|
குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் |
|
- சீதா துரைராஜ்|டிசம்பர் 2010| |
|
|
|
|
|
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் தென்னிந்தியாவில் திருச்சிக்கு சுமார் 24 கி.மீ. தொலைவில் காவிரியின் வடபகுதியில் அமைந்துள்ளது. திருப்பதி வேங்கடவன், குணசீல மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் காட்சி அளித்ததால் மஹரிஷியின் பெயராலேயே இத்திருத்தலம் அழைக்கப்படுகிறது. மனநோய், பில்லி, சூனிய, செய்வினைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து 48 நாட்கள் தங்கி, காவிரியில் நீராடி, விரதமிருந்து இப்பெருமானை வழிபட்டால் வினைகள் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்தின் தீர்த்தம் காவேரி நதி தீரமேதான்.
ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாசலபதி ஸ்ரீதேவியுடன் நின்ற கோலத்தில் சக்கரம், வரத ஹஸ்தம், கடி ஹஸ்தத்துடன், திருமார்பில் இலக்குமியைத் தாங்கி சேவை சாதிக்கிறார். வலக்கையில் செங்கோல் ஏந்தியிருக்கிறார். இச்செங்கோலினாலே செய்வினை, பில்லி, சூனியக் கோளாறுகளை அவர் நீக்குவதாக ஐதீகம்.
தால்ப்ய மஹரிஷியின் சீடரான குணசீலர், தன் குருநாதருடன் இமயமலை சென்று வியாச மஹரிஷியை வணங்கிவிட்டு கங்கையில் நீராடியபின் திருவேங்கடமலை சென்று எம்பெருமானை தரிசித்து லயித்து, அவரைப் பிரிய மனமில்லாமல் தமது ஆசிரமத்திற்கு எழுந்தருளுமாறு வேண்டிக் கொண்டார். அதற்கு எம்பெருமான், தாம் இந்தக் கல்பம் முடியும்வரை திருமலையிலேயே இருந்து அருள் செய்யச் சங்கல்பம் கொண்டுள்ளதால், நீர் உமது ஆசிரமம் சென்று தவமியற்றினால் உமது எண்ணம் நிறைவேறும். இதற்கான வழியை உன் குருநாதரிடம் தெரிந்து கொள் என்று திருவாய் மலர்ந்தருளினார்.
குணசீலர் எம்பெருமானின் உத்தரவைத் தன் குருநாதரிடம் தெரிவித்ததும் அவர் உனது ஆசிரமம் சென்று தவமியற்றுவாயாக, உனது தவத்தின் பயனாய் பிரஸன்ன வேங்கடேசன் ஸ்ரீதேவியுடன் எழுந்தருளவார் என ஆசிர்வதித்தார். காவேரியில் நீராடி குணசீலம் எம்பெருமானை நினைந்து கோடைக்காலத்தில் பஞ்சாக்னி மத்தியிலும், குளிர்காலத்தில் ஈர வஸ்திரத்துடனும், மழைக்காலத்தில் ஜலத்திலும் நின்று கொண்டு கடும் தவமியற்றினார் குணசீல மகரிஷி.
தவம் கண்டு மகிழ்ந்த பெருமான், குணசீலருக்குக் காட்சி அளிக்க எண்ணி, ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசன் என்ற திருநாமத்துடனும் ஸ்ரீ தேவியுடனும் ஆசிரமத்திற்கு எழுந்தருளினார். எம்பெருமானின் வருகையறிந்த பிரம்மா, சரஸ்வதி, சிவன், பார்வதி, இந்திராதி தேவர்களுடனும், தால்ப்ய மஹரிஷி தன் சீடர்களுடனும் கூடியிருந்தனர். குணசீலர், தன் தவ நிலையிலிருந்து மீண்டு, எம்பெருமான் ஸ்ரீதேவியுடன் கருடாரூடராய் அளித்த காட்சியைக் கண்டு, நெஞ்சம் நெகிழ்ந்து நெடுஞ்சாண் கிடையாக பெருமான் பாதத்தில் வீழ்ந்து வணங்கி மெய்மறந்து நின்றார். அவரைப் பார்த்து நீர் விரும்பும் வரத்தைக் கேளும் என எம்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.
குணசீல மகரிஷி, பூவுலகத்தில் அனைவரும் பயனடையும் வகையில் தாங்கள் கல்பம் முடியும்வரை இங்கு நித்யவாசம் செய்து பக்தர்கள் வேண்டும் வரங்களை அருள வேண்டும் எனப் பிரார்த்தித்தார். எம்பெருமானும் முனிவரின் பிரார்த்தனைப்படி ஸ்ரீதேவியுடன் கூட எழுந்தருளி ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசனாகக் காட்சி அளித்தார்.
குணசீலர், தன் குருநாதர் தால்ப்யரிடம் உபதேசம் பெற்று, ஸ்ரீ வைகானஸ திவ்ய பகவத் சாஸ்திர முறைப்படி திருவாராதனம் செய்து வந்தார். பின் குருநாதரிடமிருந்து தீர்த்த சக்ரயாகம் செய்ய நைமிசாரண்யம் செல்ல அழைப்பு வந்ததன் பேரில் மறுக்க முடியாமல் எம்பெருமானையே வேண்டினார். பின்னர் அவர் உத்தரவுப்படி சிஷ்யன் ஒருவனை எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்ய ஏற்பாடுகள் செய்து விட்டு, நைமிசாரண்யம் புறப்பட்டுச் சென்றார்.
