|
|
|
|
அன்புள்ள சிநேகிதியே,
தென்றல் மார்ச் இதழில் எழுதியிருந்த அந்த அம்மாளின் நிலைமையைப் பார்த்து மனது நெகிழ்ந்து போய்விட்டது. கடவுள் புண்ணியத்தில் எங்களுக்கு நான்கு குழந்தைகள். மூன்று பையன், ஒரு பெண். எல்லோரும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். இரண்டு பேர் அமெரிக்கா. ஒருத்தன் கனடா. பெண் மிடில்-ஈஸ்ட். என் கணவர் பணி ஓய்வு பெற்று எட்டு வருடம் ஆகிறது. வடக்கில்தான் பெரும்பாலும் இருந்தோம். குழந்தைகள் சிறு வயதாக இருந்தபோது சென்னை, திருச்சி என்று இரண்டு வருடத்துக்கு ஒருமுறை போய்விட்டு வருவோம், அப்பா, அம்மா என்று மற்ற உறவுகளைப் பார்க்க. இப்போது சொல்லிக் கொள்வது போல யாரும் இல்லை. ரிடையர் ஆகி சென்னையில் ஒரு வருடம் இருந்து பார்த்தோம். நெருங்கியவர்கள் யாரும் பக்கத்தில் இல்லாததால் கொஞ்சம் போரடித்தது. ஆகவே, நான்கு குழந்தைகளுடன் மூன்று மூன்று மாதமாகப் பிரித்துப் போய்விட்டு வந்து கொண்டிருக்கிறோம். இரண்டு வருடமாக இதுவும் சரிப்பட்டு வருவதில்லை. எங்களுக்கும் முன்னைப் போல் இழுத்துப் போட்டுக்கொண்டு வேலைசெய்ய முடிவதில்லை. பசங்களுடன் 'Vacation' போக முடிவதில்லை. அவர்களுக்கு உபத்திரமாகப் போய்விட்டு வருகிறோம் என்று ஒரு நினைப்பு. அவர்களுக்கு முன்பு போல உதவியாக இருக்க முடிவதில்லை. அதைத் தவிர்த்து, எங்கேயும் ஒரு நிலை இல்லாத வாழ்க்கை. மூன்று மாதம் சுருக்கமாகப் போய்விடுகிறது. மூட்டை கட்டுவது, பிரிப்பது என்று நாடோடி போல வாழ்வதாகத் தோன்றுகிறது.
அதுவும் இந்தத் தடவை இந்த மன உளைச்சல் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. பசங்கள் எங்கள் விசிட்டுக்கு ஏற்பத் தங்கள் விடுமுறைப் பயணத்தை அட்ஜஸ்ட் செய்துகொண்டு, நாங்கள் கிளம்பிப் போன பிறகு வேண்டிய இடத்திற்குப் போய் வருகிறார்கள். போனமுறை என் பையன் உல்லாசக் கப்பலில் (Cruise) போகப் பணம் கட்டி, தன் குடும்பத்துடன் போகத் திட்டம் போட்டிருந்தான். நாங்கள் இரண்டு தினத்தில் பெண் இருக்கும் இடத்திற்குக் கிளம்பிப் போவதாக இருந்தது. ஆனால், திடீரென்று செய்தி வந்தது, அவள் மாமியார் உடல்நிலை 'சீரியஸ்' ஆகி அவளும், மாப்பிள்ளையும் இந்தியா கிளம்ப வேண்டியிருந்தது. இரண்டு நாளில் எங்கள் டிக்கெட்டைக் கேன்சல் செய்து இன்னொரு பையன் வீட்டிற்குப் போக (அவன் எங்கோ பிஸினஸ் டூர் போயிருந்தான் அப்போது) நிறைய செலவு செய்து டிக்கெட் வாங்கி... மிகவும் மனசு கஷ்டமாக இருந்தது. வயதாகி விட்டால் பிறருக்கு எவ்வளவு பாரமாகப் போய்விடுகிறோம்? எதிர்காலத்தை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.
