா சொற்பொழிவுத் தொடர் மிக முக்கியமான ஒரு மைல்கல். பாரதியை அணுகுவது எப்படி, அவன் எழுத்துகளை எந்தக் கோணத்தில், எந்த விதத்தில் பார்க்கவேண்டும்; அவன் ஆண்டிருக்கும் ஒவ்வொரு சொல்லையும் பொருள் உணர்ந்து, உணர்ந்த பிறகே சிந்திக்க வேண்டும்; சிந்தித்த பிறகே அதைப் புகழ்வதோ அல்லது நிந்திப்பதோ செய்யவேண்டும். பாரதிக்கு மட்டுமல்லாமல், சகலவிதமான கவிஞர்களுக்கும், எழுத்தாசிரியர்களுக்கும் பொருந்தி வரக்கூடிய அடிப்படை அணுகுமுறை இதுதான். ஆனால், தெரிந்தோ தெரியாமலோ, 'எளிய பாடல்கள், எளிய நடை' என்று பாரதியே பாஞ்சாலி சபத முன்னுரையில் குறிப்பிட்டுள்ள சொற்களின் அடிப்படையில் அவற்றை அணுகுவதால் உள்ள இழப்பு பலருக்குப் புரிவதில்லை.

தற்கால பாரதி வாசகன், பாரதியின் பாக்களை மனத்தால் அனுபவிக்கிறான்; ருசிக்கிறான். 'நிலவு ஊறித் ததும்பும் விழிகளும்' என்று கண்ணம்மாவை பாரதி குறிப்பிட்டதைப் போல, 'உணர்வும் உணர்ச்சியும் ஊறித் ததும்பும் அந்தப் பாடல்கள், உள்ளத்தின் அடியாழத்தில் ஏற்படுத்துகிற அதிர்வுகளை மட்டுமே அனுபவிக்கிறோமே ஒழிய, ஒரு கம்பனைப் போல், ஒரு வள்ளுவனைப் போல் பாரதியைத் தீவிரமாக அணுகி, அவனுடைய கருத்துகளை எடுத்து நிறுத்துவதற்கும்; அவன் பார்வை இன்னதாகத்தான் இருந்தது என்று அறுதியிடுவதற்கும் அவசியமான அறிவுமுகப் பார்வையை பாரதி பாடல்கள் பெறவில்லை என்பது உண்மை. மீண்டுமொருமுறை சொல்வதானால், நான் இந்த உண்மையை, இந்தத் தொடரின் பற்பல சமயங்களில் எடுத்துக் காட்டியும் நிலைநிறுத்தியும் இருக்கிறேன்.

"எழுதுபவர்களில் இரண்டு வகை உண்டு. எழுதுபவர்களில் யாரைக் கேட்டாலும், 'அது தன்னால் இயற்றப்பட்ட ஒன்றன்று; அதுவாகக் கிளைப்பது' என்ற கருத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். நாத்திகவாதத்தில் (அதாவது, நாம் வழக்கமாகக் காணும் போலி, பகட்டு நாத்திகமில்லாமல், உண்மையான, தெளிவான நாத்திகப் பார்வையைக் குறிப்பிடுகிறேன்.) ஊறியவனான ஷெல்லி உட்பட இந்த விதிக்கு யாரும் விலக்கு அல்லர். 'தன்னை மீறிய ஒரு சக்தி, தன்னை இயக்குவதாலேயே இவை வெளிப்படுகின்றன' என்று ஷெல்லியும் சொல்லியிருக்கிறான்."
எழுதுபவர்களில் இரண்டு வகை உண்டு. எழுதுபவர்களில் யாரைக் கேட்டாலும், 'அது தன்னால் இயற்றப்பட்ட ஒன்றன்று; அதுவாகக் கிளைப்பது' என்ற கருத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். நாத்திகவாதத்தில் (அதாவது, நாம் வழக்கமாகக் காணும் போலி, பகட்டு நாத்திகமில்லாமல், உண்மையான, தெளிவான நாத்திகப் பார்வையைக் குறிப்பிடுகிறேன்.) ஊறியவனான ஷெல்லி உட்பட இந்த விதிக்கு யாரும் விலக்கு அல்லர். 'தன்னை மீறிய ஒரு சக்தி, தன்னை இயக்குவதாலேயே இவை வெளிப்படுகின்றன' என்று ஷெல்லியும் சொல்லியிருக்கிறான். அப்படி, எழுதுபவர்கள் எல்லோருக்கும் இத்தகைய ஒரு பாவனை இயல்பான ஒன்று. அதுவே இன்னொரு அபாயத்தையும் உண்டுபண்ணிவிட்டது. கவிதானுபவம் பற்றி (கவிதை எழும் கணங்களைப் பற்றி) இந்தத் தொடரில் அலசியிருக்கிறோம். கம்பனுடைய ஒரு பாடலை, பத்துப் பன்னிரண்டு தவணைகளில் அலசினோம். அத்தகைய கவிதானுபவம் பெறாமல், தான் அப்படியொரு அனுபவத்தைப் பெற்றதாக எண்ணிக்கொண்டு, அந்த பாவனையில் சொற்களைக் கொதகொதவென்று கொட்டும் கவிஞர்கள் உண்டு.

