Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | பொது
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
வசீரும் வைரமும்
- வாண்டுமாமா|ஜனவரி 2011|
Share:
பாக்தாத் நகர் விழாக் கோலம் பூண்டிருந்தது. காலிப் அரூன் அல்பாஷாவுக்கு வாராந்திரப் பிறந்த நாள் விழா! 'வாராந்திரப் பிறந்த நாளா? பிறந்த நாள் ஆண்டுக்கு ஒருமுறை தானே வரும்!' என்கிறீர்களா? காலிப் அரூன் அல்பாஷாவின் போக்கே தனி! அவருக்கு விருந்து என்றால் ரொம்பப் பிடிக்கும். அதனால், தான் பிறந்த வெள்ளிக்கிழமையை - அதுதான் வாராவாரம் வருமே - வாரா வாரம் பிறந்த நாளாகக் கொண்டாடி விருந்துக்கு வழி பண்ணிவிட்டார். காலிப்புக்குப் பிறந்த நாள் கொண்டாட்டமானால் மக்கள் சும்மா இருக்க முடியுமா? கேளிக்கைதான்; விருந்துதான்; கொண்டாட்டம்தான்.

ஆனால் வஸீர் இஸ்பகான் மட்டும் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல் தன் அடியாள் ஷேக் ஆஸாப்புடன் பாக்தாத் பஜாரில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தார். 'காலிப்பை ஒழித்துக் கட்டிவிட்டு நானே காலிப் ஆகணும்... அது எப்படி...?' என்று முணுமுணுத்தபடி முன்னேறிக் கொண்டிருந்தார். அப்போது - "ஐயா, தரும துரைகளே! இந்த ஏழையிடம் இரக்கங் காட்டுங்கள்!' என்ற பரிதாபமான குரல் கணீர் என்று ஒலித்துக் கொண்டிருந்தது விடாமல்.

காலிப் ஆக வேண்டுமென்ற ஆத்திரத்திலிருந்த வஸீரின் காதுகளில் இந்த ஓலம் விழுந்ததும் துள்ளிக் குதித்தார் "பிச்சைக்காரனின் குரலல்லவா? நான்தான் பிச்சைக்காரர்களையெல்லாம் நாடு கடத்தும்படி உத்தரவிட்டேனே? தருமம் செய்யக்கூடாது. தடியர்களை உருவாக்கக் கூடாதென்று ஆணையிட்டதை யாரும் செயல்படுத்தவில்லையா?"

அப்போது அவ்வழியே சென்ற பாக்தாத்தின் கௌரவமிக்க பிரஜை ஒருவர் "வஸீர் அவர்களே! உங்கள் ஆணையை யாரும் புறக்கணிக்கவில்லை. நீங்கள் கேட்பது சாதாரண பிச்சைக்காரனின் குரலல்ல. அவன் தன்னிடமிருந்து தானம் வாங்கிக் கொள்ளும்படிதான் கெஞ்சுகிறான். கொடுக்கும்படிக் கேட்கவில்லை!" என்றார்.

"பிச்சைக்காரன் கொடுக்கிறானா, பிறருக்கு?" விழிகள் வெளியேவந்து விழும்படி விழித்தார் வஸீர்.

"ஆமாம். விலைமதிப்பற்ற ஒரு வைரக்கல்லை வாங்கிக்கொள்ளும்படிக் கெஞ்சுகிறான் அவன்!"

"ஐயா, கருணை காட்டுங்களய்யா. இந்த ஏழையிடம்"

"உனக்கு வேற வேலை கிடையாது. அந்த வைரம் யாருக்கு வேணும்? விளையாடாதே, எழுந்து போ!" என்ற பாக்தாத் குடிமகன் ஒருவனின் கிண்டலான குரலும் தொடர்ந்தது.

வஸீர் இஸ்பகான் திக்குமுக்காடிப் போனார். "விலை மதிப்புள்ள ஒரு வைரத்தை பிச்சைக்காரன் வாங்கிக் கொள்ளும்படி ஊராரைக் கெஞ்சுகிறான். ஆனால், யாரும் அதை விரும்பவில்லை. ஆச்சரியமாக இருக்கே!"

