தெரியுமா?: மிச்சிகன் தமிழ்ப் பள்ளிகள் தெரியுமா?: கிருஷ்ணா சங்கர் தெரியுமா?: டிஷ் நெட்வர்க்கில் 'கலைஞர்', 'சிரிப்பொலி' எத்தனை கட்டை? பொடியும் அரியக்குடியும் தொடதே, பார்! வாசிக்காதே, வேண்டாம்! பறக்க மாட்டேன்!
|
|
|
|
|
நவம்பர் 10 எப்போதும் போல்தான் விடிந்தது. ஆனால், நாளின் நிகழ்வுகள் என்னை நிறையச் சிந்திக்க வைத்தன. ஏன்?
நாட்டுக்காக ராணுவத்தில் சேவைப் பணியாற்றியவரை வெடரன் (veteran) என்கிறோம். அன்று வெடரன்ஸ் டே. பள்ளிகளுக்கு விடுமுறை. அரசு விடுமுறையும்கூட என்று நினைக்கிறேன். பணி நிமித்தமாக அட்லாண்டா போகவேண்டியிருந்தது. காலை நான்கு மணிக்கே எழுந்து ஐந்து மணிக்குக் கிளம்பி ஏழு மணி விமானத்தைப் பிடிக்கப் போனேன். பொதுவாகவே அமெரிக்கத் தேசியக்கொடி நிறைய இடங்களில் பறக்கும். அதைப் பலவித அலங்காரமாகப் பயன்படுத்துவார்கள் - தொப்பி, உடை, முகப்பூச்சு, சிகையலங்காரம் என்று. இதெல்லாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில் எல்லாச் சுதந்திர நாடுகளிலும் நடப்பதுதான்.
விமான நிலையத்தில் எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய கொடிகள். விமானம் அட்லாண்டாவில் தரையைத் தொட்டதும் வரவேற்பு அறிவிப்பில் உள்ளூர் தட்பவெப்பம், பெட்டிகளை எந்த கரோஸலில் எடுத்துக்கொள்வது போன்றவற்றைத் தெரிவித்துவிட்டு முடிக்கையில் "இன்று வெடரன்ஸ் தினம். நாட்டுக்காகச் சேவை புரிந்த, புரியும் அவர்களுக்கு நன்றிகள். இந்த விமானத்தில் யாராவது வெடரன்ஸ் இருந்தால், உங்களுக்கு எமது பாராட்டு, வந்தனம், நன்றி" என்று குறிப்பிட்டதும்தான் இந்த தினம் நினைவு வந்தது. திரும்ப நள்ளிரவு விமானத்தில் பாஸ்டனுக்குத் திரும்பி இறங்கியதும் அதேமாதிரி நன்றி தெரிவித்தார்கள்.
அந்த அறிவிப்பு என்னை ஸ்தம்பிக்கச் செய்தது. இராக் போன்ற தேசங்களிலிருந்து அமெரிக்க ராணுவத்தினர் ஊர் திரும்பும்போது விமான நிலையங்களில் அவர்களைப் பார்த்ததும் பொதுமக்கள், பயணிகள், விமான நிலையச் சிப்பந்திகள் என்று அனைவரும் அவர்கள் கடந்து செல்லும்வரை கைதட்டி ஆரவாரம் செய்வதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அது பொதுமக்களின் உணர்வு வெளிப்பாடு. புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் ஒரு லாபநோக்கோடு இயங்கும் விமானத்தில்?
நம்மூரில் "பட்டாளத்தான்" என்று கிராமத்தில் அழைப்போம். மிடுக்கோடு இருப்பார்கள். ஆனால் நகரங்களில்? 'முன்னாள் ராணுவத்தினர்' எனப்படும் அவர்களை எப்படி நடத்துகிறோம்?. தமிழ்ச் சினிமாக்களில் முழுச் சீருடையுடன் ராணுவ வீரர் அத்தை மகளைப் பார்க்க வருவதையும், காதல் செய்வதையோ அல்லது ஊர்க்காரர்களுடன் தகராறு செய்வதையோ காட்டுகிறார்கள். நேரில் பார்த்தால் சகாய விலையில் மிலிட்டரி கேண்ட்டீனில் ரம் கிடைக்குமா போன்ற அன்பான விசாரிப்புகளைப் பார்த்திருக்கிறேன். வற்றாயிருப்பு வீட்டில் குடும்பத்தில் ராணுவத்தில் பணிபுரிந்த யாரோ ஒரு மாமா கொண்டு வந்த சுருட்டிய தோல்படுக்கை ரொம்ப வருடங்களாகப் பரணில் இருந்தது. மற்றபடி ஊரிலோ, பள்ளியிலோ, கல்லூரியிலோ, வேலைசெய்த இடங்களிலோ எப்போவது ராணுவச் சேவையாளர்களைப் பற்றிப் பேசியிருக்கிறோமா என்று எவ்வளவு யோசித்தும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இந்திய எல்லையில், நடுங்கும் பனியில், மழையில் எவ்வளவு துன்பப்பட்டு நாட்டைக் காக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டு வெயிலில் நமக்கு உறைப்பதே இல்லை. தேசப்பற்று என்பது ஏட்டளவில்தான் என்று எண்ண வேண்டியிருக்கிறது. |
|
சுதந்திர தினம் என்றால் தேசியகீதம் பாடி, சட்டையில் கொடியைக் குத்திக்கொண்டு மிட்டாய் தின்றுவிட்டு, நாள் முழுதும் வீட்டில் நடிகையர்களைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஜனகணமனவை மொணமொணவென்று சம்பிரதாயமாகப் பாடுவதைத் தவிர ஒரு முறையாவது தேசத்திற்காகப் பாடுபட்டவர்களுக்கு வாயார நன்றி சொல்லியிருக்கிறோமா என்று யோசித்தேன். வெட்கமும் அவமானமும் தான் மிஞ்சியது.