நன்கு பயிற்சிபெற்ற, அனுபவம் வாய்ந்த வாசகன், இரண்டே இரண்டு அடிகளில், 'இது போலி' என்பதைத் தீர்மானித்துவிடுவான்; இருந்தாலும், 'இன்னும் என்ன வருகிறது என்பதையும் பார்ப்போம்; நம் தீர்மானம் சரியானதுதானா, அல்லது தற்செயலான ஒன்றா' என்ற முடிவுக்கு வருவதை, தேர்ந்த வாசகன் ஒத்திப் போடுவான். தொடர்ந்து ஒரு எழுத்தனைப் பார்த்து, அவனுடைய பற்பல வெளிப்பாடுகளைத் தொடர்ந்து ஊன்றிக் கவனித்த பிறகே 'இது அசல்; இது நகல்' என்ற தரக்கட்டுப்பாட்டுக்குள் அந்த எழுத்தைக் கொண்டுவர முனைவான். இருந்தபோதிலும் எந்த முடிவும் (இந்தத் துறையைச் சார்ந்த அளவில் மட்டும்) முடிவான முடிவு என்று சொல்வதற்கே இல்லை. போலி என்று கருதப்படுகின்ற ஓர் எழுத்தனிடமிருந்து, தற்செயலாகவோ, அல்லது, ஒரு கட்டத்துக்குப் பின் எழுதி எழுதி முதிர்ந்த பிறகோ, நல்ல, உள்ளத்தால் உணர்ந்து செய்யப்பட்ட படைப்புகள் தோன்றுவதுண்டு; நல்ல முதிர்ந்த எழுத்தாளர்கள் ஒரு கட்டத்துக்குப் பிறகு நீர்த்துப் போவதும் உண்டு.
எனவே, எழுதுபவர்களில் ஒருவகையினர், எழுதத் தொடங்கிய கணத்திலிருந்து, 'எழுதத் தொடங்கும் விதியின் கை, எழுதி எழுதி மேற்செல்லும்' என்று உமர்கயாமை கவிமணியவர்கள் மொழிபெயர்த்ததைப்போல், 'என்ன எழுதுகிறோம்; நாம் எழுதிய முதல் அடிக்கும் அடுத்த அடிக்கும் பொருத்தமும் தொடர்பும், இடையறாமையும் இருக்கின்றனவா' என்பதில் கவனத்தைச் செலுத்தாமல் கைபோன போக்கில் எழுதித் தள்ளிவிடுவார்கள். அண்மைக் காலமாக இத்தகைய போக்கு அதிகரித்து வருவது கண்கூடு. எழுதிய பிறகு, 'இதன் பொருள் என்ன' என்று கேட்டால், விமரிசகர்கள் துணைக்கு வந்துவிடுவார்கள். 'தட்டையான ஒருமுக அனுபவமில்லை இது. இதற்குப் பெயர் பன்முக வாசிப்பனுபவம்' என்று அதற்கு இன்னொரு லேபல் தயாரித்துக் கொடுத்துவிடுவார்கள்.

தன் கருத்து இன்னது; தான் சொல்லப்போவது இது; தான் வெளிப்படுத்தும் எழுத்து வடிவம், தான் சொல்ல வந்த கருத்து வடிவத்தைப் பிரதிபலித்தே ஆகவேண்டும்' என்ற கூர்மையான நோக்கோடு எழுதுபவர்கள் இன்னொரு வகை. பாரதி, இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவன். இதைத்தான் பேராசிரியர் தன்னுடைய ஒவ்வொரு சொற்பொழிவிலும் வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

இப்படிப்பட்டவரின் சொற்பொழிவை, எழுத்தில் கொண்டுவருகிறோம்; அதுவும் பாரதி ஆய்வியலில் முக்கியமான மைல்கல் என்று போற்றப்பட்ட சொற்பொழிவைப் பதியப் போகிறோம். ஆனால், இந்தச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டு இருபது-இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. எஞ்சியிருப்பதெல்லாம் என்னைப் போன்றவர்களின் உள்ளங்களில் பதிந்துகிடக்கும் எச்சங்களும் மிச்சங்களுமே. ஆகவே, நம் நினைவில் பிறழ்ச்சி ஏதும் ஏற்பட்டு, தவறான சில குறிப்புகளைப் பதிந்துவிடுவது நேர்மைக்குப் புறம்பானது மட்டுமல்லாமல், வாசகனைத் தவறான பாதையில் இட்டுச்செல்வதுமாக ஆகுமே என்ற எண்ணமே என்னுடைய தொடக்க நிலைத் தயக்கத்துக்குக் காரணமாக இருந்தது. அப்படியொரு பிழையும் சென்ற தவணையில் ஏற்பட்டுவிட்டது. 'ஆன்ற தமிழ்ப்புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாகச் சற்றே விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறீரோ' என்பது, தமிழ்ப் பண்டிதர்களை நோக்கி பாரதி செய்த நையாண்டி என்பது பேராசிரியருடைய நேரடிக் கருத்தன்று. அந்தக் கருத்தை முதலில் முன்வைத்தவர் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் (அசீரா, நாணல் என்ற புனைபெயரிலும் எழுதியவர்). 'இது ஒரு நையாண்டியே. இதைப்பற்றி நாம் ஏதும் விரிக்கத் தேவையே இல்லை. கவிதை நன்றாக இருக்கிறது. அதை மட்டும் அனுபவித்தால் போதும்' என்ற பொருள்பட அசீரா செய்திருக்கும் ஆய்வுக் கட்டுரையை (ஆய்வே தேவையில்லை என்பதற்கும் ஆய்வுக் கட்டுரைதானே தேவைப்படுகிறது!) பேராசிரியர் மேற்கோள் காட்டினார். அவருடைய கருத்தன்று இது.