"வஸீர் அவர்களே! அந்த வைரம் துரதிர்ஷ்டமானது. அதனால்தான்" என்று விளக்கிவிட்டுத் தன் வழி போனார் பாக்தாத் நகரப் பிரபு.

வஸீர் இஸ்பகானின் மூளையில் ஒரு மின்வெட்டு--"பாக்தாத் நகரின் காலிப் ஆன அரூன் அல்பாஷாவுக்கு அருமையான அன்பளிப்பு! சப்...ப்..பாஷ்!" என்று சப்புக் கொட்டியபடி அந்தப் பிச்சைக்காரனை நோக்கி ஓடினார் வஸீர்.

ஷேக் ஆஸாப் "எஜமானே! வேண்டாம். அந்த துரதிர்ஷ்டம் பிடித்த வைரத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள்!" என்று கத்தியபடி பின்னால் ஓடி வந்தான்.

"இந்த அழகான - அற்புதமான வைரத்தை யார் வாங்கிக் கொள்ளுகிறீர்கள்?' பரிதாபமாகக் கொஞ்சும் பிச்சைக்காரனின் முன் போய் நின்றார் இஸ்பகான்.

"இந்த வைரம் துரதிர்ஷ்டமுடையதாமே, எப்படி?" என்று கேட்டார் வஸீர்.

அந்த பரிதாபத்துக்குரிய பிச்சைக்காரன் கூறினான் "கொஞ்ச நாள் முன்பு நான் பெரும் செல்வந்தனாக இருந்தேன். என் அரண்மனை தங்கம், வெள்ளி, தந்த, நவரத்னங்களால் இழைக்கப்பட்டிருந்தது. நான் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். ஒருநாள் நான் ஒரு தவறு செய்தேன். ஒரு ஏழைக்கு உணவளிக்க மறுத்தேன். 'நிறைய தான தருமம் செய்தாகி விட்டது போ போ!' என்று விரட்டினேன் அந்த ஏழையை. அவன் ஒரு பெரிய மந்திரவாதி என்பது எனக்கு அப்போது தெரியாது. ' சுயநலக்கார லோபியே ! நீ எனக்கு எதுவும் தர வேண்டாம். இந்த இந்த வைரத்தை நான் தருகிறேன். பேராசைக்காரனே இதை நீ வாங்கிக் கொள்!' என்று சொல்லி என்னிடம் ஒரு பெரிய பளபளக்கும் வைரக்கல்லை நீட்டினான். நான் அலட்சியமாக அவனிடமிருந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டேன். பெரிய தர்மகர்த்தா, வைரத்தைத் தானம் செய்கிறார்! என்று கேலியும் பேசினேன். ஆனால் பிச்சைக்காரனைப் போலிருந்த அந்த மந்திரவாதி, " உன் சிரிப்பு சீக்கிரமே அழுகையாகும். இந்த வைரம் உனக்கு துரதிர்ஷ்டத்தைத் தரும்" என்று கூறிப் போய்விட்டான். நான் கடகடவென்று சிரித்தேன். இதுபோன்ற விஷயங்களிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. "அசட்டுப் பயல். அசலான வைரத்தை இனாமாகக் கொடுத்துவிட்டுப் போகிறான்" என்று மகிழ்ந்தேன்.

ஆனால்-

மறுநாள் காலை என் அரண்மனை எரிந்து தரைமட்டமாகியது. என் மனைவிகளும் குழந்தைகளும் பணியாட்களும் என் செல்வத்தையெல்லாம் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டனர். நான் தன்னந்தனியாக இந்தக் கெட்ட வைரத்துடன் இப்படி எல்லாரிடமும் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன் - இதை வாங்கிக் கொள்ளும்படி.." தன் கதையைக் கூறினான் பணக்காரனாக இருந்த பிச்சைக்காரன்.

வஸீர் சிரியோ சிரி என்று சிரித்தார். ஆஸாபைப் பிடித்துக் கொண்டு வயிறு வலிக்கச் சிரித்தார்.