பிரிவினை அரசியல் செய்துகொண்டு, காவிரிக்காக அடித்துக்கொண்டு, மலையாளத்தான், கன்னடத்தான், தெலுங்கன் என்று பிரித்துக்கொண்டு வானம் பார்த்த பூமியாக மாநிலத்தை ஆக்கியதைத் தவிர நமது கட்சிகளும் தலைவர்களும் கடந்த அறுபது ஆண்டுகளில் என்னதான் சாதித்தார்கள் என்று எண்ணம் ஓடியது. இராக் ஆக்கிரமிப்பு சரியோ தவறோ - அங்கு ராணுவம் சென்றதைத் தீர்மானித்தது தேசத்தின் தலைவர், உயர் அதிகாரிகள். சாதாரண ராணுவ வீரர் அல்ல. அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது, படுவது உயரதிகாரிகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல், செல் என்றால் செல்வது, சுடு என்றால் சுடுவது, போர் புரியச் சொன்னால் புரிவது. சொந்த நம்பிக்கைகளையும் சரி தவறு என்ற விவாதங்களையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு மறுபேச்சிலாமல் போக வேண்டும். புஷ்ஷின் தவறுகளைத் தட்டிக்கேட்கும் அதே வேளையில், அங்கு சென்று திரும்பும் ராணுவத்தினரை "நாட்டுக்காகச் சென்றார்கள்" என்ற ஒரே அடிப்படையில் தக்க மரியாதையோடு வரவேற்றுப் பாராட்டத் தவறுவதேயில்லை இம்மக்கள்.
இந்தத் தெளிவு நமக்கு இல்லை. நம் ராணுவத்தின் தியாகங்கள் நமக்குப் புரிவதில்லை. அமெரிக்க மக்கள் ஒரு முன்னாள் ராணுவ வீரரை எப்படி மரியாதையாக அணுகுகிறார்கள் என்பதைப் பார்த்தபோது, அமைதிப்படை இலங்கையிலிருந்து திரும்பித் தமிழ்நாட்டுக்கு வந்தபோது நடத்தப்பட்ட விதம் நினைவுக்கு வந்து தொலைத்தது. அவர்களை வரவேற்காது புறக்கணிப்புச் செய்தார் தமிழக முதல்வர். மக்களுக்கு எப்படிப்பட்ட உதாரணம்!
குடும்பம், குழந்தைகள், சுற்றம், சுகங்களைவிட்டு ராணுவத்தில் சேர்ந்து கண்காணாத தொலைவில் மொழி புரியாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து கொட்டும் பனியில், கண்காணாத மலைகளில் எதிர்பாராத தாக்குதல்களைத் தடுத்து, துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி, தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு, அரசுகள் அளிக்கும் பிச்சைக்காரச் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு அன்-ரிசர்வ்டு பெட்டியில் பயணித்து, ஊருக்கு வந்து சேர்ந்து, பிறகு மீதி வாழ்க்கையைத் தொடர பணத்தில் புரளும் வியாபார நிறுவனங்களின் பளபள கட்டிடங்களுக்கு வெளியேவோ, புதிதான அபார்ட்மெண்ட் கட்டிட மூலையில் இருக்கும் ஐந்துக்கு ஐந்து அறையிலோ, வெயிலிலும், இரவுகளிலும் 'செக்கூரிட்டியாக' காவல்நாய் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கும், யாரும் கண்டுகொள்ளாத தேசச் சேவை புரிந்த, புரிந்துகொண்டிருக்கும் அந்த உத்தமமான மனிதர்களுக்கு - எக்ஸ்-சர்வீஸ்மென்களுக்கு - நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.
வற்றாயிருப்பு சுந்தர் |
|
|
More
தெரியுமா?: மிச்சிகன் தமிழ்ப் பள்ளிகள் தெரியுமா?: கிருஷ்ணா சங்கர் தெரியுமா?: டிஷ் நெட்வர்க்கில் 'கலைஞர்', 'சிரிப்பொலி' எத்தனை கட்டை? பொடியும் அரியக்குடியும் தொடதே, பார்! வாசிக்காதே, வேண்டாம்! பறக்க மாட்டேன்!
|
|
|
|
|
|
|