அந்த அம்மாவுக்கும் மனது எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். இந்தியாவில் எங்கேயாவது சீனியர் சிடிசன்ஸ் ஹோமில் போய்த் தங்கி விடலாமா என்று யோசிக்கிறோம். ஆனால், எல்லா பசங்களும் வெவ்வேறு திக்கில் இருக்க, நல்லது, கெட்டது என்றால், அவர்கள் உடனே வந்து பார்ப்பதோ இல்லை நாங்கள் போவதோ கூட முடியப் போவதில்லை. உங்கள் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படிக்கு
----------------- |
|
அன்புள்ள சிநேகிதியே,
| "வயதாகி விட்டது, சக்தி குறைந்துவிட்டது என்ற உணர்வு வந்து விட்டால் ஒன்று எல்லோருமே நமக்கு பந்தப்பட்டவர்கள் என்று நினைக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லோருமே அந்நியர்கள் என்று நினைக்க வேண்டும். எப்போது நம் குழந்தைகளுக்கே நாம் பாரமாக இருக்கிறோம் என்று நினைக்கிறோமோ அப்போதே நாம் அவர்களை அந்நியப்படுத்தி விடுகிறோம்." | |
நான் இந்தப் பகுதியில் முன்னர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன். வயது என்பது ஒரு 'State of Mind'. பார்க்கப் போனால் எந்த வயதில் நாம் இருந்தாலும், அந்த வயதுக்கேற்ற பிரச்சனைகளும், சவால்களும் இருந்துகொண்டேதான் இருக்கும். பணம், படிப்பு, தொழில் வாய்ப்புகள் என்று மனம் உளைச்சலோடுதான் இருக்கும். நம் படிப்பிற்கேற்ப, பண வசதிக்கேற்ப, குடும்பச் சூழ்நிலைக்கேற்ப நம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கிறோம். நமக்குப் பணவசதி குறைவாக இருந்தால் ஆடம்பரக் கார்களை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. வாகனம் முக்கியம். சீராக ஓடக் கூடிய ஒரு வண்டியைத்தான் முதலில் வாங்குவோம். அதேபோல எல்லா விஷயங்களிலும் அங்கே கொஞ்சம் குறைத்து, இங்கே கொஞ்சம் கூட்டி நமக்கு, முக்கியமாக அந்தக் காலக்கட்டத்தில் எது படுகிறதோ அதில்தான் நாம் கண்ணும் கருத்துமாக இருப்போம். வயது ஏற ஏற நம் priority-யும் மாறிக்கொண்டே இருக்கும். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் எல்லோருக்கும் ஐந்து அத்தியாவசியங்கள் எந்த வயதிலும் வேண்டியிருக்கிறது - பணம், நேரம், கல்வி, தொழில் முன்னேற்றம், குடும்ப, சமூக நல்லுறவு, உடல்நலம்/சக்தி. எல்லாம் ஒரே நிலையில் ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் இருக்குமே தவிர, மற்றச் சமயங்களில் இது ஒரு 'Constant Balancing Act'
இப்போது நமக்கு வயதாகி விட்டது. நான்கு இருக்கிறது. ஒன்று குறைந்து கொண்டே வருகிறது. உடல் நலம்/சக்தி. இதுதான் இயற்கை. அதற்கேற்ப நம் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. வயதாகி விட்டது, சக்தி குறைந்துவிட்டது என்ற உணர்வு வந்து விட்டால் ஒன்று எல்லோருமே நமக்கு பந்தப்பட்டவர்கள் என்று நினைக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லோருமே அந்நியர்கள் என்று நினைக்க வேண்டும். எப்போது நம் குழந்தைகளுக்கே நாம் பாரமாக இருக்கிறோம் என்று நினைக்கிறோமோ அப்போதே நாம் அவர்களை அந்நியப்படுத்தி விடுகிறோம். அந்நியர்களாக நினைக்கும்போது பாசம், பந்தம், உணர்ச்சிகளிலிருந்து விலகித் தனியராக இருந்து, இயற்கையுடன் இணையும் நேரத்திற்கு நம்மைத் தயார் செய்து கொள்வோம். (சொல்கிறேனே தவிர, இந்தப் பாரம், பாசம் உணர்விலிருந்து வெளிவருவது கடினம்தான்). இல்லை, நம் குழந்தைகள், இவர்களுக்காக நாம் தியாகம் செய்திருக்கிறோம், இப்போது அவர்கள் நமக்காகச் செய்கிறார்கள். இதுதான் நம்முடைய பாரம்பரியத்தின் தனி அடையாளம்; பெருமை. இவர்கள் வயதில் நாமும் மாமனார், மாமியார், அப்பா, அம்மா என்று நிறைய வாழ்க்கையை விட்டுக் கொடுத்திருக்கிறோம். குற்ற உணர்ச்சிக்கு என்ன இருக்கிறது? அந்தக் குழந்தைகள் உண்மையிலேயே சுட்டிக்காட்டினால், இருக்கவே இருக்கிறது, முதியோர் இல்லங்கள், அவரவர் வசதிக்கேற்ப. உலகமே பந்தம் என்று நினைக்கும்போது யார்மேலும் பாசம், அன்பு சுரக்கும். அந்த இல்லங்களிலும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். முன்புபோல 30 பேருக்குச் சமையல் செய்து போட முடியவில்லை; ஓடியாடி சின்னக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை; தோட்டவேலை செய்ய முடிவதில்லை; டென்னிஸ், கிரிக்கெட் ஆட முடிவதில்லை; கூர்மையான கண்கள் இல்லை; காது சரியாகக் கேட்பதில்லை; நடை தடுமாறுகிறது. (ஆண், பெண் இருவருக்குமேதான்) அதனால் என்ன, பாசத்துக்கும், பரிவுக்கும் வயதே இல்லை.