"இந்த வைரத்தை யாராவது என்னிடமிருந்து வாங்கிக் கொண்டால்தான் என் துரதிர்ஷ்டம் என்னை விட்டுப் போகும்" என்றான் அந்த அப்பாவி, பளபளக்கும் வைரத்தை வஸீரின் முன்னால் நீட்டியபடியே.

"நீ இதைத் தூர வீசி எறிந்தால் என்ன?"

"முடியாதே! அந்த மந்திரவாதி பொல்லாதவன். அப்படி நான் இந்த வைரத்தைத் தூர எறிந்தால் என் துரதிர்ஷ்டம் எப்போதுமே என்னுடனிருக்குமாம். யாருக்காவது கொடுத்தால்தான் என் துரதிர்ஷ்டம் என்னை விட்டுப் போகுமாம். ஐயா, புண்ணியவானே! இதை வாங்கிக்கொண்டு போய் குழந்தைகளுக்கு விளையாடக் கொடுங்கள். மறுக்காதீர்கள். இந்த வைரத்தோடு இரண்டு தங்க மொகராக்களையும் தருகிறேன். ஏற்றுக்கொண்டு இந்த ஏழைக்கு வாழ்வளியுங்கள்!" கெஞ்சினான் அவன்.

"சரி வாங்கிக்கொள்கிறேன்" என்றார் வஸீர்.

"நிஜமாகவா, நான் கனவு எதுவும் காணவில்லையே!" என்று சொல்லி தன்னை பல்லால் ஆழக் கடித்துப் பார்த்துக் கொண்டான் அவன்.

"எஜமானே, வாங்காதீர்கள். வைரத்தை!" என்று கத்தினான் ஷேக் ஆஸாப்.
"இரண்டு மொகராக்களை என்னிடம் கொடு. வைரத்தை என் பாதுகாப்பாளன் ஆஸாப்பிடம் கொடு" என்றார் வஸீர். கைகள் நடுங்க, முகம் மலர அவர் சொன்னபடியே செய்துவிட்டு, "தப்பினேன்... தப்பினேன்... பிழைத்தேன்!" என்று கூறியபடி தன் கந்தலாடையை இன்னும் கிழித்துக் கொண்டு ஓடினான் அந்தப் பிச்சைக்காரன்.

"எஜமான், அவன் கூறிய கதையை எல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா?" என்றான் தன் உள்ளங்கையில் ஒளி சிந்தி நிற்கும் வைரத்தை விழிகள் விரியப் பார்த்தபடி ஆஸாப்.

"கதையோ, கற்பனையோ வைரம் உன் கையிலே இருக்குதில்லையா? பேசாம வா... காலிபுக்கு இதைக் காணிக்கையாக்குவோம். அவன் சொன்னது கதையா நிஜமாங்களது அப்போது தெரியும்... அந்தக் காலிபுக்குப் பதில் நான் காலிபா ஆகணும்.. எப்படியாவது.." என்று ஆஸாபைப் பார்க்காமலேயே பேசிக் கொண்டு முன்னால் நடந்தார் வஸீர்.

பதில் ஏதும் வராதிருக்கவே திரும்பினார். "ஏய். ஆஸாப். எங்கே போயிட்டே நீ" என்று கத்தினார்.

அப்போது ஒரு பாக்தாத் நகரவாசி கூறினார் "உங்கள் பணியாளரின் முன்னே திடீரென்று பூமி பிளந்து அந்த வெடிப்பில் அவர் விழுந்து விட்டார்"

இதைக் கேட்டு வஸீர் வருத்தப்படவில்லை. "ஹையா, ஹையா... வைரத்தின் விஷயம் கதை அல்ல நிஜம். என் காலிப்புக்கு எப்படிப்பட்ட வெகுமதி. வா... வா... சீக்கிரம் மேலே வா" என்று முக்கி முக்கி வெடிப்பிலிருந்து மேலே ஏறிக் கொண்டிருந்த ஆஸாபை அவசரப்படுத்தினார். பிறகு வெறி பிடித்தவர் போல ஓடினார். "காலிப்பின் முன்னால் பூமி பிளக்கட்டும். அந்த வெடிப்பில் அவர் விழுந்து மறையட்டும்!"