சிஷ்யன் அவ்வாறு திருவாராதனம் செய்து வரும்போது அடிக்கடி காவேரியில் வெள்ளப் பெருக்கு வந்ததாலும், வனவிலங்குகளின் தொல்லையாலும், ஆராதனம் செய்வதை விட்டுவிட்டுச் சென்று விட்டான். எம்பெருமானும் தன்னை முழுவதும் புற்றினால் மறைத்துக் கொண்டார். |
|
காலங்கள் பல சென்றன. ஞானவர்மன் என்ற சோழ அரசன் ஆட்சிக் காலத்தில் அரசனின் கோசாலை, புற்றின் அருகில் அமைந்திருந்தது. இடையர்கள் மாடு மேய்த்துப் பால் கறந்து இளைப்பாறி விட்டுப் பாலை அரண்மனைக்கு எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு சமயம் பால் நிறைந்த குடங்களில் பால் மறைந்து வெறும் குடங்களாயின. இடையர்கள் திகைத்த வேளையில் வயது முதிர்ந்த ஒருவருக்கு அருள் வந்து, “நான்தான் பிரசன்ன வெங்கடேசன். இந்தப் புற்றில் வெகு காலமாய் வசித்து வருகிறேன். இதை உங்கள் அரசனிடம் தெரியப்படுத்துங்கள்” என்றார்.
இடையர்கள் மூலம் இதை அறிந்த மன்னனும் புற்றைக் காண வந்தான். “புற்று முழுவதையும் பால் கொண்டு கரைப்பாயாக. உனக்கு க்ஷேமம் உண்டாகும்” என்று அந்தப் பெரியவர் கூறிவிட்டு மறைந்தார். மன்னனும் அவ்வாறே செய்யுமாறு இடையர்களுக்கு ஆணையிட, அவர்களும் ஆயிரமாயிரம் குடங்களில் பாலை எடுத்து வந்து புற்றின் மீது அபிஷேகித்தனர். புற்று கரைந்து திவ்ய மங்கள வடிவினனாய், கோடி சூரிய பிரகாசத்தோடு எம்பெருமான் வெளிப்பட்டான்.
அரசன் பணிந்து வணங்க, “மன்னா, உனது தவத்தை மெச்சினேன். குணசீலரின் வேண்டுகோளுக்கேற்பக் கல்பகாலம் வரை இங்கு வாசம் செய்ய சங்கல்பம் கொண்டுள்ளேன். இவ்விடத்தில் எனக்கு எளிய முறையில் ஒரு ஆலயம் அமைப்பாயாக. பின்னர் கலியுகத்தில் பக்தர்கள் அதை விரிவுபடுத்துவார்கள். இங்கு ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்திர முறைப்படி ஆராதனம் செய்ய வேண்டும். என் சன்னதிக்கு வந்து உளமார வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரத்தைத் தருவேன்” என்று இறைவன் திருவாய் மலர்ந்தருளினான். மன்னனும் அதன்படி ஆலயம் சமைத்து வழிபட்டு வந்தான். சனிக்கிழமைதோறும் மன்னனுக்கு எம்பெருமான் ராஜ்ய பரிபாலனம் குறித்து ஆலோசனை கூறியதாகவும், பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி அருள்வாக்குக் கூறியதாகவும், தல புராணங்கள் மூலம் தெரிய வருகிறது.
எம்பெருமான் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசனாக தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். தீபஸ்தம்பத்தில் ஆஞ்சநேயர் அருள் புரிகிறார். பிரார்த்தனை வேண்டிக்கொண்டு முடிப்பவர்கள் கடைசி நாளன்று வடைமாலை சாற்றுவது வழக்கம்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 48 நாட்கள் தங்கி, வழிபாடு செய்து, பலன் பெற மனநல மறுவாழ்வு மையம் ஆலயத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு பிரார்த்தனையாக அடி பிரதட்சிணம், அங்க பிரதட்சிணம், முடிகாணிக்கை, திருமஞ்சனம், சந்தனக் காப்பு, புஷ்பாங்கி, கருடசேவை செய்கின்றனர். ஆண்டுதோறும் சிறப்பாக பிரமோற்சவம் நடக்கிறது. திருத்தேர் அன்று தேர் சென்ற பாதையில் அதன் பின்னே பக்தர்கள் அங்க பிரதட்சிணம் செய்கின்றனர். இது வேறு எங்கும் காண முடியாத ஒன்று.
திருப்பதி சென்று பிராத்தனை செய்ய முடியாதவர்கள் இந்தக் கோவிலில் வந்து நிறைவு செய்யலாம். ஆனால் குணசீலப் பெருமானுக்கு வேண்டிக் கொண்ட பிரார்த்தனையை இங்குதான் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
சீதா துரைராஜ், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|