|
'கடல்புறா' நாவலிலிருந்து ஒரு பகுதி |
|
- சாண்டில்யன்|டிசம்பர் 2010| |
|
|
|
|
|
மாலைக் கதிரவன் தன் மஞ்சள் நிறக் கதிர்களை எதிரே இருந்த வங்கக் கடலின் நீலநிற அலைகளின் மீது பாய்ச்சி, மயில்துத்தத்தைத் தங்கமாக அடிக்கும் ரசவாதியைப்போல, அலைகளின் நிறத்தைப் பொன்னிறமாக மாற்றிக் கொண்டிருந்தாலும் அந்த மாற்றமும் ரசவாதி அகன்றவுடன் மறைந்துவிடும் மாயஜாலத்தைப் போலவே, ஆதவன் மறைய அகன்று அகன்று சிருஷ்டியின் அநித்தியத்தை நிரூபித்துக் கொண்டிருந்தது. அத்தகிரியில் தோன்றி மைஞ்சூரை, பூரணை, பிராநிஹிதை, பேன கங்கை, வேணு கங்கை, இந்தரவதி ஆகிய ஆறு உப நதிகளையும் சேர்த்தணைத்துக் கொண்டதால் பிரும்மாண்டமாகப் பெருகித தொண்ணூறு காத தூரம் ஓடிவந்த களைப்பைப் போக்கிக்கொள்ள பாலூர்ப் பெருந்துறைக்கருகில் கடற் கணவனுடன் வேகமாக மோதிக் கலந்துவிட்ட புண்ய நதியான கோதாவரியின் வண்டல் கலந்த செந்நிற நீரும் ஆதவனுக்குத் துணைசெய்து நீலக்கடலின் நிறத்தைச் சங்கமப் பகுதியில் சிறிது தங்கமாக மாற்றியது என்றாலும், மாலை நேரக் காற்றால் திரும்பத் திரும்ப எழுந்த பெரும் அலைகள் கோதாவரியின் பொன்னிற நீருக்கும், பழைய மயில் துத்தத்தின் நிறத்தையே அளித்துப் பிற்காலத்தில் இந்தக் கலிங்கத்தின் பொன்னும் மணியும் சூறையாடப்படும், நிலைப்பது மதிப்பற்ற மயில்துத்தம்தான் என்பதை அறிவுறுத்திக் கொண்டிருந்தன.
கோதாவரியின் முகத்துவாரத்தை அடுத்தாற்போல் பிரும்மாணடமாக எழுந்த பெரும் கோட்டை மதில்களுக்குப் பின்னாலிருந்த அரண்மனை உப்பரிகை உச்சியில் தெரிந்த கலிங்கத்தின் பெருங்கொடி தனக்கு நிகரில்லையெனக் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தாலும், எதிரே கடலில் நங்கூரம் பாய்ச்சி நின்ற பல நாட்டுக் கப்பல்களின் கொடிகள், அலைகளால் உந்தப்பட்ட நாவாய்கள் முன்னும் பின்னும் ஆடியதன் விளைவாக, தங்கள் கொடிமரங்களுடன் முன்னால் முன்னால் சாய்ந்து 'சீக்கிரம் உனக்குத் தண்டனை இருக்கிறது. ஆணவம் வேண்டாம்' என எச்சரித்துக் கொண்டிருந்தன. அந்த நாவாய்களிலிருந்து கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வணிகப் படகுகளின் துடுப்புகள் சரேல் சரேலென்று துழாவப்பட்டதாலும் கரையோரம் வந்து இழுக்கப்பட்ட படகுகளாலும், படகிலிருந்து குதித்த வணிகர்களாலும், கரையோரத்திலும் சற்றுத் தள்ளியும் இருந்த கட்டுமரங்களில் மீன் பிடிக்க மீனவர் வீசிய வலைகள் பலமாகப் பல இடங்களில் இழுக்கப்பட்டதாலும், அந்த பெருந்துறையின் கரையோர நீர் பெரிதும் குழம்பியும் கலங்கியும் இருந்தது.
தமிழர்கள் அதிகமாகக் குடியேறியதால், தமிழகத்தில் சாதாரணமாக வைக்கப்படும் ஊர்ப் பெயரைப் போல கலிங்கத்தின் அந்தப் பெருந்துறைக்குப் பாலூர் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பெயரைப் 'பாலூரா' என்று கிரேக்க வணிகர்களும், அராபியரும், சீனத்தாரும் அழைத்தார்களாதலால் சரித்திரத்தில் 'பாலூரா' என்றே அந்தத் துறைமுகத்தின் பெயர் நிலைத்துவிட்டது. இருப்பினும், பாலுக்கும் அந்த ஊருக்கும் சம்பந்தமில்லையென்பதைச் சுட்டிக்காட்ட இஷ்டப்பட்டவன் போல் சித்திரா பெளர்ணமி தினத்தின் அந்த மாலை நேரத்தில் கதிரவன் மறையும் சிறிது நேரத்திற்கு முன்பாகவே தன் பால் நிறத்தை வெளிக்காட்டாமல் ஏதோ பெருங்கோபத்துடன் விழிப்பவன் போல் சிவந்த பந்தாக முழுச்சந்திரனும் மெள்ள வானவெளியில் தோன்றினான்.
தங்க சூரியன் மறைய முற்பட்டுத் தங்கமதி தலையெடுத்த பின்பு பாலூர்ப் பெருந்துறையின் அழகு முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாகக் கண்ணையும் இதயத்தையும் கவர்ந்தது. அத்துடன் அந்தத் துறைமுகத்தே வேதனையும் கூச்சலுங்கூடக் கலந்துதான் கிடந்தது. அந்த மாலைநேரத்தில் நகரத்துக்குள்ளிருந்து திடீரென வானத்தில் கூட்டமாகப் பறந்து வந்து எதையோ மறந்து வைத்துவிட்டனபோல் வெகுவேகமாகக் கூட்டமாகவே திரும்பிய புள்ளினங்கள் பாடிச் சென்ற இசை காதுக்கு மிக இன்பமாக இருந்ததென்னமோ உண்மைதான். ஆனால், துறைமுகக் கரையில், இழுக்கப்பட்ட படகுகளிலிருந்து பெரும் பொதிகளை இறக்கி மூட்டைகளைத் தோள்மேல் சுமந்து சுங்கக் கொட்டடிக்குச் சென்று கொண்டிருந்த ஊழியர் கூட்டம் சுமைகளை ஏற்றிக்கொள்ளப் போட்ட சத்தமும் சுமந்து சென்றபோது போட்ட முனகலும், இன்பமான இந்தத் துறைமுகத்தில் மாந்தர் துன்ப மூச்சுவிடும் காலம் அதிக தூரத்திலில்லையென்பதை அறிவுறுத்தின. அத்துடன் கடற்கரையின் அலை ஓரத்திலிருந்து சற்றுத் தூரத்தேயிருந்த ஒரே ஒரு பெரும் கப்பிச்சாலையில் தென்கலிங்கத்தின் பெரும் மாடுகள் இழுத்துச் சென்ற நானா தேசத்துப் பொதிமூட்டைகளும் பெட்டிகளும் கர்ண கடூரமான சத்தத்தை விளைவித்தன. வண்டிகளில் ஏற்றப்பட்ட பெரும் சுமையைத் தாளாத மாடுகள் விட்ட பெருமூச்சையும், ஆயாசத்தையும் தலைதூக்கிப் பார்த்த கரையோரக் கடல் நாரைகள், 'குவா குவா' என்று துன்பப்படுவதைப் பார்த்து மகிழ உலகத்தில் ஜீவராசிகள் என்றும் உண்டு என்பதை நிரூபித்தன.
இப்படி இன்பத்தையும், துன்பத்தையும் கலந்து புகட்டிக் கொண்டிருந்த பாலூர்ப் பெருந்துறை, மேல் நாடாரும் கீழ் நாட்டாரும், தூரக் கீழ்த்திசை நாடுகளுக்குச் செல்வதற்கு ஒன்றுகூடும் ஒரே துறைமுகமாதலால், அந்தப் பெருந்துறையில் யவனரும், சீனரும், அராபியரும், தமிழரும், ஆந்திரரும், வடநாட்டாரும் கலந்து காணப்பட்டது என்றும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததல்லாமல், நல்லெண்ணம் மட்டும் இருந்தால் உலகம் ஒன்றுகூடுவது சாத்தியம் என்பதை வலியுறுத்திக் கொண்டும் இருந்தது. இந்தக் கதை துவங்கும் 1063ஆவது வருடத்துச் சித்ரா பெளர்ணமியன்று வழக்கத்துக்கதிகமாகவே, பல நாட்டு மரக்கலங்கள் அங்கு கூடியிருந்தால் பலதரப்பட்ட வெளிநாட்டவர்கள் கூட்டம் அன்று துறைமுகத்தில் ஏராளமாகி, சிறு உலகம் ஒன்றே அங்கு சிருஷ்டியாகிவிட்டது போன்ற பிரமையை அளித்தது. தட்டை முகமும் மஞ்சள் நிறமும் உள்ள குள்ளச் சீனரும், ஆஜானுபாகுவாய் உஷ்ண பூமியின் விளைவாகக் கன்னிச் சிவந்த சிவப்புடன் காணப்பட்ட யவனரும், மொட்டையடித்துத் தலைக்குத் துணிகட்டி, தொளதொளத்த உடைகளுடன், உடைகள் நாலா பக்கமும் காற்றில் அலைய நடந்த சிவந்த மேனியும் திடகாத்திர தேகமும் உள்ள அராபியரும், அதிக உயரமோ அதிகக் குள்ளமோ இல்லாத தமிழகத்தாரும் உயர்ந்தும் கனத்தும் பயங்கரமாக விளங்கிய நீக்ரோவரும் கலந்து நின்ற காட்சி, நவதானியங்கள் கலந்த மங்கலப் பாலிகைபோல் அந்தப் பெருந்துறையை விளங்க வைத்தாலும், அந்தப் பாலிகைகளை உடைக்க விரும்பிய அமங்கலத் தூதர்கள் போல் கூட்டங்களை விலக்க முற்பட்ட கலிங்கத்தின் சுங்கக் காவல் வீரர்கள், 'உம் இப்படி வா! அந்தப் புறம் போகாதே' என்று ஆணையிட்டு, சுங்கத்திலிருந்து யாரும் தப்ப முடியாதபடி கட்டுப்பாடு செய்து பொதி தூக்கும் ஊழியர்களை விரட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த விரட்டலுக்குப் பணியாத ஊழியர்களை மென்னியைப் பிடித்துச் சுங்கச் சாவடிகளின் பக்கம் தள்ளவும் செய்தார்கள்.
இப்படிக் காவலர்களிம் கெடுபிடியால் நடந்து கொண்டிருந்த சுங்கச் சோதனையையும், சுங்கச் சாவடிகளின் பக்கம் போய்க் கொண்டிருந்த சுமை தாங்கிய ஊழியரையும், பெரும் சாட்டைகளைப் பக்கங்களில் சொடேர் சொடேரெனச் சொடுக்கி நீக்ரோவரை விரட்டிக் கொண்டிருந்த அராபியர்களையும், அமைதியாக ஒரே ஒழுங்குடன் ஏதோ படைக்கு அணி வகுப்பவர்போல் சென்று கொண்டிருந்த யவன வணிகரின் கூட்டத்தையும் கவனித்துக் கொண்டே கரைக்கு வந்து, படகிலிருந்து தானும் இறங்கித் தன் குதிரையையும் இறக்கிய ஒரு வாலிபன், சற்று நேரம் அலைப் பகுதியிலேயே புரவியுடன் நின்று கடல் பிராந்தியத்தியத்தையும் எதிரேயிருந்த பாலூர் நகரத்தின் பெரும் கோட்டையையும் நீண்ட நேரம் தன் கண்களால் துழாவினான். அந்த வாலிபன் அந்தப் பெருந்துறைக் கரையில் கால் வைத்ததுமே கலிங்கத்துப் போரின் வித்து விதைக்கப்பட்டுவிட்டது என்பதற்குச் சாட்சி சொல்ல இஷ்டப்பட்டது போல் கடலின் அலைகள் முன்னை விடப் பெரிதாக இரைச்சல் போட்டன. கதிரவன் மறைந்துவிட்டதால் நகருக்குள் ஏற்பட்ட பெரும் விளக்குகளும் தீக்கண்களை விழித்து வந்திருப்பவன் யாரெனப் பார்க்கவும் தொடங்கின. அந்த விளக்குகளில் தீ விழிகளில் நாமும் பங்குகொள்வது பிசகென நினைத்த சந்திரனும் தனது தங்க நிறத்தை மாற்றிக் கொண்டு வெண்ணிறம் பெற்றான்.
கரையில் திடமாகக் காலூன்றி நின்ற அந்த வாலிபனுக்கு வயது இருபத்தொன்றுக்கு மேலிருக்கக் காரணமில்லை. ஆயினும் அவன் கண்களில் விரிந்த ஆராய்ச்சி அவன் முதிர்ந்த அனுபவத்தைத் தெரியப்படுத்தியது. அவன் கன்னத்தில் சற்றே கீரியதுபோல் இருந்த ஒரு வடு, அவன் வதனத்தின் அழகைக் குறைப்பதற்குப் பதில் அதற்கு ஒரு வீரக் களையையும் இணையற்ற கம்பீரத்தையுமே அளித்தது. 'காக பக்ஷகம்' என்று புராணங்களில் சொல்லப்படுவது போல் காக்கையின் இறகுகளைப்போல் தலையில் விரிந்து கன்னங்களையும் தடவித் தொடங்கிய சுருண்ட அவன் குழல்கள் மட்டுமின்றி அகன்ற நெற்றியும், அதிக வளைவு என்று சொல்ல முடியாதபடி சிறிதே வளைந்து திடீரென பக்கங்களில் கத்திகளைப் போல் கூர்மையுடன் இறங்கிப் புருவங்களும், நன்றாகச் சிவந்து சற்றுத் தடித்தே இருந்த வாயிதழ்களும் அந்த இளைஞன் வீரத்துக்கும் உறுதிக்கும் பெரும் சான்றுகளாயிருந்தன.
அங்கியில் மறைந்த இடம் போக மீதி இடங்களில் வெட்டுக் காயங்களுடன் காட்சியளித்த அவன் நீளமான கரங்களும் தழும்பேறியிருந்த விரல்களும் இளைய பருவத்திலேயே அவன் பெரும் போர்களைக் கண்டவன் என்பதை வலியுறுத்தின. சற்றுக் குறுகிக் காணப்பட்ட அவன் இடையை அடுத்துக் கச்சையிலிருந்து பக்கப் பகுதியில் தொங்கிய வாள் அதிக நீளமில்லையென்றும், உறையின் பரிணாமத்திலிருந்து அதன் அகலம் மிகுதியென்றும் ஊகிக்க முடிந்தது. அவன் கச்சையில் வயிற்றுக்கு எதிரில் செருகப்பட்ட சிறுவாளின் பிடியிலிருந்த விலை உயர்ந்த கற்கள் இளைஞன் அப்படியொன்றும் ஏழையில்லயென்பதை விளக்கின. அவன் அங்கியின் முகப்புகளிலிருந்த தங்கச்சரிகை வேலைப்பாடுகள், இளைஞன் நல்ல பசையுள்ள குடும்பத்தில் பிறந்தவன் என்பதை நிரூபித்தன. உறுதியுடன் மணலில் புதைந்து நின்ற அவன் கால்களின் பெருவிரலொன்று மணலில் பதிந்தி பதிந்து குழி செய்துகொண்டிருந்தது. அதைக்கண்ட கடல் நண்டுகள், கலிங்கத்துக்கு இப்பொழுதே இந்த இளைஞன் குழி தோண்டுகிறானோ என்று பயந்தனபோல் தங்கள் மணல் வளைகளை நோக்கி ஓடி மறைந்தன.
குதிரையின் கழுத்தில், ஒரு கையைப் போட்டுக்கொண்டு நின்ற வண்ணம் கடற்கரைப் பிராந்தியத்தைக் கண்களால் அளவெடுத்த அந்த வாலிபன் கடலின் லாவண்யத்தையும், கோதாவரியின் கம்பீரத் தோற்றத்தையும், வெண்மதி அள்ளிச் சொரிந்த வனப்பையும், பல நாட்டுக் கலங்களில் வந்து சுங்கச்சாவடிக்குச் சென்றுகொண்டிருந்த வணிகப் பொருள்களையும் பார்த்துப் பார்த்துப் பிரமை பிடித்து நின்றான். "இத்தனை வாணிபமும் இயற்கை வனப்பும் பொருந்திய இந்தத் துறைமுகத்தை, இந்த மாணிக்கத்தை இழக்க எதற்காகத் தென்கலிங்கத்து மன்னன் பீமனும், வடகலிங்கத்து மன்னன் அனந்தவர்மனும் முயல்கிறார்கள்?" என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்ட அந்த இளைஞன், நீண்ட பெருமூச்சொன்றை விட்டுவிட்டு தன் புரவியை இழுத்துக்கொண்டு மெள்ள மெள்ளச் சுங்கச்சாவடிகளை நோக்கி நடக்கலானான்.
அவன் திடமாகவும், சந்தேகமின்றி யாரையும் தகவல் கேட்காமலும் நடந்ததிலிருந்து அவன் பாலூர்ப் பெருந்துறைக்குப் புதியவனல்லவென்பதை ஊகித்துக் கொண்டார்களாதலாலும், அவன் இடையில் தொங்கிய வாளும் ஓரளவு பயங்கரமாயிருந்ததாலும் முகத்திலிருந்த களையும் சற்று எச்சரிக்கை செய்ததாலும், சுங்கக் காவலர்கள் கூட அவனை எந்தக் கேள்வியும் கேட்காமலும் தடை செய்யாமலும் விலகி வழிவிட்டார்கள். பலநாட்டவரின் கூட்டத்தோடு கூட்டமாகவும் சில சமயம் சீனரோடும், சில சமயம் யவனரோடும், சில சமயம் அராபியரோடும் தோளுடன் தோள் உராய்ந்து சென்ற அந்த வாலிபன் சுங்கச் சாவடிக்கு வெளியிலேயே குதிரையை நிறுத்திவிட்டுத் தான்மட்டும் சாவடிக்குள் நுழைந்தான்.
பெரும் மண்டபமாகச் சுமார் நூறு தூண்களுடன் பல பகுதிகளாகப் பிரித்துத் தடைகள் வைத்துக் கட்டப்பட்டிருந்த அந்தச் சுங்கச்சாவடியில், சுங்கம் வாங்கும் அதிகாரிகள் ஆங்காங்கு நின்று பிரயாணிகளின் சரக்குகளுக்கு மதிப்பீடு செய்தும், சுங்கப் பணம் வாங்கியும், சுங்க முத்திரை பதிப்பித்தும் ஊழியம் புரிந்ததால் ஏற்பட்ட ஒலியும், சுங்க மதிப்பீட்டை எதிர்த்து வணிகர்கள் போட்ட கூச்சலும் காதைத் துளைத்துக் கொண்டிருந்தன. அத்துடன் வசூலிக்கப்பட்ட தங்கப் பணங்கள் பாறைகளின் மீது தட்டப்பட்டதாலும், சரக்குடைய வெண்கல இரும்புக் குடங்கள் திடீரென இறக்கப்பட்டதாலும் ஏற்பட்ட உலோக ஒலிகள் மனிதர்களின் பேச்சொலிக்கு ஆதாரசுருதி கூட்டின. படகில் வந்த இளைஞன் உள்ளே நுழைந்ததும் அந்தச் சுங்கக் கூட்டத்தையும் அங்கு வசூலிக்கப்பட்ட பெரும் சுங்கத் தொகையையும் பார்த்துக்கொண்டே வணிகரல்லாத பிரயாணிகள் சோதிக்கப்படும் இடத்துக்குச் சென்று தன் இடையிலிருந்த பட்டுப் பையை எடுத்து சுங்க அதிகாரிகளிடம் அளித்துவிட்டு விரலில் இருந்த ஒரு மோதிரத்தை காட்டினான். அந்த மோதிரத்தைக் கண்ட மாத்திரத்தில் மின்னலால் தாக்குண்டவன்போல் பேரதிர்ச்சியும் குழப்பமும் திகிலும் அடைந்த சுங்க அதிகாரி சிலவிநாடிகள் ஸ்தம்பித்து நின்றான். பிறகு அந்த இளைஞன் கொடுத்த பையைச் சோதிக்காமல் திருப்பி அவனிடம் கொடுத்து விட்டு "சற்று இப்படி வாருங்கள்" என்று கையால் சைகை காட்டிக் கொண்டே தன்னிடத்தில் வேறோருவனை இருக்கச் செய்து சாவடியின் கோடியிலிருந்த அறையை நோக்கி நடந்தான். வந்த இளைஞனும் மீண்டும் இடையில் பையைச் செருகிக் கொண்டு, பதிலேதும் பேசாமலும், முகத்தில் எத்தகைய வியப்பும் காட்டாமலும் சுங்க அதிகாரியைத் தொடந்தான்.
அக்கம் பக்கத்தில் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டே கோடியிலிருந்த தனியிடமொன்றை அடைந்த சுங்க அதிகாரி, இளைஞன் அருகில் வந்ததும், "நீங்கள் அணிந்துள்ள மோதிரத்தின் மதிப்புத் தெரியுமா உங்களுக்கு?" என்று பயத்துடன் வினவினான். |
|
அவன் சொற்களின் உண்மைக் கருத்தைப் புரிந்து கொண்டாலும், புரியாதது போல் நடித்த இளைஞன், "தெரியும், ஆயிரம் பொற்கழஞ்சுகள். அதற்குச் சுங்கம் உண்டானால் விதியுங்கள்" என்று கூறி சுங்க அதிகாரியைக் கூர்ந்து நோக்கினான்.
சுங்க அதிகாரியின் விழிகளில் கோபமே அதிகரித்தது. "விலையைச் சொல்லவில்லை. வேறு மதிப்பைச் சொன்னேன்" என்றான் சுங்க அதிகாரி கோபம் குரலில் உஷ்ணத்துடன் ஒலிக்க.
"வேறு எந்த மதிப்பைக் குறிப்பிடுகின்றீர்கள்?" என்று மீண்டும் வினவினான் இளைஞன்.
"இதைச் சிலர்தான் அணிய முடியும்" என்று சுட்டிக் காட்டினான் சுங்க அதிகாரி.
"ஆம்"
"இது பல்லவ ராஜ சின்னம். இதைப் பல்லவ ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அணியலாம்".
"அதையும் நானறிவேன்"
இதைக் கேட்டதும் சுங்க அதிகாரியில் முகத்தில் ஈயாடவில்லை. "அப்படியானால் தாங்கள்...?" என்று திணறினான்.
"கருணாகர பல்லவன்". ஏதோ ஒரு சாதாரண விஷயத்தை அறிவிப்பவன்போல் தன் பெயரை அறிவித்தான் அந்த இளைஞன்.
சுங்க அதிகாரிக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த தைரியமும் போய்விட்டது. அவன் இதயத்தில் விவரிக்க இயலாத பல உணர்ச்சிகள் மோதின. "இளைய பல்லவரா?" என்று மிதமிஞ்சிய வியப்பும் திகைப்பும் கலந்த குரலில் வினவினான் சுங்க அதிகாரி.
'ஆம்' என்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டிய கருணாகர பல்லவன், "இனி நான் போகலாமல்லவா?" என்று வினவிக் கொண்டே மெள்ளத் திரும்பினான்.
"நில்லுங்கள்" என்று அதிகாரியின் குரலைக் கேட்டுத் திரும்பிய இளைய பல்லவனை அருகில் இழுத்த அதிகாரி, "நீங்கள் போக வேண்டிய இடம் எது?" என்று பயத்துடன் வினவினான்.
"கோடியக்கரை கூலவாணிகன் மாளிகை"
"அது நகரத்துக்குள் அல்லவா இருக்கிறது?"
"ஆம்"
"அப்படியானால் இப்போது போக வேண்டாம். அடுத்தாற்போலுள்ள என் இல்லத்தில் தங்கியிருங்கள். நள்ளிரவுக்குப் பின் போகலாம்" என்று மன்றாடினான் சுங்க அதிகாரி.
"இப்போது ஏன் போகக் கூடாது?" என்று சற்று நிதானத்தை இழந்து கேட்டுவிட்டு மீண்டும் போகத் துவங்கிய கருணாகர பல்லவனின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்திய சுங்க அதிகாரி, கலவரத்துடன் சொன்னான் - "பிடிவாதம் வேண்டாம். சொல்வதைக் கேளுங்கள். ஊருக்குள் சென்றால் நீங்கள் உயிருடன் மீள முடியாது" என்று.
கருணாகர பல்லவன் விழிகளில் வியப்பு மலர்ந்தது. ஆனால் காரணத்தை அதிகாரி மெள்ள மெள்ள விவரிக்கத் தொடங்கியவுடன் அந்த வியப்பு கோபமாக மாறத் தொடங்கவே, தான் இருக்குமிடம் கலிங்கத்தின் சுங்கச் சாவடியென்பதையும், சுற்றும்முற்றும் வீரர்கள் நடமாட்டம் இருக்கிறது என்பதையுங்கூடக் கவனிக்காமல், "அத்தனை துணிவா இந்தக் கலிங்க பீமனுக்கு?" என்று ஆத்திரத்தில் சற்று இரைந்து கூவிவிட்டான். அந்தக் கூச்சல் அதிகாரியின் காதில் மட்டும் விழுந்திருந்தால் இந்தக் கதையின் போக்கும் வேறு திசையில் திரும்பியிருக்கும். ஆனால் விதி யாரை விட்டது? அவன் கூவியது சற்று தூரத்தேயிருந்த இரு வீரர்களின் காதிலும் விழுந்தது. உடனே நிகழ்ந்தது பிரளயம்.
சாண்டில்யன் |
|
|
|
|
|
|
|
|