வேகமாக ஓடிக் கொண்டிருப்பவரைப் பார்த்து "எஜமானே..." என்று கத்தினான் ஷேக் ஆஸாப். "அந்தப்... பெரிய சுவர்... சரிந்து...." அவன் முடிக்கவில்லை, ஒரு பெரிய சுவர் மடிந்து கவிழ்ந்து ஆஸாபின் மீது உட்கார்ந்தது. பாவம்! இடிபாடுகளின் அடியில் தலை கிறுகிறுக்க கண்களின் முன்னே பூச்சி பறக்க, விழுந்து கிடந்தான் ஷேக்.

பேச்சு திடீரென்று நின்று போனதைக் கண்டு திரும்பிய வஸீர், இடிந்த சுவற்றின் அடியில் 'கிர்'ரடித்துப் போய்க் கிடக்கும் அஸாப்பிடம் அனுதாபம் காட்டவில்லை. மாறாக "என்ன நீ, என்னோடு வேகமாக வராமல் இப்படி ஆபத்துக்களில் அகப்பட்டுக் கொண்டு அநாவசியமாக நேரத்தை வீணாக்குகிறாய்?" என்று கடுகடுத்தார்.

'எஜமானே.. ஆபத்துக்களெல்லாமே இந்த அபூர்வமான வைரத்தின் விளைவுகள் தான். இதை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். நான் வேகமாக வருகிறேன் உங்களோடு!"

"முட்டாள் மாதிரி உளறாதே, எழுந்திரு... ம்.. இந்த ராஜபாட்டையைக் கடந்தால் அரண்மனை தானே! ஓடிவா.." என்று துரிதப்படுத்தினார்.

திண்டாடித் தடுமாறி எழுந்த ஆஸாப் நெடுஞ்சாலையைக் கடக்க முற்படும்போது.....

தடதடதடவென்று வேகமாகக் குதிரைகளின் குளம்பொலியும் வண்டிச் சக்கரங்களின் கலகல ஒலியும் அதிர்ந்ததோடு 'ஓரம்போ.. ஓரம் போ...' என்று ஆவேசமான ஆக்கினையும் கேட்டது. ஆனாலும் அது என்ன என்று பார்ப்பதற்குள் கருங்கற்களைச் சுமந்தபடி வந்த பார வண்டி ஆஸாபைக் கீழே தள்ளி சக்கரங்கள் அவன் வயிற்றின் மீது ஏறி....

"நான் அங்கிருந்தே கூச்சல் போட்டேன் ஓரம்போ... ஓரம்போன்னு.. குடிச்சிட்டு வந்து இப்படி என் வண்டி முன்னால வந்து விழுந்தா எப்படி? என் தப்பு எதுவும் இல்லே..." என்று காவல் அதிகாரியிடம் கூறிக் கொண்டிருந்தார் பார வண்டிக்காரர்.

ஆஸாபின் தலைமாட்டில் நின்றபடிப் பார்த்தார் வஸீர். "சரி, சரி.. என்ன ஆச்சு... எழுந்திருக்க முடியுமா?"

"முடியாமலென்ன... வயிற்றுப்பக்கம்தான் கொஞ்சம் வலி" என்றான் விசுவாசமிக்க ஆஸாப்.

ஆஸாபைத் தாங்கியபடி அரண்மனைக்குள் கொண்டுவந்து ஒரு இருக்கையில் அமர்த்தினார் வஸீர்.

"வைரத்தை எங்கும் நழுவவிடலையே.. பத்திரமா வச்சிருக்க இல்ல.."

"இதோ இருக்கு எஜமான்.." என்று ஆஸாப் காட்டியபோது அவன் உட்கார்ந்திருந்த ஆசனம் படக்கென்று முறிந்து அவனைக் குப்புறக் கவிழ்த்தது.

"சரி.. சரி... நீ சொல்லாமலேயே தெரியுது வைரம் உன் கிட்டதான் இருக்குண்ணு. கொடு கொடு அதை. இந்த வினாடியே அதை காலிப் அவர்களுக்குக் காணிக்கையாக்கி விட்டு வருகிறேன்" என்று கை நீட்டினார்.

"இந்தாருங்கள் எஜமானே... என்னிடமிருந்து இது போனால் சரி..." என்று வைரத்தை வஸீரிடம் கொடுத்தான் ஷேக் ஆஸாப்.

"இந்த வைரத்துக்கு உரிமையான கணமே அவரைத் துன்பங்கள் வந்து சூழ்ந்து கொள்ளும். அதன்பிறகு நானே காலிப்.." என்று ஆசையோடு கதவைத் திறக்க முயன்றார். ஆஸாப்புடன் உள்ளே வந்ததும் அந்த அறையை விட்டு வெளியேறுவதற்காக ஒரே கதவை அழுத்திச் சாத்தி விட்டிருந்தார். அது இப்போது திறக்க வரவில்லை. ஆத்திரத்தோடு கைப்பிடியைத் திருக, பிடி கையோடு வந்து விட்டது விண்டு போய்!

"ஆஸாத்.. கதவின் தாழ்ப்பாள் உடைந்து விட்டது. கதவைத் திறக்க முடியாது. ஆகவே கதவை உடைக்கும் வழியைப் பார்.." என்று கட்டளையிட்டார் வஸீர்.

"வஸீர் பெருமானே.. இந்தக் கதவை யாராலும் உடைக்க முடியாதபடி உருக்கிரும்பு கொடுத்து நீங்கள் தானே வாங்கினீர்கள்? இங்கிருந்து சத்தம் கூட வெளியே போகாது. அப்படி பந்தோபஸ்து!"

வஸீர் யோசித்தார் "அப்படியா... சரி சரி, கதவு வழி இல்லாவிட்டால் என்ன, ஜன்னல் வழியாக வெளியேறுகிறேன்" என்று ஜன்னலைத் திறந்து கொண்டு வெளியே....

அரண்மனையின் மூன்றாவது மாடியிலிருந்தது வஸீர் இருந்த அறை. அதன் ஜன்னலிலிருந்து கீழே அதல பாதாளம். பால்கனியா இருக்கும்? நல்லவேளை, ஒவ்வொரு தளத்தையும் பிரித்துக் காட்ட முக்காலடியில் ஒரு பட்டையான கட்டுமானம் துருத்திக் கொண்டிருக்குமே, அதில் காலூன்றியபடி சுவற்றில் ஒட்டிக் கொண்டு அங்குலம் அங்குலமாக அடுத்த ஜன்னலை நோக்கி நகரலானார்.

"அடுத்த ஜன்னல் வழியே அரண்மனைக்குள் புகுந்து கதவைத் திறந்து கொண்டு காலிபிடம் போயாக வேண்டும்!" என்று தடக் தடக் நெஞ்சத்தோடு கூறிக் கொண்டே அவர் நகர...

துரதிர்ஷ்ட வைரம் அவரிடமிருக்கிறதே, அது சும்மா இருக்குமா? முக்காலடி விளிம்பில் வாத்துப் போல காலை ஊன்றி... ஊன்றி... அவர் நகரும் போது - படார்! அந்தக் கட்டுமனாம நொறுங்க.. வஸீர் மூன்றாம் மாடியிலிருந்து தலைகுப்புறக் கீழே விழுந்தார்.

"வஸீர் ஸாப்... கதவு தானாகத் திறந்து கொண்டு விட்டது... வாருங்கள்" என்று கூப்பிட வந்த ஆஸாப் - வஸீர் தலைகுப்புறக் கீழே விழுந்து கொண்டிருப்பதைக் கண்டு வீலிட்டான்.

வஸீரின் உடல் தரையைத் தொடும் அதே வேளையில், கருங்கல் ஏற்றிய அதே வண்டி கன வேகமாக அங்கு வர, நேராக அந்த வண்டியில் போய் வஸீர் தொபுகடீரென்று விழ - அவரையும் சுமந்தபடி அந்த வண்டி படு வேகமாகத் துறைமுகத்தை நோக்கி ஓடியது.

கப்பலில் அதன் தலைவனும் மற்றவர்களும் அந்த வண்டிக்காக, அதில் வரும் கற்களுக்காகவே காத்துக் கொண்டிருந்தனர். புதிய பூமியைக் கண்டு வந்திருந்த அவர்கள், அந்த நாட்டில் எல்லைக் கற்களை ஊன்றித் தங்கள் உரிமையை நிலைநாட்டி வரப் பிரயாணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கான கற்கள்தான் வண்டியில் வந்து கொண்டிருந்தன. கற்களை கப்பலில் ஏற்றத் தயாரான மாலுமிகள், மளமளவென்று தங்கள் பணிகளைச் செய்தார்கள். கற்களோடு அதன் மீது மயங்கிக் கிடந்த வஸீரையும் கப்பலில் அள்ளிப் போட்டார்கள். கண்காணாத ஏதோ ஒரு பூமிக்குக் கப்பலில் போய்க் கொண்டிருந்தார் வஸீர் இஸ்பகான். துரதிர்ஷ்ட வைரம் அவரைத் தூக்கிக் கொண்டு போயிற்று அப்படி!

கண் விழித்த வஸீர் தான் கப்பலில் அடித்தளத்தில் கருங்கல் குவியலிடையே கிடப்பதைக் கண்டு திருதிருவென்று விழிக்க - அப்போது அங்கு வந்த கப்பல் தலைவன் - " யார் நீ... கப்பல் பிரயாணத்துக் கட்டணம் செலுத்தினாயா? எப்படி இங்கு வந்தாய்...?" என்று கர்ஜித்தான்.

வஸீர் 'பெப்பப்பபே' என்று விழிக்க...

"திருட்டுப் பிரயாணமா? யார் அங்கே, இவனை இழுத்துப் போய்...." என்பதற்குள் - "இதோ இந்த வைரத்தைக் கட்டணமாக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று தன்னிடமிருந்த வைரக்கல்லை நீட்டினார் வஸீர்.

அந்த வைரத்தைக் கண்ட கப்பல் தலைவன் கட கடவென்று சிரித்தான். "இந்த வைரமா.. இது யாருக்கு வேண்டும்.. துரதிர்ஷ்டம் பிடித்த தொடைகாலி வைரம் அல்லவா இது.."

"இதைப் பற்றி உங்களுக்கு முன்பே தெரியுமா?" என்று குழறினார் வஸீர்.

"என் மூன்றாவது மனைவியின் இரண்டாவது காதலனுக்குச் சொந்தமாக இருந்தது ஒரு காலத்தில் இது" என்று பரபரத்தான் கப்பல் தலைவன்.

"இது என் கப்பலையே மூழ்கடித்து விடும். நீ கட்டணம் தர வேண்டாம். கப்பலிலிருந்து உன்னை இப்போதே அப்புறப்படுத்தியாக வேண்டும். யாரங்கே? இவனை...."

ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சி விட்டது. அந்தக் கப்பலை உடைக்கவென்றே ஒரு பாறை நடுக்கடலில் தோன்றி - அதில் கப்பல் மோதி உடைந்தது.

வஸீர், கப்பல் தலைவன், நாலைந்து மாலுமிகளோடு நடுக்கடலில் ஒரு படகு தத்தளித்துக் கொண்டிருந்தது. எல்லாரும் வஸீரை ஆத்திரத்துடன் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

"நான் என்ன செய்வேன். எல்லாம் உன் மூன்றாவது மனைவியின் இரண்டாவது காதலனுடைய கைங்கரியம் தான் இது. அவனைத் திட்டு..." என்று படகின் ஓரத்துக்குப் போய் ஒண்டினார் வஸீர்.

அப்போது....

"அதோ கரை தெரிகிறது... கரை... " என்று உற்சாகக் குரல் எழுப்பினான் ஒரு மாலுமி. படகைக் கரைக்குச் செலுத்தி கரையிறங்கி ஓடினார்கள் எல்லோரும்.

"என் துரதிர்ஷ்டம் அதிர்ஷ்டமாக மாறி விட்டது. இந்தப் புதிய நாட்டில் இந்த வைரத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஆகவே இதை யார் தலையிலாவது கட்டி விட்டு நாம் தப்பி விடலாம்" என்று எண்ணமிட்டபடி மாலுமிகளோடு வஸீரும் ஓடினார், கடற்கரையிலிருந்து உள்நாட்டுக்கு.

"அதோ தெரிகிறது ஒரு பெரிய அரண்மனை."

வஸீர் பார்த்தார் - கண்களைக் கசக்கிக் கொண்டு உற்றுப் பார்த்தார். தகதகக்கும் தங்கக் கோபுரங்கள்... வெள்ளியாக மின்னும் சுவர்கள் - தந்தம் போன்ற வழுவழுப்பான....

"என் மூன்றாவது மனைவியின் இரண்டாவது காதலனின் அரண்மனைதான் இது" என்ற கப்பல் தலைவனின் மகிழ்ச்சிக் குரலை அடுத்து...

"வாருங்கள்... வாருங்கள்... என் இரண்டாவது காதலியின் நான்காவது கணவரே வருக வருக! " என்று தங்க அரண்மனையின் தலைவாசலில் நின்று வரவேற்பளித்தார் ஒருவர்.

அது.....

வஸீர் இஸ்பகானிடம் பாக்தாத் நகரின் வீதியிலே கந்தல் அணிந்து கண்ணீர் வழிய 'இதை யாராவது வாங்கிக் கொள்கிறீர்களா? வாங்கிக் கொள்ள மாட்டீர்களா.. அய்யோ... " என்று பரிதாபமாகக் கெஞ்சிக் கொண்டிருந்த அதே பிச்சைக்காரன் தான். இப்போதோ... பட்டும் பட்டாடையும் வைரமும் வைடூரியமுமாக; தங்க மாளிகையின் எஜமானனாக...

மாலுமிகளை உற்சாகமாக வரவேற்ற அந்தப் பிரபு, வஸீரைக் கண்டதும் முகம் கடுகடுக்க "நீ... நீ... இங்கே எதற்கு வந்தாய்?..." என்று நடுங்கினார்.

"இ... இது... இந்த வைரத்தை....." வஸீர் முடிக்கவில்லை, தங்க அரண்மனையின் தலைவாசல் கதவு அவர் முகத்தில் மோதப் படாரென்று அடைக்கப்பட்டது!

"அந்த வைரத்தை மறுபடியும் நான் வாங்கிக் கொள்ளவா?" இடிஇடியென்ற சிரிப்பு கதவுக்கு மறுபுறமிருந்து பயங்கரமாக ஒலித்தது.

கண்களை மூடித் திறந்த வஸீர் சஹாரா பாலைவனத்தின் நடுவே தான் மட்டும் தன்னந்தனியே உட்கார்ந்திருப்பதை உணர்ந்தார்.

கால்கள் மணலில் புதையப் புதைய ஒரு வழியாக ஏழு நாட்கள் பிரயாணப்பட்டு பாக்தாத் நகரத்திற்கு வந்து சேர்ந்தார் வஸீர் இஸ்பகான்.

காலிப் அரூன் அல்பாஷா தன் வாராந்திரப் பிறந்த நாளைக்கு விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். பிறந்த நாள் பரிசாக எல்லோருக்கும் வாரி வழங்க தன் கஜானாவையே திறந்து விட்டுக் கொண்டிருந்தவர், " எங்கே வஸீரைக் காணோம்?" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.

வஸீர் இஸ்பகான் பாக்த்தாத்தின் பிரதான சாலையோரத்திலே கந்தலாடையுடனும், கையில் வைரக்கல்லுடனும் "ஐயா! தரும துரைகளே! இந்த ஏழையிடம் இரக்கம் காட்டுங்கள்! இந்த வைரத்தை இலவசமாகத் தருகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்" என்று பரிதாபமாகக் கூவிக் கொண்டிருப்பது காலிப் அவர்களுக்கு எப்படித் தெரியும்?

வாண்டுமாமா
Share: 




© Copyright 2020 Tamilonline