இந்த முயற்சியில் என்னை இன்னும் ஆழமாக ஈடுபடுத்தவேண்டும் என்று தெய்வம் கருதியதோ என்னவோ, தெரியாது. சென்ற தவணை அச்சானபின், வலைப்பக்கத்தில் வெளிவந்தபின், அந்தத் தவணையை வாசித்த பேராசிரியரின் மனைவி திருமதி சரஸ்வதி வேணுகோபாலன் அவர்கள், ஆஸ்திரேலியாவிலிருந்து அந்தத் தொடர் சொற்பொழிவை ஒலிநாடாக்களாக, இவ்வளவு ஆண்டுகாலம், மீண்டும் மீண்டும் பதிந்து, அவர் போற்றிப் பாதுகாத்துவரும் இந்தப் பேழைகளை, பொக்கிஷத்தை எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். முதல் சொற்பொழிவின் பதிவு கிடைக்கவில்லை. தொலைந்தது ஓர் ஒலிப்பேழை என்பதால் முதல் சொற்பொழிவும், இரண்டாம் சொற்பொழிவின் ஒரு பகுதியும் கிடைக்காமல் போய்விட்டன. மற்ற நான்கு சொற்பொழிவுகளும் (விவாத நேரம் தவிர்த்து) முழுவடிவில் என் கைக்கு வந்திருக்கின்றன. டிஜிடைஸ் செய்து, கூடிய விரைவில் வலையேற்றுவேன்.

அதற்கு முன்னால் அந்தச் சொற்பொழிவைப் பற்றிச் சில வார்த்தைகள். தமிழ்நாட்டில் இல்லையென்றாலும், சென்னை நகரத்தில், இலக்கிய வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிய, வெளிப்படையான, திறந்த சொற்பொழிவு. பிடித்த துலாக்கோலை இம்மி பிசகாமல், தயவு தாட்சணியம் காட்டாமல், உண்மை ஒன்றையே நாடுபவர் என்ற காரணத்தால், பேராசிரியர் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். அவருடைய ஆய்வு நோக்கில், அவருடைய ஆசான் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம் அவர்களே தப்பவில்லை. தமிழிலக்கிய உலகில் கடந்த நூற்றாண்டு காலத்துக்குள், திறம்படச் செய்யப்பட்டு, சொன்னவர்கள் பெரிய பெயர்பெற்றவர்கள் என்ற ஒரே காரணத்தால் சிலப்பதிகாரம் உள்ளிட்ட பற்பல இலக்கியங்களில், மு.வ., தெ.பொ.மீ. உள்ளிட்ட அறிஞர்கள் தெரிந்தே செய்திருக்கும் உரைமாற்றங்களால், இவற்றின் குவிமையம் எவ்வளவு தூரத்துக்கு விலகிப் போகின்றன என்பதையெல்லாம் அரங்கிலே துணிந்து சொல்லி, அதன் விளைவாக அடுத்தடுத்த அரங்கங்களில் அவருடைய பேச்சுக்கிடையில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களையும் அவற்றை அவர் எதிர்கொண்ட விதங்களையும், இந்த ஒலிப்பதிவுகளை வலையகத்தில் ஏற்றியதும் அவர் வாய்மொழியாகவே கேட்கலாம்.

கற்பனையும் வர்ணனையும் காட்டிக் கதைவளர்க்கும்
விற்பனர்தம் செய்கை விதமுந் தெரிகிலன்யான்.

என்று குயில் பாட்டில் பாரதி ஓரிடத்தில் சொல்கிறான். இடைப்பிறவரல் (சொல்லவரும் மையக் கருத்துக்கு இடையே, பிற செய்திகள் வருதல்) செய்பவன் நானில்லை என்று பாரதி அறிவித்த இந்தக் குற்றத்தை, தேவையும் அவசியமும் கருதி நான் இந்தத் தவணையில் செய்யவேண்டியதாகி விட்டது. இப்போது, 'குயில் பாட்டு' சொற்பொழிவுத் தொடரின் (அல்லது சுபமங்களா சொற்பொழிவுத் தொடரின்) மூலத்துக்கும், சாரத்துக்கும் திரும்புகின்றேன்.

ஹரி கிருஷ்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline