Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
Tamil Unicode / English Search
நினைவலைகள்
காஞ்சி முனிவருடன்
- சி.கே. கரியாலி, திருவைகாவூர் கோ.பிச்சை|டிசம்பர் 2010|
Share:
Click Here Enlargeஆங்கில மூலம்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)
தமிழ்வடிவம்: திருவைகாவூர் கோ.பிச்சை

காஞ்சி பரமாசாரியாரிடம் என்னைக் கவர்ந்திழுத்தது, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் தொடர்ந்து ஒரு குழந்தையைப் போன்ற மனோபாவத்துடன் அவர் செயல்படும் குணாதிசயம்தான். அவரது கிருபையாலும், வசீகர சக்தியாலும் இயற்கையாகவே அவர்முன் நான் ஈர்க்கப்பட்டேன். ஒவ்வொரு முறை காஞ்சியைக் கடக்கும்போதும் அவரை தரிசிக்காமல் என்னால் போக முடியாது. கடவுளின் அருளால் அந்த மகானை பலமுறை தரிசிக்கும் பெரும்பேறு பெற்றேன்.

முதன்முறையாக நான் அவரைச் சந்திக்க நேர்ந்தபோது அவர் முற்றத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். மக்கள் வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராக அவரை தரிசிக்கச் சென்று கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அதிகக் கூட்டத்தினால் வரிசை அசையாமல் நின்றுவிட்டது. வரிசையில் தங்கிவிட்ட என் உள்மன ஆவலைப் புரிந்து கொண்ட பெரியவர், உடனே என்னை உட்காரும்படி தன் கண்களால் சாடை செய்தார். சந்நிதியில் அமர்ந்து அவரது திருமுகத்தின் பேரொளியைத் தரிசித்தேன். அது ஒரு உன்னதமான தருணம். உடன் அவர் ஒரு புத்தகத்தை எடுத்தார். (அது தென்னிந்தியக் கோவில்களின் கட்டிட நிர்மாணக் கலை பற்றி டாக்டர் இரா. நாகசாமி எழுதிய நூல்) கனத்த மூக்குக் கண்ணாடி அணிந்து மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தைப் படித்தவாறே வெகுநேரம் இருந்தார். திடீரென புத்தகத்திலிருந்து கவனத்தைத் திருப்பி தனது கண் அசைவால் எனக்கு வெளியே போக அனுமதி வழங்கினார். எனக்கு ஒரே ஆனந்தம். எவ்வளவு நேரம் அப்படிக் கழிந்தது என்பதை நான் அறியவில்லை. அன்று பகல் முழுவதும் என்னை அப்படியே இருக்க அனுமதி அளித்திருந்தாலும், நான் நகராமல் இருந்திருப்பேன்.

மீண்டும் நான் அவரை தரிசித்தது, என்னுடன் பணிபுரியும் சகாவின் குடும்பத்துடன் சென்றபோதுதான். என் சகாவின் மனைவி ஆறாத் துயரத்துடன் இருந்தார். மன அமைதி தேடி அவர்கள் காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இது ஒருவருக்கும் தெரியாது. வந்தவர்கள், ஆசாரியாரின் முன்னால் சில நிமிடம் சிறு குழுவாக ஒரே சமயத்தில் உட்கார அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் தங்களுடன் பழம் முதலிய பொருள்களைக் கொண்டு வந்திருந்தனர். எனது சகாவின் மனைவி ஒரு பெட்டி நிறைய உலர்ந்த பழங்களைக் கொண்டு வந்திருந்தார். அந்தப் பெட்டி பல அறைகள் கொண்டதாகவும் ஒவ்வொரு அறையும் வெவ்வேறு உலர்ந்த பழங்கள் கொண்டதாகவும் இருந்தது. அத்தனையும் பரமாசாரியார் முன் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அவரது சீடர்களில் ஒருவர் அவற்றை அப்பால் எடுத்துச் செல்வார். ஆசாரியார் எப்போதும் இதில் கவனம் செலுத்த மாட்டார். ஆனால் அன்று பெட்டியை அவர் முன்னால் இருந்து அகற்ற, ஒருவர் எடுத்தபோது ஒரு குழந்தையைப்போல அவர் அதைத் தடுத்தார். பெட்டியைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டார். பின் உடனே பெட்டி மூடியைத் திறக்கும்படி வற்புறுத்தினார். குனிந்து அதில் உள்ளவற்றைப் பார்க்க ஆரம்பித்தார். அவரது பார்வைக் குறைவினால் அவற்றில் இருந்த சிலவற்றை அவரால் அறிய முடியவில்லை. உடன் சீடர்களில் ஒருவர் அதிலிருந்த திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரி, அத்திப்பழம் முதலியவற்றைப் பற்றி அவரிடம் தெரிவித்தார்.