இதை எழுதும்போது, என் பாட்டியை (அப்பாவின் அம்மா) ஏன் நினைத்துக் கொள்கிறேன் என்று தெரியவில்லை. 92 வயதுவரை வாழ்ந்தார். நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து, பணக்காரருக்குத்தான் வாழ்க்கைப்பட்டார். அத்தனை சொத்தையும் அனுபவித்துத்தான் தீருவேன் என்று ஒரு ரூபாய்கூட மிச்சம் வைக்காமல் சென்றுவிட்டார் எங்கள் தாத்தா. அந்தப் பாட்டி-வாழ்க்கையில் மிகவும் அடிபட்டவர்; எந்தச் சுகமும் இல்லை. பணம் இல்லையென்றால் என்ன? பாசத்தால் எங்களைக் கட்டிப்போட்டார். இப்போது நினைத்தாலும் கண்கள் குளமாகிப் போகின்றன. ஒருமுறை இந்தியாவில், எங்கள் வீட்டில், கொஞ்சம் சரியில்லாமல் மாடியறையில் படுத்துக் கொண்டிருந்தேன். மிகவும் ஒல்லியான உடம்பு. கூன் போட்டு விட்டது. நடக்க முடியவில்லை. என்னைப் பார்க்க வேண்டும் என்ற துடிப்பில், தவழ்ந்து, தவழ்ந்து மாடிப்படி ஏறி வந்து, (ஒரு டம்ளரில் காபி வேறு) பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். இதுபோல எத்தனையோ சம்பவங்கள். வீட்டுக்கு யார் வந்தாலும் அப்படி ஒரு பரிவு அந்த வார்த்தைகளில் இருக்கும். உடம்பு ஒடுங்கி, படுத்த படுக்கையாக இருந்தபோது கூட, அந்தப் பாட்டியை யாரும் தனி ரூமில் போடவில்லை. மனிதர்கள் நடமாட்டம் இருக்க வேண்டும் என்று வீட்டில், டைனிங் ஹாலில்தான் பாட்டியின் கட்டில் இருந்தது. அவருடைய கடைசி மூச்சுவரை எல்லோரும் அவரை அருமையாகப் பார்த்துக் கொண்டார்கள், முக்கியமாக அவருடைய மருமகளும் (என்னுடைய அம்மா), அந்த மருமகளின் மருமகளும் (என்னுடைய சகோதரன் மனைவி) இதை எதற்கு எழுதுகிறேன் என்றால், பிறரைப் பரிவுடன் பார்க்கும்போது, நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி நாம் அதிகம் நினைப்பதில்லை. அப்போது பாரம் தெரிவதில்லை.
என்னுடைய கருத்துக்களை உங்கள் நிலைமைக்கு மட்டும் எழுதவில்லை. வயதின் சுமையை உணரும் எல்லோருக்கும் பொதுவாக எழுதுகிறேன். வியாதி, வலி, உறவின் பிரிவுகள் எல்லாம் அதிகமாகத்தான் போகும். நம் செயல்கள், சிந்தனைகள் எல்லாம் உடம்பின் மாறுபாட்டுக்கேற்ப மாற்றிக் கொள்ளும்போது, மனம் வாழும் கணத்தில் ஈடுபட்டு, எதிர்கால பயங்களை உதறித் தள்ளும்.
வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|
|