மகிழ்ந்து போன அவர், மாசற்ற ஒரு குழந்தையைப் போல, அனைவரும் அதிசயிக்கும்படியாக, அந்தப் பெட்டியுடனும் அதிலிருந்த பொருள்களுடனும் பதினைந்து நிமிடங்கள் விளையாடினார். அங்கு வந்திருந்த அனைவரும் இதை ஒரு அபூர்வ ஆன்மீக அனுபவமாக ரசித்துச் சிரித்தார்கள். பல ஆண்டுகளாகச் சிரித்து அறியாத சிரிப்பையே மறந்துபோன என் சகாவின் மனைவிகூடத் துயரத்தை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அவள் சமர்ப்பித்த பொருள்களை அவர் விசேஷமாக நடத்திய பாங்கு, அவளைப் பிரத்தியேகமாக வாழ்த்தி ஆசி வழங்கியதாக அவள் உணர்ந்தாள். அவளது மனவேதனை துடைத்து எறியப்பட்டது என்பதை நான் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. அதன் பிறகு அவளுடைய வாழ்க்கையே வேறுவிதமாக மாறிவிட்டது.

ஒருமுறை இந்திய அரசு அதிகாரிகளுடன் சென்றேன். தென் ஆற்காடு மாவட்ட கலெக்டர் பணியை முடித்துவிட்டு பொதுநலத்துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பரமாசாரியார் முன்னர் நாங்கள் அமர்ந்த உடனேயே அவர் ஒரு சிறு நடராஜர் படத்தை எனக்குக் கொடுத்தார். இதன் நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்து கொள்ள விரும்பிச் சுற்றிலும் பார்த்தேன். பரமாசாரியாரின் ஒரு சீடர் முன்வந்து, நான் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில், சேவை புரிந்ததற்காக பரமாசாரியார் மகிழ்ச்சி அடைகிறார் என்று சொன்னார். நானும் டாக்டர் நாகசாமியும் பல ஆண்டுகள் 'நடராஜர் திருவிழா' நடத்துவதில் ஈடுபட்டிருந்ததைப் பரமாசாரியார் அறிந்திருக்கலாம் என்பதைப் பிறகுதான் நான் புரிந்து கொண்டேன். நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்.

மடத்தில் எனது அடுத்த சந்திப்பு ஆரவாரம் மிகுந்த அனுபவமாக இருந்தது. அந்த முறை காஞ்சி முனிவரைத் தரிசிக்க விரும்பிய முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு வழிகாட்டியாகச் சென்றேன். அந்த சமயத்தில் யாரோ பரமாசாரியாரிடம் நான் தமிழ்நாடு அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், நான் காஷ்மீரைச் சேர்ந்தவள் என்றும் சொல்லி இருக்கலாம் என்றும் நான் நினைக்கிறேன். திடீரென அவர் எனக்குத் தமிழ் நன்கு தெரியுமா என்று கேட்டார். நான் நன்கு தமிழ் அறிவேன் என்று தெரிவித்தேன். உடனே அவரது உதவியாளரிடம் ஏதோ சொல்ல அவர் உள்ளே ஓடி உடனடியாக ஒரு தட்டு நிறைய வாழைப் பழங்களுடன் வந்தார். பரமாசாரியார் தட்டை சுட்டிக்காட்டி அந்தப் பழத்தின் பெயரைக் கேட்டார்.

நான் 'பழம்' என்றேன்.

"ஆம், என்ன பழம்?" என்றார்.

"பச்சை வாழைப்பழம்" என்றேன்.
நான் நிம்மதியாகப் பெருமூச்சு விடுவதற்குள் என் முன்னால் இன்னொரு தட்டு வாழைப்பழம் வைக்கப்பட்டது. அதைப்பார்த்து விட்டு நான் "ரஸ்தாளிப் பழம்" என்றேன். அடுத்து இன்னொரு தட்டு வந்தது. “மலைவாழை" என்று சொன்னேன். அடுத்த வினாடியே இன்னொரு தட்டு வருகை தந்தது! அதிர்ஷ்டவசமாக அதை நான் புரிந்து கொண்டு "பூவன் பழம்" என்றேன். அடுத்த தடவைதான் நான் பெரும் தொந்தரவில் இருந்தது எனக்கு உறைத்தது. இந்த மண்ணில் விளையும் அத்தனை வாழைப் பழங்களின் பெயரையும் சொல்வது எனக்குச் சாத்தியமானதாக இல்லை. ஒவ்வொன்றாகத் தட்டுகள் வந்து கொண்டிருந்தபோது யாரும் நான் தோற்றுப் போக விரும்பவில்லை. ஆகவே அவரது அடியவர்கள் பக்கத்தில் இருந்து எனக்கு சாடையாகத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

கடுமையான ஆனால் ஆரவாரமான இந்தச் சோதனை முடிந்த பிறகு, நான் தமிழ்த் தேர்வில் வெற்றிபெற்று விட்டதாகப் பெரியவர் பிரகடனம் செய்தார். எப்போதுமே இப்படி பரமாசாரியார் தமது நகைச்சுவை உணர்வை மனப்பூர்வமாக வெளிப்படுத்துவதில்லை. அதனால் அன்று நிறைந்திருந்த கூட்டம், அந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கு பெற்றதில் தாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தனர்.

காஷ்மீரில் பிரச்சனைகள் தொடங்கியதும், பள்ளத்தாக்கிலிருந்து இந்துக்கள் வெளியேற ஆரம்பித்ததும் பரமாசாரியார் மிகுந்த துயரத்திற்கு ஆளானார். அவர் சென்னையிலுள்ள காஷ்மீரி குடும்பங்கள் அனைத்தும் வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று மடத்திற்கு வர வேண்டுமென்று ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மூலம் செய்தி அனுப்பினார். இந்தச் சமயத்தில், உள்ளூரில் இருந்தவர்கள் காஷ்மீரிலிருந்து வெளியேறி வருகிற அநேக உறவினர்களை வரவேற்பதில் ஈடுபட்டிருந்தனர். இப்படி வருகிறவர்கள் பற்றி அப்போது யாரும் அக்கறை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. பரமாசாரியாரின் செய்தி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது.

அவர்களுடன் நானும் சென்றேன். அவர்களது ஆறாத் துயரங்களையும், மன வருத்தத்தையும் புரிந்து அதில் பங்கு கொண்டவராய், நீண்ட நேரம் மெளனமாக எங்களுடன் பரமாசாரியார் உட்கார்ந்திருந்தார். எங்கள் ஒவ்வொருவருக்கும் ஆறுதல் கூறினார். கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மோசமான சம்பவங்கள் நடைபெறுவதால் நான் முற்றிலும் தேற்ற முடியாதபடி இருந்தேன். அப்படியே நிலைகுலைந்து அழ ஆரம்பித்து விட்டேன். பெரியவர் அதிகம் பேசாதவரானதால் ஜெயேந்திரர் அவருடைய செய்திகளை அறிவித்தார். “மானிட வரலாற்றில் இப்படியான கிளர்ச்சிகள் ஒரு பகுதிதான். இப்படியான செயல்கள் அவ்வபோது நேரிடுகின்றன. கெடுதல் நடந்திருக்கக் கூடும். சொத்து வரும், போகும். இதை லட்சியத்தின் அடிச்சுவடாக வைத்துக் கொள்ளுங்கள். சிந்திகளைப் போல இருங்கள். உலகெங்கும் அவர்கள் வியாபித்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற்று மிகப்பெரும் செல்வந்தர்களாக உயர்ந்துள்ளனர். அவர்களைப்போல இருங்கள். அவர்கள் எவ்வளவோ சாதனை படைத்துள்ளனர். நீங்களும் தோல்வியை உதறி எறிந்துவிட்டு கடுமையாக உழையுங்கள். “நான் உங்களுடன் இருக்கிறேன்” என்பதை தெரிவிக்கத்தான் உங்களை இங்கு வருமாறு அழைத்தேன். என் கதவுகள் எப்போதும் உங்களுக்காகத் திறந்தே இருக்கும்.”

தங்கள் சொத்துக்கள், நிலபுலன்கள், வீடுவாசல் யாவற்றையும் இழந்து சொல்லொணாத் துயரங்களுக்காளான தங்கள் உற்றார் உறவினர்கள் பற்றி பெரிதும் மன வேதனை அடைந்திருந்த சென்னைக் குடும்பத்தார்களுக்கு, பரமாசாரியாரின் இந்த வார்த்தைகள் பலம்பெறுவதற்கான மூல ஆதாரமாக இருந்தன. சென்னையைப் பொருத்த வரையில், காஷ்மீரிலிருந்து வெளியேறி இங்குவந்து தங்கியவர்கள் அதிகமில்லை. மன வேதனையைப் பகிர்ந்து கொண்டதனாலும், சோர்வைத் துடைத்து எறிந்ததனாலும், பரமாசாரியார் அருளாசியால் அவர்கள் மறுபிறவி எடுத்தவர்போல் ஆனார்கள்.

ஆங்கில மூலம்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)
தமிழ்வடிவம்: திருவைகாவூர் கோ.பிச்சை
Share: 




© Copyright 2020 Tamilonline